TNPSC Thervupettagam

தமிழ்நாடு கடல் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு வாய்ப்பு

December 8 , 2021 970 days 523 0
  • கடந்த மே மாதம் ஆட்சி மாறியதிலிருந்து, பல நம்பிக்கை தரும் காரியங்கள் நடந்தபடி இருக்கின்றன.
  • ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்ற பிரகடனத்திலிருந்து போலிப் பெருமைகள் வேண்டாம், புத்தகங்களைப் பரிசளியுங்கள் என்றதும், பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதிலிருந்து, பேரிடரில் களத்தில் நிற்பது, தகுதியானவர்களைத் தேவையான துறைகளில் பங்கேற்கச் செய்தது வரை அரசு அதிகாரம் மக்களோடு பயணிப்பது நம்பிக்கையூட்டுகிறது.
  • மக்களின் இந்த நம்பிக்கை, வளமான எதிர்காலத்தைச் சாத்தியமாக்க வேண்டுமென்றால், பணியமர்த்தப்பட்ட துறைசார் வல்லுநர்களின் செயல்பாடுகள், வெளிச்சத்துக்கு வந்து, ஆய்வுகளின் பரிந்துரைகள் உடனுக்குடன் செயல்பாட்டுக்கு வர வேண்டும்.
  • வளமான தமிழகம் என்பது, ஒரு கை ஓசையான அரசின் நிர்வாகம் மட்டுமல்ல. மாறாக, அது மக்களையும் இணைத்துக்கொண்ட செயல்பாடுகளினாலேயே சாத்தியமாகும்.
  • விவசாயம், கைவினைப் பொருள் உற்பத்தி, ஆலை உற்பத்தி, மீன் பிடித்தல், கட்டுமானம், வியாபாரம், சரக்குப் போக்குவரத்து என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் நாட்டு மக்கள், தத்தமது தொழில்களைத் தொடர்ந்து சரிவர நடத்துவதற்கான ஊக்கமும் ஆதரவும் அரசிடமிருந்து வர வேண்டும். ஆட்சியாளர்களின் களஆய்வு தேவை.
  • ஆனால், அதுவே வாடிக்கையாகிவிடும்போது அரசு இயந்திரம் செயல்படாமல், துதிபாடும் கூட்டமாக மாறி, மக்களை முகம் சுளிக்கச் செய்துவிடுகிறது.
  • வழக்கமான செலவினங்களும் எதிர்பாராத நிவாரணங்களும் புதிய அரசைத் தடுமாறச் செய்திருக்கின்றன. வழக்கமான வரிவிதிப்புகள், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வராத போது, மாற்றுவழிகள் கண்டறியப்படுவது அத்தியாவசியத் தேவையாகிறது.
  • நிலம் என்பது சிக்கலானது; ஆனால், கடலோ திறந்த பெரும் வெளி. பழவேற்காட்டில் தொடங்கி, தென்மேற்கில் வளைந்து கிடக்கும் கடற்கரையும், கடலோடிகளும் தமிழ்நாட்டின் வரப்பிரசாதம்.
  • நாம் இன்றும் நினைவில் வைத்துப் போற்றும் சோழர்களின் பொற்காலம், கடலாதிக்கத்தின் மேன்மையை ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்ததாலேயே. கடலோரப் பொருளாதாரம் என்பது மீன் பிடித்தலும் கப்பலோட்டமும் இணைந்தது.
  • இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரானதாக்கிவிட்டோம். உண்மையில், இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை; ஒருசேரப் பயணிப்பவை. கடலோடிகள் என்ற சமூகத்தின் சிறுதொழிலே மீன் பிடித்தல், இன்று அவர்களைக் குறுக்கி மீனவர்களாக்கிவிட்டோம்.
  • “ஒரு நாட்டின் மக்கள்தொகை அல்ல, மாறாக அந்த நாட்டின் கடலோடிகளின் எண்ணிக்கையும் தொழில் ஆர்வமுமே நாட்டைச் செழுமையானதாக்கும்” என்று உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘வரலாற்றின் மீது கடலாதிக்கத்தின் செல்வாக்கு’ என்ற புத்தகத்தை எழுதிய ஆல்பிரெட் டி மாஹன் கூறினார்.
  • காலனியாதிக்கர்களுக்காகச் சொல்லப்பட்டதாக இருந்தாலும்கூட, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில், கடலாதிக்கத்தின் முக்கியத்துவத்தைக் கட்டியம்கூறி நின்றது இவ்வாக்கியம்.
  • கடலாதிக்கத்தின் காரணகர்த்தாக்களான கடலோடிகள், இன்னும் தமிழ்நாட்டுக் கடற்கரையில் இருக்கிறார்கள்.
  • கைதவறிப்போன வரலாற்றுப் பொருளாதார வளமையை அவர்கள் மூலம் உறுதியாக மீட்டெடுக்க முடியும்.
  • 1997-ல் உருவாக்கப்பட்டுப் பெரிதும் அறியப்படாத துறையாகத் தமிழக அரசில் நீடிக்கும் ‘தமிழ்நாடு கடல்சார் வாரியம்’ கடலோரப் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்காற்ற முடியும்.
  • சாலைகளில் நாளும் பெருகும் நெரிசல், நேர்முக மறைமுகப் பிரச்சினைகளுக்குக் காரணமாகிவிடுகிறது. அதற்கான மாற்று வழிகளுள் ஒன்று, கடல்வழிப் பாதையைப் பயன்படுத்துவது.
  • தொலைநோக்குப் பார்வையற்ற திட்டங்களால், பெருந்துறைமுகமான சென்னை உட்பட நாட்டின் சிறு துறைமுகங்கள்கூட குடியேற்றங்களால் சாலைகள் அடைபட்டுக் கிடக்கின்றன.
  • சரக்குப் போக்குவரத்தில் ஏற்படும் தடையும், தாமதமும் பெரும் பொருளாதார இழப்புக்குக் காரணமாகி விடுகின்றன.
  • இந்த நிலை மாற வேண்டுமானால், தமிழ்நாட்டின் கடல்வழிப் பாதைகள் பயன்பாட்டுக்கு வர வேண்டும். சிறு துறைமுகங்களிலிருந்து சென்னை போன்ற பெருந் துறைமுகங்களுக்குச் சிறிய கப்பல்களை விடலாம்.
  • கரைக்கடல் கப்பலோட்டம் நடந்தால், சாலைகளில் நெருக்கடி குறைந்து, விபத்துகள் தவிர்க்கப்படும், எரிபொருள் சிக்கனமாகும், காற்றின் மாசு குறையும்.
  • தொடரும் சிக்கல்களுக்கான அக்கறையான தீர்வொன்று, அரசின் வருமானத்துக்கும், பெரும் பொருளாதார முன்னேற்றத்துக்கும், நேர்முக மறைமுக வேலைவாய்ப்புகளுக்கும் காரணமாய் அமையுமென்றால், ஆவன செய்ய வேண்டியது அரசின் கடமையன்றோ!

நன்றி: இந்து தமிழ் திசை (08 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்