TNPSC Thervupettagam

தமிழ்நாடு காவல் துறையின் கஞ்சா வேட்டை: பாராட்டுக்குரிய நடவடிக்கை!

April 4 , 2022 855 days 441 0
  • போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல் துறை தொடர்ந்து காட்டி வரும் சிறப்புக் கவனம் பாராட்டுக்குரியது.
  • 2021 டிசம்பர் தொடங்கி, 2022 ஜனவரி வரையில் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டை நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மீண்டும் ஏப்ரல் 27 வரையில் அதைத் தொடர வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  • இரண்டாம் கட்டமாகத் தொடரும் இந்நடவடிக்கையின் முதலிரண்டு நாட்களிலேயே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவரும் 350 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
  • அவர்களிடமிருந்து 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு, இயல்புநிலை திரும்ப ஆரம்பித்திருக்கும் வேளையில், போதைப் பொருட்களை விநியோகிக்கும் சமூக விரோதக் கும்பல்களிடமிருந்து மாணவர்களைக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு அரசு, ஆசிரியர், பெற்றோர், காவல் துறை என அனைத்துத் தரப்பினருக்குமே இருக்கிறது.
  • பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை தரும் பல்வேறு விதமான பொருட்களை உபயோகிக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவருகிறது.
  • பாக்கு, மிட்டாய் என்று பல்வேறு வடிவங்களில் இவை மாணவர்களிடையே புழங்குகின்றன. பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களைத் தொடர்ந்து அக்கறையுடன் கண்காணித்து வருவதும், அவர்களது நடத்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து, உடனடியாக அவற்றைத் தீர்க்க முயல்வதும்தான் மாணவர்களை இப்பழக்கத்திலிருந்து விடுவிக்க உதவும்.
  • ஆனால், போதைப் பொருள் விநியோகத்தின் பின்னால் இயங்கும் வலைப் பின்னல் மிகப் பெரியது. மாநில எல்லைகளைத் தாண்டி அது பரவியுள்ளது.
  • இந்நிலையில் ஆசிரியர், பெற்றோர்களின் அக்கறை மாணவர்களைப் பாதுகாக்க உதவுமே தவிர, காவல் துறையின் கடுமையான நடவடிக்கைகளால்தான் இந்த வலைப்பின்னலை அறுத்தெறிய முடியும்.
  • தமிழ்நாடு காவல் துறை இது தொடர்பாகத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கக் கூடியது. இது எப்போதும் தொடர வேண்டும்.
  • காவல் துறை தனது பணியைச் செவ்வனே செய்கிற அதே நேரத்தில், பள்ளிக் கல்வித் துறையும் இவ்விஷயத்தில் உரிய கவனத்தைச் செலுத்த வேண்டும்.
  • பள்ளி மேலாண்மைக் குழுக்கள் திறம்படச் செயல்படத் தொடங்கியிருக்கிற இந்நேரத்தில், மாணவர்களுக்கிடையே இவ்விதமான பழக்கங்கள் கண்டறியப்பட்டால், ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து பேசி, அதற்கான வாய்ப்புகளை நிரந்தரமாகக் களைவதற்கு முயல வேண்டும். தேவைப்படின், காவல் துறையின் உதவியை நாடவும் தயங்கக் கூடாது.
  • போதைப் பழக்கங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவ்வப்போது பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும்.
  • கல்வி நிறுவனங்கள், மாணவர் விடுதிகள் ஆகியவற்றின் அருகிலுள்ள கடைகளும், அந்நியர்களின் நடமாட்டமும் தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
  • மாணவர்களின் உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதுகாக்க வேண்டியது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு; ஒவ்வொருவரும் தனக்கான கடமையை ஆற்றத் தயாராக இருக்க வேண்டும்.

நன்றி: தி இந்து (04 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்