TNPSC Thervupettagam

தமிழ்நாடு தேர்தல் முடிவு சொல்லும் செய்திகள் - மக்களவை மகா யுத்தம்

June 10 , 2024 21 days 59 0
  • பொதுவாக, எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் என்பது ஓர் அக்னிப் பரீட்சைதான். ஆனால், ஒருசில தேர்தல்கள் அரசியல் கட்சிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுவது உண்டு. அந்த வகையில், 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் முக்கியக் கட்சிகள் / கூட்டணிகளின் வீழ்ச்சியையும் வளர்ச்சியையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

திமுக கூட்டணியின் பாதை:

  • தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்கிற முனைப்போடு களமிறங்கிய திமுகவின் எண்ணம் நிறைவேறியிருக்கிறது. தேர்தலில் திமுகவின் நேர்மறையான அம்சம் வலுவான கூட்டணி. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியைப் போலவே இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது இக்கூட்டணியின் பலம். கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காமல், கடைசி நேரத்தில் கூட்டணி உடைந்த வரலாறுகள் உண்டு. 2018இல் தொடங்கி ஒற்றுமையாக ஓர் அணியை வழிநடத்திச் செல்வதில் திமுக தலைமையின் பங்களிப்பு அதிகம். சவாலான கோவை, தேனி போன்ற தொகுதிகளைத் திமுக எடுத்துக்கொண்டு, எளிதில் வெற்றிபெற வாய்ப்புள்ள மயிலாடுதுறை, திண்டுக்கல் போன்ற தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்த அணுகுமுறை இதற்குச் சரியான உதாரணம்.
  • ஜெயலலிதா இருந்த காலம் வரை மகளிரின் வாக்கு அதிமுகவுக்கு அதிகளவில் சென்றதாகக் கூறப்பட்டது. இன்று மு.க.ஸ்டாலின் அதைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் என்று சொல்லலாம். மகளிர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை இத்தேர்தல் முடிவில் தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது.
  • தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்கிற இரு துருவ அரசியல்தான் முதன்மையானது. ஆனால், இந்தத் தேர்தலில் அதிமுகவையும் மாநில பாஜக தலைமையையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அகில இந்திய பாஜகவையும் பிரதமர் மோடியையுமே முதல்வர் ஸ்டாலின் கடுமையாகத் தாக்கிப் பிரச்சாரங்களை மேற்கொண்டார். பாஜகவும் அதிமுகவும் தனித்தனியாகப் போட்டியிட்டிருந்தாலும், இரண்டையும் ஓர் அணியாகக் கருதிப் பிரச்சாரம் செய்ததும் திமுக கூட்டணிக்குப் பலன் கொடுத்திருக்கிறது. இது ஓர் உளவியல்ரீதியிலான தேர்தல் உத்தி எனலாம். 1996, 2004ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாகத் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி முழுமையாக வெல்லவும் வழிவகுத்திருக்கிறது. என்றாலும் 2019இல் திமுக கூட்டணி 53.15% வாக்குகளையும் திமுக மட்டும் 33.53% வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில், 2024இல் அக்கூட்டணி 46.97% வாக்குகளையும் திமுக மட்டும் 26.93% வாக்குகளையும் பெற்றிருப்பது அக்கட்சியும் கூட்டணியும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அம்சமாகும்.

அதிமுகவின் பலவீனம்:

  • ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தடுமாறுகிறது என்கிற விமர்சனத்தை இந்தத் தேர்தல் முடிவுகள் மேலும் வலுப்படுத்தியிருக்கின்றன. இந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெல்லவில்லை என்பதோடு ஏழு தொகுதிகளில் வைப்புத்தொகையை (Deposit) இழந்துள்ளதும், ஒன்பது தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்கும், இரண்டு தொகுதிகளில் நான்காவது இடத்துக்கும் தள்ளப்பட்டது அதிமுகவுக்குக் கிடைத்திருக்கும் பகிரங்கமான எச்சரிக்கை மணி. அதிமுகவில் ஒன்றரைக் கோடி- இரண்டு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று கூறப்பட்ட நிலையில், ஒரு கோடியே 55 ஆயிரம் வாக்குகளை மட்டுமே அதிமுக அணி பெற்றிருக்கிறது. அதேவேளையில், ஒரு பெரிய தோல்வியிலும் அதிமுக பெற்றுள்ள 20.46% வாக்குகள் என்பது அதன் குறைந்தபட்ச அடிப்படை வாக்கு வங்கி இருப்பதைப் பறைசாற்றியிருக்கிறது.
  • பலத்தை நிரூபிக்க வேண்டிய ஒரு தேர்தலில் கட்சியின் முக்கியத் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் போன்றோரைக் களமிறக்காமல், பெருமளவில் புதுமுகங்களுக்கு அதிமுக வாய்ப்பளித்தது ஓர் எதிர்மறை அம்சமாகப் பார்க்கப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணியை முறிக்கும் முடிவு குறித்துத் தற்போது அதிமுகவுக்குள் விவாதங்கள் நடைபெறுகின்றன. அதேவேளையில், தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவைக் கடுமையாக எதிர்க்காமல் எடப்பாடி பழனிசாமி மேலோட்டமாகப் பேசியது எடுபடவில்லை. மக்களவைத் தேர்தலைச் சட்டமன்றத் தேர்தல்போலக் கருதி அவர் பிரச்சாரம் செய்ததாகவும் விமர்சிக்கப்படுகிறது.
  • உள்கட்சிப் பிரச்சினையால் கடந்த ஏழு ஆண்டுகளாகவே அதிமுக தடுமாறுவதாக விமர்சனங்கள் உண்டு. 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்விஅடைந்திருந்தாலும் கெளரவமான வெற்றியுடன் வாக்கு சதவீதமும் கிடைத்திருந்ததால், அதிமுகவின் முக்கியத்துவம் நிரூபிக்கப்பட்டது. ஆனால், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவான பிறகு, முதன்மை எதிர்க்கட்சியாகச் செயல்பட அதிமுக தவறிவிட்டது. 2006இல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா களத்துக்குச் செல்லாவிட்டாலும், திமுக அரசைக் கடுமையாக விமர்சிப்பதிலும் அரசுக்கு எதிராகத் தினமும் போராட்டங்களை அறிவிப்பதிலும் தீவிரமாகச் செயல்பட்டார். ஆளுங்கட்சிக்கு எதிராக உறுதியுடன் போராடும் எதிர்க்கட்சிகள்தான் மக்கள் மனதில் இடம்பிடிக்கும். அந்த உத்தியைத்தான் பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பின்பற்றுகின்றனர்.
  • அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களின் வாக்குப் பிரிப்பும் தென் மாவட்டங்களில் தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது. கடந்த காலங்களில் பெற்ற தேர்தல் படிப்பினைகளிலிருந்து அதிமுக பாடம் கற்றிருக்கிறது. இந்த முறையும் அப்படியான பாடத்தைக் கற்கும் வாய்ப்பை அதிமுகவுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

பாஜகவின் முன்னேற்றம்:

  • தமிழ்நாட்டில் பாஜகவைக் காலூன்ற வைக்க அக்கட்சி பகீரதப் பிரயத்தனம் செய்துவருகிறது. அதிமுகவைவிடப் பெரிய கூட்டணி அமைப்பதில் பாஜக வெற்றி கொண்டது. இத்தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் வாக்கு விகிதத்தை பெற்றிருப்பது அக்கட்சிக்கு நேர்மறையான அம்சம். வெற்றி கிடைக்காவிட்டாலும் 12 தொகுதிகளில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளியிருப்பது பாஜகவுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில், 11 தொகுதிகளில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகள் 10 தொகுதிகளிலும் வைப்புத்தொகையை இழந்துள்ளன. 30 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவே ஏழு தொகுதிகளில் வைப்புத்தொகையை இழந்துள்ள நிலையில், பாஜகவுக்கு அது இரண்டாம்பட்சம்தான்.
  • தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டதாக அக்கட்சித் தலைவர்கள் சொல்லி வந்தாலும், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்ததால் பாஜகவின் உண்மையான வாக்கு வங்கியை அறிவதில் சிக்கல் இருந்தது. இப்போது பாஜக தலைமையிலான கூட்டணி 18.28% பெற்றிருப்பதும், பாஜக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 11.24% வாக்குகளைப் பெற்றிருப்பதும் அக்கட்சிக்கு ஊக்கமளிக்கும்.
  • இப்போது போலவே 2014இல் பாஜக கூட்டணி 18.80% வாக்குகளைப் பெற்றிருந்தது. அப்போது தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகள் கூட்டணியில் இருந்தன. ஒப்பீட்டளவில் இப்போது பாஜக அணியில் பாமக மட்டுமே பெரிய கட்சி. எனவே, பாஜக பெற்ற இரட்டை இலக்க வாக்கு சதவீதம் அக்கட்சியின் வளர்ச்சியையே காட்டுகிறது. இரட்டை இலக்க வாக்கு விகிதம் என்கிற லட்சியத்தை அடைய, பாஜக மேலிடம் எடுத்த முக்கிய முடிவுகளும் இதற்குக் காரணம். கட்சியின் பழைய முகங்களுக்கு விடைகொடுத்துவிட்டு, எல்.முருகன், அண்ணாமலை ஆகியோரைக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தியது இதில் முக்கியமானது. ஆளும் திமுகவை எதிர்ப்பதில் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்வதன் மூலம் வாக்காளர்களையும் பாஜக கவனிக்க வைத்தது.
  • பெரும்பாலான தொகுதிகளில் பரிச்சயமான முகங்களைக் களத்தில் இறக்கிவிட்டது, பாஜகவுக்கு இன்னொரு பலமாக அமைந்தது. பிரதமர் மோடியே தமிழ்நாட்டுக்கு எட்டு முறை பிரச்சாரத்துக்கு வருகைதந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுகவை அதிகம் தாக்காமல் திமுக - காங்கிரஸுக்கு எதிராகவே வியூகங்களைப் பாஜக வகுத்தது. குறிப்பாக, கச்சத்தீவு விவகாரத்தைக் கையில் எடுத்தது, போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பு போன்ற அம்சங்களைப் பாஜக முன்னெடுத்தது. திமுகவைக் கருத்தியல்ரீதியில் எதிர்க்கும் அஸ்திரத்தையும் தீவிரப்படுத்தியது. திமுகவுக்கு எதிராக வாக்காளர்கள் மத்தியில் அது பெரிய தாக்கத்தை உருவாக்க முடியவில்லை. என்றாலும் அதிமுகவின் இடத்துக்கு பாஜக வர வேண்டும் என்று நினைக்கிற அக்கட்சிக்கு இத்தேர்தல் நம்பிக்கை அளித்திருக்கிறது. பாஜக பெற்ற வாக்குகளைத் தக்கவைப்பது அல்லது அதிகரிப்பதன் மூலமே வருங்காலத்தில் அக்கட்சி நம்பிக்கையுடன் தேர்தல்களை எதிர்கொள்ள உதவும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்