TNPSC Thervupettagam

தமிழ்நாடு தொழிற்துறை வரைபடம் பாகம் - 01

August 11 , 2024 116 days 731 0

தமிழ்நாடு தொழிற்துறை வரைபடம் பாகம் - 01

(For English version to this please click here)

அறிமுகம்

  • இந்தியாவின் நான்கு தென் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, 83 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டது மற்றும் 50,216 சதுர மைல்கள் (130,058 சதுர கிலோமீட்டர்) பரப்பளவைக் கொண்ட ஒரு செழிப்பான பிராந்தியமாகும்.
  • நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது, இங்கு தமிழ் முதன்மை மொழியாக பேசப்படுகிறது.
  • இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் (2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 48.45 சதவிகிதம்) ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு, விவசாயம், மீன்வளம் மற்றும் வனவியல் ஆகியவற்றின் மீது கட்டப்பட்ட மிகவும் வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்டுள்ளது.

பொருளாதார மற்றும் தொழில்துறை நிலப்பரப்பு

  • தமிழ்நாட்டின் பொருளாதாரம் வரலாற்று ரீதியாக விவசாயம், மீன்வளம் மற்றும் வனவியல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • இருப்பினும், மாநிலத்தின் தொழில்துறை அமைப்பில் ஜவுளி ஆலை, உணவு பதப்படுத்துதல், மருந்துகள், இரசாயனங்கள் மற்றும் மின்னணுவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது.
  • இந்தத் தொழில்கள், மாநிலத்தின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரக் கட்டமைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகரித்த நிலையில் (2023 ஆம் ஆண்டின் படி 24.68 லட்சம் கோடி ரூபாய்) முக்கியப் பங்களிப்பாளர்களாக உள்ளன.

மாநில செயல்திறனைக் கண்காணித்தல்

  • தமிழ்நாடு பல முக்கிய தொழில்துறை அளவீடுகளில் தேசத்தில் முன்னணியில் உள்ளது.
  • இந்தியாவின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் தொழில்துறைப் பணியாளர்களின் அளவு ஆகிய இரண்டிலும் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • ஏப்ரல் 19, 2024 அன்று, 2023-2024 நிதியாண்டில் மின்னணுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் தமிழ்நாடு கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசத்தை விஞ்சி முன்னணி மாநிலமாக மாறியதாக அறிவிக்கப்பட்டது.
  • 2022-2023 ஆம் ஆண்டில் 5.37 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2023-2024 ஆம் ஆண்டில் 9.56 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ந்த நிலையில் இந்த மாநிலத்தின் ஏற்றுமதி 78% குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டது.
  • தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழில்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • இது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) மற்றும் வேலைவாய்ப்பிற்கு மிகப் பெரும் பங்களிப்பை வழங்குகிறது.

  • பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைத் தூண்டுவதில் இந்தத் துறை மிகவும் இன்றியமையாதது என்ற வகையில் அதன் செயல்பாடுகள் முன்னோக்கிய மற்றும் பின்தங்கிய இணைப்புகள் மூலம் முதன்மை மற்றும் மூன்றாம் துறைகளுடன் மிகவும் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
  • மாநிலத்தில் பல்வேறு தொழில்துறை கொள்கை முன்னெடுப்புகள், உற்பத்தி அமைப்புகளின் அதிகரித்து வரும் பன்முக உலகமயமாக்கலின் பின்னணியில், குறிப்பாக தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌதீக உள்கட்டமைப்பின் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில் கொள்கை மற்றும் தொலைநோக்கு தமிழ்நாடு 2023

  • தமிழ்நாட்டின் தொழில் கொள்கையானது வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துதல், நிர்வாகத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளின் அதிக வளர்ச்சிக்காக மேற்கொள்ளப் பட்டது.
  • மென்பொருள் துறையின் மையமாக சென்னை மாறியதன் மூலம், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு தன்னை முன்னணியில் நிலைநிறுத்தியுள்ளது.
  • மேலும், தானியங்கி வாகனத் துறையில் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு உள்ளது.
  • குறிப்பாக ஜவுளித் துறை ​​கோட்டா முறை ஒழிக்கப்பட்டதன் மூலம், ஜவுளித் துறையில் கணிசமான வளர்ச்சிக்கு இது வித்திட்டது.
  • மாநிலத்தில் மின்னணுத் துறை புரட்சியானது ஃபோர்டு, ஹூண்டாய், நோக்கியா, ஃபாக்ஸ்கான் மற்றும் ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களையும் ஈர்த்துள்ளது.
  • இன்று, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது என்பதோடு, மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, மிகப் பெரிய பரப்பளவு மற்றும் மக்கள் தொகையை தமிழ்நாடு கொண்டுள்ளது.
  • ஏற்றுமதி மற்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs) அடிப்படையில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டின் படி, மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதிக்குப் பங்களிக்கும் வகையில் தமிழ்நாடு 54 என்ற அளவில் அதிக எண்ணிக்கையில் செயல்பாட்டில் இருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கொண்டுள்ளது.

  • தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை 2023-ன் படி, 2023 ஆம் ஆண்டுக்கு முன் மாநிலத்தில் ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப் பட்டது.
  • உற்பத்தி, உள்கட்டமைப்பு மற்றும் சேவைத் துறைகளின் கீழ் வரும் திட்டங்களில் முதலீடுகள் இதில் அடங்கும்.
  • பொது-தனியார் கூட்டாண்மை முறையில் மேலும் முதலீட்டை ஊக்குவிக்கவும், உள்கட்டமைப்புத் திட்டங்களை எளிதாக்கவும், தமிழ்நாடு அரசு தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டுச் சட்டம் 2012 என்ற சட்டத்தினை இயற்றியதோடு அச்சட்டத்தின் படி, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தை அமைத்தது.
  • தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை 2023ல் திட்டமிடப்பட்டுள்ள 217 உள்கட்டமைப்புத் திட்டங்களில் 88 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • மீதமுள்ள திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம், தமிழ்நாடு தொலை நோக்குப் பார்வை 2023ல் எதிர்பார்க்கப்பட்ட மைல்கற்களை இந்த மாநிலம் அடையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனக் கழகம் (TIIC)

  • 1949 ஆம் ஆண்டில் நிறுவப் பட்ட தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனக் கழகம் (TIIC) நாட்டின் முதல் மாநில அளவிலான நிதி நிறுவனமாகும்.
  • இது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs), குறிப்பாக முதல் தலைமுறை தொழில்முனைவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

  • TIIC மாநிலத்தின் முக்கியத் தொழில்துறை அலகுகளுக்கும் நிதி உதவி வழங்குகிறது.
  • சமீபத்திய ஆண்டுகளில், TIIC வழங்கிய நிதி உதவியின் ஒரு பகுதி சர்க்கரை, சிமெண்ட், ஜவுளித்துறை, ஜவுளித்துறை இயந்திரங்கள் மற்றும் அலுமினியம் போன்ற தொழில்களுக்கு வழங்கப் பட்டது.
  • திருப்பூரில் உள்ளாடைகள், கோயம்புத்தூரில் ஜவுளி மற்றும் உலோக வார்ப்பகங்கள், சேலம் மற்றும் தர்மபுரியில் பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் சாகோ (ஜவ்வரிசி), திருநெல்வேலி, பல்லடம், உடுமலைப்பேட்டை மற்றும் பிற பகுதிகளில் காற்றாலைகள் உள்ளிட்ட தொழில்துறைத் தொகுதிகளை ஊக்குவிப்பதில் TIIC முக்கியப் பங்கு வகிக்கிறது.

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)

  • 1970 ஆம் ஆண்டில் நிறுவப் பட்ட தமிழ்நாடு சிறு தொழில்கள் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (TANSIDCO) இந்த மாநிலத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நலன்களுக்கு உதவுதல் மற்றும் மேம்படுத்துதல் போன்றவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு நிறுவப் பட்டது.
  • சந்தைக் கட்டமைப்புகளில் "குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் அவர்களின் போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்காக நிலையான கூட்டாண்மைகளை உருவாக்குவது" என்பது இதன் நீண்ட கால நோக்கம் ஆகும்.

  • இந்த நீண்ட கால நோக்கத்தை அடைய, TANSIDCO தொழில்துறை எஸ்டேட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூக உள்கட்டமைப்பு, தொழிற்தொகுதிகளை மேம்படுத்துதல் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பொதுவான வசதி மையங்களை நிறுவுதல் ஆகியவற்றில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
  • TANSIDCO தொழில்துறை உள்ளீடுகளை வாங்குவதில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) உதவுகிறது மற்றும் மேலாண்மை மற்றும் உற்பத்தி செயல்முறைகளில் சிறந்த நடைமுறைகளை வழங்குகிறது.
  • இது மூலதனத்திற்கான அணுகலை எளிதாக்குகிறது மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்த உதவுகிறது.
  • தற்போது, ​​TANSIDCO தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட 35 தொழிற்பேட்டைகளையும், தனித்தனியாக நிறுவப்பட்ட 59 தொழிற்பேட்டைகளையும் பராமரித்து வருகிறது.
  • ராசாத்தாவலசு (திருப்பூர் மாவட்டம்) மற்றும் வெண்மனத்தூர் (விழுப்புரம் மாவட்டம்) ஆகிய இடங்களில் தலா ஒன்று என இரண்டு புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • மேலும் 13 தொழிற்பேட்டைகள் பல்வேறு கட்ட மேம்பாட்டு நிலையில் உள்ளன.
  • தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை 2023ன் படி, TANSIDCO, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SME) மேலும் துடிப்பானதாக மாற்றுவதற்கான ஒரு திட்டமுறை முன்னெடுப்பாக, SME நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க, தொழிற்பேட்டைகளில் போதுமான அளவில் பொதுவான வசதிகள் மற்றும் பயன்பாடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.
  • TANSIDCO இரும்பு மற்றும் எஃகு, மெழுகு, பொட்டாசியம் குளோரேட் மற்றும் TNPL காகிதம் போன்ற மூலப்பொருட்களையும் MSME நிறுவனங்களுக்கு வழங்குகிறது, மேலும் அந்த நிறுவனங்களின் இறுதிநிலைத் தயாரிப்புகள் மற்றும் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட மூலப்பொருட்களை விற்க என்று, அந்நிறுவனங்களுக்குச் சந்தைப்படுத்தல் உதவியையும் இது வழங்குகிறது.

தமிழ்நாடு மாநில தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT)

  • 1971 ஆம் ஆண்டில் நிறுவப் பட்ட SIPCOT நிறுவனம் நிதி உதவியை விரிவுபடுத்துவதன் மூலமும், அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுடன் கூடிய தொழில்துறை வளாகங்களைப் பராமரிப்பதன் மூலமும், தமிழ்நாட்டில் உள்ள பெரிய அளவிலான தொழில்துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
  • சீர்திருத்தத்திற்குப் பிந்தைய காலத்தில், SIPCOT இன் வளர்ந்த தொழில்துறை வளாகங்கள், டேம்ளர், ஹுண்டாய், செயின்ட் கோபைன், டெல், ரெனால்ட் அண்ட் நிசான், அசோக் லேய்லாண்ட் மற்றும் நோக்கியா போன்ற பல்வேறு உற்பத்தித் தொழில்துறைகளைக் கொண்டு உள்ளன.

  • ஒரு தலைமை முகமையாக செயல்படும் சிப்காட், தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் துறை உதவித் திட்டங்களை செயல்படுத்தி, அதிக முதலீடு மற்றும் வேலை வாய்ப்புள்ள பெருந் தொழில்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது.
  • SIPCOT 12 மாவட்டங்களில், 27,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஏழு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs) உட்பட 19 தொழிற்துறை வளாகங்களை உருவாக்கியுள்ளது.
  • இதில், 2,184 தொழில்துறை நிறுவனங்களுக்கு 20,806 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.1.00 லட்சம் கோடி முதலீட்டை பெற்று, 5.55 லட்சம் தனிநபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • தொழில்துறை வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க, SIPCOT தென் மாவட்டங்களில் அதிக தொழில் பூங்காக்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் இது 20,000 ஏக்கர் நில வங்கியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
  • மேலும், பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க மேலும் 25,000 ஏக்கர் அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • டெல், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், மோட்டோரோலா, சான்மினா மற்றும் மோசர் பேயர் போன்ற தொழில்களை ஈர்த்ததன் மூலம், மாநிலம் முழுவதும் ஏழு துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (SSSEZ) இந்நிறுவனம் ஊக்குவித்துள்ளது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO)

  • 1965 ஆம் ஆண்டில் நிறுவப் பட்ட TIDCO அமைப்பு தனியார் துறையுடன் கூட்டு முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்பு மூலம் தமிழ்நாட்டில் நடுத்தர மற்றும் மிகப்பெரிய தொழில்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • குறிப்பாக மூலதனம் மற்றும் வேலைவாய்ப்பு தீவிரம் கொண்ட தொழில்துறைகளை உள்ளடக்கிய பெரிய தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களின் வளர்ச்சியை இது எளிதாக்குகிறது.
  • தமிழகத்தை நாட்டிலேயே முன்னணி மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே இதன் பின்னணியில் உள்ள ஒரு தொலைநோக்குப் பார்வையாகும்.
  • கைக்கடிகாரங்கள், வாகன உதிரிபாகங்கள், இரும்பு மற்றும் எஃகுப் பொருட்கள், ஜவுளி, இரசாயனங்கள், உரங்கள், மருந்துகள் மற்றும் உணவு மற்றும் தோல் பொருட்கள் உட்பட பல்வேறு தயாரிப்புகளைத் தயாரிப்பதற்காக TIDCO பல கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

  • தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், உயிரி-தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் வேளாண் ஏற்றுமதி மண்டலங்களை நிறுவுவதில் பெரு நிறுவனங்கள் முனைந்துள்ளன.
  • குறிப்பிடத்தக்க வகையில், TIDCO கூட்டு முயற்சிகளில் சிறப்பு முதலீட்டு மண்டலத் திட்டங்களை ஊக்குவித்து வருகிறது மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் சென்னைக்கு அருகில் ஒரு ஒருங்கிணைந்த நிதிச் சேவை மையத்தை (IFSC) உருவாக்கவும் இது முன்மொழிந்துள்ளது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்