TNPSC Thervupettagam

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2020 - 21

March 14 , 2020 1764 days 5972 0
  • பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று துணை முதல்வரும் மாநில நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்,  10வது முறையாக சட்டமன்றத்தில் மாநில நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

பொருளாதாரப் புள்ளி விவரம்

  • 2019-20 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.27% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018-19 ஆம் ஆண்டில் 8.17% ஆக இருந்த இவ்விகிதம், உலகளாவிய மற்றும் தேசிய பொருளாதாரத் தாக்கத்தினால் வீழ்ச்சி நிலையைக் கண்டிருக்கின்றது.
  • 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியானது (தற்போதைய விலையில்) ரூ.20,91,927 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

  • 2020-21 ஆம் ஆண்டிற்கான மொத்த செலவானது ரூ.3,00,390 கோடியாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாயானது (கடன்களைத் தவிர்த்து) ரூ.2,24,739 கோடியாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழக மாநிலத்தால் விதிக்கப்படும் வரியின் வருவாயானது 1.49 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு மற்றும் மத்திய அரசிடமிருந்து மாநிலங்கள் பெறும் உதவித் தொகையான ரூ.69,946 கோடியானது (வருவாய் வரவுகளில் 32%) மத்திய அரசின் நிதி பரிமாற்றங்கள் எனும் வடிவத்தில் இருக்கும்.
  • 2020-21 ஆம் ஆண்டிற்கான வருவாய்ப் பற்றாக்குறையானது ரூ.21,618 கோடி அல்லது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 1.03 சதவிதமாக இருக்குமென்று இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • நிதிப் பற்றாக்குறையானது ரூ.59,346 கோடியாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.84%) இருக்குமென்று இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • இந்த மதிப்பீடானது தமிழ்நாடு நிதியியல் பொறுப்புடைமைச் சட்டத்தின் 3% வரம்பை விட குறைவாக உள்ளது.
  • மாநிலங்கள் தங்கள் கடன் மற்றும் வட்டி கொடுப்பனவுகளை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் கட்டுப்படுத்த முடியுமானால், மேற்கண்ட வரம்பானது அதிகபட்சமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5% வரை உயர்த்தப் படலாம்.

  • 2018-19 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி (நிலையான விலையில்) ரூ.1,56,041 கோடியாகும்.
  • இது 2017-18 ஆம் ஆண்டை விட 7% அதிகமாகும்.
  • 2020 மார்ச் மாத இறுதியில் நிலுவையில் உள்ள கடன் சுமார் 3,97,495.96 கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • மார்ச் 31, 2021 ஆண்டுக்குள் நிலுவையில் உள்ள கடன் ரூ.4.56 லட்சம் கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2020-21 ஆம் ஆண்டில் நிலுவைக் கடனானது  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21.83% ஆக இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது, இது தமிழ்நாடு நிதியியல் பொறுப்புடைமைச் சட்டம், 2003 இன் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும்.
  • 2020-21 ஆம் ஆண்டில், தமிழகம் தனது கடனைச் செலுத்த 52,616 கோடி ரூபாய் செலவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முக்கிய அறிவிப்புகள்

  • பக்கிங்ஹாம் கால்வாய், அதன் வடிகால்கள் மற்றும் கூவம், அடையாரின் அனைத்து வடிகால்களின் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு, ஆகியன மொத்தம் 5,439.76 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • அத்திக்கடவு அவினாசி நீர்ப்பாசன திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக நிதிநிலை அறிக்கையில் ₹ 500 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.
  • 70 கோடி செலவில் தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கருர், நாகப்பட்டினம், இராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் நிறுவ முன்மொழியப் பட்டுள்ளன.
  • அம்மா உணவகம் திட்டத்திற்கு நிதியளிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் ஒர் 'இலாப நோக்கற்ற' சிறப்பு நோக்கம் கொண்ட அமைப்பை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
  • பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் ஆண்டில் தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் வேளாண் செயலாக்கத் தொகுப்புகள் நிறுவ முன்மொழியப் பட்டுள்ளன.
  • திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி அருகே தொழில்துறைப் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
  • அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு கையகப்படுத்தி, அதை கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யவிருக்கிறது.
  • மாவட்டங்களில் முதியோர் இல்லங்களை சோதனையின் அடிப்படையில் துவங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
  • முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டாக்டர் சி.ரங்கராஜன் தலைமையிலான சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தைச் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கவும், அந்நிறுவனமே அதன் சொந்த பட்டங்கள் மற்றும் பட்டச் சான்றிதழ்களை வழங்கவும் சட்டம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
  • தொடர் தொழிலாளர் சக்தி ஆய்வு அறிக்கையின்படி (2017-18), அகில இந்திய வேலையின்மை விகிதம் 6.0% உடன் ஒப்பிடும்போது, தமிழகம் 3.5 சதவிதத்துடன் மிகக் குறைந்த வேலையின்மை விகிதத்தைக் கொண்டுள்ளது.

துறை சார்ந்த ஒதுக்கீடுகள்

  • 2020-21 ஆம் ஆண்டில், எரிசக்தி (37%), போக்குவரத்து (27%), மற்றும் நீர் வழங்கல், சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு (25%) ஆகிய துறைகள் முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட ஒதுக்கீடுகளில் அதிகரிப்பு கண்டுள்ளன.
  • வேளாண் துறைக்கு 11,894.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தொல்லியல் துறைக்கு 31.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • கீழடியில் உலகத் தரம் வாய்ந்த ஒரு புதிய அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கு அரசு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
  • முன்னர் அறிவிக்கப்பட்ட 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்காக நிதிநிலை அறிக்கையில் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
  • பள்ளி கல்வித் துறைக்கு 38,181.73 கோடி ரூபாய், உயர்கல்விக்கு, 5,052.84 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் தமிழகம், கல்விக்கான செலவினங்களில் 15% ஒதுக்கியுள்ளது. இது 29 மாநிலங்களின் கல்விக்கான சராசரி நிதி நிலை அறிக்கை ஒதுக்கீட்டை விட சற்றே குறைவாகும்.
  • சுகாதாரத்துக்கான மொத்த செலவினங்களில் 5.7% தமிழகம் ஒதுக்கியுள்ளது. இது 29 மாநிலங்களின் சராசரி செலவினத்தை விட அதிகமாகும்.
  • 2020-21 ஆம் ஆண்டில், தமிழகம் 1,36,098 கோடி ரூபாயை, நிர்ணயம் செய்யப்பட்ட செலவினங்களுக்காக செலவிடும் என்று அறிவித்துள்ளது. அதாவது சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலுத்துதல் ஆகியவற்றை இவை குறிக்கும்.
  • புதிய குத்தகைச் சட்டத்தின் கீழ் வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரிக் கட்டணத்தை 1% இலிருந்து 0.25% ஆகவும், அத்தகைய ஒப்பந்தங்களின் பதிவுக் கட்டணங்களை 1% இலிருந்து 0.25% ஆகவும் அதாவது  அதிகபட்சமாக ₹ 5,000 ஆகவும், குறைக்கப் படுவதாக தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொள்கை சிறப்பம்சங்கள்

  • நகர்ப்புற மற்றும் சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மாநிலத்தை ஆதரிப்பதற்காக தமிழ்நாடு நகர்ப்புற முதன்மை முதலீட்டுத் திட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
  • ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்படும்.
  • சென்னை மாநகராட்சிக்கான விரிவான வெள்ளத் தடுப்புத் திட்டமானது முன்மொழியப் பட்டுள்ளது.
  • இது உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் மேற்கொள்ளப் படும்.

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு

  • சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டமானது (2017),  சரக்கு மற்றும் சேவை வரியின் அமலாக்கத்தால் எழும் எந்தவொரு வருவாய் இழப்பிற்கும் 2022 வரை (5 ஆண்டுகள்) மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவாதம் அளிக்கிறது.
  • இச்சட்டம் மாநிலங்களின் வருவாயில் 14% வருடாந்திர வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இது சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பெறப் படுகிறது.
  • ஒரு மாநிலத்தின் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் வரும் வருவாய் உறுதி செய்யப்பட்ட வளர்ச்சியுடன் பொருந்தவில்லை என்றால், அந்த பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய இழப்பீட்டு மானியங்கள் வழங்கப் படும்.

2020-21 ஆண்டிற்கான 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள்

  • 2020-21 நிதியாண்டிற்கான 15ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கை 2020 பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
  • 15ஆவது நிதி ஆணையம் 2020-21 ஆம் ஆண்டில் மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 41% பங்கை பரிந்துரைத்ததுள்ளது. இது 14ஆவது நிதி ஆணையம்   (2015-20) பரிந்துரைத்த 42% பங்கிலிருந்து 1% குறைவாகும்.
  • புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய ஒன்றியப் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசின் பங்கிலிருந்து நிதி வழங்குவதற்காக இந்த ஆண்டு 1% குறைக்கப் பட்டுள்ளது.
  • 15ஆவது நிதி ஆணையமானது தனிப்பட்ட மாநிலங்களின் பங்கை நிர்ணயிப்பதற்கான திருத்தப்பட்ட அளவுகோல்களையும் முன்மொழிந்துள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டிற்கான வரி வருவாயில் 15ஆவது நிதி ஆணையம் தமிழகத்திற்கு 1.72% பங்கைப் பரிந்துரைத்துள்ளது (2015-20 ஆம் ஆண்டிற்கான 14ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்த பங்கைப் போலவே).
  • 2020-21 ஆம் ஆண்டில் மத்திய வரி வருவாயில் இருந்து பெறப்படும் ஒவ்வொரு 100 ரூபாயிலும், தமிழ்நாடு ரூ 1.72 பெறும் என்பதை இது குறிக்கிறது.

                         

ó ó ó ó ó ó ó ó ó ó

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்