- ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆக்கபூர்வமாகப் பங்களிக்க முடியும். அதற்குத் தரமான மருத்துவ வசதிகளுடன், நோய்த் தடுப்புப் பணிகளுக்கும் முன்னுரிமை கொடுப்பது ஓர் அரசின் கடமை. அந்த வகையில் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகள், நவீன சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளிலும் தமிழ்நாடுதான் தற்போது முன்னத்தி ஏராக இருக்கிறது.
- அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசுப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புறச் சமுதாய மையங்கள் என நமது மருத்துவக் கட்டமைப்பின் தரமான செயல்பாடுகளால், சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. பொதுச் சுகாதாரத்தைப் பராமரிப்பதில் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் பராமரிப்பதில் முன்மாதிரி மாநிலமாக முன்னேறிவருகிறது. அதிக மருத்துவப் படுக்கைகள் கொண்ட மாநிலமாகவும் விளங்கிவருகிறது.
செல்ல வேண்டிய தூரம்
- திமுக அரசு பதவியேற்ற பிறகு 2021 ஆகஸ்ட் 5 அன்று, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டமும், 2022 டிசம்பர் 18 அன்று ‘நம்மைக் காக்கும் 48 - இன்னுயிர் காப்போம்’ திட்டமும் தொடங்கப்பட்டன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.72,000இலிருந்து ரூ.1,20,000 ஆக உயர்த்தப்பட்டது.
- இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மட்டுமின்றி, நடுத்தர வர்க்கத்தினரும் அரசு மருத்துவமனைகளில் சேவை பெறும் வகையில் தமிழ்நாடு சிறப்பு பெற்றுள்ளது. என்றாலும், உலகச் சுகாதாரத்தின் எதிர்பார்ப்புகளோடு ஒப்பிட்டால், செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்புச் சிகிச்சைகள்
- உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் தற்போது தமிழ்நாடுதான் முதலிடம் என்றாலும், தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே அத்தகைய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலும், விபத்துகள் மூலம் ‘மூளைச்சாவு’ அடைந்தவர்களிடம்தான் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படுகின்றன.
- இந்த வகையில் அரசு மருத்துவமனைகளில்தான் அதிக உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகின்றன. ஆக, அரசு மருத்துவமனைகள் உறுப்புகளைப் பெறும் மையங்களாகச் செயல்படுகின்றனவே தவிர,உறுப்புகளைப் பொருத்தும் மையங்களாக இல்லை.
- மேலும், இந்தச் சிகிச்சைகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் பயனாளிகளுக்குப் பல லட்சங்கள் செலவாகிறது. அதனால், இது சாமானியருக்குப் பயன் தருவதில்லை. திறமைமிக்க மருத்துவர்களைக் கொண்டு இயங்கும் அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு வழியில்லை எனும் நிலைமை, சுகாதாரக் குறியீட்டில் தேசிய அளவில் முதன்மைபெற்றிருக்கும் ஒரு மாநிலத்துக்கு அழகு சேர்க்காது.
- அடுத்து, தற்போது நாடு முழுவதிலும் தனியார்செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்திருக்கின்றன. இதற்கான செலவைச் சாமானியர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆனால், சாமானியக் குடும்பத்தினருக்கு ஏற்படும் குழந்தைப்பேறு பாதிப்பைத் தீர்க்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
- அதற்கு மாவட்ட அளவில் மருத்துவக் கல்லூரி இணைந்த அரசு மருத்துவமனைகளில் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் செயல்பட வேண்டும். இந்த மையங்களுக்குத் தேவையான சிறப்பு மருத்துவர்கள் நாட்டில் குறைவாகவே உள்ளனர். ஆனாலும், அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்களுக்குத் தொடர் சிறப்புப் பயிற்சிகள் கொடுத்து, இந்த மையங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அரசு தயாரிக்க வேண்டும்
- 2021இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னையிலேயே கரோனா தடுப்பூசி தயாரிக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு முன்வைத்தது. இதேபோல், அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை அரசே தயாரித்து விநியோகம் செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
- காரணம், சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் வருடாந்திர நிதியில், முக்கால்வாசி மருந்துகளுக்குத்தான் செலவிடப்படுகிறது. தற்போது மாநில அரசு மருந்துகளைத் தனியாரிடமே வாங்குகிறது. அதில் முறைகேடுகளும் நடக்கின்றன. இதைத் தடுப்பது அவசியம். இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள தொழில்துறைப் பூங்காக்கள் வழியாக, அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவக் கருவிகளையும் அரசே தயாரிக்கலாம்.
நிறைவேற்றப்பட வேண்டியவை
- திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள், படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காத்திருப்பு அறை இல்லை, மருத்துவர்கள் பற்றாக்குறை, ஆம்புலன்ஸ் வசதி இல்லை எனப் பல புகார்கள் வருகின்றன.
- ‘காலியாக இருக்கும் மருத்துவப் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவோம்; கடந்த ஆட்சியில் ஒப்பந்த அடிப்படையிலும் தற்காலிகமாகவும் நியமிக்கப்பட்ட பணியாளர்களை நிரந்தரமாக்குவோம்; ஊதிய உயர்வை உறுதி செய்வோம்’ எனும் திமுக தேர்தல் வாக்குறுதி இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
- தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகப்பிரசவங்கள் தொடங்கிப் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இவை எல்லாவற்றையும் பொதுநல மருத்துவர்கள்தான் மேற்கொள்கின்றனர். சில சிக்கலான மகப்பேறு சிகிச்சைகளுக்குத் தனியார் சிறப்பு மருத்துவர்களை அவ்வப்போது உதவிக்கு அழைத்துக்கொள்கின்றனர்.
- ஆனால், சமயங்களில் அவசரத்துக்குத் தனியார் மருத்துவர்கள் கிடைப்பதில்லை. அப்போது மேல்சிகிச்சைக்காக அவசர அவசரமாக நகர்ப்புற மருத்துவமனைகளுக்குப் பயனாளிகளை அனுப்ப வேண்டியிருக்கிறது. இதனால், அந்தப் பயணத்தின்போதும், பிரசவத்தின்போதும் தாய் மற்றும் சேயின் உயிருக்கு ஆபத்து நெருங்குகிறது.
- பதிலாக, இந்த மருத்துவமனைகளுக்கு நிரந்தரமாகச் சிறப்பு மகப்பேறு மருத்துவர், குழந்தை நல மருத்துவர், மயக்க மருத்துவர் ஆகியோரை நியமித்துவிட்டால், பயனாளிகளை நகர்ப்புற மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டியதில்லை. பிரசவத்தின்போது தாய்–சேய் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும்; நகர்ப்புற மருத்துவமனைகளின் பணிப் பளு குறையும்.
தேவைப்படும் ஏற்பாடுகள்
- பொதுவாக, கிராமப்புறங்களில்தான் பாம்புக்கடி பிரச்சினை அதிகம். ஆனால், பாம்புக்கடிக்கான நஞ்சு முறிவு மருந்துகள் நகர்ப்புற மருத்துவமனைகளில்தான் கிடைக்கின்றன. புதிய ஏற்பாடாக, 24 மணி நேரமும் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடி மற்றும் இதர நஞ்சு முறிவுக்கான சிகிச்சைகள் இடம்பெற வேண்டும்.
- அடுத்ததாக, பிரசவத்தின்போது தாய்க்கு ஏற்படும் திடீர் ரத்த இழப்பை ஈடுகட்டரத்த வங்கிகளும் அங்கே செயல்பட வேண்டும்.மருத்துவர்கள், செவிலியர்கள் மதிய நேரங்களில் களப்பணி மற்றும் கள ஆய்வுப் பணிகளுக்கு ஒன்றுகூடிச் செல்வதற்கு வாகன வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
- இந்த மாதிரியான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த, சென்ற ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு போதாது. கடந்த திமுக மாநாட்டில் சுகாதாரத் துறைக்கான நிதி மூன்று மடங்கு உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அவர்கள் சூளுரைத்ததைச் செயல்படுத்தினால் போதும், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் இன்னும் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு அமையும்.
- அப்போது முன்புபோல் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் என அனைத்துத் தரப்பினரும் அரசு மருத்துவமனைகளை நாடி வரக்கூடும். இன்றைய தேதியில் நம் அனைவரின் எதிர்பார்ப்பும் இதுவாகத்தான் இருக்கிறது. அரசு செய்யுமா?
நன்றி: தி இந்து (15 – 03 – 2023)