TNPSC Thervupettagam

தமிழ்நாடு பெண்களுக்கான புதிய கொள்கை 2021

May 17 , 2023 605 days 2402 0

(For the English version of this Article Please click Here)

  • பெண்களுக்கு அதிகாரமளிப்பது என்பது பின்வரும் ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதாகக் கூறலாம். அவை, பெண்களின் சுயமரியாதை உணர்வை மேம்படுத்துதல், சொந்த விஷயங்களில் தங்களின் விருப்பங்களைத் தீர்மானிப்பதற்கான உரிமை, வாய்ப்புகள் மற்றும் வளங்களை அணுகுவதற்கான உரிமை, வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் சொந்த வாழ்க்கையை குறித்து முடிவெடுக்கும் உரிமை மற்றும் சமூக நீதியை உறுதி செய்வதற்கும் சமூகப் பொருளாதாரச் சமத்துவத்தை உருவாக்குவதற்கும் உகந்த சூழ்நிலையினை ஏற்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு ஆகியனவாகும்.

தற்போதைய நிலை

  • பொருளாதார வளர்ச்சியில் 2006 நிதி ஆண்டு முதல் தமிழ்நாடு சராசரியாக 8.5% நிலையான சீரான வளர்ச்சியுடன் நாட்டிலேயே பொருளாதார வளர்ச்சியில் இரண்டாவது பெரிய மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
  • தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு இந்தியச் சராசரியை விட அதிகமாகவும் குறிப்பிடத்தக்க அளவிலும் உள்ளது.
  • கிராமப்புற பெண் தொழிலாளர்கள் பங்களிப்பு தமிழகத்தில் 35.1 விழுக்காடு உள்ள நிலையில் அது இந்தியச் சராசரியை விட 7.5% அதிகமாக உள்ளது.
  • மனிதனின் மொத்த வேலைத் திறனில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தும் முறையான மற்றும் நிலையான வேலை வாய்ப்பிற்கு அவர்களின் பங்கேற்பு என்பது பெரும் சவால் நிறைந்ததாகவே இருக்கிறது.
  •  2019-20 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு லட்சம் பெண்களில் 146 பெண்கள் ஆவர்.
  • 2019-20 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களில் தண்டனை பெற்றவர்களின் சதவீதம் 18.3 என்ற அளவிலேயே உள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பெண்களில் 4.3 பெண்கள் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
  • வரதட்சணை கொடுமை வழக்குகளில் தண்டனை பெறும் சதவீதம் வெறும் 7.7 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.

தொலைநோக்குப் பார்வை

  • பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, பெண்கள் அனைத்து விதமானச் சேவைகளைப் பெற்றிடவும், தங்கள் உரிமைகளைச் சமமான முறையில் அணுகவும், பாகுபாட்டைக் குறைக்கவும், பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளைத் தடுத்திடவும், அவர்களின் திறன் மேம்படவும், கனவுகளை நனவாக்கவும் சம வாய்ப்புகளை தமிழ்நாடு அரசு வழங்கும்.

இலக்கு

  • மாநிலத்தின் 3.2 கோடி பெண்களுக்கும் அதிகாரமளிக்கும் வகையில், பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் தங்கள் குறிக்கோளை அடைவதற்கு முழு உயிர்ப்புடன் கூடிய சூழலை தமிழ்நாடு ஏற்படுத்தும். அனைத்துத் துறைகளுக்கிடையேயான செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் என்ற ஒற்றை இலக்கை நோக்கி இரு பாலினத்தவர்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு பயணிக்கும்.

வழிகாட்டிக் கொள்கைகள்

  • சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மற்றும் பயிற்சி போன்ற அனைத்துச் சேவைகளும் எளிதில் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல்.
  • பாலின நெறிமுறைகள் மறுகட்டமைக்கப்பட வேண்டி, அனைவரின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் மனப்பான்மைகளைக் கருத்தில் கொண்டு அந்த அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட வலியுறுத்தப் படுதல்.
  • வளர் இளம் பெண்கள் உயர்நிலை வாய்ப்புகள் பெற இளமைப் பருவத்திலிருந்தே உயர் வளர்ச்சித் துறைகளில் பெண்கள் நுழைவதற்குத் தயார் செய்யப் படுதல்
  • பெண்கள் மற்றும் சிறுமியர்க்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் எந்த விதமான பாகுபாடுகளுமில்லாத, வன்முறையற்ற, சகிப்புத்தன்மையுள்ள ஒரு வலுவான ஒருங்கிணைந்த சமுதாயக் கட்டமைப்பை உருவாக்குதல்.

முக்கிய குறிக்கோள்கள்

  • இந்தக் கொள்கை ஐந்து வருட காலத்திற்குள் செயல்படுத்தப்படும். இதன் குறிக்கோள்கள் கீழ்க்கண்டவாறு :
  • வளர் இளம் பருவத்தினரிடையே ஊட்டச்சத்து குறைபாடுகள் மூலம் ஏற்படும் விளைவுகளை நேர் செய்வதுடன், இரத்த சோகை மற்றும் குறைந்த எடை போன்ற குறைபாடுகளைப் பாதியாக குறைப்பது.
  • ஒரு கோடிப் பெண்களை சுய உதவிக் குழு அமைப்பிற்குள் கொண்டு வரப் பட்டு, விரிவான வலையம் (network) மற்றும் வழிகாட்டிகள் வாயிலாக தீவிர வழிகாட்டுதல் மூலம் வாழ்வாதார நிலையிலிருந்து குறைந்த பட்சம் 1,00,000 வாழ்வாதார அமைப்புகள் நிறுவனங்களாக நிலை உயர்த்தப்படும்.
  • நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பெண்களிடையே டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைக்க இணையச் சேவைகள் அதிகரிக்கப்படும்.
  • தரவு (Data) அடிப்படையிலான உருவாக்கத்தை எளிதாக்க, அனைத்து அரசுத் துறைகளும் ஆண்டுதோறும் பாலினம் வாரியாக பிரிக்கப்பட்ட தரவுகளை (Data) வழங்கும்.
  • இடைநிலையில் ஒவ்வொரு ஆண்டும் இடைநிற்றல்களை 10% குறைத்தல் மற்றும் மூன்றாம் நிலை சேர்க்கை விகிதத்தை ஒவ்வொரு ஆண்டும் 5% அதிகரித்தல்.
  • ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது சமூகத்தின் பின்தங்கியப் பிரிவுகளைச் சார்ந்த 1000 பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு குறிப்பாக அறிவியல், தொழிற்நுட்பம், பொறியியல் மற்றும் கணக்கியல் பாடங்களில் (STEM) ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு ஆதரவு வழங்குதல்.
  • குடும்பச் சூழல் காரணமாக வேலையிலிருந்து நின்ற 10,000 பெண்களுக்கு மீண்டும் வேலையில் இணைவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப் படும். இவர்களுடைய திறன் இடைவெளியைக் குறைப்பதற்குப் பொருத்தமான தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் விட்ட இடத்தில் மீண்டும் வேலையில் சேர்வதற்கு (Iateral entry ) தக்க வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப் படும்.
  • மகளிர் வங்கியை நிறுவுவதன் மூலம் கடன் தேவைப்படும் பெண்களுக்கு கடன் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்துதல் (வாழ்ந்து காட்டு பெண்ணே).
  • அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தற்காப்புக் கலைப் பயிற்சி அளிப்பதன் மூலம் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரித்தல், மற்றும் பெண்களின் மேலும் சுய மதிப்பை மேம்படுத்துதல்.
  • பாலினச் சமத்துவத்தை நோக்கிச் செல்வதற்கு அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களில் பாலினப் பாகுபாடு இல்லாத நிலையை உறுதி செய்தல்.
  • பெண்களுக்குத் தொழில் முனைவோர் வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பின் மூலம் பெண்களால் நிர்வகிக்கப் படும் ஒரு லட்சம் நிறுவனங்களை உருவாக்குதல்.
  • தொழில் துறையில் பெண்களின் பங்கேற்பினை அதிகரித்து மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 40% பங்கிற்கு வழி வகுக்கச் செய்தல்.
  • பொது இடங்கள் மற்றும் அரசுத் துறைகள் உட்பட அனைத்துப் பணியிடங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பானச் சூழலை ஏற்படுத்திடும் வகையில், உள்ளகப் புகார்கள் குழு மற்றும் உள்ளூர்ப் புகார்கள் குழு செயல்படுத்தப்படும்.  பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும் வகையில் பாலினப் பாதுகாப்புத் தணிக்கை மூன்றாம் தரப்பு நிறுவனம் மூலம் மேற் கொள்ளப் படும்.
  • குற்றச் சம்பவம் குறித்து தகவல் பெற்றவுடன் 24 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப் படுவதை உறுதி செய்தல்,
  • பாதிக்கப்பட்ட பெண்கள் கைவிடப் பட்டதாக உணராத வகையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டு மற்றும் அவர்களது அடையாளம் பாதுகாக்கப்பட்டு அவர்களுக்கு முழுமையான ஆதரவளிக்கும் அமைப்பை நிறுவுதல்.
  • ஒவ்வொரு 10 கிமீ சுற்றளவிலும் பெண்களுக்கு மனவள ஆதரவு (Emotional Support System) அமைப்புகளை உருவாக்குதல்.
  • பெண்கள் தலைமையிலுள்ள குடும்பங்களின் தேவையின் அடிப்படையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயனடையச் செய்தல்.
  • இந்தியாவிலேயே பிறப்புப் பாலின விகிதத்தை உயர்த்தச் செய்யும் (Sex Ratio) சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குதல்.
  • தனியார், பொதுத்துறை பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், வாரியங்கள் போன்றவற்றில் 50% பெண்களுக்குத் தலைமைப் பதவிகள் வழங்க ஊக்குவித்தல்.
  • பெண்கள் அரசியல் களத்தில் தடையின்றிப் பங்கேற்க ஊக்குவிப்பதற்காக அரசியலின் அடிப்படைகளை கற்றுக் கொள்வதற்காக ஒரு கல்வி அமைப்பினை ஏற்படுத்துதல்
  • ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாண்புமிகு முதலமைச்சருடன் நேரடியாக பேசி (சொல்வதைச் செய்வோம் திட்டம்) பெண்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான தளம் அமைத்தல்.

செயலாக்க உத்திகள்

  • மேற்குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை மையமாகக் கொண்டு, வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, தற்போதுள்ள திறமைகளை மேம்படுத்துவதற்காக முக்கியப் பங்குதாரர்களுடனான உறவு உந்துதலை வலுப்படுத்துதல் போன்றவற்றை அளித்து, அதற்கான வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் மகளிருக்கு உரிமைகள் பெற்றுத் தருவதில் இக்கொள்கை முதன்மையாக செயல்படும்.
  • அதற்கு கீழ்க்கண்ட நான்கு அம்சங்களும் இவ்வழிகாட்டி நெறிமுறைகளைச் செயல்படுத்துவதற்கான ஆதாரத் துண்களாக இருக்கும்.

1. சமூகம்

  • மகளிருக்கான அதிகாரம் அளித்தல் என்பது சுதந்திரத்துடனும், தன்னம்பிக்கையுடனும் சுயமாகவும், கூட்டாகவும் மகளிர் செயல்படுவது ஆகும். ஏழ்மையிலும் ஏழ்மையான நிலையில் பெண்கள் தள்ளப் படுவதற்கான சமூகக் கட்டமைப்புகளை மாற்றும் வகையில் பெண்களே முன்னின்று செயல்படும் வகையில் அவை மாற்றிமைக்கப்பட வேண்டும்.
  • உயர்நிலைத் தொழில்நுட்பக் கல்வி மற்றும் மேலாண்மைக் கல்வி பயில் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் JEE, CAT, UPSC, TNPSC ஆகியவற்றிற்கு இலவச/ மானியத்துடன் கூடிய சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப் படும்.
  • குழந்தைத் திருமணம் மற்றும் சிறார்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக உள்ளது குறித்து தணிக்கைகள் நடத்தப்படும். பள்ளிக்கு செல்லும் வழித்தடங்களில் வன்முறை நடப்பதற்கான வாய்ப்புகள்/அச்சுறுத்தல்கள் இருப்பின் அவற்றைக் களைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • இனப்பெருக்கத்திற்கு அப்பாற்பட்ட மற்றும் பாலியல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய வகையில் வளர் இளம் பருவத்தினரின் உடல்நலப் பிரச்சினைகளை விரிவாகத் தீர்க்க, வளர் இளம் பருவத்தினரின் நேய மருத்துவகம் (AFHCs) (தோழி உனக்காக) நிறுவப் பட்டு, அத்தகைய மருத்துவகங்கள் சுகாதார மேம்பாட்டு மையங்களாக மாற்றப்படும்.
  • மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கு இனப்பெருக்க சுகாதாரச் சேவைகள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சையின் போது பாகுபாடு காட்டப் படுவதைத் தடுக்கும் வகையில், மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கு உகந்த சூழல் வழங்கப்படும்.
  • பாதிக்கப் பட்டப் பெண்களுக்கு பாதிக்கப்பட்டவர் / சாட்சி ஆதரவளிக்கும் திட்டங்களைப் பாதுகாக்கும் வகையில் சூழ்நிலையின் தேவைக்கேற்ப அரசு ஏற்படுத்தும்.  இவை செயல்பாட்டு முறையில் வடிவமைக்கப்பட்ட நிலையான நெறிமுறைகளின்படி அமையும்.
  • அனைத்து ஒற்றை மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் MGNREGS திட்டத்தின் கீழ் 50 வேலை நாட்கள் கூடுதலாக வழங்கப்படும்.
  • பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) தொடர்பான வழக்குகளை விரைவாகக் கண்காணிப்பது குறித்து நீதித்துறையுடன் கலந்தாலோசித்து அதனை அரசு உறுதி செய்யும்.
  • பெண்கள் தொடர்பானச் சட்டங்கள் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டும்.
  • போதைக்கு அடிமையானவர்களை மீட்க நவீன சிகிச்சை மற்றும் மறுவாழ்வு உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய மையங்கள் அமைக்கப்படும்.

2. பொருளாதாரம்

  • பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம் 2007 என்ற சட்டத்தில் வன உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான நிர்வாகக் குழுக்களில் பெண்கள் சம விகிதத்தில் இடம் வகிப்பர்.
  • பெண் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சிறு வனப் பொருட்களையும் விறகுகளையும் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்படும்.
  • வனப் பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய பெண்களின் பாரம்பரிய அறிவு அங்கீகரிக்கப்பட்டு, அது வனப் பாதுகாப்பு திட்டங்களில் ஒருங்கிணைக்கப்படும்
  • விவசாயம் செய்யப்படாத நிலங்களைக் குத்தகைக்கு விடுவது அல்லது விற்பனை செய்வது போன்றவற்றில் மகளிர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • தொழில் ரீதியான பிளவு மற்றும் பாலின ஊதிய இடைவெளி 50% குறைக்கப்படும்.
  • ஒரு லட்சம் பெண் தொழில்முனைவோருக்கு தொழில் வல்லுநர்களால் வழிகாட்டுதல் வழங்கப் பட்டு அவர்கள் தொழில் நடத்திட அரசு உதவி புரியும்.
  • எந்த நிறுவனங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகிறார்களோ, அங்கெல்லாம் குழந்தை மற்றும் பெண்கள் பராமரிப்பு அமைப்பு அமைக்க அரசு உதவி புரியும்.
  • மகளிருக்கு கட்டாயமாக வாரத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு அளித்தல்.

3. அரசியல்

  • அரசியல், பொருளாதாரம், சமூகக் கலாச்சாரம் மற்றும் சொத்துக்களில் பெண்களுக்கு சம உரிமை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் பாலின ரீதியில் ஒரு நடுநிலையானச் சமூகத்தை இவ்வரசு உருவாக்கும்.
  • பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பெண்களுக்கான 33.3% பிரதிநிதித்துவத்தை அனைத்து வகையிலும் வழங்கப் படுவதை உறுதி வேண்டும்.
  • மாநில உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு ஏற்கனவே 50% வழங்கப்பட்டுள்ள நிலையில் பெண்களுக்கான 33.3% இட ஒதுக்கீட்டை சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தலில் அளிக்க வகை செய்யப் படும்.
  • பாலினச் சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் குறித்து அனைத்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி அலுவலர்களுக்குப் பெண் உரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடு அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

4. மனவளம் (Emotional)

  • பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆகியோரை உளவியல் மற்றும் உணர்வுப் பூர்வமாக  மேம்படுத்தும் வகையில் இக்கொள்கை அமைந்துள்ளது.
  • இது சுதந்திரம், விழிப்புணர்வுடன் முடிவெடுக்கும் தன்மை மற்றும் நேர்மறை எண்ணங்களின் தூண்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
  • மன ஆரோக்கியம் என்பது அதிகபட்சப் பாலினப் பிரச்சனை ஆகும். குறிப்பாக மனச்சோர்வு என்பது மற்றவர்களை விட ஏழை மகளிரிடையே அதிகப் படியாக காணப்படுகிறது.
  • இதற்காக சமூக அமைப்புகள் தலையிடும் வகையில் மாவட்ட மனநல சுகாதாரத் திட்டம் துவங்கப் படும்.
  • இதற்கான உரிய வழிமுறைகளை, தேவையான மருத்துவப் பரிசோதனை, பராமரிப்பு மற்றும் உரிய மருத்துவச் சிகிச்சை போன்ற வசதிகளைக் கொண்டு பஞ்சாயத்து அளவில் உள்ளாட்சி அமைப்புகளுடனும் சமூக அமைப்புகளுடனும் ஒருங்கிணைத்து அரசு செயல்படுத்த வேண்டும்.
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரம் மற்றும் சேவையை உயர்த்தி,  மன ஆரோக்கியப் பிறழ்தல் மூலம் ஏற்படும் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, மன அழுத்தம் போன்றவைகளைக் கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்க வழி வகை செய்யப் படும்.
  • ஆரம்ப சுகாதாரப் பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து உடனடியாக முதல் தகவலினைச் சம்மந்தப் பட்ட காவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப் பயிற்சி அளிக்கப் படும்.

முடிவுரை

  • இந்தக் கொள்கையானது அறிவிக்கப் பட்டதிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் அல்லது ஒரு புதியக் கொள்கை உருவாக்கப் படும் வரை நடைமுறையில் இருக்கும்.
  • எல்லாவற்றிற்கும் மேலாக ஏற்கெனவே உள்ள பயனாளிகளைப் பாதிக்காத வகையில் மாநில அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்தக் கொள்கையில் உரிய திருத்தங்கள் மேற் கொள்ளப் படலாம்.
  • இந்தக் கொள்கை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆய்வு செய்யப் படும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்