டிஜிட்டல் அலுவலக முறை - தமிழ்நாடு
மின்-அலுவலகம்
- மின்-அலுவலகம் என்பது அரசு அலுவலகங்களில் உள்ள வழக்கமானப் பணிகளை தன்னியக்கமாக்க அனுமதிக்கும் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பாகும்.
- மின்னணுக் கோப்பு மேலாண்மை அமைப்பு, காகிதம் இல்லா அலுவலகத்தை உருவாக்கவும், விரைவாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
- இது அலுவலகத்திற்கு உள்ளும் வெளியும் நடைபெறும் நிகழ்நேரத் தொடர்புகள் மற்றும் முடிவுகள் மேற்கொள்ளும் திறனை மேம்படுத்த உதவும்.
- இந்த மென்பொருளில் உள்ள தணிக்கை மற்றும் வரலாற்று அம்சங்கள் வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிக்கின்றன.
- இதுவரையில் 42 அரசுத் துறைகள் / அலுவலகங்களில் 43,359 பயனர்கள் இந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்துகின்றனர்.
- தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் இந்த மின்-அலுவலக மென்பொருள் பயன்பாட்டினைத் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நடைமுறைப் படுத்த உள்ளது.
- முதல் கட்டமாக, தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறைகளிலும் மின்-அலுவலக மென்பொருளை செயல்படுத்த ஏதுவாக அனைத்துத் தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் பயிற்சி வழங்கப் பட்டுள்ளது.
- 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தலைமைச் செயலகம் முழுவதும் மின் அலுவலக மென்பொருளை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டு இருந்தது.
- இது தலைமைச் செயலகத்தில் முழுமையாக செயல்படுத்தப் பட்டப் பின்னர், அடுத்தடுத்தக் கட்டங்களில், அனைத்து துறைத் தலைமையகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் (மற்றும் அதன் கீழ் உள்ள அலுவலகங்கள்) மின்-அலுவலக மென்பொருளை நடைமுறைப் படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் ஒரு சேவையாக
- மின்-ஆளுமை முயற்சியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு, பல்வேறு அரசுத் துறைகள்/ முகமைகள்/வாரியங்கள் கீழ் பணிபுரியும் அனைத்து அலுவலகர்களுக்கும் 'tn. gov. in' என்ற களப் பெயரின் அடிப்படையிலான அலுவலர் சார்ந்த மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் குறியீடுகளை (e-Mail ID) அலுவல் சார்ந்தத் தொடர்புக்காக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், அரசின் சில பிரிவுகளுக்கு வேண்டி அவற்றின் தேவைக்கேற்ப துறைசார்ந்த மின்னஞ்சல் குறியீடுகளும் உருவாக்கப் படுகின்றன.
- ஒவ்வொருப் பணியாளருக்கும் பதவி சார்ந்த மின்னஞ்சல் குறியீடுகள் மற்றும் 'பெயர்' சார்ந்த மின்னஞ்சல் குறியீடுகளும் உருவாக்கப்படுகிறது.
- தற்போது, 2022-23 ஆம் ஆண்டில் தேசியத் தகவலியல் மையத்தின் (NIC) உதவியுடன் 65516 மின்னஞ்சல் குறியீடுகள் அரசு ஊழியர்களுக்காக உருவாக்கப் பட்டுள்ளன.
குறுஞ்செய்தி ஒரு சேவையாக
- தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) அனைத்து அரசுத் துறைகளுக்கும் குறைந்த விலையிலும் மற்றும் பயனுள்ள வகையிலும் குறுஞ்செய்தி நுழைவாயில் சேவைகளை வழங்குகிறது.
- இக்குறுஞ்செய்தித் தளமானது பயன்பாட்டுத் துறைகள், தங்கள் மென்பொருள் சேவைதளத்தில் இருந்து மக்களுக்குச் செய்திகளை அனுப்ப வழி செய்யும்.
- இது தரவுகளின் முழுமையானப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதுடன், வேகம் மற்றும் நம்பகத் தன்மையை உறுதி செய்கிறது.
- தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தற்போது தமிழ்நாட்டிலுள்ள சுமார் 24 துறைகள்/ வாரியங்கள் / பொதுத்துறை நிறுவனங்கள்/ முகமைகளுக்குச் சேவை செய்து வருவதுடன், 2022-2023 ஆம் ஆண்டில் சுமார் 27.80 கோடி குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளது.
மின்-கையொப்பச் சேவை (e-Sign as a Service)
- இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் இணைய அங்கீகாரம் மற்றும் ஆதார் e-KYC சேவையைப் பயன்படுத்தி, இணையதளம் வாயிலாக ஆவணங்களில் உடனடி கையொப்பமிடுவதற்கு மின்-கையொப்பச் சேவை உதவுகிறது.
- மின்-கையொப்பச் சேவையானது எங்கும் மற்றும் எப்பொழுதும் ஆவணங்களில் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடுவதற்கு எளிதான மற்றும் பாதுகாப்பான வழியை வழங்குகிறது. மேலும் மின்-கையொப்ப முறையைப் பயன்படுத்துவதன் மூலமாக தவறான பயன்பாடு தவிர்க்கப் படுவதோடு இம்முறை பாதுகாப்பாகக் கருதப்படுகிறது.
- தமிழ்நாட்டின் அனைத்து அரசுத்துறைகளிலும் மின்-கையொப்பச் சேவையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது C-DAC உடன் இணைந்து மின்-கையொப்பச் சேவையை வழங்குகிறது.
- மின்-கையொப்பச் சேவையானது, இந்தியத் தனித்துவச் சேவையை அடையாள ஆணையத்தின் e-KYC சேவையை மேம்படுத்துவதற்காக என்று ஒருமுறை கடவுச்சொல் (OTP) மற்றும் பயோ மெட்ரிக் (உயிரித் தரவு) அடிப்படையிலான முறைகளுக்கு துணை புரிகிறது.
- மின்-கையொப்பச் சேவையைப் பயன்படுத்துவது தேவையற்றக் காகிதப் பணிகளை மாற்றச் செய்வதற்கான ஒரு முழுமையான டிஜிட்டல் தீர்வாகிறது.
- தற்போது, மின்-கையொப்பச் சேவையானது சுகாதாரத்துறை, பதிவுத்துறை, நில நிர்வாகத் துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரகம், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், நகர் ஊரமைப்பு இயக்குநரகம், கல்வி, சமூகப் பாதுகாப்பு போன்ற 8 துறைகளால் பயன்படுத்தப்படுகிறது.
- 2022-23 ஆம் ஆண்டில் 35,71,517 மின்-கையொப்பங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
- கணினி அடிப்படையிலான தேர்வுகள் சேவை
- தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையானது, "கணினி அடிப்படையிலான இணையவழித் தேர்வை ஒரு சேவையாக" வழங்குகிறது. இச்சேவை பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை விரைவான மற்றும் வெளிப்படையான, இடையூறில்லாத மற்றும் பாதுகாப்பான முறையில் குறித்த கால அளவில் நிரப்பப் பயன்படுகிறது.
- மேலும், தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையானது, M/s. NSEIT என்ற நிறுவனத்தை, அனைத்து அரசுத் துறைகளும் இணைய வழியில் தேர்வு நடத்துவதற்கு வேண்டி வரையறுக்கப்பட்ட மற்றும் விலை மதிப்பு ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தும் ஒரு பங்குதாரராக தெரிவு செய்துள்ளது.
- இணையவழித் தேர்வு சேவையானது, தேர்வுக்கு முந்தையச் செயல்முறை, தேர்வுச் செயல் முறை மற்றும் தேர்வுக்குப் பிந்தையச் செயல்முறை ஆகிய மூன்று செயல் முறைகளை உள்ளடக்கியுள்ளது.
- தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழங்கும் இச்சேவையைப் பயன்படுத்தி, 2022-2023 ஆம் நிதி ஆண்டில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (MRB), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் (MHC) ஆகிய ஆறு துறைகளுக்கான, 492 காலிப் பணியிடங்கள் பாதுகாப்பான மற்றும் எளிய முறையில் வெற்றிகரமாக நிரப்பப் பட்டுள்ளன.
- 2022-23 ஆம் ஆண்டில், சுமார் 11.4 இலட்சம் விண்ணப்பதாரர்கள் இந்த இணையவழித் தேர்வுச் சேவையின் மூலம் தேர்வு எழுதியுள்ளனர்.
நமது அரசு (MyGov)
- அரசின் கொள்கைகள், செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து மக்கள் அரசுடன் தமது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும். அரசு நிர்வாகத்தில் பங்கேற்பதற்கும் நமது அரசு ஒரு தனித்துவமிக்கத் தளமாக விளங்குகிறது.
- இது அரசிற்கும் மக்களுக்கும் இடையே ஒரு கூட்டுறவை ஏற்படுத்த உதவுவதோடு, அரசு நிர்வாகத்தில் பங்கெடுப்பதையும் ஊக்குவிக்கிறது.
மாநில அழைப்பு மையம் மற்றும் உதவி எண் (1100)
- ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கியப் பொதுமக்கள் குறைகளுக்கான முதலமைச்சர் உதவி எண் நிர்வாக அமைப்பு (IPGCMS), பொது மக்கள் பல்வேறு வழிகளில் தங்கள் குறைகளைப் பதிவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த முறையாகும். இவ்வமைப்பில், 1100 என்ற உதவி எண்ணிற்கு அழைப்பதன் வாயிலாகவோ இணைய வலைதளம், கைபேசிச் செயலி மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகம் போன்றவற்றின் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ பொதுமக்கள் தமது குறைகளைப் பதிவு செய்ய இயலும்.
- இதற்கு முன், அரசுத் துறைகள் தாங்களாகவே குறைகளைக் கையாளும் அமைப்புகளை நேரடியாகவோ அல்லது மின்னனு வாயிலாகவோ செயல்படுத்தி வந்தது அதிக பயனுள்ளதாக அமைந்திருக்கவில்லை.
- தற்போது இந்த ஒருங்கிணைந்த அமைப்பு முதல்வரின் முகவரி என்ற திட்டத்தின் கீழ் பெறப் பட்ட மனுக்களைக் கையாண்டு சம்பந்தப்பட்டத் துறைகளுக்கு, மனுக்களை ஒதுக்கீடு செய்வதுடன், அவற்றைப் பின்தொடர்ந்து கண்காணித்தும் வருகிறது.
எளிய தமிழகம் (SITN)
- நிர்வாகத்தை எளிமையாக்க "எளிய தமிழகம்” என்ற ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.
- ஒரு முன்னோடித் திட்டமாக, பல்வேறு அரசுத் துறைகள்/ இயக்குநரகங்கள்/ ஆணையரகங்கள் /வாரியங்களின் செயல்முறைகளை மறுஉருவாக்கம் செய்திட தமிழ்நாடு மின்னாளுமை முகமை உதவி வருகிறது.
- பொது மக்களுடன் அதிக அளவில் தொடர்பில் உள்ள இது குறித்து இணக்கமான செயல் முறைகள் மற்றும் சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது.
- இது குறித்து இணக்கமான செயல்முறைகள், உரிமங்கள், சட்டங்கள், ஒழுங்குமுறைகள், விதிகள், அரசாணைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் சுற்றறிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
- செயல்முறைகளை மறு உருவாக்கம் செய்யும் நடவடிக்கைகள் வரைவு செய்யப்பட்டு, செயல்படுத்துவதற்குச் சம்பந்தப்பட்ட துறையுடன் இது குறித்து விவாதிக்கப்படும்.
தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ITNT Hub)
- "தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ITNT Hub)" ஒன்றிய அரசின் பங்களிப்புடன் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியில் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் புதுமை முயற்சிகளுக்கான மையமாகும்.
- ITNT Hub சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 30,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
- வளர்ந்து வரும் மற்றும் புதிய ஆழ்நிலைத் தொழில்நுட்ப (DeepTech) நிறுவனங்களை ஊக்குவித்தல், தொழில் மற்றும் கல்வித் துறைகளுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துதல், உலகளவில் சுற்றுச்சூழல் கூட்டாண்மைகளை உருவாக்குதல், தொழில் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான ஆதரவினைக் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கானப் புதிய நிறுவனங்களுக்கு அளித்தல் மற்றும் தமிழ்நாட்டின் புதிய தொழில் முனைவோர் உலகளாவியச் சந்தையை அணுகுவதற்கான திட்டங்களை வகுத்தல் ஆகியவற்றில் ITNT Hub முக்கிய கவனம் செலுத்தும்.
தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புத் தணிக்கை
- அனைத்து தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA ) அரசு செயலிகள்/ தொலைபேசி, வலை தளங்கள் / மென்பொருள் செயலிகள் ஆகியவற்றிற்கு CERT-IN என்ற அமைப்பினால் பட்டியலிடப் பட்ட தணிக்கையாளர்களை கொண்டு CERT/STQC என்ற அமைப்பால் குறிப்பிடப் பட்டுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகளின்படி பாதுகாப்புத் தணிக்கையை மேற் கொள்கிறது.
- தமிழ்நாடு மாநிலத் தரவு மையத்தில் (TNSDC) ஏதேனும் துறை சார்ந்த வலைதள மென் பொருள் செயலியை இணைய தளத்தில் செயல்படுத்துவதற்கு முன்பும் (Host), தணிக்கைச் சான்றிதழ் காலாவதியாகும் முன்பும் / மென்பொருள் செயலியில் மாற்றம் செய்யப்பட்ட பின்பும், பாதுகாப்புத் தணிக்கையானது கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
- வலைதளம் நிலையானதாகவோ அல்லது இயக்கநிலையில் (Dynamic) இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் அல்லது தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு வருடக் காலத்திற்குள் வலைதளத்தில் பெரிய மேம்பாடு அல்லது மாற்றம் வலைதளத்தில் பெரிய மேம்பாடு அல்லது மாற்றம் மேற்கொள்ளும் போதும், பாதுகாப்புத் தணிக்கை மேற் கொள்ளப் பட வேண்டும்.
- மேலும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது அனைத்து அரசு இணைய தளங்கள்/ இணைய செயலிகள்/ கைபேசிச் செயலிகள் ஆகியவற்றின் பாதுகாப்புத் தணிக்கையை வருடத்திற்கு ஒருமுறை இலவசமாக மேற்கொள்வதுடன், அடுத்து வரும் ஆண்டுகளிலும் மேற்கொண்டு வருகிறது.
- இதுவரை 2022-2023 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ் பல்வேறு அரசுத்துறைகளில், சுமார் 72 இணைய தளங்கள்/ இணையச் செயலிகள்/ கைபேசிச் செயலிகள் தணிக்கை செய்யப் பட்டு உள்ளன.
- சாதனைகள் மற்றும் விருதுகள்
- NeSDA - 85 சதவிகிதத்திற்கும் அதிகமான இணக்கத்துடன் 2021 ஆம் ஆண்டிற்கான மக்களுக்கு இணையச் சேவைகளை வழங்குவதில் உள்ள செயல்திறன் அடிப்படையிலான தேசிய மின் ஆளுமை சேவை வழங்கல் மதிப்பீடு (NeSDA 2021) என்ற மதிப்பீட்டில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.
- உழவன் கைபேசி செயலியைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பூச்சி மற்றும் நோய் கண்டறிதல், 2022 ஆம் ஆண்டிற்கான முன்மாதிரி வகையின் கீழ் NASSCOM 'AI & கேம் சேஞ்சர்ஸ்' விருதை வென்றது.
- மூன்று செயற்கை நுண்ணறிவு (AI) திட்டப்பணிகள் - FRAS, நுண்ணறிவு (AI) சார்ந்த பூச்சி மற்றும் நோய் கண்டறிதல், e-Paarval ஆகியவை "இந்திய செயற்கை நுண்ணறிவு (AI) 75 @ 75 பயண ஆராய்ச்சி அறிக்கையில்" பட்டியலிடப் பட்டுள்ளன.
- 2022 ஆம் ஆண்டிற்கான மின் ஆளுமை தங்க விருதை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்திற்கான மின் ஆளுமை வென்றது.
- 2022 ஆம் ஆண்டிற்கான மின் ஆளுமை வெள்ளி விருதை இ-முன்னேற்றம் பயன்பாட்டிற்கான மின் ஆளுமை வென்றது.
-------------------------------------