- சென்னைப் பட்டினம் ஒரு பெருநகராக வளரும் என 300 ஆண்டுகளுக்கு முன்பேகிழக்கிந்தியக் கம்பெனியர் கணித்தனர். அவர்களின் தொலைநோக்கில் இன்று சென்னைப் பெருநகரம் உலக நகரங்களோடு ஒப்பிடும் அளவுக்குவளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. ஆயினும் கட்டுச்செட்டான கட்டுப்பாட்டுக்குள்தான் சென்னை வளர்க்கப்பட்டது. பெங்களூருவைப் போல பேராசையோடு வளர்க்கப்பட்டு இருந்தால் வாழத் தகுதியற்ற நகரமாக இது மாறியிருக்கும். அந்த வகையில் நாம் தப்பித்தோம்.
- சென்னை வளர்ந்ததற்கு மற்றொரு காரணம், அது ஓர் அரைவட்ட மாநகரம். நகரின் பாதியைக் கடல் எடுத்துக்கொள்கிறது. மீதிப் பாதியில் நகரம் வளர்கிறது. இதன் விளைவாகவே சென்னையின் வணிகப் போக்குவரத்து சர்வதேசப் பிணைப்பைப் பெற்றது.
- சென்னை துறைமுகம், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகியவை அடங்கிய போக்குவரத்து உள்கட்டமைப்பானது, நகரின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல... சர்வதேச வணிக நடவடிக்கைகளுக்கும் பெரும் களம் அமைத்தது; இது ஆந்திரத்துக்கும் பலனளிக்கிறது.
- சென்னைக்கு 50 கி.மீ. தொலைவில் நெல்லூர் மாவட்டத்தின் தடா என்ற ஒரு சிறிய நகரில் உருவாக்கப்பட்ட ஓர் ஒருங்கிணைந்த பொருளாதார நகரம் ஸ்ரீநகரம் (Sri City).சுமார் 6,000 ஏக்கரில் அமைந்திருக்கும் இந்நகரம், சென்னையின்அனைத்து வணிக -போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளைமுழுமையாகப் பயன்படுத்தி வெற்றிகரமாகச் செயல்பட்டுவரு கிறது. எதிர்காலத்தில் ஆந்திரத்தின் பொருளாதாரத் தலை நகராக வளரக்கூடிய வாய்ப்பு அதிகச் செலவில்லாமலே அதற்கு வாய்க்கும்.
வளர்ச்சி வேகம் குறைவு
- லண்டனுக்கு அடுத்து உலகின் மிகப் பழைமையான மாநகராட்சியாகத் திகழ்வது சென்னைதான். பெரிதாக வளர்ந்த மாநகரம் என்றாலும், லண்டன் மாதிரியோடு உருவாக்கப்பட்டிருந்தாலும் - சென்னையின் வளர்ச்சி வேகம் ஒப்பீட்டளவில் குறைவுதான். இதற்குப் பல காரணிகளைச் சுட்டிக்காட்டலாம்.
- முதலாவது, சாலை-நகர உள்கட்டமைப்பு அடிப்படைகள் 30 ஆண்டுகளுக்கு முன்புதான் வேகம் பிடித்தன. எதிர்கால வளர்ச்சியைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை குறைவாக இருந்ததாலும், சர்வதேச வணிக வலைப்பின்னலில் எந்தக் கண்ணியோடு சென்னை பொருந்தும் என்கிற முன்அனுமானம் இல்லாததாலும் சர்வதேசத் தேவைக்கு உண்டான உள்கட்டமைப்பை நோக்கி நகராமல் குடியேறும் மக்களின் தேவையை ஒட்டியே அவை திட்டமிடப்பட்டன.
- வணிகப் பெருநகரமாக வளர்வதற்குள் மக்கள்தொகை சென்னையின் கழுத்தைப் பிடித்து நெரிக்க ஆரம்பித்துவிட்டது. இரண்டாவது, சென்னை ஒரு பன்னாட்டு நகரம் என்ற தகுதியைப் பெற்றிருந்தாலும் அதன் தர அடையாள (brand) மதிப்பை உயர்த்துவதற்கான திட்டமிடல் பற்றிய விழிப்புணர்வு குறைவு.
- உலகின் பெரும்பாலான வணிக நகரங்கள் தங்களின் பழைமை வாய்ந்த உள்கட்டமைப்புச் சின்னங்களைப் பேணிக் காத்து, அவற்றையே தங்களது அடையாள மதிப்பு மரபாக முன்னிறுத்தி, பிற பன்னாட்டு நகரங்களின் பெருமைகளுடன் தம்மை ஒப்பிட்டு, தமது பிம்பத்தைக் கட்டமைத்துக்கொண்டன.
- சென்னைக்கு அந்த வாய்ப்பு இருந்தாலும் அவை முறையாகத் தர அடையாள மதிப்பு செய்யப்படவில்லை. அதைப் பற்றிய புரிதல் தோன்றியபோது அந்தப் பெருமைகள் பெரும்பாலும் சிதைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் காணாமல் போயிருந்தன. இனி இருப்பதை வைத்துத்தான் முயல வேண்டும்.
பழைமைவாதத் தயக்கம்
- புதிய சென்னையின் அடையாள மதிப்பு 2000ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் உயரத் தொடங்கியது. ஆனால், அந்நேரத்தில் பெங்களூரு நமக்குப் போட்டியாக வந்துவிட்டது. தகவல் தொழில்நுட்பத் திறன் மட்டும் கைவரப் பெறாமல் போயிருந்தால், தொழில் மாநகரம் என்கிற அடையாள மதிப்பைச் சென்னை பெறுவது பெரும் திண்டாட்டமாகியிருக்கும்.
- அந்தத் தடையை உடைத்ததில் தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதியின் பங்கு மிகச் சிறப்பானது. இன்றைக்கு இந்த அடையாள மதிப்புதான் சென்னையின் வளர்ச்சியை நகர்த்திக்கொண்டிருக்கிறது. அது இன்னும் எத்தனைக் காலத்துக்குக் கைகொடுக்கும் என்று தெரியவில்லை.
- மூன்றாவதாக, சர்வதேச வணிக வாழ்க்கை மதிப்பீடுகளுடன் சென்னை இன்னும் பொருந்தவில்லை. உலகின் பொருளாதார நகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னை இன்னும் பழைமைவாதத்திலேயே இருக்கிறது. பல முற்போக்கு இயக்கங்கள் இங்கு பணிபுரிந்தபோதிலும், பழைமைவாதத் தயக்கம் சென்னையின் கால்களைப் பற்றி இழுத்துக்கொண்டிருப்பதற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன.
- கிராமங்களிலிருந்து மக்கள் வாழ்வாதாரம் தேடி அலையலையாகச் சென்னையில் குவிந்தவண்ணம் இருக்கின்றனர். வரும்போது அவர்கள் தங்களது கிராமத்து மனநிலையோடும் சாதி உணர்வோடும்தான் குடியேறுகிறார்கள். சென்னை புதுமையை நோக்கி வளரும்போது அவர்கள் தங்களது பலம் கொண்ட மட்டும் அதன் காலைப் பிடித்து இழுக்கிறார்கள்.
- சிந்தனையில் தேங்கிப்போன அவர்களையும் இழுத்துக்கொண்டுதான் சென்னை வளர்கிறது. அவர்கள் தம்மைத் தகவமைத்துக்கொள்வதற்குள் சென்னையின் சர்வதேச வாழ்க்கை முறையானது, பிற நகரங்களுக்கு இடையிலான போட்டியில் பின்தங்கிவிடுகிறது. அந்த வகையில் மும்பை தனது தயக்கத்தை உடைத்து இந்தியாவின் பொருளாதார நகரமாக உயர்ந்துவிட்டது.
வளர்ச்சி பரவலாக வேண்டும்
- நான்காவதாக, சென்னைக்குள் மக்கள் குடியேறுவதைக் கட்டுப்படுத்த எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருக்கின்ற மக்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது தேவையென்றாலும், அது மட்டுமே முழுமையாகிவிடாது.
- மக்களின் புலப்பெயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், தொழில்மயமாக்கலைப் பரவலாக்க வேண்டும். கிராமப் பொருளாதாரத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட நிலப்பரப்பும், சாகுபடியில் பன்மைத்துவமும், சந்தைப்படுத்துதலில் நவீனத்துவமும் தேவை.
- இதற்கு மிகச்சிறந்த மாதிரி ஜெர்மனிதான். தொழில் வளம் மிகுந்த அந்நாட்டில் விவசாய வளமும் பெரிது. ஜெர்மனியை ஒட்டிய பிரான்ஸ் பகுதிகளிலும், நெதர்லாந்திலும் விவசாயம் பெரும் வணிகத் தொழில். அங்கு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதில்லை.
- அதனால்தான் அங்கெல்லாம் கிராமங்கள்கூட சிறிய நகரங்களைப் போல மாறிவிட்டன. அதனால், மக்களின் புலப்பெயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு அப்படி ஒரு நிலை வாய்க்குமா என்று தெரியவில்லை. வாழ்வாதாரம் தேடி வரும் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் கிராமங்களை நோக்கித் தொழில்வளத்தைத் திருப்ப வேண்டும்.
- ஐந்தாவதாக, சென்னை மட்டுமே தலைநகர் என்று இருப்பதால் எல்லா சுமைகளையும் அதுவே சுமக்க வேண்டியிருக்கிறது. ஒரு பெருநகருக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படைத் தேவைகள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகள் போன்றவை இப்போது குடியேறியுள்ள மக்களுக்கேகூடப் போதுமானவை அல்ல.
- ஆயினும், அத்திட்டங்கள் முழுமை பெறும்போது நகரத்தின் பரப்பளவு விரிவடைந்திருக்கும். எனவே, தொலைநோக்குடன் இப்போதே கட்டுப்படுத்தும் நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், விரைவில் வாழத் தகுதியற்ற மாநகரமாகச் சென்னை மாறிவிடும். எனவே, சென்னையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஓர் எல்லையையும் காலக்கெடுவையும் நிர்ணயிக்க வேண்டும். அதற்குப் பிறகு பராமரிப்பு - மேம்பாட்டைப் பார்த்துக்கொள்ளலாம்.
- ஆறாவதாக, சென்னையின் தொழிலாளர் வர்க்கத்தைப் பற்றிய புரிதல் மோசமாக இருக்கிறது. குறிப்பாக, குடிசைப் பகுதிகளிலும் சாலையோரங்களிலும் வாழும் மக்களின் மேம்பாடு குறித்து இன்னும்கூட ஒரு நிலைக்கு எந்த அரசினாலும் வர முடியவில்லை. ஏழை மக்களைச் சுமை எனக் கருதும் எந்த நகரமும் வளர்ச்சியில் முழுமை காண முடியாது.
- குடிசைக் குடியிருப்புகளில் வாழும் மக்களைப் பற்றி மோசமான மதிப்பீடுகளை வைத்துக்கொண்டு, ஒரு நகரம் எப்படித் தனது தர அடையாள மதிப்பை (brand) மேம்படுத்த முடியும்? அவர்களின் வளர்ச்சி-பாதுகாப்பு என்பது நகரின் வளர்ச்சி மட்டுமல்ல, பொருளாதாரத்தின் மிக முக்கிய ஆற்றலான மனித வளத்தின் வளர்ச்சியும்தான். சீனத்தின் மாதிரியையாவது பார்த்து நாம், நம்மை மேம்படுத்திக்கொள்ளலாம்.
- ஒரு தலைநகராக இருந்துகொண்டு, பிரம்மாண்டமான நவீனத்துவத்தோடு வளர்ந்திருக்க வேண்டிய சென்னை, காலதாமதமாக விழித்துக்கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இது தொடர்பாக ஏராளமான காரணிகளை அடுக்க முடியும். அது குறித்து இன்னொரு முறை பார்ப்போம்.
- எனவே, சென்னைக்கான சுமையைக் குறைக்க வேண்டுமானால் மாற்றுதான் என்ன? தலைநகராக இருக்கும் தகுதியைச் சென்னை இழந்துவிட்டது என்று இதற்குப் பொருளல்ல. சென்னைக்கான தலைநகர் தகுதியை வேறு எந்த நகரும் பெற முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
- அது பெற்றிருக்கும் அடையாள மதிப்பு அப்படிப்பட்டது. அந்த யானை வளமாகக் கையாளப்படவில்லை, ஆனால் ஒரு மாற்று ஏற்பாடு நிச்சயம் செய்தாக வேண்டும். அதுதான் தமிழ்நாட்டுக்கான பொருளாதாரத் தலைநகரை உருவாக்கும் திட்டம்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 02 – 2024)