TNPSC Thervupettagam

தமிழ்நாட்டிலும் வேண்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பு

October 9 , 2023 475 days 294 0
  • சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக, சாதிவாரிக் கணக்கெடுப்பை முழுமையாக நடத்திமுடித்துத் தரவுகளை வெளியிட்டிருக்கும் பிஹார் மாநில அரசு பாராட்டுக்குரியது. இந்தியா முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான பணிகளை இதர மாநில அரசுகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு இது வழிவகுப்பதாகவும் அமைந்திருக்கிறது.
  • இந்தியாவில், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், சுதந்திரத்துக்கு முன்பு 1931 வரை சாதி பற்றிய தகவல்களும் இடம்பெற்றுவந்தன. ஆனால், 1951 முதல் பட்டியல் சாதி-பழங்குடியின சமூகத்தினர் குறித்த தரவுகள் மட்டுமே மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வருகின்றன. இதர சமூகத்தினர் குறித்த தரவுகள் கணக்கெடுப்பில் இடம்பெறுவதில்லை.
  • சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவத்தில் உரிய இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெற முடியாத நிலை இருப்பதாகத் தொடர்ந்து கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே, இந்தியா முழுவதும் இடஒதுக்கீட்டின் பலன்கள் உரிய சமூகத்தினரைச் சென்றடைய, துல்லியமான சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
  • இந்தியா முழுமைக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன்கூடிய சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கே இருக்கிறது. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதில்லை என்பது மத்திய அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது.
  • இந்தச் சூழலில், பிஹாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருப்பது ஒரு தொடக்கமாக அமைந்திருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு என்று சொல்லப்பட்டாலும், இது ஒரு சமூக ஆய்வுதான். பிஹாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பாட்னா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் அனுமதியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • தற்போது சாதிவாரித் தரவுகளைப் பிஹார் அரசு வெளியிடத் தடைவிதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்திருக்கிறது. எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசுகள் மேற்கொள்ளவும் அந்தத் தரவுகளை வெளியிடவும் மாநில அரசுகளுக்கு எந்தத் தடையும் கிடையாது என்பதை நீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறது.
  • ஏற்கெனவே, ஒடிசா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக-பொருளாதார நிலை குறித்த ஆய்வுகள் நடைபெற்று வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
  • இந்தியாவுக்கே முன்னோடியாகச் சமூக நீதியை உரக்கப் பேசும் தமிழ்நாட்டிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமானதும்கூட. ஏனெனில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சாதி அடிப்படையில் அளவிடக்கூடிய தரவுகளைப் பெறுவது என்பது 69% இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பாதுகாப்பதற்கும் அவசியமானது.
  • அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் பயன்கள் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிசெய்யவும், 69% இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளை எதிர்கொள்ளத் தேவையான சாதிவாரிப் புள்ளிவிவரங்களைப் பெறவும் சாதிவாரியான புள்ளிவிவரங்களைச் சேகரித்து வழங்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து, 2020இல் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
  • ஆனால், அந்த ஆணையம் எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. தற்போது பிஹாரைப் பின்பற்றி தமிழ்நாடும் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முன்வர வேண்டும். அதற்கான பணிகளை அரசு விரைவாகத் தொடங்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்