TNPSC Thervupettagam

தமிழ்நாட்டுக்கென தனிச்சிறப்புடன் உருவாகட்டும் புதிய வேளாண் கொள்கை

June 15 , 2021 1323 days 550 0
  • குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டதை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்புகள் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன.
  • அதற்கு முன்னதாக, கல்லணையில் நடந்துவரும் சீரமைப்புப் பணிகளையும் தூர்வாரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டபோதே அவரது தொலைநோக்குப் பார்வை முன்னறிவிக்கப் பட்டுவிட்டது.
  • அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டாலும் அது கடைமடைக்கு வந்துசேராத நிலை இந்த ஆண்டில் இருக்காது என்பது புரிகிறது.
  • தற்போது 9 மாவட்டங்களில் ஏறக்குறைய 4,000 கிமீ தூரத்துக்குத் தூர்வாரும் பணிகள் நடந்துவருகின்றன.
  • அடுத்து வரும் பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் நிகரப் பயிரிடும் பரப்பு 60%-லிருந்து 75% ஆக விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ள முதல்வர், அதற்கான திட்டமிடலும் தொடங்கி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
  • வேளாண் துறை தொடர்பான முதல்வரின் அறிவிப்புகள் முழுமை பெற்று பத்தாண்டுக்குள் இறுதி இலக்கை எட்ட வேண்டும் எனில் அதற்கான ஒரு தனிச் சிறப்பான கொள்கையை வகுக்க வேண்டியதும் அவசியம்.
  • குறிப்பாக, உற்பத்தி இலக்கைப் போலவே அதற்கான சந்தை வாய்ப்புகளுக்கும் திட்டமிடல்கள் தேவை.
  • விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வரை அவற்றைப் பாதுகாக்கும் வகையில் மாவட்டம்தோறும் பதனக் கிடங்குகளை உருவாக்க வேண்டும். படிப்படியாக, அவற்றை ஊராட்சி ஒன்றிய அளவுக்கு விரிவுபடுத்த வேண்டும்.
  • உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாதம்தோறும் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட வேண்டிய காவிரி நீரை அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
  • காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஏல அறிவிக்கையைக் கைவிடக் கோரி பிரதமருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
  • தமிழ்நாட்டுக்கான நீர்ப் பங்கீடு, வேளாண் மண்டலப் பாதுகாப்பு இரண்டுக்கும் முதல்வர் கொடுக்கும் முக்கியத்துவம் தெளிவு.
  • அரசின் அறிவிப்புகளைத் தாண்டி, உழவர்களிடம் அவர் முன்வைத்துள்ள வேண்டுகோள்களும் கருத்தில் கொள்ளத்தக்கவை.
  • தண்ணீர் சிக்கனம், முறை வைத்துப் பாசன நீரைப் பயன்படுத்துதல், செம்மை நெல் சாகுபடி முறை ஆகியவற்றைப் பின்பற்றுமாறு அவர் விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
  • உணவு உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைக்கும் என்ற முதல்வரின் நம்பிக்கையும் விருப்பமும் இன்றைய பெருந்தொற்றுக் காலகட்டத்தில் பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் பாராட்டுக்குரியது.
  • தொழில் துறையில் புதிய முதலீடுகளுக்கும் உடனடி சந்தை வாய்ப்புகளுக்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், மிகப் பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறையாக வேளாண் துறையே பார்க்கப்படுகிறது.
  • அடுத்த சில மாதங்களில் நோய்த்தொற்றின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட முடியும் என்றாலும், அதன் காரணமான பொருளாதாரப் பாதிப்புகளை மேலும் சில ஆண்டுகளுக்கு எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
  • வேளாண்மைத் துறைக்கு முதல்வர் கொடுக்கும் கவனம் அதற்கான தீர்வுகளில் ஒன்றாக அமையட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (15 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்