TNPSC Thervupettagam

தமிழ்ப் பதிப்புலகம்: சுயபரிசீலனைக்கான தருணம்

January 15 , 2024 226 days 235 0
  • சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழ்நாட்டின் முதன்மையான அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சி, இன்னும் சில ஆண்டுகளில் 50ஆம் ஆண்டினை எட்டவிருக்கிறது. இந்நிலையில், தமிழ்ப் பதிப்புச் சூழலைச் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கும் இந்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி, பாராட்டத்தக்க வகையில் வளர்ந்து வருகிறது.
  • பன்னாட்டுப் புத்தகக் காட்சி என்பதுபிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்த'லுக்கும்திறமான புலமையெனில் வெளி நாட்டார் அதை வணக்கஞ் செய்யவழிவகுத்தலுக்குமான ஏற்பாடு ஆகும். ‘இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றுவதற்கான ஒரு சாளரத்தையும் பன்னாட்டுப் புத்தகக் காட்சி திறந்துவிடுகிறது.
  • பிறமொழி நூல்கள் முதன்மையாக ஆங்கிலம் வழியாகத் தமிழுக்கும், தமிழ் நூல்கள் முதன்மையாக ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கப்படுகின்றன. கடந்த 100 ஆண்டுகளில், ஒட்டுமொத்தமாக சுமார் 120 நூல்கள் மட்டுமே தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
  • நீண்ட மொழிபெயர்ப்புப் பாரம்பரியம் கொண்ட தமிழ்ப் பதிப்புலகில், சமீப ஆண்டுகளில் மொழிபெயர்ப்புச் செயல்பாட்டின் தீவிரம் கூடியிருக்கிறது; பெரும் எண்ணிக்கையிலான மொழிபெயர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகம்திசைதோறும் திராவிடம்’, ‘முத்தமிழறிஞர் கலைஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்ஆகிய மொழிபெயர்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.
  • முதல் பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்புக்காக நல்கை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பன்னாட்டுப் புத்தகக் காட்சிக்கான ஏற்பாடுகளில் ஒன்றாக, இலக்கிய முகவர் பயிற்சித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தியிருப்பது ஒரு முக்கியமான முன்னகர்வு.
  • பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சரிபாதியினர் பெண்கள் என்பது சர்வதேசப் பதிப்புச் சூழலில் இலக்கிய முகவர்கள் பெரும்பான்மையினர் பெண்கள்தான் என்பதன் பின்னணியில் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளருக்கும் அயல் பதிப்பகங்களுக்கும் இடையிலான பாலமாகச் செயல்படும் இலக்கிய முகவர் என்கிற நடைமுறை தமிழ்ப் பதிப்புலகில் பரிணமிப்பதற்கான ஒரு தொடக்கமாக இது அமைகிறது.
  • புத்தகக் காட்சி என்கிற செயல்பாடு, தமிழ்நாட்டில் ஒரு பண்பாடாகப் பரிணமித்திருக்கும் நிலையில், தமிழ்ப் பதிப்புச் சூழலைச் சர்வதேசத் தரத்துக்கு நகர்த்தும் முன்னெடுப்புகள் பன்னாட்டுப் புத்தகக் காட்சி மூலம் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • ஆனால், அத்தகைய முன்னெடுப்புகளை முறையாக உள்வாங்கிக்கொண்டு முன்னகர்வதற்கான வெளியைத் தன்னகத்தே கொண்டுள்ளதா என்கிற சுய விசாரணையைத் தமிழ்ப் பதிப்புச் சூழல் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். சென்னை புத்தகக் காட்சி இன்று இரண்டு தலைமுறை காலத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்தக் காலகட்டத்தில் வியாபாரத்தைத் தாண்டி பதிப்பு முறையிலும் தமிழ்ச் சிந்தனை வெளியிலும் அது ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதும் ஆழமாக ஆய்வுசெய்யப்பட வேண்டும். பன்னாட்டுப் புத்தகக் காட்சி போன்ற நெடுங்கால நோக்கிலான முன்னெடுப்புகளை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள சமரசமற்ற சுயபரிசீலனை அவசியம்!

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்