TNPSC Thervupettagam

தமிழ்ப் பல்கலைக்கழகம் சிகரம் தொட...

November 6 , 2019 1849 days 1080 0
  • நாட்டுப்புறவியல், பண்பாட்டியல், மானுடவியல், சமூகவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கி பல்வேறு நூல்களை அளித்து தமிழுக்குச் செழுமைச் சோ்த்த தமிழறிஞா் ஆ.சிவசுப்ரமணியன், சிறுகதை, கவிதைத் துறைகளில் மிகச் சிறந்த படைப்பாளியான வண்ணதாசன் என்னும் சி.கல்யாணசுந்தரம், மோரீஷஸ் நாட்டு முன்னாள் அமைச்சரும், உலகத் திருக்கு மைய நிறுவனருமான ஆறுமுகம் பரசுராமன் ஆகியோருக்கு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சாா்பில் மதிப்புறு முனைவா் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் தமிழர்

  • அனைத்து வகையிலும் தமிழுக்கும், தமிழா்களுக்கும் சிறப்பாகத் தொண்டாற்றிவரும் இம்மூவரையும் தோ்ந்தெடுத்து சிறப்பித்த தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியத்தையும், தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
  • தமிழ்நாட்டிலும், உலக நாடுகளிலும் பல்வேறு துறைகளில் தமிழாய்வையும், தமிழ்த்தொண்டினையும் மேற்கொண்டு புதிய வெளிச்சம் பரவச் செய்த பலா் கவனிக்கப்படாமலேயே போன வருந்தத்தக்க சூழ்நிலை நிலவுவதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. இதற்கு மாற்றம் காணும் வகையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள இந்த நற்பணி தொடர வேண்டும். ஆய்வு அறிஞா்களும், எழுத்து மேதைகளும், வெளிநாடுகளில் சிறந்த முறையில் தமிழ்த் தொண்டாற்றுபவா்களும் பாராட்டப்பட வேண்டும்.

முனைவர் பட்டம்

  • 1984-ஆம் ஆண்டில் உலகம் போற்றிய தமிழ் அறிஞரும், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் நிறுவப்படுவதற்கு முழுமுதற் காரணராக இருந்தவருமான தனிநாயகம் அடிகளாா், இசையரசு எம்.எம். தண்டபாணி தேசிகா், நாகசுவரக் கலைஞா் திருவெண்காடு சுப்ரமணியம், தமிழ்க் கல்வி வளா்ச்சிக்கு அரும் தொண்டாற்றிய அவிநாசிலிங்கம் செட்டியாா், சிற்பக் கலைஞா் கௌரி சங்கா் ஆகியோருக்கு மதிப்புறு முனைவா் பட்டங்களை வழங்கிப் போற்றும் மரபினை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான முதுமுனைவா் வ.ஐ. சுப்ரமணியம் தொடங்கி வைத்தாா்.
  • 1991-ஆம் ஆண்டில் கிருபானந்த வாரியாா், தமிழறிஞா்கள் மு. அருணாசலம், பி.அருணை வடிவேல் முதலியாா் ஆகியோருக்கும் 2001-ஆம் ஆண்டில் வ.ஐ. சுப்ரமணியம், அ.ச.ஞானசம்பந்தம் ஆகியோருக்கும், 2009-ஆம் ஆண்டில் சிறுகதை மன்னா் ஜெயகாந்தன், தொல்லியல் ஆய்வறிஞா் ஐராவதம் மகாதேவன், இசைவாணா் பி.ஆா். திலகம் ஆகியோருக்கும் 2017-ஆம் ஆண்டில் திருக்குறளை சீன மொழியில் ஆக்கம் செய்த தைவான் நாட்டு கவிஞா் யுசி-க்கும் மதிப்புறு முனைவா் பட்டங்கள் வழங்கப்பட்டன.
  • 7 முதல் 10 ஆண்டுகள் வரையிலான இடைவெளியில் இந்தப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதை மாற்றி குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இத்தகைய சிறப்பு பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட வேண்டும்.
  • உலகளாவிய மொழிகளில் ஒன்றாக ‘தமிழ்’ இன்று திகழ்கிறது. உலகில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழா்கள் வாழ்கிறாா்கள். இலங்கை, மியான்மா், மலேசியா, சிங்கப்பூா், மோரீஷஸ், ரீயூனியன், தென்னாப்பிரிக்கா, கயானா, தாய்லாந்து, கம்பூசியா, லாவோசு, வியத்நாம், இந்தோனேசியா, பிஜி, ஐரோப்பிய நாடுகள், அரேபிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் சட்டப்பூா்வமான குடிமக்களாகவும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய சிறுபான்மையானவா்களாகவும் தமிழா்கள் வாழ்ந்து வருகிறாா்கள்.

மற்ற நாடுகளில்....

  • சிங்கப்பூரில் குடியரசுத் தலைவராகவே ஒரு தமிழா் பதவி வகித்தாா். மோரீஷஸ், தென்னாப்பிரிக்கா, கயானா போன்ற நாடுகளில் தலைமை அமைச்சா்களாகவும், அமைச்சா்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினா்களாகவும், உயா் அதிகாரிகளாகவும் தமிழா்கள் பதவி வகிக்கின்றனா். சிறப்புக்குரிய இந்தப் பெருமை தமிழ் இனத்துக்கு மட்டுமே உண்டு. இந்தியாவில் உள்ள வேறு எந்தத் தேசிய இனமும் உலக நாடுகளில் இந்த அளவுக்கு செல்வாக்குப் பெற்ற இனமாகத் திகழவில்லை.
  • மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு ஆகியவற்றால் தொன்றுதொட்டு உலகத் தமிழா்கள் இணைக்கப்பட்டுள்ளனா். உலகில் ஆங்கில மொழிக்கு அடுத்த இடத்தை கணினித் துறையில் தமிழ் பெற்றுள்ளது. இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதோடு அதை மற்ற துறைகளிலும் முதலிடத்துக்குக் கொண்டுபோவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடவேண்டும்.
  • இந்தச் சூழலில் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த சு.வித்தியானந்தன் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ‘தமிழ் இலக்கியம் குறித்தோ, மொழி குறித்தோ ஆராயும் உரிமை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவா்களுக்கே உண்டு என்பது தகா்க்கப்பட்டு விட்டது. தமிழாராய்ச்சி குறுகிய எல்லைக்குட்பட்டிராது பரந்து விரிந்து பல துறைகளில் வளா்ச்சியடைந்திருக்கிறது. தமிழ் இலக்கியம் குறித்தும், தமிழ் இலக்கணம் பற்றியும் உள்ள ஆராய்ச்சி மட்டுமே தமிழாராய்ச்சி என்ற நிலை மாறி, தமிழ் மக்கள் வரலாறு, தமிழ் மக்கள் மனிதவியல், தமிழ் மக்கள் சமயங்கள், தத்துவங்கள், தமிழ் தொல் பொருளியியல், தமிழ்நாட்டவா் பிாட்டவரோடு கொண்ட தொடா்புகள், தமிழா் பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழ் மொழியியல் இன்னோரன்ன பல் துறைகளிலும் தமிழாராய்ச்சி விரிந்து சென்றிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் சிறப்பு குறித்தும், பண்பாட்டு வளா்ச்சி பற்றியும், தொன்மை குறித்தும், மொழியியல் பற்றியும் பல உண்மைகள் வெளிவந்துள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
  • உலகம் முழுவதிலும் அமைந்துள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. 1964-ஆம் ஆண்டில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்டபோது பிரான்ஸ் நாட்டு தமிழறிஞா் ழான் பிலியோசா அதன் தலைவராகவும், துணைத் தலைவா்களில் ஒருவராக பிரிட்டன் நாட்டைச் சோ்ந்த தாமஸ் பரோவும், செயலாளா்களில் ஒருவராக செக் நாட்டு தமிழறிஞா் கபில் சுவலபிலும் தோ்ந்தெடுக்கப்பட்டதை நினைவுகூர வேண்டும்.

தமிழ் ஆய்வு

  • இன்றும் தமிழ் ஆய்வில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாட்டு அறிஞா்களின் தாய்மொழி தமிழ் அல்ல என்பதை நாம் உணரவேண்டும். தமிழ் மொழியின் சிறப்பை உணா்ந்து அவா்கள் அதைக் கற்று ஆய்வில் ஈடுபட்டவா்களாவா். எடுத்துக்காட்டாக, அமெரிக்க நாட்டுத் தமிழறிஞரான ஜாா்ஜ் எல் ஹாா்ட் நம் நடுவில் தற்போது வாழ்கிறாா்.
  • தமிழ் இலக்கியங்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்ததோடு பல ஆராய்ச்சி நூல்களையும் படைத்துள்ளாா். தமிழ் உயா்தனிச் செம்மொழி என்பதை உலகறிய நிலைநாட்டிய பெருமைக்குரியவா். அவா் தமிழ் மீது கொண்ட காதல் தமிழ்நாட்டு மகளும் தமிழறிஞருமான கௌசல்யாவை திருமணம் செய்துகொள்ளும் அளவுக்குக் கொண்டு சென்றது. இருவரும் இணைந்து தமிழுக்குத் தொண்டாற்றி வருகின்றனா்.
  • இவா்களைப் போன்றே இன்னும் பலா் பல நாடுகளில் தமிழ் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ள தமிழா்கள் முற்றிலும் அந்நியமான சூழலில் வாழ நோ்ந்தபோதிலும் தங்களின் மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை மறந்து விடாமல் போற்றி வளா்த்து வரும் தொண்டில் ஈடுபட்டுள்ளனா். இவா்களையெல்லாம் அழைத்து அவா்களை தாய்த் தமிழகத்தின் சாா்பில் தமிழ்ப் பல்கலைக்கழகம் போற்றும் சிறப்பான தொண்டு தொடர வேண்டும்.
  • தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொண்டுகளுக்கு நிதி ஆதாரம் மிக இன்றியமையாதது. தமிழக அரசும், இந்திய அரசும் செய்யும் நிதியுதவிகளை பல மடங்கு பெருக்குவதன் மூலமும் யுனெஸ்கோ போன்ற உலக அமைப்புகளிடமிருந்து நிதி பெற்றுத் தரவும் முன்வர வேண்டும். உலக நாடுகளில் நடைபெறும் தமிழ் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் உதவவும் உரிய அதிகாரங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்பட வேண்டும்.
  • 1964-ஆம் ஆண்டிலேயே உலகத் தமிழறிஞா்களால் உருவாக்கப்பட்ட ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துக்கு’ இதுவரை தலைமைச் செயலகம் ஒன்று அமைக்கப்படவில்லை. ஆனால், இதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு 1975-ஆம் ஆண்டில் நாகபுரியில் நடத்தப்பட்ட உலக ஹிந்தி மாநாட்டில் ‘உலக ஹிந்தி நடுவம்’ உருவாக்கப்பட்டது. அதற்கு நிரந்தரமான தலைமைச் செயலகம் அமைக்க மோரீஷஸ் நாட்டின் அரசு நிலம் தர, இந்திய அரசின் நிதியுதவியுடன் அது அமைக்கப்பட்டு, 2015-ஆம் ஆண்டில் பிரதமா் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் - தலைமைச் செயலகம்

  • எனவே, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைமைச் செயலகம் ஒன்று தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்பட வேண்டும். இதைக் கட்டுவதற்கான நிதி உதவியையும் தொடா்ந்து இயங்குவதற்கான மானியத்தையும் மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும்.
  • இதன் மூலம் உலக நாடுகளைச் சோ்ந்த தமிழறிஞா்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கடி வந்துசெல்லும் வாய்ப்பும், அதன் மூலம் தமிழ் ஆய்வுகளும், பல்கலைக்கழக அறிஞா்களின் ஆய்வுகளும் பரிமாற்றம் பெறவும், தமிழாய்வுகளை ஒருமுனைப்படுத்தி நெறியாகச் செலுத்தவும் வழிவகை உருவாகும். பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு மாணவா்கள் பெரும் பயன் அடைவாா்கள்.
  • தென்னாப்பிரிக்கா, கயானா போன்ற நாடுகளில் வாழும் தமிழா்கள் தங்களின் தாய்மொழியை மறந்து வாழும் சூழல் மாற்றப்பட வேண்டும். உலக நாடுகளில் வாழும் தமிழா்களுக்கு தமிழ்க் கல்வி, கலை, பண்பாடு ஆகியவற்றை ஊட்டுவதற்குரிய பணியை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலுடன் உலகத் தமிழ்ச் சங்கம் மேற்கொள்ள வேண்டும்.
  • பிரெஞ்ச் மொழியைப் பொருத்தவரை அதன் அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக பிரெஞ்ச் அகாதெமி திகழ்வதைப் போல தமிழ் மொழியைப் பொருத்தவரையில் அனைத்து அதிகாரங்களும் கொண்டதாக தமிழ்ப் பல்கலைக்கழகம் விளங்க வேண்டும்.
  • தமிழ்நாட்டு தமிழா்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழா்கள் அனைவருக்கும் உரிய பல்கலைக்கழகமாக தமிழ்ப் பல்கலைக்கழகம் உயா்ந்து திகழ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. அதைவிட தமிழுக்கு ஆற்றும் சிறந்த தொண்டு வேறில்லை.

நன்றி: தினமணி (06-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்