TNPSC Thervupettagam

தமிழ்ப் பல்கலைக்கழகம் தள்ளாடுவது ஏன்?

May 16 , 2024 63 days 141 0
  • 1981 செப்டம்பர் 15 அன்று, அறிஞர் அண்ணா பிறந்த நாளில், உலகமே வியக்க, மொழியின் பெயரில் தொடங்கப்பட்டது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம். உலகில் தமிழறிவைத் தேடி அலையும் பலருக்குமான தாய்மடியாக, சரணாலயமாக, எல்லா காலத்துக்கும் அது விளங்க வேண்டும் என்பது அதன் முதல் துணைவேந்தரான முனைவர் வ.அய்.சுப்பிரமணியனின் ஆசை!
  • உயர்நிலை ஆய்வு மட்டுமே அப்போது அதன் இலக்காக இருந்தது. அதற்கேற்பத் துறைகள் உருவாக்கப்பட்டு, அதற்குரிய ஆளுமைகளாகத் தேடித் தேடிச் சேர்க்கப்பட்டவர்கள்தான், இன்றைக்கு ஓய்வூதியம் கைக்கு வருமா வராதா என்கிற கலக்கத்தில் இரண்டு மூன்று மாதங்களாகப் பரிதவித்தபடி இருக்கின்றனர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் என்னதான் நடக்கிறது?

நியாயமான கேள்விகள்:

  • 2017-2018 காலத்தில் பேராசிரியர் பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகளுக்காகப் பல்கலைக்கழக வேந்தரின் உத்தரவின்பேரில், மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் அ.க.குமரகுருவின் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் விசாரணை அறிக்கை, 10.08.2021 அன்று நிர்வாகத்திடம் முத்திரையிட்டு அளிக்கப்பட்டுள்ளது.
  • வேந்தர் செயலகத்திலிருந்து மேல்நடவடிக்கை எடுப்பதற்காகத் துணைவேந்தர் அலுவலகத்துக்கு 25.11.2022 அன்றுஅவ்வறிக்கை அனுப்பப்பட்டிருந்தும், இதுவரைஆட்சிக் குழு கூட்டப்படாததால், அது ஆட்சிக்குழுவின் முன் வைக்கப்படவில்லை.
  • இந்தமுறைகேட்டின் மூலம் உள்நுழைந்தவர்களுக்கான ஊதியம் உண்மையில், தமிழ்நாடு அரசு ஒவ்வோர் ஆண்டும் கொடுக்கும் தொகுப்பு நிதிநல்கையை (Block grant) கொண்டே ஆறு ஆண்டுகளாகக் கொடுக்கப்பட்டுவருகிறது.
  • இதுபோலவே, தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு-கண்காணிப்புப் பிரிவின் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆர்.வெங்கடேசன், சிறப்பு நீதிமன்றத்துக்கு 14.11.2019 அன்று வழங்கியிருக்கிற முதல் தகவல் அறிக்கையும், உள்ளங்கை நெல்லிக்கனியாகக் குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருக்கிறது.
  • இவற்றின் மேல் தமிழ்நாடு அரசின்/வேந்தர் அலுவலகத்தின் மேல்நடவடிக்கைகள் என்ன என்பதே, இன்று நியாயத்தை எதிர்பார்ப்பவர்கள் அனைவரின் மனதுக்குள்ளும் கேள்வியாக நிற்கிறது.
  • தகுதியற்றவர்களை நியமித்தது / பணி நியமன நடைமுறைகளில் மேற்கொண்ட அளவுகோல்களின் தரம் / சமூகநீதி, இனவாரிச் சுழற்சிமுறை ஆகியவை முறையாகப் பின்பற்றப்படாதது எனப் பணி நியமன முறைகேடுகளாக ஆதாரங்களுடன் அந்தப் புலனாய்வு அறிக்கை விளக்கியிருப்பதாகத் தெரிகிறது.
  • எவ்வித உத்தரவாதமும் இன்றி, மேல்நிலைப் பணிக்கு (பேராசிரியர்) விண்ணப்பித்த சிலரை, கீழ்நிலைப் பணியை (இணைப் பேராசிரியர்) உருவாக்கி, அதில் நியமித்திருக்கின்றனர்.
  • பின்னடைவுப் பணியிடங்களில், அங்கு சுட்டப்பெறாத கீழ்நிலைப் பணியிடங்களுக்கும் / குறிப்பிட்ட பணியிடத்துக்கு விளம்பரத்தில் குறிக்கப்பட்ட உச்சபட்ச வயதைத் தாண்டியவர்களும் / தேவையான அடிப்படைத் தகுதி இல்லாதவர்களும் எப்படி நியமிக்கப்பட்டுள்ளனர்? இதற்கான விளக்கங்கள் எதுவும் எங்கும் சொல்லப்படவில்லை. இவை எல்லாமும் புலனாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அடுக்கடுக்கான முறைகேடுகள்:

  • 27.03.2018 ஆட்சிக் குழுப் பொருண்மை, ‘பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு உட்பட்டும், தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு உட்பட்டும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வித விதிமீறல்களும் இருத்தல் கூடாது’ என்று பதிவுசெய்திருக்கிறது. இக்கருத்து எங்கும் கவனத்தில் கொள்ளப்படவே இல்லை.
  • 29.05.2017 முதல் 31.05.2017 வரையும் தேர்வுக் குழுவால் தேர்வானவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்க 02.06.2017 ஆட்சிக் குழுவில் (2017: 47) அது வைக்கப்பட்டிருக்கிறது. ‘பல்கலைக்கழக மானியக் குழு / தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு உட்பட்டே தேர்வு நிகழ வேண்டும்.
  • இல்லையெனில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பேராசிரியர் பணியிடத் தேர்வுமுறைகளுக்கு எந்த வகையிலும் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்காது’ என்று ஆட்சிக் குழுவும் கூறியுள்ளது.
  • அதைச் சரிசெய்வதற்கான முயற்சிகளை நிர்வாகம் மேற்கொண்டதாக எந்தச் சான்றுகளும் சுட்டப்படவில்லை. இதுபோக, இன்னும் பல்வேறு முறைகேடுகளையும் அந்த அறிக்கை சுட்டிச் செல்கிறது.
  • விரித்தால் பெருகும்! அரசு தரும் தொகுப்பு நிதிநல்கையை அரசின் அனுமதியின்றி, ஒப்பளிக்கப்படாத பணி நியமனங்களுக்கு அள்ளிக் கொடுத்திருப்பதுதான், பல்கலைக்கழக நிதித் தட்டுப்பாட்டுக்கு / ஓய்வூதியர் ஊதியம் வழங்க முடியாமைக்கு மிக முக்கியக் காரணம்.
  • இன்னொன்று, 14.11.2019 அன்று தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு-கண்காணிப்புப் பிரிவானது,ஊழல் தடுப்புச் சட்ட விதிகளின்படி, குற்றவாளிகளை விசாரித்து, முதற்கட்ட விசாரணையை முடித்து, ‘தேர்வான பேராசிரியர்கள் அனைவருமே முறையாகத் தேர்வு பெற்றிருக்கவில்லை; அதில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்திருக்கிறது’ என்றும், ‘பல்கலைக்கழகச் சட்டவிதிக்கு முரணாக, நாள் ஊதியத்தில் 70 பேரை அலுவல் பணியிடங்களில் நியமித்து, கடந்த மூன்று ஆண்டுகளாக (2015-2018) அவர்களுக்குத் தொடர்ந்து ஊதியம் வழங்கப்பட்டு வந்திருப்பதாலும், இப்போதைய நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’ என்றும் முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகிறது.
  • முகாந்திரம் உள்ள நால்வர் மீது, குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருக்கிறது. இதுபோக, தேர்வுக் குழுவுக்குத் துணைவேந்தரால் அழைக்கப்பட்ட வல்லுநர்கள்பெரும்பான்மையும், எந்தத் துறைப் பணியிடத்துக்கு நேர்முகத் தேர்வு நடைபெறுகிறதோ, அந்தத் துறையில் / அத்துறைப் பாடத்தில் சிறப்புப் புலமை பெற்றவர்களாக இல்லாதிருந்திருக்கின்றனர். பின்வாசல் வழியாக நேர்மையற்ற முறையில் நியமனம் பெற்றவர்களுக்குக் கடந்த ஆறு ஆண்டுகளாக அதிக ஊதியம் தவறாக வழங்கப்பட்டு வருகிறது.
  • அலுவல் பணியிடங்கள் அவரவர்களுக்கான வரையறுக்கப்பட்ட விகிதாச்சார அடிப்படையில் அல்லாமல், மனம்போனபோக்கில் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களுக்குத் தமிழ்நாடு அரசு நிதி வழங்கியிருக்காத நிலையில், ஏற்கெனவே பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் அரசு வழங்கிவந்த தொகுப்பு நிதி நல்கையையே, அரசின் அனுமதியின்றி அவர்களுக்கும் வழங்கியிருப்பதே நிதித் தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணம்.
  • தமிழைக் காக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது அரசு?

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்