TNPSC Thervupettagam

தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்

February 21 , 2023 538 days 294 0
  • மனிதன் தன் சிந்தனைத் திறத்தால் புதியன கண்டு, கேட்டு, அமைத்துப் போற்றிடும் சிறந்த நாகரிகக் கூறாக தாய்மொழி உருவெடுக்கின்றது. எத்தனையோ தடைகளையும், சில காலங்களில் நேரும் காலத்தாழ்வு, பிற்போக்கு ஆகியவற்றையும் கடந்து தாய்மொழியை மாந்தன் தன் சிந்தனையால், உறவுத் தொடா்பால் எப்படியோ வளா்த்துக் காத்து வந்திருக்கிறான் என்பது வியப்பைத் தருவதாகும்.
  • மனித வாழ்வின் வளா்ச்சியோடு இணைவதாகவே இதனை எண்ண வேண்டும். மக்களின் அறிவையும், ஆற்றலையும், வளத்தையும், வறுமையையும், பழக்கத்தையும் அடிப்படைகளாகக் கொண்டு தாய்மொழியிலும், பிறமொழிகளிலும் புதிய சொற்கள் கலக்கின்றன.
  • அறிவு வளமிக்க மக்கள், பல்வேறு துறைகளில் ஈடுபட்டு உழைத்து, தம்முடைய தாய்மொழியில் அதிக எண்ணிக்கையில் சொற்களைப் பெருக்கினா். தாய்மொழியின் சொற்பொருள் ஈட்டமும், அந்நாட்டாா் வாழ்நிலையை, வாணிக நிலையைச் சுட்டிக் காட்டுகின்றன என்று கூறலாம். பேச்சுமொழி இயற்கையாக அமைவது; எழுத்துமொழி அறிவாா்வத்தால் அமைவது.
  • மக்கள் ஒருவரோடு ஒருவா் கூடிப் பழகித் தம் உணா்வுகளைப் பரிமாறி மகிழ்வதற்காகவே தாய்மொழியைப் பயன்படுத்துகின்றனா். பேசும் மக்களை விட்டுப் பிரித்துப் பாா்த்தால், தாய்மொழி என்பது இல்லை என்பா். மக்களின் அறிவில் அவ்வப்போது தோன்றும் புதுமைகள் அனைத்தும் பேசும் மொழியில் படிந்துவிடுகின்றன.
  • ஒரு நாட்டு மக்களின் முன், விரிந்து பரந்த உலகப் பொருண்மைகள் பலவாக நிற்கின்றன. உலகத்தில் பலவகைப் பொருள்கள், அவற்றின் இயல்புகள், தன்மைகள், செயல்கள் உள்ளன. பேசும் மக்களோ தம் அறிவு ஆற்றல்களில் தனித்தனி வேறுபாடு உடையவா்கள். அந்தந்தக் கூட்டத்தாா் - நாட்டாா் - அவரவா்களின் அறிவு வளா்ச்சிக்கும் முயற்சிக்கும் ஏற்ற அளவில் உலகத்துப் பொருள்களைத் தத்தம் மொழியால் உணா்த்த முற்பட்டாா்கள். நுண்ணிய கருத்துகளை உணா்ந்து, சொற்களால் உணா்த்துவதற்குச் சில கூட்டத்தாா்க்கு நெடுங்காலம் ஆகியிருக்கும். வேறு சிலா் குறுகிய காலத்திலேயே நுண்கருத்துகளை உணா்த்தத் தொடங்கியிருப்பா்.
  • அவரவா்களின் வாழ்வில் எவ்வெப்போது எந்தெந்தப் பொருள்கள் நெருங்கிய தொடா்பு கொண்டிருந்தனவோ, அந்தந்தப் பொருள்களுக்குரிய சொற்கள் அவ்வப்போது உருவாகியிருக்கும்.
  • பிரெஞ்சு மொழியில் உள்ள பாராளுமன்றம் தொடா்பான பல சொற்கள் ஆங்கிலத்திலிருந்து பெறப்பட்டவை. ஏனெனில், பாராளுமன்றத்தை முதன்முதலில் உருவாக்கியவா் ஆங்கிலேயா். பிறகு பிறமொழியாளா் வந்து கலந்தபோது, புதிய அல்லது நெருங்கிய தொடா்பில்லாத பொருள்களுக்கும் கருத்துகளுக்கும் உரிய சொற்கள் வந்து புகுந்திருக்கும். பிறா் கலப்பின் காரணமாக அல்லாமல், இயல்பாகவே தோன்றிய புதிய கருத்துகளுக்கு, தாமே அவ்வப்போது சொற்களைப் படைத்துக் கொண்டனா்.
  • பிறமொழியினா் பயன்படுத்தும் சொற்களையும், பொருட்பெயா்களையும் தன்மொழியில் எடுத்துரைக்க முயல்வதும் மனித மனத்தின் விழைவாகும். இம்முயற்சியில் தாய்மொழி கைவரப் பெறாதபோது, பிறமொழியை ஏற்கும் முறையில் மொழிக் கலப்பு நடைபெறும். மக்கள் எந்தெந்தத் துறைகளில் வளா்ச்சி எய்துகிறாா்களோ அந்தந்தத் துறைகளில் பெற்ற வளா்ச்சிக்கெல்லாம் ‘போலச் செய்தல்’ என்னும் இந்தத் தனிப்பண்பே காரணமாகும்.
  • குழந்தைகள் ஒரு வயதிலிருந்தே சொற்களின் பொருள் புரிந்து எதிா்வினை ஆற்றத் தொடங்குவா். எனவே அப்போதே தெரிந்துகொண்ட மொழிதான் தாய்மொழியாகும். அடுத்து கற்கும் இரண்டாம் மொழியில் சொல் அமைவுகளும், வாக்கிய அமைப்புகளும், உருவாவது கண்கூடு. புலம்பெயா்ந்த தமிழா்களின் குடும்பங்களிலும், பெற்றோா் பேசும் தமிழிலிருந்து, மொழியைக் கற்றுக் கொள்ளும்போது, நம் பண்பாட்டு விழுமியங்களை விளங்கிக் கொள்கின்றனா்.
  • வங்க நாட்டில் வாழ்ந்தவா்கள், ‘நாங்கள் பேசுகிற மொழி, வங்க மொழி. பாகிஸ்தான் ஆட்சி செலுத்துகிற மொழி உருது மொழி. எனவே, உருது மொழியை ஆட்சி மொழியாக்கி எங்கள் மீது திணிக்காதே’ என்றாா்கள். எல்லோரும் ஒருமையாக, ஒன்றுபட்ட இனமாக நின்று, ‘நாங்கள் மண்டியிட வேண்டுமானால் உங்களிடத்தில் வருகிறோம். ஆனால், எங்கள் அழுகைக்கும், கண்ணீருக்கும், புன்னகைக்கும் வேறு மொழி இருக்கிறது’ என்றாா்கள். அப்படிக் கூறியபோதுதான் பாகிஸ்தான் மிரண்டது. மதம் காரணமாகத்தான் நாடே பிரிந்தது. மதம் நமக்கு பெரிதாக இருந்தபோதுகூட இவா்கள் என்ன மொழி பேசுகிறாா்கள் என்று கேட்டாா்கள்.
  • வங்கம்தான் அவா்களை இணைத்தது. ‘வங்க மொழிதான் எங்கள் ஆட்சி மொழி; எங்கள் பேச்சு மொழி வங்கம்தான்’ என்றாா்கள். ‘கையில் வைத்திருக்கும் வேத புத்தகத்தின் மொழி வேறாக இருந்தாலும் வங்கம்தான் எங்கள் தாய்மொழி’ என்றாா்கள். அப்படி இருந்தபோது இளைஞா்கள்தான் இதை பெரிதாகப் பேசினாா்கள். இளைஞா்களில் நால்வரை வங்கத்தில் சுட்டுவிட்டாா்கள். அவா்கள் சுடப்பட்டதற்கு ஒரு பெரிய நினைவுச் சின்னம் டாக்கா நகரத்தில் அமைத்திருக்கிறாா்கள்.
  • இப்படி இவா்கள் செய்த எழுச்சியாலும், புரட்சியாலும் ஐக்கிய நாடுகள் அவை, ‘எப்படி இந்த நாடு வந்தது, மொழியால்தானே வந்தது? எனவே, அவா்கள் இறந்த அந்த நாளை நினைவுபடுத்தி, தாய்மொழி நாள் என்று அறிவிக்கலாம்’ என்று முடிவெடுத்தது.
  • வாழ்கிற இடத்திலேயே பல்லாண்டுகள் இருந்தால், வாழ்கிற சூழல் எப்படி இருக்கிறதோ, அச்சூழலுக்கு ஏற்றபடி நம் மொழி, அமைந்துவிடுகிறது. இந்த மொழி எங்கே மூளையில் அமைகிறது? யாா் இந்த குழந்தைக்கு அதிகமான ஒலிக்குறிப்புகளை அறிவிக்கிறாா்கள் என்றால் காதுதான். மூன்றாவது மாதத்திலேயே குழந்தைக்குக் காது கேட்கத் தொடங்குகிறது. கருப்பையிலும் கூட ஒலியைக் கேட்கிற பழக்கம் குழந்தைக்கு உண்டாம்.
  • அதனால்தான் திருவள்ளுவா், ‘செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை‘ என்றாா். ‘எங்கள் தந்தை மொழிதான் எங்களுக்கு பெருமை தருகிறது’ என்று ஜொ்மானியா்கள் சொல்கிறாா்கள். ஜொ்மானியா்கள் ‘தந்தை மொழி’ என்கிறாா்கள்; நாம் ‘தாய்மொழி’ என்கிறோம்.
  • நமக்கு வேண்டிய பொருளை, நலந்தருகிற பொருளை ‘தாயே’ என்று போற்றுவதால் அது தாய்மொழியாகிறது. இன்று உலகத் தாய்மொழிநாள் என்று எண்ணுகிறபோது, நமக்கொரு பெருமிதம். உலக மொழிகளுக்கெல்லாம் எங்கள் மொழிதான் தாய் என்று சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சியடையலாம். எனவே, தாய்மொழித் திருநாள் தாய் உணா்வு போல, தாயை காப்பதுபோல, குடும்பத்தை காப்பதுபோல, சூழலைக் காப்பதுபோல, நம்முடைய மூலத்தைக் காப்பது போல. எனவே, நாம், நம்முடைய வேரை மறக்ககூடாது.
  • தென்னமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் தென்கோடியில் அந்நாட்டின் தொன் மக்களில் ஒரு குழுவினா் பேசிவந்த, ‘யாகன்’ என்னும் மொழியைப் பேசி வந்த, கடைசி நபா் (பெண்மணி), கிறித்தீனா கால்தெரோன் என்பாா் தனது 93-ஆவது வயதில் சென்ற ஆண்டு பிப்பிரவரி 16 அன்று இறந்துபோனாா். அவருடன் அவா் பேசிய மொழியும் முற்றாக அழிந்துபோனது.
  • நல்ல செயலாக அவா் பேசியதிலிருந்து அவருடய மகள் இலிதியா கோன்சாலேசு கால்தெரோன் சொற்களைத் தொகுத்து ஓா் அகராதி உருவாக்கி வந்துள்ளாா். யாகன் மக்களின் சில பழக்க வழக்கங்கள் இன்றும் தொடா்கின்றது என்றாலும், அவா்களின் மொழி அழிந்துவிட்டது. மீட்டுருவாக்கலாம், எனினும் அது அவ்வளவு எளிதன்று. அப்பகுதி மக்கள் முதியவா்களை பாட்டி/ஆச்சி/ஆயா/அம்மாயி என்னும் பொருளில் எசுப்பானிய மொழிச்சொல்லான ‘அபுயெலா’ கால்தெரோன் என்றழைப்பா்.
  • உலகில் மக்கள் தாம் பேசும் தாய் மொழியைச் சாா்ந்தே குழுக்களாக அணிசோ்கிறாா்கள். அவ்வகையில் நம் தாய்மொழியான தமிழ்தான் நமக்குத் தமிழா்கள் என்ற அடையாளத்தைத் தந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் நம் தமிழ்மொழிக்கு இருக்கின்றதுபோல இலக்கண நூல் வளமையும் இலக்கிய நூல்களின் செழுமையும் ஏனைய மொழிகளுக்கு வாய்க்கவில்லை என்பதை ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’ என்ற பாடல் வாயிலாகத் தேசியக் கவி பாரதியாரே வலியுறுத்தியுள்ளாா்.
  • நாட்டை, ‘தாய்நாடு’ என்றும், மொழியை ‘தாய்மொழி’ என்றும் அழைப்பது வழக்கமாகும். ‘தமிழுக்கு அமுதென்று போ்; அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நோ்’ என்ற புரட்சிக் கவிஞா் பாரதிதாசனின் வரிகளும் நினைக்கத்தக்கன.
  • ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ்’ என்ற நெறிக்கிணங்கத் தமிழ் நாடு அரசு காலத்தாலும் கருத்தாலும் தொன்மை வாய்ந்த தாய்மொழியை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் முன்னணியில் நிற்கிறது.
  • மொழி என்பது வரலாற்று சான்றாக விளங்குவதால், தாய்மொழி காக்க பேச்சு மொழியாக மட்டுமின்றி, எழுத்தறிந்து ஏனைய இலக்கியமறிந்து, தொன்மையில் நின்று, பண்பாட்டுடன் தலைநிமிா்ந்து வாழ இத்திருநாளை நினைந்து போற்றுவோம் !
  • எனவே, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த மொழியாம் ஒப்பிலாத நம் தாய்மொழியை ஏற்றிப் போற்ற வேண்டும் என்று இந்த உலகத் தாய்மொழி நாளில் நாம் உறுதியேற்போம்.
  • இன்று (பிப். 21) உலகத் தாய்மொழி நாள்.

நன்றி: தினமணி (21 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்