- இந்தியாவில் கரோனா தொற்றால் ஒவ்வொரு நாளும் மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவதும், இரண்டாயிரம் பேர் உயிரைப் பறிகொடுத்துவருவதும் நடந்துகொண்டிருக்கும் சூழலில், ‘வரவிருக்கும் மே மாதம் பெரும் சவாலாக இருக்கும்’ என்று நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கைக்கு ஒன்றிய – மாநில அரசுகள் மிகுந்த கவனம் அளிக்க வேண்டும்.
- மே முதல் வாரத்தில், ஒவ்வொரு நாளும் 5 லட்சம் தொற்றாளர்களையும், 3 ஆயிரம் இறப்புகளையும் இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், மே பின் வாரங்களில் தொற்று எண்ணிக்கை 10 லட்சமாகவும், இறப்பு எண்ணிக்கை 5 ஆயிரமாகவும் அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் சுட்டுகிறார்கள்.
- உண்மையில், இந்தக் கணிப்புகளையெல்லாம் ஆய்வாளர்கள் சொல்வதற்கு அஞ்சும் அளவுக்கு நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது.
- கேள்வி என்னவென்றால், இப்போதைய எண்ணிக்கைக்கே மருத்துவமனைகளில் இடம் இல்லை, மருந்துகள் போதிய அளவுக்குக் கையிருப்பு இல்லை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்று அல்லோலகல்லோலப்படும் நிலையில், தொற்றின் எண்ணிக்கை மேலும் மூன்று மடங்கு அதிகரித்தால் எந்த அளவுக்கு அதற்கு ஈடுகொடுக்க நாம் தயாராகவிருக்கிறோம்?
- தலைநகர் டெல்லியின் நிலைமையே மோசமாக இருக்கும் சூழலில், ஒன்றிய அரசை முழுமையாக நம்பி உத்தரவுகள், வழிகாட்டுதல்களுக்குக் காத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை; மாநில அரசுகள் முழுமூச்சில் முன்கூட்டித் திட்டமிட்டு இயங்க வேண்டிய தருணம் இது.
- தடைகள் எதுவென்றாலும் வெளிப்படையாகப் பேசப்பட வேண்டும்; ஒன்றிய அரசிடமிருந்து உதவிகள் தயக்கமின்றிக் கேட்கப்பட வேண்டும்.
- மே 2 தேர்தல் முடிவுகளுக்காகத் தமிழகம் காத்திருக்கும் நிலையில், செயல்திட்டத்தை வகுப்பதிலும் உறுதியான சில நடவடிக்கைகளை எடுப்பதிலும் அரசு அதிகாரிகள் மத்தியில் தயக்கம் நிலவுவதாக ஒரு பேச்சு நிலவுகிறது.
- அப்படியானால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் இது தொடர்பில் உடனடியாகக் கலந்து பேச வேண்டும்.
- அனைத்து முன்னணிக் கட்சிகளும் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு, அரசியல் தலைவர்களிடம் சூழலை விளக்கி, செயல்திட்டத்தை முன்னெடுக்கலாம்.
- வெவ்வேறு துறைகளிலும் உள்ள செயலூக்கம் மிக்க அதிகாரிகளும் இப்போது கரோனாவுக்கு எதிரான செயல்திட்டம் நோக்கித் திருப்பிவிடப்பட வேண்டும். அதேபோல, வல்லுநர்கள் குரலுக்கு உரிய கவனத்தை ஒன்றிய அரசு அளிக்காததும் நாடு இன்றைக்குச் சிக்கியிருக்கும் கரோனா பேரலைக்குக் காரணம் என்று சொல்லப்படுவது கவனத்தில் கொள்ள வேண்டும்.
- வல்லுநர்களின் குரலுக்கு, முக்கியமாக மருத்துவர்கள் குரலுக்குத் தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும். சமூகத்தின் எல்லாத் தரப்புகளிலிருந்தும் உதவிகளைப் பெறவும் முயல வேண்டும்.
- தேவையான நடவடிக்கைகள் தாமதிக்கப்படும் ஒவ்வொரு கணமும் ஆயிரக்கணக்கான உயிர்களை ஆபத்தில் தள்ளிவிடும் என்ற அக்கறையோடு தமிழகம் செயலாற்ற வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (26 - 04 – 2021)