TNPSC Thervupettagam

தரமான உயர் கல்விக்கு...

August 27 , 2019 1958 days 1434 0
  • மத்திய அரசு அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள புதிய கல்விக் கொள்கையின் வரைவு கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. அதிலும் அதிகமான விமர்சனங்கள் அரசியல் ரீதியாகவே இருக்கின்றன. பொதுவாக, இப்படிப்பட்ட கொள்கை வரைவுகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்போது, நடுநிலையாக இருந்து ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எதிர்காலம் நோக்கிய பின்புலத்தில் பார்க்கும் பக்குவம் நம் அனைவருக்கும் வரவேண்டும். 
வரைவு அறிக்கை
  • அப்படிப்பட்ட பல அலசல்களும் வந்துள்ளன. இது ஒரு வரைவு அறிக்கை மட்டுமே. இதில் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. எனவே, நாட்டின் எதிர்காலம் குறித்த பின்புலத்திலும் மற்றும் நிகழ்காலச் சூழலில் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கிலும் பகுத்துப் பார்த்து கருத்துகள் கூறியாக வேண்டும். எனவே, இந்த வரைவு கல்விக் கொள்கையில் உள்ள முக்கியமான அம்சங்கள் குறித்து விவாதிப்பது அவசியம்.
    இன்றைய சூழல் என்பது வணிகமயமாக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். இதில் கல்விச் செயல்பாடுகள் காரணமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்தும் அதிகரித்துள்ளன. ஆனால், மனிதாபிமானமும், மனித மாண்புகளும், விழுமியங்களும் வீழ்ந்துள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.
  • பொருளாதாரத்தில் உயர்ந்த நாம், வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொண்ட நாம், வாழ்க்கை நியதிகளில் வீழ்ந்ததற்குக் காரணங்கள் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதன் ஆதாரம் கல்வியில்தான் உள்ளது என்பதையும் யாரும் மறுக்க இயலாது. கல்வியில் நாம் எங்கு திசை மாறினோம் என்று பகுத்துப் பார்ப்பது தற்போதைய காலத்தின் கட்டாயம்.
கல்விச் சாலைகள்
  • நம் கல்விச்சாலைகள் சமுதாய மேம்பாட்டுக்கும் மானுட மாற்றத்துக்கும் வித்திடும் தவச்சாலையாக செயல்படுவதற்குப் பதில், லாபம் ஈட்டும் உத்திகளைக் கற்றுத் தந்து சான்றிதழ் விநியோகிக்கும் நிறுவனங்களாக மாற்றப்பட்டுவிட்டன. 
    கல்விச்சாலைக்குச் செல்லும் மாணவரும் சரி, அவர்களுடைய பெற்றோரும் சரி, அரசும் சரி, ஆசிரியர்களும் சரி, கல்விச் சாலையில் மாணவர்கள் அறிவு நிலையிலும் சரி, திறன் நிலையிலும் சரி, நடத்தையிலும் சரி, ஒழுக்கத்திலும் சரி, செயல்பாட்டிலும் சரி உயர்நிலை பெற்று விளங்கத் தேவையான செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என்பதற்குப் பதில், எப்படியும் சான்றிதழ் பெற்று வந்துவிட்டால், அது போதுமானது என்று எண்ணும் நிலையில்தான் இருக்கிறார்கள். கல்வி என்பது சமூக அந்தஸ்தைக் காட்டும் கருவி.
  • அத்துடன் பிழைப்பு தேடுவதற்கும் ஒரு கருவி என்று எண்ணி கல்விக்கூடங்கள் செயல்பட்டதைத்தான் நாம் பார்த்து வந்துள்ளோம்.
    தாங்கள் கற்கும் கல்வி மூலம் தனக்கும் தன் சமுதாயத்துக்கும் உதவிகரமாக இன்று நம் மாணவர்கள் செயல்பட முடியவில்லை. வளர்ந்து வரும் தொழில்களுக்கு மற்றும் சந்தைச் செயல்பாடுகளுக்கு உயர்ந்த நிலைக்குச் செல்லும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் ஆற்றல் பெற்றவர்களாக நம் இளைஞர்களை கல்விச்சாலைகள் மூலம் தயார் செய்ய இயலவில்லை. ஏனென்றால், நம் கல்வி முழுக்க முழுக்க சடங்குகளாக மாற்றப்பட்ட ஒன்றாகத் திகழ்கிறது.
  • மாணவர்களின் இயல்பான திறனை வெளிக்கொணரும் ஆற்றல் அற்றதாகவே நம் கல்வி இருந்து வருகிறது. எனவே, இதைத் தவிர்ப்பதற்கு கல்வியின் தரம் உயர்த்தப்பட்டால் அன்றி, எந்த ஒரு பயனும் சான்றிதழ் தருவதால் வரப்போவது இல்லை. 
    இந்தியாவில் உயர் கல்வியின் நோக்கம், உயர் கல்வி படிப்போரின் எண்ணிக்கையைக் கூட்டுவது அல்ல.  உயர் கல்வி படிப்போரின் கல்வியின் தரத்தைக் கூட்ட வேண்டும்.
  • இல்லை என்றால், இந்த உயர் கல்விக்கூடங்கள் சமூக விரோதிகளை உருவாக்கும் உலைக்களங்களாய் மாறிவிடும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் எந்தப் பயனும் இல்லாத சான்றிதழ்களை மாணவர்களிடம் வழங்கி சமூகத்திற்குள் அனுப்பும் பணியை உயர் கல்வி நிறுவனங்கள் செவ்வனே செய்து வருகின்றன. இந்தச் சூழலில்தான் இந்தியா இருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.
தரமான உயர் கல்விக்கு வழிகோலும் திட்டம்
  • எனவே, இந்திய உயர் கல்வியில் திருப்புமுனையைக் கொடுக்கும் ஒரு திட்டத்தை, அதாவது தரமான உயர் கல்விக்கு வழிகோலும் திட்டத்தை  இந்தப் புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவில் சேர்ப்பது மிகவும் அவசியம். இந்தக் கல்வி முறையை எப்படிக் கொண்டுவர வேண்டும் என்றால், ஆராய்ச்சி, பாடத்திட்டம் உருவாக்கி போதித்தல், விரிவாக்கப் பணி என்ற மூன்று பணிகளையும் ஒருங்கிணைத்து பல்கலைக்கழகங்களில் அல்லது உயர் கல்வி நிறுவனங்களில் நடத்தினால் மட்டுமே சாத்தியப்படும். இந்த வரைவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் பகுப்பு என்பது தரம் கூட்டுவதற்கு எந்த விதத்திலும் உதவாது. 
    ஒரு நிலையில் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கு, அடுத்த நிலையில் உயர்கல்விக்கு, கல்லூரிகள் இளங்கலை அறிவியல் போன்றவற்றை போதிப்பது என்ற பகுப்பாய்வு உயர் கல்வியின் தரத்தை உயர்த்தாது.
  • மாறாக, ஆராய்ச்சி, பாடம் கற்பித்தல், விரிவாக்கம் ஆகிய மூன்று அம்சங்களையும் ஒன்றொடு ஒன்று இணைத்தால் பலன் கிடைக்கும். தரமான பாடத்திட்டத்தை உருவாக்கத் தேவையான அறிவை தரமான ஆராய்ச்சி உருவாக்கும்; தரமான ஆராய்ச்சி செய்தவர்தான் தரமான பாடத்திட்டத்தை உருவாக்கி மாணவர்களுக்குப் போதிக்க முடியும்; இந்த இரண்டையும் நேர்த்தியுடன் செய்தவர்தான் சமூகத்தின் தேவையுடன் கல்வியை இணைத்துக் கொள்ள முடியும். 
முக்கியத்துவம்
  • இந்தப் புதிய வரைவுக் கொள்கையில் ஆராய்ச்சிக்கும், போதனைக்கும், கற்றலுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை, விரிவாக்கத்துக்கு கொடுக்காதது ஏன் என்று புரியவில்லை. இந்தியாவில் கல்விக் கொள்கைகளை உருவாக்க அடித்தளமாய் அமைந்த ராதாகிருஷ்ணன் குழு அறிக்கை முதல் யஷ்பால் குழு அறிக்கை வரை விரிவாக்கம் பற்றி விவாதம் செய்யப்பட்டு பல திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. 
  • ஆனால், இந்த வரைவு அறிக்கை அந்த விரிவாக்கப்பணி பற்றிப் பேசவே இல்லை. எவ்வளவு அறிவு சார்ந்தவராக ஒருவரை கல்விச்சாலை உருவாக்கினாலும், அவர் சமூக அக்கறை இன்றி உருவாக்கப்பட்டு விட்டால், அவரால் சமூகத்துக்கு எந்த நலனும் கிடைக்காது. இன்று கல்விச்சாலைகள் சமூகப் பார்வையற்றவர்களைத்தான் உருவாக்கிய வண்ணம் இருக்கின்றன. இவற்றை மாற்றும் நோக்கத்துடன்தான்  கடந்த ஐந்து ஆண்டு காலமாக ஒரு திட்டத்தை உயர் கல்வி நிலையங்களில் நடைமுறைப்படுத்த முனைந்தது நம் மத்திய அரசு. உன்னத பாரத இயக்கம் என்று ஒரு திட்டத்தினை உருவாக்கி உயர் கல்வி நிறுவனங்களை சமூகச் செயல்பாடுகளில் இணைத்துச் செயல்பட வழிவகை செய்தது. 
  • இதன் அடிப்படை கல்விச்சாலைகள் என்பது மாணவர்களுக்கு போதிக்கும் நிலையங்கள் மட்டுமல்ல. அது ஒட்டுமொத்த சமுதாயத்தை மாணவர்கள் மூலம் மாற்றியமைக்கும் நிலையங்கள். தங்கள் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்தவற்றை சமுதாயத்துக்கு நேரடியாகக் கொண்டு சென்று சமுதாய மாற்றத்திற்கு கல்விச்சாலைகள் உதவலாம்.
  • நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் முதல் தேவை சுதந்திரம் அல்ல, சுத்தம்-சுகாதாரம் என்று பிரகடனப்படுத்தியவர் மகாத்மா காந்தி. இன்று வரை அது நடைபெறாத காரணத்தால்தான் தூய்மை இந்தியா என்ற மகத்தான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி பொது வெளியில் மலம் கழிப்பதை தடுத்து தூய்மை இயக்கம் ஒன்றை தொடங்கி கழிப்பறை கட்டி மிகப் பெரிய சாதனை செய்து வருகிறது. கழிப்பறை கட்டுவது மிக எளிது. கழிப்பறை கலாசாரத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. அது மக்களின் சிந்தனைப்போக்கில், நடத்தையில் ஒரு மாற்றம் வந்தாலன்றி நடக்கக்கூடிய செயல்பாடு அல்ல.
மக்கள் இயக்கம்
  • இதனை ஒரு பெரிய மக்கள் இயக்கமாக உருவாக்கத் தேவையான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். இதை 945 பல்கலைக்கழகங்களும், 40,000 கல்லூரிகளும், 11,000 ஆராய்ச்சி நிறுவனங்களும் மாணவர்களுடன் இணைந்து சமுதாயத்துக்குள் செயல்பட ஆரம்பித்துவிட்டால் காந்தி கண்ட தூய்மை இந்தியாவை உருவாக்கி விடலாம். இதுபோன்ற பணிகளை நம் உயர் கல்வி நிலையங்கள் செய்ய வேண்டும். அதுதான் விரிவாக்கப்பணி.
  • ஆனால், இந்த வரைவுக் கல்விக் கொள்கையில் அந்த விரிவாக்கப்பணி கோடிட்டுக் காட்டப்படவில்லை என்பதுதான் மிகுந்த வேதனையளிக்கும் ஒன்றாகும். இந்தக் கல்விக் குழுவில் விரிவாக்கத்திற்கான எந்த நிபுணரும் இல்லாத காரணத்தால்தான் இது விடப்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். எனவே, இரண்டு மிக முக்கியமான அடிப்படைக் கருத்துகளை நம் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று பல்கலைக்கழகம் என்றால் மூன்று பணிகளும் அதாவது ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் விரிவாக்கம் என்ற மூன்றும் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும்.
  • இதில் மிக முக்கியமாக விரிவாக்கம் பற்றிய விரிவான செயல்பாட்டுத் திட்டம் சேர்க்கப்படல் வேண்டும். 
  • இதற்கு நாம் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு அறிக்கையையும், மாலிக் குழு அறிக்கையையும் படித்தால் இந்த வரைவுக் கொள்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்த்து தரமான சமுதாயப் பார்வை கொண்ட, அறிவும் திறனும் கொண்ட குடிமக்களை நம் உயர் கல்வியின் மூலம் உருவாக்க முடியும். 

நன்றி: தினமணி(27-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்