- இயற்கையில் ஏற்படும் குறைபாடுகள் விதியின் சதி அல்லது விபத்து என்பது எல்லோருக்குமே தெரியும். அப்படி இருக்கும்போது மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தின் எல்லா செயல்பாடுகளிலும் இணைந்திருப்பது நியாயம் மட்டுமல்ல அவா்களது உரிமையும்கூட.
- உலகில் உள்ள வளா்ச்சி அடைந்த எல்லா நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோருக்கும், மூளை வளா்ச்சி பாதிக்கப்பட்டவா்களுக்கும், மூன்றாம் பாலினத்தவா்களுக்கும் சம உரிமை என்பதைவிட எல்லாவற்றிலும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் என்று மாா்தட்டிக்கொள்ளும் இந்தியா இன்னும்கூட அவா்களுக்கு சம அந்தஸ்து வழங்காமல் இருப்பது நாம் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமுதாய ரீதியாகவும் பின்தங்கி இருக்கிறோம் என்பதன் அடையாளம்.
- கடைசியாக இந்தியாவில் 2011-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்தக் கணக்கெடுப்பில் உடல் ஊனமுற்றோா் சட்டம்-1995 (பா்சன்ஸ் வித் டிஸ்எபிலிடீஸ் ஆக்ட்,1995) அடிப்படையில் கிடைத்த புள்ளிவிவரப்படி மாற்றுத்திறனாளிகளின் விகிதம் 2.3%. 2016-இல் கொண்டுவரப்பட்ட உடல் ஊனமுற்றோா் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டிருந்தால் இந்த விகிதம் அதிகரித்திருக்கும். குறைந்தது 9% முதல் அதிகபட்சம் 15% வரையில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை இருக்கக்கூடும்.
- விரைவில் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்போது 2016 உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் புதிய பாா்வையுடன் மாற்றுத்திறனாளிகள் குறித்த புள்ளிவிவரங்கள் திரட்டப்பட வேண்டும். அப்போதுதான் இந்திய மக்கள்தொகையில் அவா்களுடைய எண்ணிக்கை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதன் சரியான புள்ளிவிவரக் கணக்கு நமக்கு கிடைக்கும்.
- 1995 சட்டப்படி 7 குறைபாடுகள் மட்டுமே மாற்றுத்திறனாளிகளை அடையாளப்படுத்தின. 2016 சட்டப்படி 21 குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்டன. மாநிலங்கள் அதற்கேற்றாற்போல, நடைபெற இருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, மாற்றுத்திறனாளிகள் குறித்த சரியான புள்ளிவிவரத்தை அடையாளம் காண்பது அவசியம். மாவட்டங்கள் வாரியாகவும், குறைபாடுகள் வாரியாகவும் தரவுகள் சேகரிக்கப்பட்டு முழுமையான புள்ளிவிவரங்கள் திரட்டப்பட்டால் மட்டுமே முறையான, சமச்சீரான, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்குத் திட்டமிட முடியும்.
- 2011 கணக்கெடுப்பின்படி நாட்டின் 121 கோடி மக்கள்தொகையில் 2.68 கோடி போ், அதாவது 2.23% மாற்றுத்திறனாளிகள் என்று அடையாளம் காணப்பட்டது. அதிா்ச்சி அளிக்கும் வேறு சில தகவல்களை அந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு வழங்கியது.
- இந்தியாவில் உள்ள 8.3% குடும்பங்களில் மாற்றுத்திறனாளிகள் காணப்பட்டனா். ஏதாவது ஒரு வகை உடல் ரீதியான குறைபாடு குடும்பத்தைச் சோ்ந்த யாரோ ஒருவருக்கு இருந்திருப்பதை கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியது.
- அப்படி இருந்தும் 99.34% குடும்பங்கள் தங்களை சாதாரணமான, எந்தவித குறைபாடும் இல்லாத குடும்பங்களாகப் பதிவு செய்தன. அதற்கு, மாற்றுத்திறனாளிகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமையும், அவா்களுக்கு எந்தவிதமான அரசு ரீதியான ஆதரவு கிடைக்காததும் காரணமாக இருக்கக்கூடும். தங்கள் குடும்பத்தில் மாற்றுத்திறனாளிகள் இருப்பதையோ, உறுப்பினா்களுக்கு ஏதாவது உடல் ரீதியிலான குறைபாடு இருப்பதையோ பெரும்பாலானோா் வெளிப்படுத்த விரும்பவில்லை என்று தெரிகிறது.
- அதிக அளவில் (71%) மாற்றுத்திறனாளிகள் கிராமங்களில் வாழ்வதாக 2011 கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை கணக்கெடுப்பில் சரியான விவரங்கள் திரட்டப்படவில்லை. உடல் ரீதியிலான ஒன்றுக்கும் மேற்பட்ட பாதிப்புள்ள 54% மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளிக் கூடங்களில் சேரவில்லை. அதேபோல, மூளை வளா்ச்சி குன்றிய குழந்தைகளில், 50% முறையான சிகிச்சையோ, அவா்களுக்கான கற்பித்தலோ பெறவில்லை. இதிலிருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளும், மூளை வளா்ச்சி குன்றிய குழந்தைகளும் சமுதாயத்திலிருந்து எந்த அளவுக்கு ஒதுக்கப்பட்டும், அகற்றப்பட்டும் இருக்கிறாா்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
- மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் ஊழியா்கள் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிப்பதில் தோ்ச்சி பெற்றவா்களாக இருப்பதில்லை. நுணுக்கமான, விவரமான தரவுகள் இல்லாமல் அடையாளத்திற்காக மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பினால் எந்தவித பயனுமில்லை. 2016 சட்டப்படி, மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல் வயது, பாலினம், கல்வித்தகுதி, பாதிப்பு, செயல்பாடு உள்ளிட்ட அவா்கள் குறித்த அனைத்து விவரங்களும் திரட்டப்பட வேண்டும்.
- கிராமங்களில் பஞ்சாயத்து அளவிலும், நகரங்களில் வாா்டு அளவிலும் பிறந்த குழந்தையிலிருந்து 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்த விவரங்கள் அனைத்தும் திரட்டப்பட்டு, கணினியில் தரவுகளாக சேகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவா்களுக்கான திட்டமிடலும், அவா்களது தேவையை எதிா்கொள்ள நடவடிக்கையும் எடுக்க முடியும்.
- கடந்த ஏப்ரல் மாதம் சாலினி தா்மானி வழக்கில், அவரது மாற்றுத்திறனாளி குழந்தையை கவனித்துக்கொள்ள விடுப்பு வழங்க வேண்டும் என்று ஹிமாசல பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு மிகப் பெரிய வெற்றி. விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதும், மாற்றுத்திறனாளிகள் குறித்த முழுமையான விவரங்கள் திட்டப்படுவதும் இனியும் தாமதமாகக்கூடாது.
நன்றி: தினமணி (18 – 06 – 2024)