TNPSC Thervupettagam

தரவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தாமதிக்கக் கூடாது

February 17 , 2020 1792 days 759 0
  • ஜெர்மன் நாட்டின் சைபர் பாதுகாப்பு நிறுவனம், ‘லட்சக்கணக்கான இந்திய நோயாளிகள் பற்றிய தரவுகள் இணையதளத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன’ என்று அளித்திருக்கும் தகவல் மிகவும் கவலைதருகிறது. இந்திய நோயாளிகளின் உடல்நிலை பற்றிய 10 லட்சத்து 20 ஆயிரம் ஆய்வறிக்கைகளும், 12 கோடியே 10 லட்சம் மருத்துவப் படங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சிடி ஸ்கேன்கள், எம்ஆர்ஐ படங்கள் மட்டுமல்லாது, நோயாளிகளின் புகைப்படங்களும்கூட இருக்கின்றன.

தரவுகள்

  • இத்தகைய தரவுகளைப் பெறும் நிறுவனம், அவற்றை எத்தகைய ஆய்வுக்கும் வணிகத்துக்கும் தனிப்பட்ட நோக்கத்துக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். மருத்துவத் துறையினரின் ‘சர்வர்’கள் பொது இணையதளத்துடன், எந்தவிதத் தணிக்கைப் பாதுகாப்பும் இல்லாமல் இணைக்கப் பட்டிருப்பதாலேயே இப்படி நடக்கிறது.
  • ‘தரவுகள் கசிவு' என்பது இந்தியாவில் மிகவும் இயல்பான ஒன்றாகிவிட்டது. அரசு திரட்டும் ‘ஆதார்’ தகவல்கள் முதல் அனைத்துத் துறைகளின் தரவுகளும் எந்தவிதத் தடையும் இல்லாமல் பலருடனும் பகிரப்படுகின்றன. வாக்காளர் பட்டியல், மத்திய - மாநில அரசுகளின் பயனாளர் பட்டியல், தனியார் துறையில் பணிபுரியும் உயர் வருவாய்ப் பிரிவினர் பட்டியல் என்று பல விதங்களிலும் தனிநபர்கள் பற்றிய தரவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமலேயே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன அல்லது விற்கப்படுகின்றன. தரவுகளின் தனித்தன்மையைப் பாதுகாக்க இந்தியாவில் வலுவான சட்டம் இல்லை. ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இதில் வழிகாட்டிகளாக இருக்க முடியும்.

சட்ட முன்வடிவு

  • ‘தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்புச் சட்ட முன்வடிவு-2019’ இன்னமும் நாடாளுமன்றத்தில் தாக்கலாகவில்லை. நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான நிபுணர்கள் குழு, 2018-ல் மின்னணுவியல்-தகவல் தொழில்நுட்ப அமைச் சகத்துக்கு அளித்த பரிந்துரைகளின் பேரில், இச்சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டிருக்கிறது.
  • ஸ்ரீகிருஷ்ணா குழுவின் நோக்கத்தையும் பரிந்துரைகளையும் உள்வாங்கியுள்ள 2019-ம் ஆண்டு சட்ட முன்வடிவு, அதன் அனைத்து அம்சங்களையும் அப்படியே ஏற்காமல் சில சமரசங்களைச் செய்துகொண்டுவிட்டது. தகவல் தருவோரிடம் இந்தத் தரவுகள் எதற்காகத் திரட்டப்படுகின்றன என்ற உண்மை உரைக்கப்பட வேண்டும், தகவல் தருவோர் தானாக முன்வந்து தகவலைத் தரும் வகையில் நடைமுறைகள் இருக்க வேண்டும், என்னென்ன தரவுகள் திரட்டப்படுகின்றன, அவற்றில் எவை சுய பயன்பாட்டுக்கும் எவை பொதுவெளிக்கும் போகக்கூடும் என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும், தேவைப்படும்போது தகவல்களை அளித்தவரே அவற்றைத் திரும்பப் பெறவும் உரிமை தரப்பட வேண்டும் என்றெல்லாம் குழு பரிந்துரைத்திருந்தது.
  • ‘இந்தத் தரவுகளை யாருக்காவது தருவது அல்லது விற்பது குற்றச் செயல்’ என்று 2018 சட்ட முன்வடிவில் இடம்பெற்றிருந்த பிரிவு நீக்கப்பட்டுவிட்டது.
  • அரசுத் துறைகள் அல்லது நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களை மக்களிடமிருந்து பெற எந்தத் தடையும் இல்லை என்று விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மக்களிடம் திரட்டும் தரவுகளைப் பாதுகாக்கும் விதம் அச்சமூட்டுகிறது.
  • வலுவான, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ‘தரவுகள் பாதுகாப்புச் சட்டம்' அவசியம். இனியும் அதைத் தாமதப்படுத்தக்கக் கூடாது.

நன்றி: இந்து தமிழ் திசை (17-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்