TNPSC Thervupettagam

தருண் கோகோய்: அஸாமின் அமைதி நாயகர்

November 26 , 2020 1516 days 673 0
  • கரோனா பலிகொண்டிருக்கும் அரசியலர்களில் ஒருவராகியிருக்கிறார் தருண் கோகோய்.
  • காங்கிரஸின் முக்கியமான தலைவர்களில் ஒருவர், அஸாமின் நீண்ட கால முதல்வர் என்கிற அடையாளங்களைத் தாண்டி வடகிழக்கின் செல்வாக்கு மிக்க முகம் என்று சொல்லத்தக்கவராக இருந்தவர் அவர்.
  • அஸாம் மாநிலத்தில் 2001 தொடங்கி தொடர்ந்து மூன்று முறை முதல்வர் பொறுப்பை வகித்த தருண் கோகோய் (1936-2020), தேசிய அரசியலில் வடகிழக்கு மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்.
  • அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியில் இணைச்செயலாளராகவும் பொதுச்செயலாளராகவும் பொறுப்புகளை வகித்தவர்.
  • அஸாமின் செல்வாக்கு மிக்க ஆஹோம் சமூகத்தைச் சேர்ந்தவர் கோகோய். குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தவர். 1968-ல் ஜோர்ஹட் நகர சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1971 தொடங்கி 1985 வரையிலும் ஜோர்ஹட் மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்று முறையும் அதைத் தொடர்ந்து கலியபோர் மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்று முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தற்போது கலியபோர் தொகுதியின் உறுப்பினராக அவரது மகன் கௌரவ் கோகோய் பதவி வகிக்கிறார்.

மத்தியிலிருந்து மாநிலத்துக்கு

  • ராவ் அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சராகவும் உணவுப் பதப்படுத்தல் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் தருண் கோகோய். ஆறாவது முறை மக்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடியும் முன்பே, அஸாம் மாநில அரசியலில் களம் இறக்கிவிடப்பட்டார்.
  • டெல்லிக்கு நெருக்கமாக இருந்த அவர், மாநில அரசியலில் தாக்குப்பிடிப்பாரா என்ற சந்தேகம் அப்போது நிலவியது. உல்பா, போடோலாந்து இயக்கங்களின் காரணமாக அமைதியின்மையையும் பொருளாதார வீழ்ச்சியையும் அஸாம் ஒருசேர சந்தித்துக்கொண்டிருந்த காலம் அது.
  • அடுத்த தேர்தலில் காங்கிரஸ், அதற்கும் அடுத்த தேர்தலில் அஸாம் கண பரிஷத் என்று அஸாம் மாநில அரசியலானது இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான போட்டியாகவே இருந்தது.
  • தன்னுடைய செல்வாக்கால் அஸாம் கண பரிஷத்தின் செல்வாக்குக்குப் பலமான அடி கொடுத்தார் தருண் கோகோய். 2001-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற அவர், தொடர்ந்து 15 ஆண்டுகள் முதல்வராகப் பதவி வகித்தார்.
  • தருண் கோகோய் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, ரிசர்வ் வங்கி அந்த மாநிலத்துக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அனுமதித்த அளவைக் காட்டிலும் மாநில அரசு அதிகக் கடன் வாங்கிவிட்டது என்பதுதான் அந்தக் கட்டுப்பாடுகளுக்கான காரணம்.
  • நிதிநிலை முற்றிலும் வீழ்ந்ததால் மாநில அரசு ஊழியர்களுக்கு மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படாத நிலையும் இருந்தது.
  • அஸாமின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிக்கு ராவின் அமைச்சரவையில் பணியாற்றிய அனுபவம் தருண் கோகோய்க்கு உதவியது. புதிய வரி வருவாய்களை உருவாக்கி நிலைமையைச் சீராக்கினார்.

சமூக நலனும் வளர்ச்சியும்

  • அஸாமை அமைதியின்மைக்குள் ஆழ்த்தியிருந்த பயங்கரவிய அமைப்புகளைச் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்தவர் அவர்களுடன் உரையாடலைத் தொடங்கினார்.
  • அதேநேரத்தில், அமைதி முகிழும் காலம் வரை வளர்ச்சிப் பணிகள் காத்திருக்காது என்று அறிவித்துவிட்டு சாலை, பாலங்கள் என்று போக்குவரத்துத் திட்டங்களை விரைவுபடுத்தினார்.
  • 2003-ல் போடோ விடுதலை இயக்கத்துடன் அவரது பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தன. ‘காங்கிரஸ் ஆட்சிக்கு முன்பு மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே அமைதி நிலவியது,
  • தற்போது சில பகுதிகளில் மட்டுமே அமைதியின்மை நிலவுகிறது. சதவீதக் கணக்கில் பார்த்தால் எனது வெற்றி 80% ஆக இருக்கும்’ என்பதாக அவரது சுயமதிப்பீடு அமைந்திருந்தது.
  • தருண் கோகோயின் ஆட்சிக்காலத்தின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று பள்ளிக்கல்வி முடித்த மாணவர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தியது.
  • 2001-ல் உயர்நிலைப் பள்ளித் தேர்வில் வென்ற மாணவர்களின் எண்ணிக்கை 33% இருந்தது. 2011-ல் அது 70.3 % ஆக வளர்ந்தது. பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில் தீவிர அக்கறை எடுத்துக்கொண்டார்.
  • சமூகநல மேம்பாட்டில் தமிழகத்தின் சில சமூகநலத் திட்டங்களை தருண் கோகோய் வரித்துக்கொண்டார். பள்ளி மாணவிகளுக்கு அவர் அறிமுகப்படுத்திய விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
  • அஸாமின் மலைகளிலிருந்தும், வனங்களிலிருந்தும் கல்வி நிலையம் நோக்கி வருவதில் சிரமங்களை எதிர்கொண்ட மாணவிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் விடுதிகளைத் தொடங்கினார்.
  • விவசாயத்தை பிரதானமாகக் கொண்டிருக்கும் மாநிலம் என்பதால் வேளாண் வளர்ச்சித் திட்டங்களில் பெரும் கவனம் செலுத்தினார். அவரது ஆட்சிக்காலத்தில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குக் கடன் அட்டைகள் வழங்கப்பட்டன.
  • பால் உற்பத்தியாளர்களைக் கூட்டுறவு முறையில் இணைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அமைதி நிலையை உருவாக்கியதால், சுற்றுலாத் துறையையும் வளர்த்தெடுத்தார்.

காங்கிரஸுக்குப் பேரிடி

  • வரும் ஆண்டில் அஸாமில் சட்ட மன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் காங்கிரஸுக்கு தருண் கோகோயின் மறைவு பேரிழப்பு. கோகோயின் ஆட்சிக்காலத்தை விட கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக என்ன பெரிதாய் செய்துவிட்டது என்ற எளிய கேள்வியை முன்வைத்தே காங்கிரஸ் தனது பிரச்சாரத்தைச் சந்திக்கவிருந்தது.
  • மேலும், அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தருண் கோகோய்.
  • அவருடைய மறைவு காங்கிரஸ் கூட்டணிக்கான ஏற்பாடுகளை மட்டுமல்ல, அவ்வாறு உருவானாலும் கூட்டணியில் காங்கிரஸின் முக்கியத்துவத்தையும் அதன் செல்வாக்குமிக்க முகத்தையும் இழக்கச் செய்துவிட்டது.
  • காங்கிரஸின் சிப்பாய்களில் ஒருவர் என்று கூறிக்கொள்ளும் தருண் கோகோய் கட்சி விசுவாசத்துக்குப் பேர்போன தலைமுறையின் பிரதிநிதி. அஸாமுக்கு இணையாக காங்கிரஸையும் நேசித்தவர்.
  • தன்னுடைய சுயசரிதையை பிரம்மபுத்திரா நதியைப் பற்றிய பூபன் ஹசாரிக்கின் பாடலுடன் தொடங்கிய அவர் தன்னுடைய மரணப் படுக்கையில் பூபன் ஹசாரிக்காவின் பாடல்களோடு, இந்திரா, ராஜீவ் உரைப் பதிவுகளையும் கேட்டுக்கொண்டிருந்தார். இதுவே, காங்கிரஸுக்கு இந்த இழப்பு எவ்வளவு பெரிதென்பதைச் சொல்லிவிடும்!
  • சமூகநல மேம்பாட்டில் தமிழகத்தின் சில சமூகநலத் திட்டங்களை தருண் கோகோய் வரித்துக்கொண்டார். பள்ளி மாணவிகளுக்கு அவர் அறிமுகப்படுத்திய விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

நன்றி : இந்து தமிழ் திசை (26-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்