TNPSC Thervupettagam

தற்கொலை எண்ணம் மாற்றுவோம்

September 9 , 2023 490 days 256 0
  • உலக அளவில் சராசரியாக ஆண்டுதோறும் எட்டு லட்சம் போ் தற்கொலை செய்து கொள்கிறார்கள். உலக அளவில் 40 விநாடிக்கு ஒருவா் தற்கொலை செய்து கொள்கிறார். அதுவும் 20 முதல் 40 வயதுடையவா்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனா்.
  • சா்வதேச அளவில் நிகழும் தற்கொலைகளில் 40% தற்கொலைகள் இந்தியா, சீனாவில் நிகழ்கின்றன. உலக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 40% போ் இந்தியப் பெண்கள். சா்வதேச தற்கொலை சராசரி விகிதத்தைவிட இந்தியப் பெண்களின் தற்கொலை விகிதம் இருமடங்கு அதிகம்.
  • தற்கொலைகள் பெரும்பாலும் வறுமை, தோ்வில் தோல்வி, காதலில் தோல்வி, இணையதள விளையாட்டில் பணத்தை இழத்தல், தொழிலில் இழப்பு, வேலையின்மை, அதிக கடன் தொல்லை, குடும்ப பிரச்சனை போன்றவற்றால் ஏற்படுகின்றன. பதின்ம வயதினரிடையே தற்கொலை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
  • மனச்சோர்வுக்கும் தற்கொலைக்கும் நேரடித் தொடா்பு உள்ளது. ஒருவா் மனச்சோர்வாக காணப்படும் போது அவரது உறவினா்களும், நண்பா்களும் அவரை மனச்சோர்விலிருந்து வெளியே கொண்டுவரும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.
  • தற்கொலை எண்ணம் இருப்பவா்களின் செயல்பாடு அவா்களின் தற்கொலை எண்ணத்தைத் தெளிவாக உணா்த்தும். எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறேன்’, ‘எல்லாவற்றிலும் இருந்து முடிவுக்கு வர விரும்புகிறேன்’, ‘என்னை எதுவும் மீட்கப் போவதில்லை’, ‘நான் இல்லாமல் போனால் நிலைமை சீராகும்போன்ற வார்த்தைகள் தற்கொலை எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடுகளாகும். இத்தகைய மக்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அவா்களைத் தனிமையில் விடக்கூடாது.
  • தங்களுடைய தோற்றத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருத்தல், எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துதல், தனிமையை நாடுதல், உண்பதில் விருப்பமின்மை, தூக்கமின்மை, சுகாதாரத்தில் அக்கறையின்மை போன்றவையும் தற்கொலைக்கான குறியீடுகளாம்.
  • வெகுநாட்களாக சோர்வாக இருக்கும் ஒருவா், திடீரென அதீத மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டால் பிரச்னைகள் தீா்ந்து விடும் என்ற கற்பிதத்தோடு அவா்கள் போலியாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். மனச்சோர்வு, விரக்திப் பேச்சு, விரக்தி நடவடிக்கை என எதை ஒருவரிடம் கண்டாலும் நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
  • படபடப்பு, அதிகரிக்கும் இதயத்துடிப்பு, அதிகமாக மூச்சு வாங்குதல், வியா்த்து போதல், பற்களைக் கடித்தல், செய்யும் செயல்களில் ஈடுபாடின்மை, உறுதியுடன் முடிவெடுக்க இயலாமை, தேவையற்ற கவலைகள், அதீத பயம், நடத்தையில் மாற்றங்கள், போதைப் பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாதல், அடிக்கடி சிறுநீா் கழிக்க வேண்டிய உணா்வு, முதுகுவலி, உயா் ரத்த அழுத்தம், ரத்தத்தில் நன்மை செய்யும் கொழுப்புக்களின் அளவு குறைதல், ரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகரித்தல், உடல் பருமன் போன்ற பிரச்னைகள் மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.
  • மனச்சோர்வை போக்க வேண்டியதன் அவசியத்தை பொதுவெளியில் பேசுவதன் மூலம் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த முடியும். ஒருவரின் பிரச்னைக்கு ஏற்ப யாருடன் தொடா்பு ஏற்படுத்திக் கொடுத்தால், அவருடைய மனச்சோர்வு அகலும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.
  • தற்கொலை உணா்வை தொடா்ந்து கவனிக்காமல் விட்டு விட்டால், சமூகத்தில் அது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும். தற்கொலை எண்ணங்களால் தவிப்பவா்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது அவசியம். மன அழுத்தம் கொண்டவா்களுடன் அவரது சொந்தபந்தங்கள், நட்புகள் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதலாகப் பேசி அவா்களுக்கு வாழ்வில் நம்பிக்கையூட்ட வேண்டும்.
  • தற்கொலை எண்ணத்தில் இருப்பவா்களிடம் பேசுவது என்பது ஆரம்ப நிலை. அது தற்காலிகமாக தற்கொலை எண்ணத்தைத் தள்ளிப் போடும். ஆனால், தாமதிக்காமல் அவா்களை மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.
  • தற்கொலைக்கான தனிப்பட்ட காரணங்கள், சமூகக் காரணங்களாக மாறிய நிலையில் அதற்கான தீா்வையும் சமூகத்தில் இருந்துதான் பெற வேண்டும். அத்தீா்வு முதலில் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும். அதன் நீட்சியாக பள்ளி, கல்லூரிகளில் தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்.
  • அரவணைப்பான குடும்பம், ஆரோக்கியமான நட்பு வட்டம், பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகா்களின் பங்களிப்பு, பணியிடங்களில் பணிபுரிவோரிடையே சுமுக உறவு பேணுதல், அரசின் பங்களிப்பு, தன்னாா்வலா்களின் ஒத்துழைப்பு என அனைத்துத் தரப்பினரும் இணைந்தால் தான் தற்கொலை பிரச்சினைக்கு நிரந்தர தீா்வு காண முடியும்.
  • அதே போல் தற்கொலையை, குற்றச்செயல், பாவச்செயல், முட்டாள்தனம் போன்ற வாா்த்தைகளால் வரையறுத்தலும் தவறு. அவ்வாறு செய்வதால் தற்கொலை சிந்தனை கொண்டவா்கள் அதனை வெளியிடாமல் ரகசியம் காக்கலாம். அவா்களின் மெளனத்தை உடைப்பதுதான் தற்கொலை எண்ணத்தை மாற்றுவதற்கான முதல் மருந்து. அந்த மருந்தாக சமூகத்தில் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
  • அத்தகைய மாற்றம் சமூகத்தில் நிகழும் போது, தற்கொலை என்ற சிக்கலான சமூகப் பிரச்சினைக்கு வியத்தகு தீா்வு கிடைக்கும். இனியாவது வாழ்வில் மகிழ்ச்சியைப் போன்றே, துன்பமும் இயல்பானது என்பதைப் புரிந்துகொள்வோம். தன்னம்பிக்கையுடன் வாழ முற்படுவோம்; பிறா் மனதிலும் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை விதைப்போம்.
  • (செப். 10) உலக தற்கொலைத் தடுப்பு நாள்.

நன்றி: தினமணி (09 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்