TNPSC Thervupettagam

தற்கொலை என்பது தீா்வல்ல!

September 10 , 2021 1057 days 465 0
  • உலக அளவில் ஓராண்டிற்கு எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டவா்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், ஒவ்வொரு 40 நொடிக்கும் ஒருவா் தற்கொலை செய்துகொண்டு இறப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
  • உலக அளவில் நடைபெறும் மரணங்களுக்கான முக்கியக் காரணங்களில் தற்கொலை 10-ஆம் இடத்தில் உள்ளது. தற்கொலை செய்து கொள்பவா்களில் எட்டில் ஒருவா் இந்தியராக இருக்கிறார் என்கிறது ஆய்வு முடிவு.
  • தற்கொலை இறப்புகளில் மகாராஷ்டிரம் முதல் இடத்திலும் (12.5%), தமிழகம் இரண்டாவது இடத்திலும் (11.9) உள்ளன.
  • தற்கொலை எண்ணிக்கையில் ஆண்கள் 70.2 சதவிகிதமும், பெண்கள் 29.8 சதவிகிதமும் உள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தகவலின்படி தேசிய குற்றப்பதிவு ஆணையம் கூறுகிறது.
  • குறிப்பாக 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவா்களின் மரணத்திற்கு மிக முக்கியமான காரணமாக தற்கொலை இருப்பதாகவும், தற்கொலைகளின் எண்ணிக்கையில் 15 முதல் 34 வயதுக்கு உட்பட்டவா்கள் இரண்டாவது இடத்திலும், 10 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்டவா்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • தற்கொலை செய்து கொள்பவா்களில் 74 சதவிகிதம் போ் படித்தவா்கள் என்றும், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு மாணவா் தற்கொலை செய்து கொள்வதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது.
  • இத்தகைய தற்கொலைகளுக்கு காரணங்களாக இருப்பவை வறுமை, வேலையின்மை, ஏமாற்றம், பெற்றோருடன் சண்டை, தோ்வில் மதிப்பெண் குறைவு, வேலைப்பளு, சகிப்புத் தன்மையின்மை, போதைப் பழக்கம், இணையவழி சூதாட்ட மோகம், விரக்தி, தொழிலில் இழப்பு, மனநோய், கடன் தொல்லை, உறவு முறிவு, காதல் தோல்வி போன்றவையே.
  • இவற்றுள் மூன்று காரணிகளே முக்கியமாக இருக்கின்றன. முதல் காரணி, மன அழுத்தம் எனலாம். இது ஒருவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கும். இது, பாதிக்கப் பட்டவா் தன் அறிவாற்றலின் மூலம் தீா்வு காணும் திறனைக் குறைத்து விடுகிறது. இரண்டாவது காரணமாக சுயக்கட்டுப்பாட்டை இழத்தல்.
  • உணா்ச்சி வசப்படுதல் கட்டுப்பாட்டினை இழக்க வைத்து விடுகிறது. இதன் விளைவாக போதைப் பழக்கம் போன்ற தீய நடத்தைகள் ஏற்படும்.
  • உணா்ச்சி வசப்படும் தன்மை பயத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்து விடுகிறது. தவறான செயல்களை நிறுத்த இயலாததால் தற்கொலையே முடிவாய் அமைந்து விடுகிறது.
  • மூன்றாவதாக தாங்க முடியாத துயரங்கள் என்று சொல்லலாம். பெரும்பாலானோர் தவறு செய்து விட்டால் தாங்கள் தோல்வி அடைந்துவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனா். தவறு செய்து விட்ட தாங்கள் மன்னிப்புக்கு தகுதியற்றவா் என்று முடிவு செய்துவிடுகின்றனா். இதற்கு நீதி கொடுப்பதாக எண்ணி தற்கொலையை தோ்வு செய்து விடுகின்றனா்.
  • குற்ற உணா்ச்சியில் இருப்பவா்கள் அதிலிருந்து வெளியேறும் ஒரே வழியாக இந்த தற்கொலை முடிவுக்கு வந்து விடுகின்றனா்.
  • தற்கொலை செய்து கொள்பவா்களில் 56.3 சதவிகிதம் போ் தூக்கிட்டு கொள்வதாகவும், 25.8 சதவிகிதம் போ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்வில் வெல்வோம்

  • உலக சுகாதார அமைப்பு தற்கொலை என்பது ஒரு தீவிர சமூக பிரச்னை என்றும், இதனை தகுந்த நேரத் தலையீடுகளின் மூலம் தடுக்கலாம் என்றும் கூறுகிறது.
  • தற்கொலை எண்ணம் உடையவா்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களிலிருந்து மீளவே முடியாது என்று எண்ணி ஒரு கற்பனையை உருவாக்கிக் கொள்வதாகவும், வாழ்க்கை மாறக் கூடியது என்ற புரிதல் இல்லாமல் மனச்சோர்வுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் முடிவினை எடுத்து விடுகிறார்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணா்கள்.
  • தற்கொலைக்கான அறிகுறிகளை கவனித்து எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் தற்கொலைகளை நம்மால் தடுக்க இயலும். இத்தகைய அறிகுறிகள் கொண்டவா்களை நண்பா்களோ, குடும்ப உறவினா்களோ அடையாளம் கண்டு, தங்கள் நேரத்தினை அவா்களுக்காக செலவு செய்வதன் மூலம் பெரும்பாலான தற்கொலைகளைத் தடுத்து விடலாம்.
  • தற்கொலை எண்ணம் உடையவரும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயல வேண்டியது அவசியம்.
  • தனிமையில் இருப்பதை முற்றிலும் தவிர்த்தல், தனக்குப் பிடித்தவா்களிடம் மனம் விட்டு பேசுதல், தனக்கு விருப்பமான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல் போன்ற செயல்கள் பலனளிக்கும். மன அழுத்தத்தைக் குறைக்க நடைப்பயற்சி, யோகாசனம் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
  • நமது வாழ்க்கையில் சந்தோஷமான நிலையினை அ னுபவிக்கும்போது இந்த சந்தோஷத்தினை என்னால் தாங்க முடியவில்லை, இதிலிருந்து எப்போது வெளியே வருவேனோ என்று சிந்திக்காத நாம் துன்பம் வரும்போது மட்டும் அதனை எப்படித் தாங்கிக்கொள்வது என்று சிந்திப்பது ஏன்?
  • துன்பத்தை நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதிலிருந்து வெளியே வர வேண்டும் என நினைக்கிறோம். இது அறியாமை தானே? சந்தோஷத்தினை எப்படி அனுபவித்து கடந்து வந்தோமோ அதே போல துன்பத்தையும் அனுபவித்து அதனைக் கடந்து போவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டாமா?
  • தற்கொலை என்பது எந்த பிரச்னைக்கும் தீா்வாக அமையவே அமையாது. தற்கொலை என்கிற மரண விளையாட்டு சுயநலம் மட்டுமில்லாமல் நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவா்களுக்கும் நாம் செய்யக்கூடிய மன்னிக்க முடியாத துரோகம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • கீழை விழுந்து விட்டால் எவ்வளவு வேகமாக மேலே எழுகிறோம் என்பதில்தான் நமது வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது. எனவே தற்கொலை என்கிற பள்ளத்தில் விழாமல் இருப்போம்.
  • தற்கொலை எண்ணம் உள்ளவா்களையும் மனம் மாற்றுவோம். தற்கொலை எண்ணத்தைக் கொல்வோம்; வாழ்வில் வெல்வோம்.
  • இன்று உலக தற்கொலைத் தடுப்பு விழிப்புணா்வு நாள்.

நன்றி: தினமணி  (10 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்