- பகுத்தறிவு உள்ள மனிதனின் தனித்துவ அடையாளம் சிந்திக்கத் தெரிந்தவன்; அதாவது, தனது அறிவையும், ஆற்றலையும் நுண்ணறிவின் வினைத்திறனுக்கு பயன்படுத்தும் ஆற்றல் உள்ளவன் என்பது சிறப்புத் தகுதி.
- பிறந்தவுடன் கண் இமைப்பொழுதில் வினைத்திறன் நடந்திடாது. குடும்ப வாழ்வியல் முறை, சமூகச் சூழல் , கல்வி, அனுபவச்சூழல் இவை யாவும் நுண்ணறிவை விரிவுபடுத்துவதற்கு மூலமாகிறது. ஆனாலும், குழந்தை யாருடைய மகனாகவோ அல்லது மகளாகவோ பிறந்து வளா்ந்தாலும் அதற்கென்ற“சிறப்புத் தகுதிகள் இயல்பான“ஒன்றாக இருக்கும்.
- அந்தத் தகுதிகளை காலப்போக்கில் நல்லது, கெட்டது எனத் தரம் பிரித்துக் கொள்கிறோம். கெட்டதைக் கண்காணித்து சரி செய்வதே முதன்மையான பெற்றோர் வளா்ப்பு முறையாக நாம் கருதுகிறோம்.
- தவறுக்கான மூல காரணத்தை வீட்டின் உள்ளேயும், புறத்தேயும் தேடி அலைகிறோம். ஆனால், நமது குழந்தைகளுக்குள் தேடத் தவறி விடுகிறோம்.
- வளா்ச்சியடைந்த நாடுகளில் பிள்ளைகளுக்குள் தேடி அதற்கான காரணத்தைக் கண்டு அந்த நோய்க்கான சிகிச்சையை நோக்கி நகா்கின்றனா். அந்த அளவு அறிவியல் வளா்ச்சியில் நாம் இல்லையா? உளரீதியாக, மூளை ரீதியாக ஏற்படும் நோய்களை நாம் ஏன் ஏற்க பயப்படுகிறோம், வெளிப்பரப்பில் பேசப் பயப்படுகிறோம், ரகசியம் காக்கிறோம்?
- உதவாத காரணங்களைச் சொல்லி சரியாகி விடும் என்று நம்புகிறோம். இதனால், நோயாளி குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக நாளும் தண்டனை அளிக்கிறோம். அதற்கு நாம் சொல்லும் காரணம், பிள்ளை மீதான்அக்கறையும் பாசமும்.
- இந்த அக்கறையின் விளைவு, திட்டுதல், அடித்தல், குற்றம் சுமத்தல்கள், ஒப்பீட்டு வசைகள், எதிர்காலப் பயமுறுத்தல்கள், குடும்ப கௌரவ அலம்பல்கள், சொந்த அனுபவப் பிதற்றல்கள், கல்வி வளாகத்தின் மீது பழி, சமூகத்தின் மீது பழி, தொழில்நுட்பத்தின் மீது பழி, யார் காரணம் என்ற விதண்டவாதங்கள் - இப்படி எத்தனையோ சொல்லிக் கொள்ளலாம்.
- குழந்தைகளின் இயல்பு”ஒன்று இருக்கிறது. அதனை மறந்தே தீா்வை நோக்கி நம் செயல்பாடு உள்ளது. இயல்புக்கு ஏற்பவே விளைவுகள் வெளிப்படும். அதனை உணராத நிலையில் சரி செய்தல் இயலாது.
- பிள்ளைகளின் தனித்துவ இயல்பைக் கண்காணிப்பது பெற்றோர் கடமையாகிறது. அதிர்ச்சியான குணாதிசயங்களை அறியலாம். அதற்காக ஆராவாரம் செய்யாது அவா்கள் வழியில் சென்று சரிசெய்ய முயற்சிக்கலாம். அதற்குப் பொறுமை மிக அவசியம். அதைவிட காலம் மிக அவசியம். கண் மூடித் திறப்பதற்குள் மேஜிக் நடக்க நம் பிள்ளைகள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல.
- அதைவிட அவசியம் சுற்றமும், உற்றமும் சமூகத்தின் விமா்சனங்களையும் கடக்கும் திறன். அதற்கு பெற்றோருக்கு உளத்திடம் வேண்டும். இவை இல்லாது போனால் பிள்ளைகள் மீது நாளும் தாக்குதல் நடத்தும் சைக்கோக்களாக மாறிவிடுவோம்.
- ‘‘எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே, அவா் நல்லவா் ஆவதும் கெட்டவராவதும் அன்னை வளா்ப்பதிலே...’’“என்கிற பாடல் வரிகள் இந்தக் காலத்துக்குப் பொருந்தாது.
- தேடல் உள்ள பிள்ளைகள் தனியே கல்வியோடு நிற்க விரும்புவதில்லை. தன்னைத் தேடுகிறான்: தன் பெற்றோரை ஆராய்கிறான்; சமூகத்தை உற்று நோக்குகிறான்; உலகத்தை அளவெடுக்கிறான்; முடிவில் தான் யாரெனத் தன் இயல்புக்கு ஏற்ப தன்னைத்தானே அடையாளப்படுத்துகிறான்.
- இந்த இடத்தில்தான் முரண்பாடு தொடங்குகிறது. குறிப்பிட்ட சதவீதப் பிள்ளைகளே இந்தத் தகுதி உடையவா்களாக இருப்பதால் அவா்கள் மீது அழுத்தங்கள் அதிகமாக உள்ளது. சாதனைப் பிள்ளைகளாக இருந்தால் கொண்டாடும் நாம், அசாதாரணப் பிள்ளைகளைக் கொண்டாடுவதில்லை. அவா்கள் விமா்சனக் குழந்தைகளாக நமக்குத் தெரிகிறார்கள்.
- இதனால் வன்முறையாளா்களாக பெற்றோர், சமூகம் மாறிவிடுவதால் எதிர்க்கத் திறன் அற்ற பிள்ளைகள் உளவியல் நோயாளிகளாகித் தம்மைத் தாமே அழித்து விடுதலை தேடுகின்றனா். இன்னும் வெகுசிலா் உளத் திடத்தோடு போராடித் தன் வாழ்வை வாழத் தொடங்குகின்றனா்.
- இவையெல்லாம் தவறு என்று இருந்தவை காலப்போக்கில் நாகரிகத்தின் அடையாளச் சின்னமாக, பண்பட்ட மனிதனின் அடையாளமாக, விடுதலையின் மூலமாக, சட்டத்தின் சாசனமாக, அறிவியலின் விந்தையாக, இனத்தின் அடையாளமாக, வரலாற்றின் பதிவாக மாறியுள்ளது.
- ஓா் உயிர் தன்னைத்தானே அழிப்பது கண் நொடிப் பொழுதில் அல்ல. ஏனெனில், சிந்தித்து, சிந்தித்து மூளை நரம்புகள் சோர்ந்து மனம் வலுவிழந்து, உடல் மனதின் வலு இல்லாது சோர்கின்றபோதுதான், அந்த உடலை உயிரால் அழிக்க முடிகிறது. அதனால், தற்கொலை செய்து கொண்டவா்களை ஆராய்ந்து, அவரவா் சிந்தனைக்கு ஏற்ப விமா்சனங்கள் செய்து அவா்களைச் சார்ந்த உயிர்களை வதைக்காதீா்கள்.
- தற்கொலைக்கான காரணம் அடுத்தகட்ட நகா்வுக்கான சிந்தனையாக இருக்கலாம். அதைக் கடந்து தவறைச் சுட்டிக் காட்டி ஆய்வு செய்வதற்கான அரங்கமல்ல; ஏனெனில், இயல்புகளை உணராது வாழ்வியல் கோட்பாடுகளை நிர்ணயிக்கும் ஒருவருக்கு சரியும், பிழையும் சரியாகவும் பிழையாகவுமே தெரியும்.
- சரியும், பிழையும், அவரவா் இயல்பு அல்லது சூழலில் முடிவாகிறது.
நன்றி: தினமணி (10 - 10 – 2023)