TNPSC Thervupettagam

தற்கொலைகளை சொற்களால் தடுத்துவிட முடியுமா

September 9 , 2022 700 days 392 0
  • இந்தியாவில் தற்கொலைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதாகச் சமீபத்தில் வெளியான தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கை கூறுகிறது.
  • குறிப்பாக, ஊரடங்குக் காலத்துக்குப் பிறகு தற்கொலைகளின் விகிதம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. 2021இல் மட்டும் 1,64,000 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். குறிப்பாக, தினசரி வேலைக்குச் செல்பவர்களும், திருமணமான பெண்களும், இளைஞர்களும் மிக அதிகமாகத் தற்கொலையால் இறக்கிறார்கள்.
  • இந்தியாவிலேயே மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாகத் தமிழ்நாட்டில் அதிகத் தற்கொலைகள் நிகழ்கின்றன. இந்தியப் பெருநகரங்களைப் பொறுத்தவரை டெல்லிக்கு அடுத்து சென்னையில்தான் அதிகத் தற்கொலைகள் நிகழ்கின்றன. 15-29 வயதினரின் இறப்புக்குத் தற்கொலைகளே பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன.
  • வளர்ந்துவரும் நாடுகளில் அதிகரித்துவரும் இந்தத் தற்கொலைகளைக் கருத்தில்கொண்டு, உலக சுகாதார நிறுவனம் தற்கொலைகளைத் தடுப்பதற்காக ஒருங்கிணைந்த வழிமுறைகளையும் திட்டங்களையும் இந்த நாடுகள் உருவாக்கிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
  • ஆனால், இன்று வரை அப்படி எந்தத் திட்டங்களும் நம்மிடம் இல்லை. தற்கொலைகளைத் தடுப்பதில் தேசிய அளவில் பெரிய முன்னெடுப்புகள் இல்லாதது, தற்கொலை தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் எந்த வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் இருப்பது, அதிகரிக்கும் தற்கொலைகள் தொடர்பாக அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் எதுவும் பெரியளவில் இல்லாமல் இருப்பது, அதைத் தடுப்பதற்கு உண்டான ஒருங்கிணைந்த அறிவியல்பூர்வமான வழிமுறைகளை உருவாக்குவதில் மெத்தனமாக இருப்பது போன்றவை தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்துவருவதற்கான முக்கியக் காரணங்கள்.
  • தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றன; நீட் தேர்வு முடிவுகள் நெருங்கும் சூழலில் நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. அரசியல்ரீதியாக முன்னெடுப்புகள் ஒருபுறம் இருந்தாலும், இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பதிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதும் இந்தத் தருணத்தில் முக்கியமானது.
  • இந்தச் சூழலில் ஒரு பொது சமூகமாகத் தற்கொலைகள் தொடர்பான சில உண்மைகளை நாம் தெரிந்துகொள்வது அவசியமானது. ஏனென்றால், தற்கொலை தொடர்பாக இங்கு நிலவும் தவறான நம்பிக்கைகளும் கருத்துகளுமேகூட அதைத் தடுப்பதற்கான நமது உந்துதலை மட்டுப்படுத்திவிடுகின்றன.

எந்தச் சூழ்நிலை தள்ளுகிறது?

  • சக மனிதர்களின் மீதும், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் முற்றிலும் நம்பிக்கையிழந்த தருணத்திலேயே ஒருவர் தற்கொலை முடிவை எடுக்கிறார். பெரும்பாலான நேரம் தற்கொலை எண்ணங்கள் தோன்றிய உடனே யாரும் தற்கொலை முயற்சியில் இறங்குவதில்லை.
  • அப்படி எண்ணங்கள் எழும்போது வாழ்வதற்கான காரணங்களைப் பற்றியும், சக மனிதர்களின் மீது இருக்கக்கூடிய பொறுப்புகளை நினைத்துக்கொண்டும் தற்கொலை எண்ணத்தை நிராகரித்துவிடுகிறார். ஆனால், சக மனிதர்களும் சமூகமும் நம்பிக்கையளிக்கத் தவறும்போது, தற்கொலை எண்ணத்திற்குச் செவிசாய்க்கும் கட்டாயத்திற்கு ஒருவர் ஆளாக நேரிடுகிறது.

தற்கொலை என்பது கோழைத்தனமா?

  • நிச்சயமாக இல்லை. அது ஒரு உதவிக்கான அழைப்பு. தற்கொலை செய்துகொண்ட பெரும்பாலானவர்கள் அதற்கு முன்பு ஏதேனும் ஒரு முறையாவது தற்கொலைக்கான முயற்சியை மேற்கொண்டிருப்பார்கள் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
  • ஒரு பெரும் நெருக்கடியில் வெளியேறும் வழிதெரியாமல் ஒருவர் தவிக்கும்போது அதற்கான உதவியை நாடியோ அல்லது நிபந்தனையற்ற ஒரு அரவணைப்பை நாடியோ பல முறை சக மனிதர்களிடமும், சமூகத்திடமும் அவர் வெவ்வேறு வகைகளில் உணர்த்துகிறார் அந்தக் கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்படும்போது, அதிலிருந்து விடுபட எந்த வழியும் தெரியாத ஒரு இருண்ட தருணத்திலேயே, தற்கொலை செய்துகொள்வது என்ற விபரீத முடிவை ஒருவர் எடுக்கிறார்.

ஆரம்பத்திலேயே கண்டறிய முடியுமா?

  • நிச்சயமாக முடியும். தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவர் அந்த எண்ணத்தைத் தன்னுடைய நடவடிக்கைகள் மூலமாகப் பல வகைகளில் சுற்றியுள்ளவர்களிடம் உணர்த்திக்கொண்டே வருவார். நாம்தான் அதைக் கவனிக்கத் தவறிவிடுவோம் அல்லது அலட்சியப்படுத்திவிடுவோம்.
  • முன்பே தெரிந்தும் பெரும்பாலான நேரம் நாம் அலட்சியப்படுத்திவிடுகிறோம். அப்படித் தெரிந்தவுடன் அவரை அழைத்துப் பேசியிருந்தாலோ அல்லது அவர் சொல்வதைக் கேட்டிருந்தாலோ நிச்சயம் அந்தத் தற்கொலையை நம்மால் தடுத்திருக்க முடியும்.

மனநோயின் வெளிப்பாடா?

  • தற்கொலை செய்து கொள்பவர்களில் மூன்றில் ஒருவருக்கு சிகிச்சையளிக்க வேண்டிய மனநலப் பிரச்சினைகள் ஏதேனும் இருக்கின்றன என்கின்றன ஆராய்ச்சிகள். அதனால்தான் தற்கொலைக்கு முயல்பவர்களை உடனடியாக மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம். மனநலப் பிரச்சினைகளை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்கும்போது, மூன்றில் ஒரு தற்கொலையைத் தடுக்க முடியும்.
  • ஆனால், தற்கொலை செய்துகொள்ளும் எல்லோருக்கும் மனநலப் பிரச்சினைகள் இருப்பதில்லை. சமூகவியல், உளவியல், உயிரியல் சார்ந்த பல காரணங்களும் இருக்கின்றன. காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்வதன் வழியாகவே தற்கொலைகளை ஒட்டுமொத்தமாகத் தடுக்க முடியும்.

பேச்சு தற்கொலையைத் தூண்டுமா?

  • நாம் பேசுவதாலேயே அவருக்குத் தற்கொலை எண்ணம் வந்து தற்கொலை செய்துகொள்வார் என்கிற அச்சம் காரணமாக, அவருக்குத் தற்கொலை எண்ணங்கள் இருக்கலாம் என்று நாம் நினைக்கும் ஒருவரிடம் அது பற்றிப் பேசத் தயங்குவோம்.
  • ஆனால் அது உண்மையல்ல, நாம் அவரிடம் அதைப் பற்றிப் பேசலாம், அவரிடம் திறந்த மனத்துடன் உரையாடலாம். தற்கொலை எண்ணங்களைக் கொண்ட ஒரு நபர் இப்படிப்பட்ட உரையாடல் வழியாகவே தனது மனதைத் திறக்கிறார். அது அவருக்குக் கொடுக்கும் ஆசுவாசத்தின் விளைவாக தற்கொலை எண்ணத்திலிருந்து அவர் முழுமையாக விடுபடுவதற்கே வாய்ப்புகள் இருக்கின்றன.

எப்படி எதிர்கொள்வது?

  • சில சந்தர்ப்பங்களில் ‘வாழ்வதைவிட சாவதே மேல்’ என்ற எண்ணம் எல்லோருக்குமே வருவதற்கு சாத்தியமிருக்கிறது. உயிரை மாய்த்துக்கொள்வதற்கு நாம் தனிப்பட்ட பிரயத்தனம் எதுவும் செய்யத் தேவையில்லை, எதுவுமே செய்யாமல் இருந்தாலே எல்லோரும் ஒருநாள் இறக்கத்தான் போகிறோம். ஒரு சில சந்தர்ப்பங்களில் ஏற்படும் தோல்விகளோ, ஏமாற்றங்களோ இந்த ஒட்டுமொத்த நோக்கத்தை எப்போதும் சிதைத்துவிடாது என்பதைக் கவனத்தில் கொள்வதன்வழியாகத் தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டுவர வேண்டும்.

மனநல ஆலோசனை தடுக்குமா?

  • தற்கொலைகளைத் தடுப்பதில் மனநல ஆலோசனை மட்டுமே முழுமையான தீர்வு கிடையாது; அதுவொரு உத்தி மட்டுமே. பெருகிவரும் தற்கொலைகளுக்கான சமூகவியல், உளவியல் காரணங்களைப் புரிந்துகொண்டு, அதைத் தடுப்பதற்கான முயற்சிகளைச் சமூகம் முன்னெடுக்க வேண்டும்.
  • பொருளாதார நெருக்கடிகள், வேலைவாய்ப்பின்மை, குறைந்த ஊதியம் போன்றவை தனிநபர்கள் மீதும் அவர்கள் வழியாகக் குடும்பத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. கடினமான கல்வித் திட்டங்கள், பாரபட்சமான தேர்வுமுறைகள், மதிப்பெண்களைப் பிரதானமாகக் கொண்ட கல்விக் கொள்கைகள் போன்றவை மாணவர்களின் மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை.
  • இந்த அதீதச் சுமைகளால் திணறும் ஒருவரின் புறச்சூழலைச் சரிசெய்யாமல் எப்படி அகச்சூழலை மட்டும் சரிசெய்துவிட முடியும்? ஒரு சமூகமாகத் தனி நபரின் மனநலத்தை உறுதிப்படுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்த பிறகு தனி நபரின் மனநலத்தை மேம்படுத்தும் ஆலோசனைகள் வழங்குவது பயனுள்ளதாக இருக்குமே தவிர, வெறும் மனநல ஆலோசனை மட்டுமே தற்கொலைகளைத் தடுப்பதில் முழு தீர்வு ஆகிவிடாது.

நன்றி: தி இந்து (09 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்