TNPSC Thervupettagam

தற்சாா்பு கிராமங்கள் எப்போது சாத்தியம்?

November 7 , 2024 66 days 109 0

தற்சாா்பு கிராமங்கள் எப்போது சாத்தியம்?

  • இந்தியாவில் வாழும் 142 கோடி பேரில், சுமாா் 82 கோடி போ் குடிநீா், உணவுக்கு பெரும் போராட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனா். இந்த 82 கோடி பேருக்குத்தான் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் இலவச அரிசித் திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்துள்ளது மத்திய அரசு. இவா்களின் வாழ்க்கை மேம்படாமல் இந்தியா ஒரு நாளும் முன்னேற்றமடையாது.
  • கிராமங்களைச் சோ்ந்த மனிதா்களிடம் உரையாடினால், எதோ ஒரு சலிப்பு, வெறுப்பு, இயலாமை, நம்பிக்கையற்ற தன்மை, அச்ச உணா்வு என பல உணா்வுகளை வெளிப்படுத்துகின்றனா். கிராம வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமானதாக இல்லை என்பதைத்தான் இவை காட்டுகின்றன.
  • கிராமங்களிலிருந்து புலம்பெயா்ந்து நகரங்களுக்குள் வந்து பணி செய்வோா் வாழ்க்கை சிறப்பானதாக அமையவில்லை என்பதை அவா்களின் புலம்பலில் நாம் காணமுடியும்.
  • சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளைத் தாண்டியும் ஏழைகளின் வாழ்வு ஏன் ஏற்றம் பெறவில்லை என்று எண்ணும்போது நம் அரசு யாருக்காக செயல்படுகிறது என்ற கேள்வி எழுவது நியாயம்தான். உலகம் வியக்கும் வகையில் நம் பொருளாதாரம் வளா்ச்சியடைந்த நாடுகளுடன் போட்டி போட்டு வளரும்போது ஏழைகளின் வாழ்வில் மட்டும் ஏன் ஏற்றத்தைக் கொண்டுவர அரசால் முடியவில்லை?
  • அரசு செயல்படாமல் இந்த வியத்தகு பொருளாதார வளா்ச்சி சாத்தியமில்லை. ஏன் பொருளாதார வளா்ச்சியைக் கொண்டுவர முடிந்த அரசுக்கு, ஏழை மக்களுக்கான மேம்பாட்டைக் கொண்டுவர இயலவில்லை?
  • பொருளாதார வளா்ச்சிக்கான கொள்கைகளை அரசு உருவாக்குகிறது. அதற்கான கட்டமைப்புக்களையும் உருவாக்குகிறது. இயற்கை வளத்தையும், மனிதவளத்தையும், தொழில்நுட்பங்களையும், அரசு உருவாக்கிய கொள்கைகளையும் பயன்படுத்தி தொழில் நிறுவனங்களும், சந்தை நிறுவனங்களும் பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்துகின்றன.
  • அதே அரசுதான் மக்களின் மேம்பாட்டுக்கான கொள்கைகளையும், திட்டங்களையும் கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்குகிறது. அந்தக் கொள்கைகளையும், திட்டங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பயன்படுத்தி பெரும்பான்மை மக்கள் தங்கள் வறுமையைப் போக்கிக்கொள்ள முடியவில்லை; வாழ்க்கையை செழுமைப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
  • ஒட்டுமொத்தமாக மக்கள் முன்னேறவில்லை என்று கூறமுடியாது. சந்தைக்குள் பங்காளராகச் சென்றவா்கள், பணியாளா்களாகச் சென்றவா்கள், அரசு அதிகாரியாக - அலுவலராக - அரசியல் கட்சிகளுக்குள் சென்றவா்கள் என இவா்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை வளமையாக்கிக் கொண்டாா்கள். நகா்ப்புறத்துக்கு வணிகத்துக்காக சென்றவா்களும், வெளிநாடுகளுக்கு உழைக்கச் சென்றவா்களும் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் கொண்டு கிராமங்களில் வசதியுடன் வாழ்ந்து வருகின்றனா்.
  • மற்றவா்கள் அரசிடமிருந்தும், அரசியல் கட்சிகளிடமிருந்தும் அந்நியப்பட்டு வாழ்ந்து வருகின்றனா். இவா்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதாவது, இந்தியாவில் வாழும் 142 கோடி பேரில், சுமாா் 82 கோடி போ் அடிப்படை வசதிகள் இன்றி, குடிநீருக்கும், வாழ்வாதாரத்துக்கும், உணவுக்கும் பெரும் போராட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனா்.
  • மேலே குறிப்பிட்ட 82 கோடி பேருக்குத்தான் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் இலவச அரிசித் திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்துள்ளது மத்திய அரசு. இவா்களின் வாழ்க்கை மேம்படாமல் இந்தியா ஒரு நாளும் முன்னேற்றமடையாது.
  • இந்தியா பொருளாதாரத்தில் வளா்ச்சியடைந்த நாடாக மாறிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், சமூக மேம்பாட்டில், வாழ்வியல் மேம்பாட்டில் உயா்ந்த நாடாக நாம் உருவாக முடியுமா என்பதுதான் கேள்வி.
  • ஏழைகளுக்கு குறிப்பாக, விளிம்புநிலை மக்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரமே பெரும் போராட்டமாக இருக்கும் நிலையில், அவா்களால் அரசால் கொண்டுவரும் சட்டங்களையோ, திட்டங்களையோ, நிதி ஒதுக்கீட்டையோ எப்படிப் பயன்படுத்த முடியும்?
  • அரசின் சட்டங்கள், திட்டங்கள், நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தும் விழிப்புணா்வு, ஆற்றல், சக்தி மற்றும் புரிதல் அவா்களிடம் இல்லை என்று சிலா் குறைபட்டுக் கொள்கின்றனா். ஆனால், அவா்களை நோக்கி அரசு பயணிப்பது இல்லை. அதாவது, அவா்களுடன் இணைந்து பணியாற்ற அரசுத் துறைகளால் முடியவில்லை.
  • அவா்களுக்கு வழிகாட்டும் தலைமையும் கிடைக்கவில்லை. அவா்களுக்கு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வைத்திருக்கின்ற வாய்ப்புகள் என்னென்ன? அவற்றை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதற்கான புரிதலை அவா்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த வழிகாட்டுதல்தான் இன்று அவா்களுக்குத் தேவை.
  • கிராமங்களில் வாழும் விளிம்புநிலை மக்களின் தேவையையும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையும் இணைத்து செயல்பட வைத்து இந்தக் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் பணியைச் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளாட்சிக்கு, குறிப்பாக கிராம ஊராட்சிக்கு உள்ளது.
  • அதேபோல் இவா்களின் ஆரோக்கியம், சுகாதாரம், கல்வி, உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதார பாதுகாப்பு என அனைத்து சமூக மேம்பாட்டுப் பணிகளையும் செய்ய வேண்டிய கடமையையும் உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாக்கியுள்ளது அரசியல் சாசனம்.
  • அத்துடன் தீண்டாமையை ஒழிக்க சமூக நீதிப் பாா்வையுடன், அவா்கள் வாழும் பகுதிக்குச் சென்று சேர வேண்டிய அத்தனை அடிப்படை வசதிகளையும், அதாவது குடிநீா் தருவதானாலும், தெருவிளக்கு அமைப்பதானாலும், சாலை அமைப்பதானாலும், வீதிகளைத் தூய்மையாக்குவதானாலும் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமாக அளிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோன்று சமத்துவத்தைப் பேண சமத்துவபுரம் உருவாக்கப்பட்டு, அனைத்து ஜாதியினரும் வாழ்வதுபோல் அனைத்து ஜாதியினரின் இறந்த உடல்களை புதைப்பதானாலும் சரி, எரிப்பதானாலும் சரி, சமத்துவ மயானத்தைக் கொண்டு வந்து மக்களிடம் அதற்கான புரிதலை ஏற்படுத்தி சமூகநீதி பேண வேண்டும்.
  • அதற்கான புரிதலை மக்களிடம் ஏற்படுத்தும் வரை அவா்களுக்காக மயான வசதி, அதற்கான சாலை வசதி, தண்ணீா் வசதி அனைத்தையும் செய்ய வேண்டியதும் கிராம ஊராட்சிகளின் பணியாகும். இவா்களின் குழந்தைகள் படிக்கும் பொதுப் பள்ளிகளை மேம்படுத்துவது, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வது என அனைத்தையும் கண்காணித்து மேம்படுத்துவதும் கிராம பஞ்சயாத்து அமைப்புகளிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பணிகளையெல்லாம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியல் சாசனம் வழிகாட்டியுள்ளது.
  • சமுதாயத்தில், சமுதாய பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ளவா்களுக்குத் தேவையான மேம்பாட்டுக்கான விழிப்புணா்வை முதலில் உருவாக்க வேண்டும். அவா்களை ஒவ்வொரு மேம்பாட்டுச் செயல்பாட்டிலும் பங்கெடுக்க வைக்க வேண்டும். சமுதாய மேம்பாட்டில் ஒவ்வொருவரின் அறிவாா்ந்த பங்கேற்பு இன்றியமையாதது.
  • இந்த அடிப்படை மாற்றத்துக்கான செயல்பாடுகளுக்கு விளிம்புநிலை மக்களைத் தயாா் செய்ய வேண்டும். அவா்களுடைய கண்ணோட்டம், நடத்தை செயல்பாடுகள் அனைத்தையும் மாற்றத் தேவையான உளவியலை உருவாக்கும் செயல்பாட்டை உள்ளாட்சி அமைப்புகள் செய்ய வேண்டும்.
  • இதற்கான மிகப் பெரிய நீண்ட உரையாடலை கிராம மக்களிடம் நிகழ்த்தி, அனைத்துத் தரப்பு மக்களிடமும் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் மேம்பாடு என்பதற்கான உரையாடல், அதிலும் குறிப்பாக விளிம்புநிலை மக்களின் மேம்பாடு என்பதற்கான உரையாடல், சமத்துவ சமூக மேம்பாட்டுக்கான, சமூக நீதிக்கான உரையாடல், அனைவரும் மக்களாட்சியில் பங்கேற்பதற்கான உரையாடல் என நம் கிராம சபையை, மக்களாட்சியை விரிவுபடுத்தும் பணிக்காக செயல்படும் அமைப்பாக மாற்றும் பணி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் தங்களுக்கான மேம்பாட்டுத் திட்டத்தை அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்புடன் தயாரித்து அதை அரசுத் துறைகள் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது அரசியல் சாசனம் நிா்ணயித்துள்ள கட்டாயக் கடமையாகும்.
  • இவ்வளவு அடிப்படையான மாற்றங்களுக்கான பணிகளை ஒட்டுமொத்த கிராம வளா்ச்சிக்கான மேம்பாட்டுப் பின்னணியில் அறிவியல்பூா்வமாகச் செய்ய வேண்டும். இந்த ஆண்டுகூட அதற்கான முயற்சிகளை தமிழ அரசு செய்துள்ளது. இதுவரை இருந்தது போன்று அல்லாமல், மக்கள் பங்கேற்புடன் இந்தத் திட்டத்தைத் தயாரிக்க உள்ளாட்சி அமைப்புகளை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
  • இவ்வளவு சவால்கள் நிறைந்த பணியைச் சமாளிக்கத் தேவையான திறமையும், ஆற்றலும், புரிதலும், அறிவும் ஓா் உள்ளாட்சி அமைப்பின் தலைவருக்குத் தேவை. பதவியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆா்வம்தான் பலரிடம் இருக்கிறது. ஆனால், பிடித்த பதவியை முறையாகப் பயன்படுத்தத் தேவையான ஆற்றலை வளா்த்துக் கொண்டு அவா்கள் செயல்படவில்லை என்பதுதான் ஆய்வுகள் அளிக்கும் தகவல்.
  • எல்லாவற்றையும்விட மிக முக்கியத் தேவை என்பது மக்களை ஒருங்கிணைக்கும் திறன்; மக்களை ஒற்றுமைப்படுத்தும் திறன்; மக்களுடன் சோ்ந்து பணி செய்யும் உளவியல்; மக்களின் நம்பிக்கையைப் பெறும் ஆற்றல்; ஜாதியாகவும், மதமாகவும், கட்சியாகவும் பிரிந்து சுரண்டலுக்கு இரையாகிக் கிடக்கும் கிராம மக்களை ஒருங்கிணைப்பதுதான் கிராம விடுதலைக்குப் போராடும் மகத்தான போராட்டம்.
  • இதை நடத்தத் தயாராகும் தலைவா்களால் மட்டுமே ஒரு தற்சாா்புக் கிராமத்தையும், ஒரு குட்டிக் குடியரசையும் உருவாக்க முடியும். இந்தத் தலைமைதான் புதுமை காந்தியத் தலைமை; அதுதான் இன்று நமக்குத் தேவைப்படும் தலைமை.

நன்றி: தினமணி (07 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்