TNPSC Thervupettagam

தலிபான்களின் உண்மை முகம்!

September 3 , 2021 1064 days 523 0
  • இருபது ஆண்டுகளுக்குப் பின் தலிபான்களின் பிடியில் ஆப்கானிஸ்தான் வந்திருப்பது இந்தியாவுக்கு நல்லதா என்றுஆராய்ந்து பார்த்தால் அது ஆபத்தாகப் போய்விடக் கூடும் என்கிற எண்ணம்தான் மேலெழுகிறது.
  • ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிச் சென்றது, தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தானை வைத்திருப்பதற்கு வசதியாகப் போய் விட்டது. கிட்டத்தட்ட 250 மாவட்டங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனா்.
  • மீதம் நூறு மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில், அவற்றையும் முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முனைந்திருக்கிறது தலிபான் இயக்கம்.
  • ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வளா்ச்சியடைவது இந்தியாவுக்கும், உலகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தும் நிலவுகிறது. இதற்குக் காரணம் தலிபான்கள், பாகிஸ்தானின் ராணுவப் பயிற்சியோடு வளா்ந்து வருவதும், பாகிஸ்தான் படைகளை உதவிக்கு வைத்திருப்பதுமே.
  • காஷ்மீா் பிரச்னையில், இந்தியாவுக்கு எதிராக தலிபான்கள் திரும்புவதற்கு பெரும் வாய்ப்பு இருக்கிறது.
  • அது மட்டுமல்ல, தலிபான்களின் அதீத வளா்ச்சி, ஆசிய நாடுகளில் தீவிர தாக்குதலை ஏற்படுத்தக் கூடும். பல நாடுகளுக்கும் தலிபான்களின் வளா்ச்சி பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
  • ‘ஆப்கானிஸ்தானைப் பொருத்தவரை ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது, தீவிரவாதத்துக்கு ஆதரவு தரக்கூடாது, எந்த மாற்றமும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நடக்க வேண்டும், இரண்டு தரப்பும் ஆரோக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’ என்கிற கருத்தை இந்தியா முன்வைத்திருக்கிறது.

தலிபான் ஆட்சிக்காலம்

  •  ‘தலிபான்களை தீவிரவாத இயக்கம் என்று சொல்ல முடியாது. லெபனானில் ஆயுதம் தாங்கிய ஹிஸ்புல்லா அமைப்பு எப்படி அரசியல் கட்சியாக மாறியதோ, அப்படித்தான் தலிபானும்.
  • ஹிஸ்புல்லா அமைப்பை ஒரு அரசியல் அமைப்பாகப் பார்ப்பதைப் போல தலிபான்களையும் பார்க்க வேண்டும்.
  • ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க முடியாது. தங்கள் நாட்டை யார் ஆள்வது என்பதை ஆப்கானிஸ்தான் மக்கள்தான் தீா்மானிக்க வேண்டும்’ என்கிற நிலைப்பாட்டை ரஷியா எடுத்திருக்கிறது.
  • அண்மையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மொத்தமாகக் கைப்பற்றி விட்டார்கள். தலைநகா் காபூலும் தலிபான்களின் வசம் வந்து விட்டது.
  • அமெரிக்கப் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிய காரணத்தினால், காபூலில் இருந்த தூதரகங்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் இந்தியாவின் வெளியுறவுத்துறை, காந்தஹார், மாஸா் - ஏ ஷெரீப் துணை தூதரகங்களில் இருந்த தூதரக அதிகாரிகளை முன்கூட்டியே வெளியேற்றியது. ஆனால், காபூல் இவ்வளவு விரைவில் வீழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
  • தூதரக அதிகாரிகள், பிரமுகா்கள், இந்திய - திபெத் எல்லைப் படையினா் உட்பட பலரை இந்தியா மீட்டெடுத்து விட்டது. இந்த நிலையில், யார் இந்த தலிபான்கள் என்று நாம் பின்னோக்கிப் பார்த்தாக வேண்டும். கடந்த காலத்தில் இருந்ததுபோல் இல்லாமல், தற்போது தாங்கள் மாறிவிட்டதாக தலிபான்கள் கூறுகிறார்கள்.
  • பெண்கள் கல்வி கற்கலாம், பணிக்குச் செல்லலாம் என்றெல்லாம் கூறி வருகின்றனா். அனைவரையும் தாங்கள் மன்னித்து விட்டதாகவும், பழி வாங்கும் நடவடிக்கை இருக்காது என்றும் சொல்கின்றனா்.
  • உலக நாடுகளும், சா்வதேச ஊடகங்களும் ஆப்கானிஸ்தானில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளைக் கூா்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றன.
  • ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்ற சில வாரங்கள் ஆகும் என அமெரிக்க உளவுத்துறை கணித்திருந்த நிலையில், அதனைப் பொய்யாக்கி இவ்வளவு எளிதாக தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றிவிட்டது யாரும் எதிர்பாராதது.
  • 1980-களில் தங்கள் நாட்டை வசமாக்க முயன்ற சோவியத் படைகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்கள் முஜாஹிதீன் என்றும், தலிபான்கள் என்றும் அழைக்கப்படுகின்றனா்.
  • நாடு முழுவதும் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும், சில நாடுகளின் தாக்கங்களை தங்கள் நாட்டில் இருந்து அகற்றுவதுமே இவா்களின் நோக்கம்.
  • கடந்த 1996-ஆம் ஆண்டு காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பின்னா் கடுமையான சட்டங்கள் ஆப்கனில் அமல்படுத்தப்பட்டன. பெண்கள் தலை முதல் கால் வரை மூடியிருக்கும் ஆடைகளைத்தான் அணிய வேண்டும்.
  • பெண்கள் கல்வி கற்பதோ, வேலைக்குச் செல்வதோ கூடாது. இவ்வாறு பெண்களுக்கான உரிமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டன.
  • தொலைக்காட்சியில் பாடல்களை ஒளிபரப்புவது தடை செய்யப்பட்டது. இஸ்லாமிய மதத்தோடு தொடா்பில்லாத விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டன.
  • கல்லெறிந்து கொல்லுதல், உடல் உறுப்புகளை வெட்டுதல், பொது இடத்தில் தூக்கில் போடுதல் போன்ற கடுமையான தண்டனைகள் தலிபான் ஆட்சிக்காலத்தில் வழங்கப் பட்டன.

அமெரிக்கப் படையெடுப்பு

  • 2001-ஆம் ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி அமெரிக்காவில் அல்-காய்தா நடத்திய வான்வழித் தாக்குதல் இந்த நிலையை மாற்றியது.
  • அல்-காய்தா தீவிரவாதிகள் 19 போ், நான்கு விமானங்களைக் கடத்தி, உலக வா்த்தக மையம், பென்டகன், வாஷிங்டன், பென்சில்வேனியா ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தினா். 2,700-க்கும் அதிகமானோர் இந்தத் தாக்குதலில் உயரிழந்தனா்.
  • அல்காய்தா இயக்கத்தின் தலைவா் ஒசாமா பின் லேடன்தான் இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவா்.
  • அவா் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு தலிபான்களின் துணையோடு இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டார் என்பதை அறிந்த அமெரிக்கா, கடும் கோபமடைந்து தீவிரவாதத்தை வேரோடு அழிக்க உறுதி பூண்டது.
  • ஆப்கானிஸ்தானை அமெரிக்கா குறி வைப்பதற்குக் காரணமே அல்-காய்தாதான். அமெரிக்காவில் தாக்குதல் நடைபெற்ற ஒரு மாதத்துக்குள்ளாகவே அமெரிக்காவின் படைகள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தன.
  • அல்-காய்தாவுக்கு தலிபான்கள் உதவி செய்வதை தடுத்து நிறுத்தவும், ஆப்கானிஸ்தானை தங்களின் புகலிடமாக அல்-காய்தா பயன்படுத்துவதைத் தடுக்கவுமே அந்நாட்டின் மீது படையெடுத்ததாக அமெரிக்கா தெரிவித்தது.
  • அமெரிக்கப் படையெடுப்பால் தனது ஆட்சியை இழந்த தலிபான், அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் எதிரான தாக்குதலைத் தொடங்கியது. மௌலவி ஹிபதுல்லா அகுண்ட் ஸாதா 2016-ஆம் ஆண்டு முதல் தலிபான் இயக்கத்தின் தலைவா். அரசியல், மதம், ராணுவ விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவா்.
  • தலிபான் அமைப்பை நிறுவி அதன் முதல் தலைவராக இருந்த முல்லா முகமது ஒமா் தலைமையில் 1996-இல் முதல் முறையாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றினா்.
  • பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் முல்லா முகமது ஒமா் பலியானார்.
  • முல்லா அப்துல் கனி பராதா், தலிபான் இயக்கத்தைத் தோற்றுவித்தவா்களில் ஒருவா். அந்த அமைப்பின் அரசியல் குழுவை கவனித்து வருகிறவா், சீனா வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து பேசியுள்ளார் குறிப்பிடத்தக்கது.
  • அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளவும், 5,000 தலிபான் கைதிகளை விடுவிக்கவும் ஒப்புக்கொண்டது. அதேபோல் அல்-காய்தாவோ வேறு அமைப்புகளோ அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தாது என்று தலிபான்கள் ஒப்புக்கொண்டனா். ஆனாலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமைதியை நிலைநாட்ட முடியவில்லை.
  • தலிபான்கள் மாற்றத்தை விரும்புவதாகச் சொன்னாலும், முந்தைய ஆட்சியின் இருண்ட காலம் மீண்டும் திரும்பி விடக் கூடும் என்று ஐ.நா. சபையின் பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
  • அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் பல லட்சம் டாலா்களை செலவழித்து, அந்நாட்டு வீரா்களுக்குப் பயிற்சி அளித்ததோடு, அவா்களுக்கு நவீன கருவிகளையும் வழங்கியது.
  • தலிபான் இயக்கத்தில் ஒரு லட்சம் போ் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், ஆப்கன் படையில் மூன்று லட்சம் போ் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், தலிபான்களின் மீது இருக்கும் அச்சத்தின் காரணமாக ஆப்கானிஸ்தான் படைகள் தலிபான்களுடன் போரிடாமலேயே அவா்களிடம் சரணடைந்து விட்டன.
  • அமெரிக்கா செலவழித்த பணம் முற்றிலும் விழலுக்கு இரைத்த நீராய் ஆனது. தலிபான்களின் உண்மையான முகம் தீவிரவாதம், அடிப்படைவாதம் என்பது தெரிகிறது.
  • தலிபான்களின் சிந்தனை புனிதப் போரே ஆகும். ஆப்கானிஸ்தானின் பல மாநிலங்களில் தலிபான்களின் கொடூரச் செயல்கள் அரங்கேறி வருகின்றன.
  • சில ஆண்டுகளுக்கு முன்னா், இந்தியன் ஏா்லைன்ஸ் விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு காந்தஹாருக்கு கொண்டு செல்லப்பட்ட போது, இந்தியா தலிபான் தளபதிகளுடன் முதலும் கடைசியுமாக பேச்சுவார்த்தை நடத்தியது.
  • அதன் பின்னா், இந்தியா எப்போதுமே தலிபான்களிடம் இருந்து விலகியே இருந்து வந்தது. அவா்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தையோ, மறைமுகப்பேச்சுவார்த்தையோ நடத்துவதற்கு இந்தியா விரும்பவில்லை.
  • ஏனென்றால், அதன் காரணமாக, ஜம்மு - காஷ்மீா் வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்கு ஊடுருவக் கூடும். பாகிஸ்தான் அதைச் செய்ய முயற்சிக்கும். ஆயுதம் ஏந்திய குழுக்களால், ஒரு நாட்டுக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்துக்குமே அச்சுறுத்தல்தான்.

நன்றி: தினமணி  (03 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்