TNPSC Thervupettagam

தலைதூக்கும் போலி அறிவியல்

June 16 , 2021 1322 days 543 0
  • கரோனா பெருந்தொற்று ஒருபுறம் மனிதகுலத்தை ஆட்டி வந்தாலும், அதற்கு இணையாகப் போலிச் செய்திகளும், அறிவியலுக்குப் புறம்பான தகவல்களும் வந்து கொட்டிக் கொண்டே இருக்கின்றன.
  • போலி மருத்துவர்களைப் போலவே, உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களுக்கு எதிராகப் பெருங்கதைகளைக் கட்டிவிடுவதில் ‘சமூக வலைதள நிபுணர்கள்’ சமீபத்திய ஆண்டுகளில் கைதேர்ந்தவர்களாகிவருகிறார்கள்.
  • இதைத் தகவல்தொற்று என்று உலக சுகாதார நிறுவனம் அடையாளப்படுத்துகிறது.
  • இதுபோன்ற அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை ஆதரிப்பதுபோல் சில மதிப்புமிகு அறிவியலாளர்களும் மருத்துவர்களும் சமூக ஊடகங்கள் வழியே கருத்து தெரிவிக்கிறார்கள் அல்லது அவர்களுடைய பேச்சானது திரிபுவாதக் கருத்துகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது.
  • தங்களுடைய முந்தைய ஆய்வுகளின் அடிப்படையில் மதிப்பைப் பெற்றுள்ள இந்த அறிஞர்கள், அறிவியல் முறைசார்ந்த கருத்துகளிலிருந்து வழுவி, ஆதாரமற்றதும் ஆபத்தானதுமான கருத்துகளை முன்வைக்கிறார்கள்.
  • இவை கரோனாவை விடவும் வேகமாகப் பரவிவருகின்றன. ஒரு புதிய நோய்த்தொற்று குறித்த புரிதலானது, துறை சார்ந்தவர்களிடமும் அவர்கள் மூலமாகச் சமூகத்திலும் பரவலாவதற்கு முன்பே, இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துகள் காட்டுத்தீபோல் பரவி விடுகின்றன, நம்பவும் படுகின்றன.

பிறழ்ந்த அறிவியலாளர்கள்

  • உலக மருத்துவர்கள் கூட்டணியைச் சேர்ந்த ஐரிஷ் அறிவியலாளர் டோலரஸ் காஹில், கரோனா நோயைச் சாதாரண பருவகாலக் காய்ச்சல் என்று முரண்பாடான கருத்தை முன்வைத்ததன் காரணமாக, ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஊரடங்குக்கு எதிரான போராட்டங்கள் உருவாக, கரோனா நோய் மறுப்பாளர்களும் உருவானார்கள்.
  • நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு அறிவியலாளர் லூக் மான்டேனியே கரோனாவின் தோற்றம் தொடர்பாகவும், தடுப்பூசிப் பயன்பாடு தொடர்பாகவும் தொடர்ச்சியாக சதிக் கோட்பாடு ரீதியிலான கருத்துகளை முன்வைத்துவருகிறார்.
  • அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் தாமஸ் கோவன், 5ஜி ரேடியோ அலைகளே கரோனா பரவலுக்குக் காரணம் என்று கடந்த ஆண்டு கூறினார்.
  • அது எந்த வகையிலும் சாத்தியமற்றது என்கிறபோதும், 5ஜி அலைக்கற்றைக்கு எதிரான இந்தப் போக்கின் காரணமாக, பிரிட்டனில் மட்டும் 87 செல்போன் கோபுரங்களுக்குத் தீ வைக்கப் பட்டுள்ளது.

இந்திய நிலை

  • இந்தியாவிலும் ‘மாற்று மருத்துவ முறை’ என்று அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறையைப் பரிந்துரைக்கும் சிலர் ‘தடுப்பூசி போட்டால்தான் கரோனா வரும்’, ‘தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்த கிருமிநாசினி.
  • கையில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டால், கரோனா தொற்றாது’ என்றெல்லாம் சமூக ஊடகங்கள் வழியாகப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
  • கரோனா ஒரு நோயே அல்ல என்று கூறிய டான்சானியாவின் எதேச்சாதிகார அதிபர் ஜான் மகுஃபுலி, 15 நாள்களுக்குத் தலைகாட்டாமல் இருந்து, கடந்த மார்ச் மாதம் இறந்துபோனார்.
  • இதயக் கோளாறால் அவர் இறந்தார் என்று அதிகாரபூர்வத் தகவல்கள் கூறினாலும், கரோனா தொற்றுக்கு அவர் பலியானார் என்கிற தகவல்கள் கசிந்தன. ஆனால், கரோனாவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததால், மேற்கத்திய நாடுகளே மகுஃபுலியைக் கொன்றுவிட்டதாக இந்திய கரோனா மறுப்பாளர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
  • கரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சம், அவநம்பிக்கையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இந்த ‘உதிரி அறிவியலாளர்கள்’ அல்லது போலிச் செயற்பாட்டாளர்கள் தடுப்பூசி மறுப்பு, முகக்கவச மறுப்பு போன்றவற்றை நோக்கி ஒரு பிரிவு மக்களை எளிதாக நகர்த்திவிடுகிறார்கள்.
  • “அறிவியலுக்கு எதிரான இந்த ‘உதிரி அறிவியலாளர்கள்’, அதிகார மையங்களுக்கு எதிராக உண்மை பேசுவதாக ஒரு சிறு கூட்டத்தால் கொண்டாடவும் படுகிறார்கள்.
  • பொதுவாகப் போலி அறிவியல், சதிக்கோட்பாடு அடிப்படையிலான வாதங்கள் எந்த முறைசார்ந்த தரவுகளையும் கொண்டிருப்பதில்லை. எந்த அறிவியல்பூர்வக் கருத்தும் ஒரு அறிவியலாளர் கூறுவதாலேயே உண்மையாகிவிடுவதில்லை.
  • அந்தக் கருத்தைக் கூறும் அறிவியலாளர் எவ்வளவு மதிக்கத்தக்கவராக இருந்தாலும்கூட. ஆதாரங்களின் அடிப்படையிலேயே அறிவியல் கருத்துகள் மதிக்கப்படுகின்றன; யார் அதைச் சொல்கிறார் என்பது முக்கியமே இல்லை.
  • அதற்கு நேர்முரணாக அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளை, போலி அறிவியல் கணக்கில் கொள்வதில்லை. யார் அந்தக் கருத்தைச் சொல்கிறார் என்பதிலேயே கவனம் செலுத்தச் சொல்கிறது.
  • ஒருவருடைய கல்வித் தகுதி, சமூகத்தில் பெற்றிருக்கும் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் அறிவியல் கருத்துகள் உருவாவதோ, அறிவியல் உண்மைகளாக மாறுவதோ இல்லை” என்கிறார் ஐரிஷ் அறிவியலாளரும் எழுத்தாளருமான டேவிட் ராபர்ட் கிரைம்ஸ்.

உண்மையும் அபிப்பிராயமும்

  • பெருந்தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்போது, மனித குலத்தைக் காப்பதற்கு மக்கள் கூடுதல் அறிவியல் புரிதலைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
  • அரசும் அறிவியலாளர்களும் அந்தப் புரிதலை அதிகரிப்பதற்கான வேலையைச் செய்துகொண்டிருக்கும்போது, போலி அறிவியல் இடையில் புகுந்து தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
  • இதுபோல் போலி நிபுணர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு ஒரு செய்தியையோ தகவலையோ நாம் எப்படிப் பெறுகிறோம் என்பதும் முக்கியப் பங்களிக்கிறது. இன்றைய சமூக ஊடக உலகில் யார் வேண்டுமானாலும் ஊடகராகிவிட முடிகிறது.
  • தகவல்களைச் சரிபார்க்கும், சர்ச்சைக்குரிய அல்லது தவறான தகவல்களை முளையிலேயே கிள்ளி எறியும் மரபார்ந்த ஊடக உலகத்தினர் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.
  • இந்தப் பின்னணியில் உண்மைத் தகவல்களுக்கும் ஒருவருடைய அபிப்பிராயத்துக்கும் இடையிலான வேறுபாட்டைக் கண்டறிவது சிக்கலாகிறது. இதன் காரணமாக, நாம் நம்ப விரும்பும் அல்லது மனச்சாய்வு கொள்ள விரும்பும் வாதங்களை நோக்கி நாம் அதிகம் ஈர்க்கப்படுகிறோம்; பிறகு, அவையே உண்மை என்று நம்ப முயல்கிறோம்.

ஆதாரங்களே அடிப்படை

  • முறைசார்ந்த ஆய்வு, அதன் மூலமாகக் கிடைக்கும் ஆதாரங்களே அறிவியலுக்கு அடிப்படை. எத்தனை கருதுகோள்களை வேண்டுமானாலும் முன்வைக்கலாம்; ஏற்கெனவே நிறுவப்பட்ட உண்மைகளை மறுக்கலாம்; அதற்கு எதிரான கருத்துகளையும் அறிவியலில் முன்வைக்கலாம்.
  • அந்தக் கருதுகோள்கள், புதிய கருத்துகளுக்கான ஆதாரங்களை முன்வைத்தவரோ, அவர் கூறியதை ஏற்றுக்கொள்பவர்களோ சமர்ப்பிக்க வேண்டும்.
  • அந்த வகையில், அறிவியல் உண்மைகள் என்று கூறப்படுபவை யார் வேண்டுமானாலும் பரிசோதித்துப் பார்க்கக்கூடியவையாக இருக்க வேண்டும். அந்த விசாரணையில் தோற்பவை எல்லாமே அறிவியல் உலகத்தில் கைவிடப்பட்டுவிடும்.
  • மருத்துவ-அறிவியல் வரலாற்றில் தவறாக வழிநடத்தப்படுதல், புகழ்பெற்ற அறிவியலாளர்களின் பெயர்கள் போன்றவற்றுக்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை.
  • இவ்வளவு காலமும் வலுவான ஆதாரங்களே அந்த வரலாற்றைக் கட்டமைத்துவந்துள்ளன. எதிர்காலமும் அப்படித்தான் இருக்கப் போகிறது. ஆதாரமற்ற எதுவும் அறிவியல் உலகில் நிலைப்பதோ நீடிப்பதோ சாத்தியமில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (16 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்