TNPSC Thervupettagam

தலைநகரிலும் ஆணவக் கொலை

March 1 , 2024 144 days 141 0
  • சென்னையின் புறநகர்ப் பகுதியான பள்ளிக்கரணையில் நிகழ்ந்திருக்கும் சாதி ஆணவப் படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதி அடையாளம் அவ்வளவாக வெளிப்படாத சென்னை மாதிரியான பெருநகரத்திலும் சாதி எவ்வளவு தூரம் வேரூன்றி இருக்கிறது என்பதற்கான உதாரணமாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
  • தமிழ்நாட்டில் சமீப காலமாக ஆணவக் கொலைகள் அதிகரித்துவருகின்றன. 2022இல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீரப்பட்டியைச் சேர்ந்த ஒரு காதல் தம்பதி, திருமணமான 28ஆம் நாள் அவர்கள் வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு, அதே தூத்துக்குடியில் மாரிசெல்வம்–கார்த்திகா தம்பதி வெட்டிக் கொல்லப்பட்டனர்.
  • ஒரு மாதத்துக்கு முன்பு தஞ்சாவூர் அருகே நெய்வவிடுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்கிற பெண், பட்டியல் சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்ததற்காகப் பெற்றோரால் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார். இதுமட்டுமல்லாமல், பட்டியல் சாதியினருக்கு எதிரான வன்முறைகளும் சமீப காலமாகப் பெருகியுள்ளன.
  • ‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் மேனேஜ்மென்ட் அண்டு அப்ளைடு சயின்ஸ்’ இதழில் வெளிவந்த ஆணவக் கொலை தொடர்பான ஒரு கட்டுரையில், 2014 புள்ளிவிவரப்படி இந்திய அளவில் கல்வி வளர்ச்சி குன்றிய உத்தரப் பிரதேசம், ஆணவக் கொலைகள் அதிகமாக நடக்கும் மாநிலம் எனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
  • ஆனால், கல்வி வளர்ச்சி மிகுதியாக இருக்கும் தமிழ்நாடு, இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது உண்மையில் கவலையளிக்கும் விஷயம். மாநிலங்களவைக் குறிப்பின்படி, 2022இல் தேசிய அளவில் 33 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. ஆனால், எவிடென்ஸ் அமைப்பின் அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் 2021–2023 இடைப்பட்ட காலத்தில் 24 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன.
  • இந்த விஷயங்களில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. இதில் வழக்குப் பதிவுசெய்து காவல் துறை நடவடிக்கை எடுப்பதற்கு அப்பால், ஆளும் அரசு இதில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கிறது என்பதும் முக்கியமான கேள்வி. ஆனால், தமிழ்நாடு அரசு அதில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்படவில்லை.
  • எடுத்துக்காட்டாக வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறை, வருவாய்த் துறை ஆகியவற்றின் நடவடிக்கைக்கு அப்பால், தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூரில் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைத்த கோயில் நுழைவு நிகழ்வு, பிறகு வன்முறையாக மாறியது.
  • தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதை உணர்த்தியது. இவை எல்லாம் ஆணவக் கொலை என்கிற மனோநிலையை உருவாக்குவதில் துணைநிற்பவை. சட்ட நடவடிக்கைகள் குறித்த அச்சத்தைச் சாதி வெறி கொண்டவர்களிடமிருந்து அகற்றுபவை.
  • ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் அவசியம் என்ற குரலுக்கு இனியாவது அரசு செவிசாய்க்க வேண்டும். பட்டியல் சாதியினருக்கு எதிரான வன்முறைகளைக் கடுமையாக ஒடுக்கினால்தான், இதற்கான முழுமையான தீர்வு கிடைக்கும்.
  • பட்டியல் சாதியினர் மீதான வன்முறைகள் ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப்படாதபோது, அம்மக்கள் கையறு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கான அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு பட்டியல் சாதியினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை!

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்