TNPSC Thervupettagam

தலைமுறைகளைக் கடந்த சுற்றுச்சூழலுக்கான குரல்

June 8 , 2022 791 days 449 0
  • சுற்றுச்சூழல் எப்படி நம் வாழ்க்கையின் மையமாக இருக்கிறது என்பதை நவீன ஆய்வுகளின் துணையுடன் மட்டுமல்லாமல், மரபு சார்ந்த அறிவின் அடிப்படையிலும் கவனப்படுத்தியதில் ‘டவுன் டு எர்த்’ இதழின் பங்கை மறுக்க முடியாது!
  • சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அறிவியல் கண்ணோட்டத்துடன் புரிந்துகொண்டு, எப்படி அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற வலியுறுத்தலுடன் செயல்பட்டுவந்தவர் அனில் அகர்வால். 1982-ல் ‘The State of India's Environment - A Citizens' Report’ என்கிற பெயரில் சுற்றுச்சூழல் பார்வையுடன் கூடிய விரிவான தொகுப்பை 40 ஆண்டுகளுக்கு முன்னரே அனில் அகர்வால் கொண்டுவந்தார். அது ‘இந்தியாவில் சுற்றுச்சூழல்’ என்கிற தலைப்பில் க்ரியா வெளியீடாகத் தமிழிலும் வெளியானது.
  • 1992-ல் ‘ரியோ புவி மாநாடு’ தொடங்குவதற்கு முந்தைய மாதம் அனில் அகர்வாலை ஆசிரியராகக் கொண்டு ‘டவுன் டு எர்த்’ இதழ் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டோடு 30 ஆண்டுகளைத் தொடுகிறது ‘டவுன் டு எர்த்’. 2002-ல் புற்றுநோயால் அனில் அகர்வால் மடிந்தார். இதழின் தற்போதைய ஆசிரியர் சுனிதா நாராயண். புதுடெல்லியைச் சேர்ந்த அறிவியல், சுற்றுச்சூழல் மையம் இந்த இதழை வெளியிட்டுவருகிறது.
  • இன்றைக்கு ‘டவுன் டு எர்த்’ இதழின் இணையதளம், இந்தியச் சுற்றுச்சூழல் பற்றி அதிகம் தேடப்படக்கூடிய இணையதளமாக உள்ளது. ‘கோபர் டைம்ஸ்’ என்கிற சிறாருக்கான சுற்றுச்சூழல் இதழ், நீண்ட காலத்துக்கு இணைப்பாக வழங்கப்பட்டுவந்தது.
  • சமீப ஆண்டுகளாக ‘டவுன் டு எர்த்’ வெளியிட்டுவரும் ஆண்டுத் தொகுப்புகளான ‘State of India's Environment’, ‘State of India's Environment In Figures’ உள்ளிட்டவை, உலகப் பசுமை இதழியலில் தவிர்க்க முடியாத ஒன்றாக ‘டவுன் டு எர்த்’ இதழை ஆக்கியுள்ளன.
  • ஒருபுறம் வேதாந்தா நிறுவனத்தின் விளம்பரத்தைப் பிரசுரித்த ‘டவுன் டு எர்த்’, அதே நிறுவனம் சுற்றுச்சூழலை எப்படி மோசமாகச் சீரழிக்கிறது என்பதையும் சமரசம் செய்துகொள்ளாமல் வெளியிட்டுள்ளது. விளம்பரங்களுக்காக இதழியல் நெறிமுறைகளில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்பதே அந்த இதழின் அடிப்படைக் கொள்கை.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நடுத்தர வர்க்கம், மேல்தட்டு வர்க்கத்தினருக்கானது என்கிற தவறான பார்வை இருக்கிறது. அதை உடைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது யாருக்கான வளர்ச்சி என்கிற கேள்வியை அடிப்படையாகக் கொண்டது என்பதை முன்னிறுத்தி ‘டவுன் டு எர்த்’ செயல்பட்டுவருகிறது.
  • காட்டுயிர்களைப் பாதுகாக்கப் பழங்குடிகளைக் காட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனக் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் கூறியபோது, பழங்குடிகளையும் இணைத்துக்கொண்டே காட்டுயிர்களையும் காடுகளையும் காக்க முடியும் என்கிற வாதத்தை முன்வைத்த இதழ் ‘டவுன் டு எர்த்’.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தனியார் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவது, அரசுக்கு வலியுறுத்துவது மட்டுமில்லை, நாம் ஒவ்வொருவரும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டியதன் அவசியத்தை ‘டவுன் டு எர்த்’ 30 ஆண்டுகளாக உரக்க ஒலித்துவருகிறது.

நன்றி: தி இந்து (08 – 06 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்