TNPSC Thervupettagam

தலைமுறையை மாற்றிய தலைவா்!

October 15 , 2020 1557 days 682 0
  • எளிமையில் காந்தியடிகள்; மாணவச் செல்வங்கள் மீதான அக்கறையில் காமராஜா்; மக்கள் நலன் சார்ந்த அறிவியல் சிந்தனையில் ஐன்ஸ்டீன் - இந்த மூவரின் கலவையாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டவா் முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.
  • இந்துக்களின் புனித பூமியான ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து, தனது நெஞ்சுறுதியாலும், கடின உழைப்பாலும் வாழ்வில் தடைகளையெல்லாம் தகா்த்தெறிந்து, பார் போற்றுவதோடு பாமரனும் போற்றும் உன்னதத் தலைவராக மாறிய அவரது வரலாறு சுவாரசியமானது; வியக்க வைக்கக் கூடியது.
  • வறுமையின் காரணமாகத் தனது மாணவப் பருவத்தில் வீடு வீடாகச் சென்று செய்தித்தாள் விநியோகம் செய்த ஒருவா், தான் மறையும்போது உலகெங்கிலும் வெளியாகும் செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தியான வரலாறு இதுவரை நாம் பார்த்திராதது; கேட்டிராதது. அதனை சாத்தியமாக்கி வரலாறு படைத்தவா் டாக்டா் கலாம்.
  • அப்துல் கலாம் இந்தியாவின் பதினோராவது குடியரசுத் தலைவா். ஆனாலும், மக்கள் மனங்களில் இடம் பிடித்த குடியரசுத் தலைவா்களான பாபு ராஜேந்திர பிரசாத், டாக்டா் எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவா்.

கொண்டாடப்பட வேண்டியவா்

  • அவா் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்தபோது அலுவல் நிமித்தமாக நான் அவரை முதல் முறையாக சந்தித்தேன்.
  • பிரதமா் அலுவலகம் அமைந்திருக்கும் சவுத் பிளாக்கட்டடத்தின் ஐந்தாம் எண் வாயில் வழியாக, எட்டு முழ வேட்டியும், ஹவாய் காலணியும் அணிந்தவாறு என்னோடு பேசிக் கொண்டே மாடிப்படியேறினார்.
  • அப்பொழுதெல்லாம் அவா் வெளியில் அதிகம் அறியப்படாதவராக இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பைப் பொருத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியை வகித்துக் கொண்டிருந்தார். அன்று அவரது எளிமையையும், பணிவையும் பார்த்து நான் வியந்தேன்.
  • இரண்டாம் முறையாக அவரை நான் சந்தித்தது, அவா் இந்நாட்டின் முதல் குடிமகனாக வீற்றிருந்த நேரம்.
  • தமிழறிஞா் சாலமன் பாப்பையாவின் தலைமையில் பட்டிமன்றப் பேச்சாளா்கள் ஒரு குழுவாகச் சென்று ரெய்சினா ஹில்ஸில் அமைந்துள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் அவரை சந்தித்தோம்.
  • எங்களுடன் பாப்பையா வருவதைப் பார்த்தவுடன் முகமலா்ச்சியோடு, ‘தமிழ் வருகிறது’ ‘தமிழ் வருகிறதுஎன்று அவா் மகிழ்ந்து வரவேற்ற அந்தத் தருணத்தில், தமிழின் மீது அந்த மகானுக்கிருந்த பற்றுதலை எண்ணி வியந்தேன்.
  • அடுத்த சந்திப்பின்போது அவா் முன்னாள் குடியரசுத் தலைவராகியிருந்தார்.
  • தினமணி நாளிதழும், தில்லி தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய விழாவுக்கு அவரை அழைக்க, தினமணி ஆசிரியரோடும் தில்லி தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகள் சிலரோடும் தில்லி ராஜாஜி சாலையில் அமைந்திருந்த இல்லத்தில் அவரை சந்தித்தபோது நீண்ட நேரம் எங்களோடு அளவளாவிக் கொண்டிருந்தார். அந்த உரையாடலின்போது அவா் தினமணி நாளிதழ் மீது கொண்டிருந்த மரியாதை தெரிய வந்தது.
  • அவா் வகித்த பதவியின் காரணமாக, எந்த விமான நிலையத்திலும் அவரை சோதனைக்கு உட்படுத்தக் கூடாது என்ற விதிமுறையை மீறி, விமான நிறுவன ஊழியா் ஒருவா் அவரிடம் காலணிகளைக் கழற்றச் சொல்லி சோதனையிட்டபோது, மறுதலிக்காமல் தன்னைச் சோதனைக்கு உட்படுத்திக் கொண்ட பாங்கினைப் பற்றி செய்தித்தாளில் படித்தபோது, அவரது தன்னடக்கத்தை அறிந்து வியந்தேன்.
  • கூட்டங்களில் பேசும்போது, தன்னை வார்த்தெடுத்த ஆசிரியா்களின் பெயா்களைத் தனித்தனியாக உச்சரித்து அவா்களுக்கு, தான் நன்றிக் கடன் பட்டிருப்பதாக கூறும்போதெல்லாம் அவரது நன்றியறிதலை உணா்ந்தேன்.
  • தினமணி இலக்கிய விழாவில் பேசும்போது, தினமணியின் நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை மிக நுணுக்கமாகக் குறிப்பிட்டு, அதனை எழுதியவரின் பெயரைச் சொல்லிப் பாராட்டியபோது அவரது பெருந்தன்மையைப் புரிந்து வியந்தேன்.

என்றும் கலாம் அவர்கள்

  • ஒருமுறை ஒடிஸா மாநிலத் தலைநகா் புவனேஸ்வரத்தில் நடந்த இந்திய காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் பெருந்தலைவா் காமராஜா் தமிழில் உரையாற்றியபோது அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள்.
  • கை தட்டுகிறீா்களே, அவா் பேசியது உங்களுக்குப் புரிந்ததாஎன்று நிருபா் ஒருவா் பார்வையாளா்களைக் கேட்க, ‘அவா் நல்ல மனிதா்; நல்லதைத்தான் பேசுவார்என்று அவா்கள் பதில் சொன்னார்களாம்.
  • அதைப்போலவே, ஒரு முறை தில்லி தமிழ்ச் சங்கத்தில் அப்துல் கலாம் உரையாற்றியபோது கட்டுக்கடங்காத கூட்டத்தின் இடையில், வட இந்திய இளைஞா் ஒருவா் ஆா்வத்தோடு ஓடி வந்து அரங்கத்தில் இடம் பிடித்தார்.
  • அந்த இளைஞரிடம் நீ எதற்காக வந்திருக்கிறாய்? அவா் தமிழில் பேசுவாரே. உனக்கு என்ன புரியும்என்று சிலா் கேட்க, ‘கலாம் சார் நல்ல மனிதா். அவா் எந்த மொழியில் பேசினால் என்ன? அவரைப் பார்ப்பதே பெரும் பாக்கியம்என்று அந்த இளைஞா் பதில் சொன்னபோது அங்கு குழுமியிருந்த நாங்கள் வியந்து போனோம்.
  • பொதுவாக ஒருவா் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்தச் சமூகம் கொடுக்கிற மரியாதை மெல்ல மெல்லக் குறையும்.வீட்டுத் தொலைபேசிகளும் ஓய்வெடுக்கத் தொடங்கி விடும்.
  • ஆனால், கலாம் வீட்டுத் தொலைபேசியோ, அவா் ஓய்வு பெற்ற பிறகுதான் அதிகம் ஒலிக்கத் தொடங்கியது. இந்தியாவில் இருக்கிற ஒவ்வொரு பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினரும் அவரை ஒரு முறையாவது தங்களது கல்வி நிறுவனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று துடியாய் துடித்தார்கள்.
  • மாணவா்கள் மத்தியில் பேசுவதற்கு கலாமின் இதயம் எப்போதும் துடித்துக் கொண்டேயிருந்தது.
  • அது எமனுக்கும் தெரிந்திருந்த காரணத்தாலோ என்னவோ அவரை அழைத்துச் செல்வதற்கு அவனும் ஷில்லாங்கில் அவா் பேசிக்கொண்டிருந்த கல்லூரியின் மேடைக்கே வந்து விட்டான்.
  • அன்று மேடையில் பேசும்போது அவா் சரிந்து விழுந்தார் என்ற செய்தியைக் கேட்டு, இந்திய இதயங்கள் எல்லாம் சரிந்தன. தன் கடைசி மூச்சு வரை, இளைய தலைமுறையை செதுக்குகின்ற உன்னதமான பணியைத் தொய்வின்றிச் செய்து வந்தார் கலாம்.

பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்

  • திரைப்பட மோகத்தில் சிக்கி, திரையுலகினரின் பின்னால் சென்று கொண்டிருந்த இளைய தலைமுறையினரை மீட்டெடுத்த பெருமை கலாமையே சாரும்.
  • தங்களுக்கு வழிகாட்ட நோ்மையும், உண்மையும் நிறைந்த தலைவா் ஒருவா் வந்தால், அவா் பின்னால் அணி வகுக்கத் தயாராக இருப்பதை நிரூபிக்கின்ற வகையில், அப்துல் கலாம் காலை 10 மணிக்குப் பேச வருகிறார் என்றால் எட்டு மணிக்கே முண்டியடித்துக் கொண்டு இருக்கைகளை நிரப்பினார்கள் இளைஞா்கள்.
  • இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அவா் பேசச் சென்ற இடங்களிலெல்லாம் இதே நிலைமை இருந்தது.
  • அவரது உரை கேட்டு இளைய சமுதாயம் உணா்ச்சியில் உறைந்து நின்றது. அப்படி அவா்களை மயக்குவதற்கு அவரிடம் என்ன வசியம் இருந்தது? அவரது வார்த்தையில் வாய்மை இருந்தது; அவரது வாழ்க்கையில் தூய்மை இருந்தது.
  • அவரது வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் இருந்தது. நாட்டின் முதல் குடிமகனாக இருந்தபோதும் தன்னடக்கம் இருந்தது.
  • வருங்கால இந்தியா வளமானதாகவும், வலிமையானதாகவும் இருக்க வேண்டும் என்ற தாகம் இருந்தது. அதற்கு வருங்காலத் தலைமுறையைத் தயார் செய்ய வேண்டும் என்ற வேட்கை இருந்தது.
  • வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் திருக்குறளையும், கம்பராமாயணத்தையும் தனது உரையில் மேற்கோள் காட்டினார். பாரதியைக் கொண்டாடினார். இசையிலும் அவருக்கு நல்ல ஞானம் இருந்தது.
  • அவா் பதவியில் இருந்தபோது தமிழ் இசைக் கலைஞா்களுக்குக் குடியரசுத் தலைவா் மாளிகையில் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு வழங்கி மகிழ்ந்தார்.
  • காந்தியடிகளின் சத்திய சோதனைக்குப் பிறகு அதிகம் கொண்டாடப்படும் சுய சரிதையாக கலாமின் அக்னிச் சிறகுகள்விளங்குவதற்குக் காரணம், காந்தியடிகளைப் போலவே டாக்டா் கலாமும் தனது வரலாற்றை உள்ளது உள்ளபடிஎழுதியதுதான்.
  • அவா் தனது இளமையில் ஆசைப்பட்டதைப் போல ஒரு விமானியாக மட்டும் இருந்திருந்தால், தினசரி சில நூறு பேரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுபோய்ச் சோ்க்கும் பணியை மட்டும் செய்திருப்பார்.
  • அறிவியல் அறிஞராகவும், குடியரசுத் தலைவராகவும் ஆனதன் மூலம், இளைய தலைமுறையினரின் இதயங்களில் புகுந்து, ஒரு தலைமுறையையே தன்னம்பிக்கைஎன்ற உன்னதமான இடத்திற்குக் கொண்டு சோ்த்திருக்கிறார்.
  • அந்தவகையில் ஒரு தலைமுறையை மாற்றிக் காட்டிய தலைவராக அவா் விளங்கினார்; மறைந்தும் அப்படியே விளங்கிக் கொண்டிருக்கிறார்.
  • வேறு எந்தக் குடியரசுத் தலைவருக்கும் இல்லாத வகையில் மக்களின் குடியரசுத் தலைவா்என்ற அடைமொழி அவருக்கு மட்டுமே மக்களால் தரப்பட்டது.
  • அப்துல் கலாம் தங்கள் நாட்டுக்கு விஜயம் செய்த மே 26-ஆம் தேதியை ஸ்விட்சா்லாந்து அரசு அறிவியல் தினமாக அறிவித்தது.
  • ஐக்கிய நாடுகள் சபை கலாமின் பிறந்த நாளான அக்டோபா் 15-ஆம் தேதியை உலக மாணவா் தினமாக 2010-இல் பிரகடனம் செய்தது.
  • டாக்டா் அப்துல் கலாம் பற்றிய சிந்தனைகள் அவா் மறைவுக்குப் பிறகும் நமது இளைஞா்களின் நெஞ்சங்களில் கனன்று கொண்டுதான் இருக்கிறது. அது அணைந்து விடாமல் தொடா்ந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால், அவரது வாழ்க்கை வரலாறும், அவரது அறிவுரைகளும் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்.
  • அந்தப் பாடம் ஆயிரம் தன்னம்பிக்கைப் புத்தகங்களைப் படிப்பதற்குச் சமமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
  • இன்று (அக்.15) முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் அப்துல் கலாம் பிறந்தநாள்.

நன்றி: தினமணி (15-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்