TNPSC Thervupettagam

தலைமை மனநல மருத்துவமனை: ஏன் அரசிடமே இருக்க வேண்டும்?

November 6 , 2024 66 days 136 0

தலைமை மனநல மருத்துவமனை: ஏன் அரசிடமே இருக்க வேண்டும்?

  • சென்னை கீழ்ப்​பாக்​கத்தில் இயங்கிவரும் அரசு தலைமை மனநல மருத்​துவ​மனையின் நிர்வாகத்தில் பல போதாமைகள் இருப்பதாகக் கூறி, இருநூறு வருடங்கள் பழமையான அந்த அரசு நிறுவனத்தைத் தனியார் பொறுப்பில் மாற்று​வதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனச் சுகாதாரத் துறைச் செயலாளர் பரிந்துரை செய்திருக்​கிறார். அரசு மனநல மருத்​துவ​மனையின் போதாமைகளை அரசுதான் சரிசெய்ய வேண்டுமே தவிர, அதன் நிர்வாகத்தில் தனியார் அமைப்புகளை அனுமதிப்பது சரியல்ல.
  • இந்த முயற்சி நாளடைவில் அனைத்து அரசு மருத்​துவ​மனை​களும் தனியார்​மய​மாவதில் சென்று முடியும் எனச் சமூக சமத்து​வத்​துக்கான மருத்​துவர்கள் சங்கம் போன்ற மருத்​துவர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்​துள்ளன. இதன் விளைவாக, அரசு மனநல மருத்​துவ​மனையின் நிர்வாகத்தில் தனியாரை அனுமதிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெளிவுபடுத்​தி​யிருக்​கிறார். உலகளவில் மனநலப் பிரச்​சினைகள் அதிகரித்து​வரும் சூழலில், ஒரு தலைமை அரசு மனநல மருத்​துவமனை ஏன் முக்கி​யத்துவம் வாய்ந்தது? அது ஏன் அரசு நிர்வாகத்தில் மட்டுமே இருக்க வேண்டும்?

பராமரிப்புக் காப்பகம் மட்டுமல்ல:

  • பொதுவாகவே, நீண்ட கால மனநோயாளி​களை​யும், குடும்பத்தால் கைவிடப்பட்ட மனநோயாளி​களையும் பராமரிப்பது மட்டுமே மனநல மருத்​துவ​மனையின் பணி என்கிற புரிதல்தான் இங்குள்ளது. அதனால்தான் பெரும்​பாலானவர்கள் மனநல மருத்​துவ​மனையை ‘மனநலக் காப்பகம்’ என்றே குறிப்​பிட்டு வருகிறார்கள். உள் நோயாளி​களைப் பராமரிப்பது மனநல மருத்​துவ​மனையின் முக்கியமான பணியாக இருந்​தா​லும், மனநல மருத்​துவமனை என்பது வெறும் பராமரிப்புக் காப்பகம் மட்டுமே அல்ல.

உண்மை​யில், ஒரு மாநிலத்தின் தலைமை மனநல மருத்​துவ​மனைக்கு நான்கு வகைப் பணிகள் இருக்​கின்றன:

  • நீண்ட நாள் மனநோயாளி​களைப் பராமரிப்பது, அவர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்களை வகுப்பது, சமூகத்தோடு அவர்களை ஒன்றிணைப்​ப​தற்கான நடவடிக்கைகளை எடுப்பது;
  • மனநலப் பிரச்​சினைகள், மனநோய்கள் போன்ற​வற்றை ஆரம்பத்​திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையை வழங்குவது, அதன் வழியாக மனநோயினால் வரக்கூடிய இழப்பு​களைத் தடுப்பது; இந்த மனநலச் சேவைகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது;
  • ஒரு சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் மனநலத்தை மேம்படுத்து​வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, அதற்கான செயல் திட்டங்களை உருவாக்குவது, அதை அரசுக்குப் பரிந்துரை செய்வது, பொருளாதார ஏற்றத்​தாழ்வுகள், போதைப் பொருள்கள், பேரிடர்கள், அரசின் புதிய கொள்கை முடிவுகள் போன்ற பல்வேறு சமூக அவலங்​களால் ஏற்படக்​கூடிய அவசர, நீண்ட நாள் மனநல பாதிப்புகளை ஆராய்ச்சி செய்வது / அவற்றைத் தடுப்​ப​தற்கான வழிமுறைகளை அரசாங்​கத்​துக்குப் பரிந்துரை செய்வது;
  • ஒரு கல்வி நிறுவனமாக இளநிலை, முதுநிலை மருத்​துவப் படிப்பு, மன நலம் சார்ந்த பிற படிப்பு​களுக்குப் பயிற்​சி​யளிப்பது. இந்த நான்கு பணிகளையும் திறம்படச் செய்ய வேண்டியதுதான் ஒரு தலைமை மனநல மருத்​துவ​மனையின் பொறுப்பு. இந்தப் பணிகளை எந்தவித நெருக்​கடிகளும் இல்லாமல் செய்வதன் மூலமாகவே ஒரு சமூகத்தில் மனநலப் பிரச்​சினை​களும், மனநோய்​களும் அதிகரிப்​பதைத் தடுத்து ஆரோக்​கியமான சமூகமாக வாழ வைக்க முடியும்.
  • பராமரிப்பும் ஒருங்​கிணைப்பும்: ஒரு மாநிலத்தில் தலைமை மனநல மருத்​துவ​மனையின் மிக முக்கியமான பணி இதுவே. மனநோய்கள் மீது இந்தச் சமூகத்தில் நிலவக்​கூடிய களங்கப் பார்வையின் காரணமாக, முழுமை​யாகக் குணமடைந்த பின்னரும்கூட, மனநோயாளி​களைத் திரும்ப அழைத்துச் செல்லாத நிலை இங்கிருக்​கிறது. இதனால் இந்த நோயாளிகள் குடும்பத்​தினரால் கைவிடப்​பட்டு, மனநல மருத்​துவ​மனை​களிலேயே தங்கி​விடு​கிறார்கள். கீழ்ப்​பாக்கம் அரசு மனநல மருத்​துவ​மனையில் கிட்டத்தட்ட 800 நோயாளிகள் இப்படி இருக்​கிறார்கள்.
  • இவர்களைப் பராமரித்து மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை ஒருங்​கிணைக்க வேண்டும். அதேபோல மனநல சிகிச்சையே கிடைக்​காமல், நோய் முற்றிய நிலையில் சாலைகளில் கைவிடப்பட்ட மனநோயாளி​களைக் கண்டறிந்து அவர்களுக்குச் சரியான சிகிச்​சையளித்து, அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இந்தப் பணிக்காகத் தமிழக அரசு சில அரசு சாரா நிறுவனங்​களுடன் சமீபத்தில் புரிந்​துணர்வு ஒப்பந்தம் இட்டிருக்கிறது. மாவட்டம் முழுக்க இப்படிப்பட்ட நோயாளி​களுக்கான மீட்பு மையங்களை அரசு தனியாக​வும், அரசு சாரா நிறுவனங்​களுடன் இணைந்தும் சமீப காலத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆரம்பத்​திலேயே சிகிச்சை:

  • இந்தியாவைப் பொறுத்​தவரை​யில், மனநோய்​களுக்​கும், அதற்கான சிகிச்​சைக்​குமான இடைவெளி மிக அதிகம். அதாவது, மனநலப் பிரச்சினை இருப்​பவர்​களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேருக்கு அதற்கான சிகிச்சையே கிடைப்​ப​தில்லை என்கிறது ஆய்வு. இந்த இடைவெளியைக் குறைத்து மனநலப் பிரச்​சினை​களை​யும், மன நோய்களையும் ஆரம்பத்​திலேயே கண்டறிந்து அவற்றுக்கான முழுமையான சிகிச்சையை அளிப்​பதும் தலைமை மனநல மருத்​துவ​மனையின் முக்கியமான பணி.
  • இந்த மனநலச் சேவையை மாநிலத்தின் அனைத்துப் பகுதி​களுக்கும் விரிவுபடுத்து​வதும் அதை ஒருங்​கிணைப்​பதும், மேற்பார்​வை​யிடு​வதும் அதன் பணியே. அதற்குத் தேவையான நிதி ஆதாரங்​களை​யும், மனித வளத்தையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை.
  • தமிழ்​நாட்டைப் பொறுத்​தவரையில் மாவட்ட மனநலத் திட்டங்கள் மிகவும் சிறப்​பாகச் செயல்​பட்டுக்​கொண்​டிருக்​கின்றன. மாவட்டத் தலைமை அரசு மருத்​துவமனை, ஆரம்பச் சுகாதார நிலையங்கள் என அனைத்து மருத்​துவ​மனை​களிலும் மனநலப் பிரச்​சினை​களுக்கான சிகிச்​சைகள் முழுமை​யாகக் கிடைக்​கின்றன. இந்தத் திட்டங்​களையும் சென்னை அரசு தலைமை மனநல மருத்​துவ​மனையே ஒருங்​கிணைக்​கிறது.

அரசு செய்ய வேண்டியவை:

  • ஒரு சமூகத்தின் மனநலத்தை மேம்படுத்துவது என்பது அரசுடன் கைகோத்து செய்ய​ வேண்டிய பணி. மாணவர் தற்கொலைகள் அதிகரிப்பது, போதைப் பழக்கம், பேரிடர்கள், வேலையிழப்பு, தொற்று​நோய், ஊரடங்கு, காலநிலை மாற்றம் போன்ற சமூக அவலங்​களினால் உருவாகக்​கூடிய மனநலப் பாதிப்புகள் மிகவும் மோசமானவை.
  • இவை தொடர்பாக அறிவியல்​பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்​வதும், அவற்றுக்கான தீர்வுகளை இந்த ஆய்வு​களின் அடிப்​படையில் பெறுவதும், அதை அரசுக்குப் பரிந்துரை செய்வதும் மிகவும் முக்கியமான பணி. மக்களின் மனநிலையை மேம்படுத்துவதன் வாயிலாகவே நம்மால் ஆரோக்​கியமான சமூகத்தைக் கட்டமைக்க முடியும். இதற்காக அதிசிறந்த உயர் படிப்பு​களை​யும், ஆராய்ச்​சிகளையும் முன்னெடுக்க வேண்டும்.
  • மாநில அரசு தலைமை மனநல மருத்​துவ​மனையே இந்தப் பணிகளைத் திறம்படச் செய்யவும் ஒருங்​கிணைக்​கவும் வேண்டும். இந்த நான்கு பணிகளும், (குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது பணிகள்) மாநில அரசின் கொள்கை முடிவுகளை நிர்ண​யிப்​பதில் முக்கியப் பங்கு வகிப்​ப​தால், அதை எந்தக் காலத்​திலும் தனியாரிடம் ஒப்படைப்பது சரியானதல்ல.
  • நீண்ட கால நோயாளி​களைப் பராமரிப்​ப​திலும், மனநலப் பிரச்​சினை​களுக்கான சிகிச்சையை வழங்கு​வ​தி​லும், அதை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்து​வ​திலும் அரசு தலைமை மனநல மருத்துவமனை மற்ற மாநிலங்​களுக்கு முன்னு​தா​ரணமாக இருக்​கிறது. ஆனால், அதிசிறந்த ஆராய்ச்​சிகளை முன்னெடுப்​ப​தி​லும், மனநல மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுப்​ப​தி​லும், அதற்கான நவீன அறிவியல்​பூர்வ ஆராய்ச்​சிகளை மேற்கொள்​வ​தி​லும், உயர் சிறப்புப் படிப்புகளை உருவாக்கு​வ​திலும் பல போதாமைகள் இருக்​கின்றன.
  • அதற்குக் காரணம் தேவையான கட்டமைப்பு வசதிகள் அங்கு இல்லை. அதனால்தான் நீண்ட காலமாக மனநலத் துறையில், ஓர் அதிசிறந்த (State of Art) நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்​து​வரு​கிறது. தற்போதைய அரசும்கூட அப்படி ஒரு திட்டத்தை முன்மொழிந்​திருக்​கிறது.
  • சமூக நீதியை​யும், விளிம்பு நிலை மக்​களின் நலனை​யும் அடிப்​படையாக ​கொண்​டிருக்​கும் இந்த அரசு, ஒரு​போதும் மனநல மருத்​துவமனை நிர்​வாகத்​தில் தனியாரை அனு​ம​திக்காது என நம்​பு​கிறோம். அமைச்​சரும் அதற்கு உறு​திஅளித்​திருப்​ப​தால், இந்த நம்​பிக்கை இன்​னும் வலுவடைந்​திருக்​கிறது. நம்​பிக்கை பலிக்க வேண்​டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்