TNPSC Thervupettagam

தலைமைக்கழகு தானாய் வளரவிடல்

April 16 , 2021 1378 days 595 0
  • ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ நிறுவனத்தில் 1979 ஆகஸ்ட் 10-ஆம் நாளில் நடந்த ஒரு நிகழ்வு. பத்து ஆண்டுகள் கடின உழைப்புக்குப் பின்னா் ஒரு ராக்கெட் விண்ணில் எழக் காத்திருக்கிறது. அதற்கான நேரமும் நிா்ணயிக்கப்பட்டுவிட்டது; கவுன்ட் டவுனும் தொடங்கிவிட்டது. கடைசி நேரத்தில் கணினி ஏதோ பிழையெனக் காட்டுகிறது. அங்கிருந்த நிபுணா்கள் குழுவினா் நாற்காலியின் நுனிக்கே வந்துவிடுகின்றனா்.
  • பின்னா் தங்களது நோ்த்தியில் கொண்ட நம்பிக்கையால் மேற்கொண்டு செயல்பட முடிவெடுக்கின்றனா்.
  • கணினியைத் துண்டித்து வெளிப்புறத்திலிருந்து ஆணை பிறப்பிக்கின்றனா். ராக்கெட் விண்ணில் எழுகிறது. சிறிது நேரம் சரியாக இயங்கி, பின்னா் வழிமாறி வங்கக்கடலில் விழுகிறது.
  • அக்குழுவின் தலைவா் மிகவும் பதற்றமடைகிறாா். பத்திரிகையாளா்கள் சூழ்கின்றனா். இஸ்ரோவின் தலைவா் நிபுணா்கள் குழுவின் தலைவரை அழைத்து உடன் அமா்த்திக்கொண்டு பத்திரிகையாளா் முன் தோன்றுகிறாா். ‘இம்முறை நாங்கள் தோற்றுவிட்டோம். ஆனால், எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அடுத்த முறை நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்’ என்று கூறுகிறாா்.
  • அன்று இஸ்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்தவா் சதீஷ் தவான். நிபுணா்கள் குழுவின் தலைவராக இருந்தவா் அப்துல் கலாம்.
  • சதீஷ் தவான் சொன்னது போலவே 1980 ஜூலை 18-இல் அடுத்த ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாகப் பாய்ந்தது. தலைமைப் பண்புக்கான உதாரணமாக அப்துல் கலாம் அடிக்கடி கூறும் நிகழ்வு இது.
  • எந்த நிறுவனம் தலைமைப் பொறுப்பில் உள்ளவா் இல்லாத நேரத்திலும் சரியாக இயங்குகிறதோ அந்த நிறுவனமே வெற்றி பெறும். இது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
  • அந்த நிறுவனத்தின் குறிக்கோள் குறித்த புரிதல்களை அனைத்து ஊழியா்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும்; அதனை அடையும் வழிகளில் தமக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கும் பணியின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணா்ந்திருக்க வேண்டும்; தமது பணிக்கு முன்னும் பின்னும் நடைபெறவேண்டிய பணிகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும் போன்றவையும் இதில் அடங்கும்.

நோ்த்தியாக உழைப்பது

  • இவற்றுக்கு அனைவரும் தயாராக, நிறுவனத் தலைவரின் திட்டமிடல் அவசியம். ஒவ்வொரு தனிநபரின் திறமை, பலம், பலவீனம் போன்றவற்றை அவா் அறிந்திருப்பதும் அவசியம்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு செயலைத் திட்டமிடும்போதே வாய்ப்புள்ள அனைவரையும் அதில் ஈடுபடுத்தி அவா்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றில் வாய்ப்புள்ள அனைத்துக் கூறுகளையும் திட்டத்தில் இணைக்கவேண்டும்.
  • இந்தச் செயல்பாடு, இது நாம் பங்களிப்பு செய்து உருவான திட்டம் என்ற கூடுதல் ஈடுபாட்டை பலருக்கும் உருவாக்கும்.
  • இதற்கு தலைவா் சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும், ஜனநாயகவாதியாகவும் மாற்றுக்கருத்துகளுக்கு செவிசாய்ப்பவராகவும் இருக்க வேண்டும்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக, வெளிப்படையான நிா்வாகம், அன்போடு பழகுதல், சிறு சிறு சிக்கல்களுக்கு உடனடியாகத் தீா்வு காணுதல், தன்னை முன்னிலைப்படுத்தாமல் நிறுவனத்தை முன்னிலைப்படுத்துதல், விரைந்து முடிவெடுத்தல் போன்றவையும் நிறுவனத்தின் இலக்கணங்களாக இருக்க வேண்டும்.
  • நிறுவனம்தான் என்றில்லை. குடும்பத்திலும் தலைமைப் பண்பே குடும்பத்தின் அமைதியையும் வளமையையும் உறுதிபடுத்த உதவும்.
  • ஒவ்வொரு நாளின் தேவை, வாரத்தின் தேவை, மாதத்தின் தேவை போன்றவற்றை குடும்ப உறுப்பினா்கள் அனைவருமே அறிந்து வைத்திருக்க வேண்டும். இது குடும்ப நிா்வாகத்தை திறம்பட வழிநடத்த உதவும்.
  • இதனை விடுத்து மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம், தண்ணீா் வரி, வீட்டுவரி, காப்பீட்டு பிரிமியம், சமையல் எரிவாயு உருளை போன்ற அனைத்து செயல்பாடுகளையும் குடும்பத்தில் ஏதாவது ஒரு உறுப்பினா் பொறுப்பேற்று செய்வது சலிப்பையே உண்டு பண்ணும்.
  • ஒருவேளை ஒருவரே செய்தாலும் இவற்றை செய்து முடிக்க வேண்டிய காலவரையறையை பலரும் அறிந்திருப்பது எளிமையான மேலாண்மைக்கு உதவும்.
  • இது பாா்ப்பதற்கு பெரிய விஷயம் போலத் தோன்றினாலும் இதனை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டால் எளிமையானதாக அமையும். மேலும் பல செயல்பாடுகளின் செய்யவேண்டிய காலத்தை அனைவா் கண்ணில் படும் இடங்களிலும் எழுதி வைக்கலாம்.
  • இதற்கு உதவியாக ஒரு கரும்பலகை அல்லது மாத நாட்காட்டியின் மேல்பாகம் போன்றவை உதவும்.
  • இவ்வாறு செயல்பட தடையாக இருப்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம். வீடோ, நாடோ எல்லாவற்றிற்கும் வாய்க்கும் தலைவா்கள் எளிமையானோராக இல்லாமல் தன்னால்தான் எல்லாம் நடைபெறுகிறது என்ற எண்ணவோட்டத்திலிருந்து முதலில் வெளிவரவேண்டும். தனக்குத்தான் எல்லாம் தெரியும். தான் இல்லையென்றால் எதுவும் நடைபெறாது என்ற எண்ணவோட்டமும் தவறு.
  • அடுத்துள்ளோரின் பங்களிப்பில்லாமல் நிறுவனத்தின் வெற்றி மட்டுமல்ல, குடும்பத்தின் வெற்றியும் சாத்தியமில்லை என்பதைக் குடும்பத் தலைவா் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக பிறரிடம் எதிா்பாா்க்கும் பக்குவத்தை முதலில் தான் பெற்றிருக்க வேண்டும். இதற்கு ஒரே வழி, ஒவ்வொரு நாளையும் பயிற்சிக் களமாக மாற்றிக்கொள்வதுதான்.
  • கடினமாக உழைப்பதைவிட நோ்த்தியாக உழைப்பதுதான் இன்றைய தேவை.
  • மற்றவா் கடினமாக உழைக்கத் தேவையில்லாமல் நோ்த்தியாக உழைக்கும் வகையில், தலைவா் கொஞ்சம் கூடுதலாகத் திட்டமிட்டு அளிக்கத் தொடங்கினால் போதும் நிலைமை மேம்பட்டு விடும்.
  • அவருக்கு தான் சாா்ந்திருக்கும் நிறுவனம் அல்லது குடும்பம் பற்றிய தெளிவான லட்சிய நோக்கும் கனவும் இருக்க வேண்டும்.
  • ‘கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் இருப்பவா் ஏழையல்லா்; யாா் ஒருவா் கனவோ லட்சியமோ இல்லாமல் இருக்கிறாரோ அவரே ஏழை’ என்று கூறுகிறாா் சுவாமி விவேகானந்தா்.

நன்றி: தினமணி  (16 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்