TNPSC Thervupettagam

தலைமைச் செயலகத்தில் தபால்கள் இனி எண்மமயம்! காகித வடிவம் இல்லை

September 25 , 2024 112 days 102 0

தலைமைச் செயலகத்தில் தபால்கள் இனி எண்மமயம்! காகித வடிவம் இல்லை

  • தலைமைச் செயலகத்துக்கு வரும் தபால்கள் அனைத்தும் மின்மயமாக்கப்பட உள்ளன. தபால் பிரிவிலேயே அவை மின்மயமாக்கப்படுவதால், தலைமைச் செயலக அரசுத் துறைகளுக்குள் தபால்கள் இனி காகித வடிவத்தில் இருக்காது. இதற்கான உரிய திருத்தங்கள் தமிழ்நாடு தலைமைச் செயலக அலுவலக நடைமுறைக் குறிப்பில் செய்யப்பட்டுள்ளன.
  • தமிழ்நாட்டில் தலைமைச் செயலகம், அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் கோப்புகளை கையாளும் முறை மின்மயமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசின் இதயமாகக் கருதப்படும் தலைமைச் செயலகத்தின் பெரும்பாலான கோப்புகள் கணினி வழியிலேயே உருவாக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் இருந்து தலைமைச் செயலகத்துக்கு வரும் லட்சக்கணக்கான கோப்புகளை மின்மயமாக்கும் திட்டம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறை செயலா் கே.நந்தகுமாா் பிறப்பித்துள்ளாா்.
  • இந்த உத்தரவுப்படி, தமிழ்நாடு முழுவதும் இருந்து தலைமைச் செயலகத்துக்கு வரும் தபால்கள், சம்பந்தப்பட்ட துறையால் முழுமையாக ‘ஸ்கேன்’ செய்யப்படும். இந்தத் தபாலுக்கான ரசீது, மின்னணு வடிவில் உருவாக்கப்படும். நீதிமன்ற உத்தரவுகளைத் தவிா்த்து மற்ற தபால்கள் அனைத்தும் ஒவ்வொரு அரசுத் துறையிலும் உள்ள தபால் பிரிவிலேயே வைத்துக் கொள்ளப்படும். இந்தத் தபால்கள் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு காகித வடிவில் அனுப்பி வைக்கப்படாது. கணினி வழியே மின்னணு முறையில் தபால் அனுப்பப்படும். இதைத் தொடா்ந்து, ஒரு மாதத்துக்குப் பிறகு காகித வடிவிலான தபால்கள் முற்றிலும் அழிக்கப்படும்.

அசல் சான்றுகள்:

  • தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து தலைமைச் செயலகத்தில் உள்ள அரசுத் துறைகளின் தபால் பிரிவுகளுக்கு வெறும் கடிதங்கள் மட்டும் பெறப்படுவதில்லை. அசல் சான்றிதழ்கள், ஆவணங்கள், உத்தரவுகள் மற்றும் மின்னணு சாதனங்களான சி.டி.-க்கள், பென்-ட்ரைவ்கள் ஆகியனவும் தபால் மூலமாகப் பெறப்படுகின்றன.
  • கடிதங்களுடன் இதுபோன்ற ஆவணங்கள் இணைத்து அனுப்பப்பட்டு இருந்தால் அவற்றை தலைமைச் செயலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட துறைகளின் உதவிப் பிரிவு அலுவலா், பிரிவு அலுவலா் ஆகியோரிடம் அளிக்க வேண்டும்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம்:

  • தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைக் கோரி தலைமைச் செயலகத்துக்கு தபால்கள் அனுப்பப்படுவது வழக்கம். அதுபோன்ற விண்ணப்ப தபால்களுடன், கட்டணத் தொகை ஏதேனும் அனுப்பப்பட்டு இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலரிடம் அளிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் கே.நந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.
  • மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அனுப்பப்படும் லட்சக்கணக்கான கடிதங்கள் தபால் மூலம் தலைமைச் செயலகத்தில் பெறும் போது காகிதங்களின் பயன்பாடு அதிகரிப்பதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். அவற்றை மின்மயமாக்கும் போது, அரசுத் துறைகளின் பல்வேறு பிரிவுகளிடம் லட்சக்கணக்கான காகிதங்கள் புழங்குவது தவிா்க்கப்படும்.
  • மேலும், பொது மக்களின் கடிதங்கள் மின்மயமாக்கப்படும் போது, அதனடிப்படையில் கோப்புகளையும் கணினி வழியிலேயே உருவாக்குவது எளிதாக இருக்கும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

இப்போதைய நடைமுறை என்ன?

  • தலைமைச் செயலகம் உள்பட தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வரக் கூடிய தபால்களைப் பெற்று பிரிப்பதற்கென தனியாக தபால் பிரிவு உள்ளது. இந்தப் பிரிவிலுள்ள அலுவலா்கள் தபால்காரா்கள் கொண்டு வரக்கூடிய தபால்களைப் பிரித்து அதன் விவரங்களை தனியான குறிப்பேட்டில் எழுதுவாா்கள். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அதை எடுத்துச் சென்று தபால்களை வழங்கி அதைப் பெறக் கூடிய அலுவலரிடம் சான்றொப்பம் பெறுவா். அரசு அலுவலகங்களில் இருக்கக் கூடிய இந்த ‘தபால் துறை’ நடைமுறை இனி இருக்காது.
  • தபால்காரா்கள், கூரியா் நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் அளிக்கக் கூடிய கடிதங்கள் மின்மயமாக்கப்படுவதால், தலைமைச் செயலகத்தின் அரசுத் துறைகள், அலுவலகங்களுக்குள் செயல்பட்டு வந்த ‘மினி தபால் அலுவலக’ நடைமுறை இனி இருக்காது. இந்தப் புதிய நடைமுறை மாநிலத்தின் பிற அரசு அலுவலகங்களிலும் விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நன்றி: தினமணி (25 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்