TNPSC Thervupettagam

தலைமைச் செயலரை ஒன்றிய அரசு திரும்பப்பெற முடியுமா

May 31 , 2021 1335 days 549 0
  • மே 28 அன்று அலுவலர்கள் துறை அமைச்சகத்தின் கீழ் டெல்லியின் நார்த் ப்ளாக்கில் உள்ள ‘அலுவலர்கள் மற்றும் பயிற்சிக்கான துறை’யானது வங்கத்தின் தலைமைச் செயலர் ஆலாபன் பந்தோபாத்யாயை இன்று ஆஜராகும்படி ஆணையிட்டிருக்கிறது.
  • யாஸ் புயலைப் பற்றி கலைகுண்டாவில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ தவிர்த்ததாகக் கூறப்பட்டதன் சில மணி நேரத்துக்குப் பிறகு இந்த உத்தரவு வந்தது.
  • மம்தா இந்தக் குற்றச்சட்டை மறுத்திருக்கிறார். புயலைப் பற்றி விரிவான அறிக்கையைப் பிரதமரிடம் தான் கொடுத்திருப்பதாகவும் அவருடைய அனுமதியை மூன்று முறை கோரிய பிறகு, டிகாவில் பந்தோபாத்யாயுடன் இன்னொரு சந்திப்புக்குச் சென்றதாகவும் மம்தா கூறியுள்ளார்.

பந்தோபாத்யா

  • இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954-ன் சட்டப் பிரிவுகளின் கீழ் அமைச்சரவையின் பணி நியமனக் குழு பந்தோபாத்யாயிக்குப் பணிநியமனம் வழங்கியிருப்பதாக அந்த உத்தரவு கூறுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் கூறுகிறது.
  • அந்தக் குழுவுக்குப் பிரதமர்தான் தலைவர், அதில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உறுப்பினராக இருக்கிறார். 1987 பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பந்தோபாத்யாய் இதுவரை ஒன்றிய அரசின் கீழ் பணிபுரிந்ததில்லை. அவர் இன்று ஓய்வுபெறவிருக்கிறார்.
  • முன்னதாக, மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு மூன்று மாதப் பணி நீட்டிப்பை ஒன்றிய அரசு வழங்கியிருக்கிறது.

‘அலுவலர்கள் மற்றும் பயிற்சிக்கான துறை’ என்ன விதிமுறையை மேற்கோள் காட்டியிருக்கிறது?

  • அமைச்சரவையின் பணிநியமனக் குழு பந்தோபாத்யாயின் டெல்லி பணிமாற்றத்துக்கு ஐஏஎஸ் (கேடர்) விதிமுறைகள், 1954-ன் விதி 6(1)-ன் கீழ் ஒப்புதல் அளித்துள்ளது என்று ‘அலுவலர்கள் மற்றும் பயிற்சிக்கான துறை’யின் உத்தரவு கூறுகிறது.
  • ஒரு ஐஏஎஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசு ஆகியவற்றின் ஒப்புதலுடன் ஒன்றிய அரசின் பணிகளுக்கோ அல்லது மற்றுமொரு மாநிலத்துக்கோ பணிமாற்றம் செய்யப்படலாம் என்று அந்த விதிமுறை கூறுகிறது.
  • எனினும், ‘கருத்துவேற்றுமை ஏற்பட்டால் அது ஒன்றிய அரசால் முடிவுசெய்யப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது அரசுகள் ஒன்றிய அரசின் முடிவை அமல்படுத்த வேண்டும் என்றும்’ அந்த விதிமுறை கூறுகிறது.

இந்த விதிமுறைகள் எப்போது உருவாக்கப்பட்டன?

  • அனைத்திந்தியப் பணிகள் சட்டம், 1951 உருவான பிறகு, ஐஏஎஸ் அதிகாரிகள் விதிமுறைகள் 1954-ல் உருவாக்கப்பட்டன. பணிமாற்றத்தைப் பொறுத்தவரை அதிக அதிகாரங்களை ஒன்றிய அரசுக்குக் கொடுக்கும் குறிப்பிட்ட விதிமுறையானது 1969-ல் சேர்க்கப் பட்டது.

இதுவரையிலான நடைமுறை என்ன?

  • அனைத்திந்தியப் பணிகளுக்கான அதிகாரி எவரும் மாநில அரசிலிருந்து ஒன்றிய அரசுக்குப் பணிமாற்றம் செய்யப்படும் முன் அவரது கருத்து பெறப்பட வேண்டியது அவசியம்.
  • ‘அலுவலர்கள் மற்றும் பயிற்சிக்கான துறை’யின் நிறுவன அதிகாரி (Establishment Officer) மாநில அரசுகளிடமிருந்து நியமனப் பரிந்துரைகளை வரவேற்பார்.
  • பரிந்துரை கிடைத்தவுடன் அந்த அதிகாரிகளின் தகுதி ஒரு குழுவால் சீர்தூக்கிப் பார்க்கப்பட்ட ஒரு பட்டியல் தயாரிக்கப்படும்.
  • வழக்கமாக, மாநில அரசும் இதில் பங்கேற்கும். ஒன்றிய அரசின் அமைச்சகங்களும் அலுவலகங்களும் இந்தப் பட்டியலிலிருந்து அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
  • அனைத்திந்தியப் பணிகளுக்கான அதிகாரிகள் ஒன்றிய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநிலங்களுக்கு வழங்கப்படுவார்கள். மாநில அரசு அதிகாரிகள் யாரும் ஒன்றிய அரசின் கீழ் பணிபுரிய முன்வருவதில்லை என்று தெரிந்த பின் 2018-ல் அலுவலர்கள் மற்றும் பயிற்சிக்கான துறை தனது இணையதளத்தில் பட்டியல் வெளியிடுவதை நிறுத்திக் கொண்டது.

தற்போதைய உத்தரவு முன்னுதாரணமில்லாததா?

  • அமைச்சரவைச் செயலகத்தின் முன்னாள் சிறப்புச் செயலர் வப்பல பாலச்சந்திரனைப் பொறுத்த வரை இந்த உத்தரவானது முன்னுதாரணமற்றது மட்டுமல்ல; பழிவாங்கும் நோக்கிலானதும் கூட. “சட்டபூர்வமாகச் சொல்வதென்றால் ஒன்றிய அரசுதான் அறுதி அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது.
  • ஆனால், ஒரு அதிகாரியின் விருப்பத்துக்கு எதிராக அவருக்குப் பணிமாற்றம் செய்யக் கூடாது என்ற மரபும் இருக்கிறது. இந்த உத்தரவு ஒருதரப்பானது மட்டுமல்ல; ஒழுங்கற்ற நடவடிக்கையும்கூட. அவருக்கு உரிய நீட்டிப்பு வழங்கிய பிறகு அரசு இப்படிச் செய்திருப்பது அழகல்ல.
  • இந்த அதிகாரி மே 31-ல் ஓய்வுபெறுவதால், அவர் ஒன்றிய அரசுப் பணியில் இணைந்து கொள்ள மறுத்துவிட்டால் ஓய்வுபெற்ற அதிகாரி மீதான தன் உரிமையை அரசு பிரயோகிக்குமா?” என்று பாலச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • முன்னதாக 2020 டிசம்பரில் வங்கப் பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான ராஜீவ் மிஸ்ரா, பிரவீன் குமார் திரிபாதி, போலனாந்த் பாண்டே ஆகிய மூவரையும் உள்துறை அமைச்சகம் ஒன்றிய அரசின் கீழ் நியமனம் வழங்கியது. ஆனால், மாநில அரசு அவர்களை விடுவிக்கவில்லை.
  • டைமண்டு துறைமுகப் பகுதியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தாக்கப்பட்ட பிறகு இந்த நியமன உத்தரவு வந்தது. ஐபிஎஸ் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்துறை அமைச்சகத்திடம் இருக்கிறது.

உத்தரவுக்கு இணங்க அதிகாரி மறுத்தால் என்ன நடக்கும்?

  • இதுபோன்ற விஷயங்களில் தண்டனை என்ன என்பது பற்றி ‘அனைத்திந்தியப் பணிகளுக்கான (ஒழுக்கம், முறையீடு ஆகியவற்றுக்கான) விதிமுறைகள், 1969’ தெளிவாகக் கூறவில்லை.
  • ஒரு அதிகாரி ‘மாநில அரசின் விவகாரங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது’ அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கும் அபராதம் விதிப்பதற்குமான அதிகாரம் மாநில அரசிடமே இருக்கிறது என்று விதிமுறை 7 கூறுகிறது.
  • பந்தோபாத்யாய் இன்று ஓய்வுபெறுவதாலும் அவர் ஒன்றிய அரசின் பணியில் இல்லாததாலும் இந்த விவகாரம் விசித்திரமானது. ஒன்றிய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அதற்கு மாநில அரசு கடிதம் எழுதலாம்.
  • இந்த உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் என்று ஒன்றிய அரசைத் தான் கேட்டுக் கொண்டிருப்பதாக சனிக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மம்தா கூறினார்.
  • விசாரணை நடத்தும்படி மாநில அரசை ஒன்றிய அரசு கேட்டுக்கொள்ளலாம் அல்லது அசாதாரணமான விவகாரம் என்று கூறி ஒன்றிய அரசே விசாரணை நடத்தலாம் என்று ஒரு அரசு அதிகாரி கூறினார். மாநில முதல்வரின் உத்தரவுகளின் படியே தான் நடந்து கொண்டதாக அந்த அதிகாரி முறையிடலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்