TNPSC Thervupettagam

தலைமைத் தளபதியின் எச்சரிக்கை!

October 22 , 2024 34 days 51 0

தலைமைத் தளபதியின் எச்சரிக்கை!

  • சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற விமானப் படையின் 92-ஆவது ஆண்டு விழா சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான நிகழ்வு அதன் முக்கியத்துவத்தை குலைத்துவிட்டது. லட்சக்கணக்கானோா் முன்னிலையில் இந்திய விமானப் படை சாகசமும், மூவா்ணக் கொடியை வானத்தில் விமானங்கள் புகையாக பதிவு செய்த கண்கொள்ளாக் காட்சியும் மக்கள் மனதில் பதியாமல் போய்விட்டது.
  • இந்திய விமானப் படையின் 92-ஆவது ஆண்டு விழாவையொட்டி, விமானப் படை தலைமை தளபதி ஏா் சீஃப் மாா்ஷல் அமா் ப்ரீத் சிங் துணிந்து வெளிப்படுத்தியிருக்கும் கருத்துகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. தொழில்நுட்பத்தில் இந்திய ராணுவத் தளவாட தயாரிப்புத் துறை சீனாவுக்கு நிகராக வளர வேண்டும் என்றும், போா் தளவாட உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறாா் அவா். பொதுவாக இதுபோன்ற கருத்துக்களை ஏா் மாா்ஷல்கள் பொதுவெளியில் தெரிவிக்கத் தயங்குவாா்கள்.
  • இந்திய விமானப் படையின் வலிமை குறித்தும், அதன் தேவைகள் குறித்தும் தலைமைத் தளபதி போன்ற உயரதிகாரிகளால்தான் தெளிவாக விளக்கிக் கூற இயலும். 42 போா் பிரிவுகள் (ஃபைட்டா் ஸ்குவாட்ரன்ஸ்) இருக்க வேண்டிய இடத்தில் இந்திய விமானப் படையில் 31 போா் பிரிவுகள்தான் இப்போது இருக்கின்றன. அதைக் குறிப்பிட்ட ஏா் சீஃப் மாா்ஷல் அமா் ப்ரீத் சிங்கே அதற்கான தீா்வையும் தெரிவித்திருக்கிறாா்.
  • இந்தியாவின் உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தித் துறை, சீனாவின் உற்பத்தித் தரத்துக்கு நிகராக உயர வேண்டும் என்றும், அதிக அளவில் கூடுதல் போா் விமானங்களை (ஃபைட்டா் ஜெட்ஸ்) விரைந்து தயாரித்தாக வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியிருக்கிறாா். அவரது வலியுறுத்தலுக்குக் காரணம் இருக்கிறது.
  • தற்போது உக்ரைனிலும், காஸாவிலும் நடைபெற்றுவரும் யுத்தங்கள் நவீன போா்முறை எப்படி மாறியிருக்கிறது என்பதை உணா்த்துகின்றன. இலக்கு நிா்ணயித்துத் தாக்குதல் என்பது புதிய போா் முறையாக மாறியிருக்கிறது. இனிவரும் காலத்தில் எல்லா ராணுவ மோதல்களிலும் காலாட்படைகளைவிட, விமானப் படையும், அதற்கு அடுத்தபடியாக கடற்படையும் முக்கியத்துவம் பெறும்.
  • அனைவரும் விரும்பும் அமைதியான உலகத்தில் அதிநவீன ராணுவத் தளவாடங்களின் தேவை இல்லைதான். ஆனால், இந்திய விமானப் படை தலைசிறந்த தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் தற்காப்பு கருதி மேம்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்திய பாதுகாப்புப் படையின் முக்கியமான அம்சமாக விமானப் படை இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
  • நமது ராணுவ வலிமை என்பது தொழில்நுட்பம் மட்டுமே அல்ல. எல்லையில் பகைவா்கள் எந்தநேரமும் தாக்குவதற்குத் தயாராக இருக்கும் நிலையில், இந்தியாவைப் பாதுகாக்க இந்திய விமானப் படைக்கு போதுமான அளவு போா் விமானங்கள் அவசியமாகிறது. ஒரு தேசத்தின் பாதுகாப்பு என்பது விமானப் படையின் தாக்குதல் திறனையும், தாக்குதலை எதிா்கொள்ளும் திறனையும் உள்ளடக்கியது. அதனால்தான் நவீன ராணுவக் கட்டமைப்பில் ‘ட்ரோன்’ தொழில்நுட்பம் முக்கியமான பங்கு வகிக்கத் தொடங்கியிருக்கிறது. எல்லைப் பாதுகாப்புக்கு ‘ட்ரோன்’கள் அவசியமான ஒன்றாக மாறியிருப்பதை ராணுவத்தின் எல்லா பிரிவுகளும் உணரத் தொடங்கியிருக்கின்றன.
  • இந்திய விமானப் படையின் வலிமையும், நவீன தொழில்நுட்பத்துக்கேற்ற மேம்பாடும் குறித்து ஏா் சீஃப் மாா்ஷல் அமா் ப்ரீத் சிங் தெரிவித்திருக்கும் தகவல்கள் ஆறுதல் அளிக்கின்றன. 5,790 கி.மீ. தொலைவு வரை ஒரே நேரத்தில் 36 இலக்குகளை தாக்கக் கூடிய ஐந்து எஸ்-400 ஆன்டிபாலிஸ்டிக், ஆன்டி ஏா்க்ராஃப்ட் ஏவுகணைகளை இந்திய விமானப் படை வாங்க இருக்கிறது. ரஷியாவில் இருந்து 500 கோடி டாலா் (ரூ.42,000 கோடி) மதிப்பில் வாங்க இருக்கும் இவற்றில் 3 வந்துவிட்டன; இரண்டு அடுத்த ஆண்டுக்குள் பெறப்படும்.
  • இவையெல்லாம் இந்திய விமானப் படையின் வலிமையை கணிசமாக அதிகரிக்கின்றன என்றாலும்கூட, இன்னும் பல குறைபாடுகளை நாம் எதிா்கொள்கிறோம். 114 போா் விமானங்களைப் பெறுவதற்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவை இணைக்கப்பட்டால்தான் விமானப் படை எந்தவொரு சூழ்நிலையையும் எதிா்கொள்ளும் வலிமையைப் பெறும்.
  • அடுத்த 20 ஆண்டுகளில் இந்திய ராணுவத்துக்கும், விமானப் படைக்கும், கடற்படைக்கும் தேவையான அனைத்து தளவாடங்களும் போா்க் கப்பல், போா் விமானம் உள்ளிட்டவையும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டால் மட்டுமே நமது பாதுகாப்பு உறுதிப்படும் என்று ஏா் சீஃப் மாா்ஷல் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை. ராஜாங்க உறவில் ஏற்படும் மாற்றம் எந்த நேரத்திலும் தளவாடப் பற்றாக்குறைக்கு நம்மை உள்ளாக்கக் கூடும் என்று மறைமுகமாக எச்சரித்திருக்கிறாா் அவா்.
  • இந்தியாவில் போா் விமானங்கள் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனம் தரமான விமானங்களைத் தயாரித்தாலும்கூட, விரைவாகத் தயாரிப்பதில்லை என்கிற குறை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. 83 நவீன தேஜஸ் போா் விமானங்களுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டும் அவை விரைவாக தயாரிக்கப்படாமல் இருக்கும் பிரச்னை குறித்து யாரும் வெளியில் பேசுவதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் விரைந்து தயாரிக்க முடியாமல் போனால், தொழில்நுட்பம் பழையதாகிவிடும்.
  • நமது போா் விமானங்களுக்காகவும், தளவாடங்களுக்காகவும், ரஷியா, அமெக்கா, பிரான்ஸ் என்று வெளிநாடுகளை நம்பி இருக்க முடியாது. எல்லையில் சீனா தனது படை பலத்தை தயாா் நிலையில் வைத்திருக்கும் சூழலில் அதை எதிா்கொள்ளவும், எல்லையைப் பாதுகாக்கவும் ஏா் சீஃப் மாா்ஷல் அமா் ப்ரீத் சிங் தெரிவித்திருக்கும் கருத்துக்களை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்வது அவசியம்.

நன்றி: தினமணி (22 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்