- சுதந்திர தினத்தின்போது பிரதமர் ஆற்றிய உரையில் ‘முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி உருவாக்கப்படும்’ என்று அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. இந்தியாவின் ராணுவ பலத்தை வலுப்படுத்தவும் முப்படைகளின் வியூகங்கள், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கவும் இப்படி ஒரு பதவி தேவை என்கிற அளவில் மிக முக்கியமான நகர்வு இது; அதே அளவுக்கு அதிகார வரையறை அளவில் ஜாக்கிரதையாக மேற்கொள்ள வேண்டிய நகர்வும்கூட.
- கார்கில் போரின் தொடர்ச்சியாக இந்திய அரசுக்கு வந்த முக்கியமான யோசனைகளில் ஒன்று இது. அந்தப் போருக்குப் பிறகு, கார்கில் மறுஆய்வுக் குழு முப்படைத் தலைமைத் தளபதி என்றொரு பதவியை உருவாக்க வேண்டும் என்று தீவிரமாகப் பரிந்துரைத்தது. இதற்குக் காரணம் உண்டு. ஏனெனில், ஊடுருவல் நடந்து இரண்டு வாரங்கள் கழித்தே பதில் நடவடிக்கைகளை இந்திய விமானப் படை எடுத்தது. அப்போதைய தரைப்படைத் தளபதி வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தார். தரை நிலவரங்களைப் புரிந்துகொள்வதில் குழப்பம் இருந்தது, தகவல்கள் சரிவரப் பரிமாறிக்கொள்ளப்படவில்லை, ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவதா விமானங்களைப் பயன்படுத்துவதா என்பதில் தரைப்படைக்கும் விமானப்படைக்கும் இடையே தகராறு வேறு. கூடவே, யார் பெரிய ஆள் என்ற பிரச்சினை வேறு இருந்தது.
முரண்பாடுகள்
- முப்படைகளுக்குள் எப்போதுமே முரண்பாடுகள் இருந்துவந்திருக்கின்றன; ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் இடையிலான பணி முரண்பாடுகள்போலத்தான் இதுவும் என்றாலும், இதை அப்படியே கவனிக்காமல் புறந்தள்ளுவது சரியல்ல என்பதையே கார்கில் போர் அனுபவம் நமக்குச் சொன்னது. ஆனால், இப்படி ஒரு யோசனையைச் செயலாற்றுவதற்கு 20 ஆண்டுகள் நமக்குத் தேவைப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் பிரதமரின் அறிவிப்பு வரவேற்புக்குரியதும் பாராட்டுக்குரியதும் ஆகும்.
- அரசு இதில் எதிர்கொள்ளவிருக்கும் முக்கியமான சவால் என்னவென்றால், முப்படைகளின் தலைவருக்கு என்ன மாதிரியான அதிகாரங்களை அளிக்கப்போகிறது என்பதுதான். ஏனென்றால், முப்படைகளின் தளபதிகளுக்கும் அடுத்து நேரடியாக முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர் என்கிற ஒரு அரசமைப்பை நாம் பெற்றிருப்பதற்குப் பின் வலுவான நியாயங்களும், தொலைநோக்கும் உண்டு. இந்தியாவின் முப்படைகளும் எப்போதும் மக்கள் வழி மக்கள் பிரதிநிதிகளின் வழி தேர்ந்தெடுக்கப்படும் ஒரு தலைமையின் கீழ் செயல்பட வேண்டும்; எந்த வகையிலும் நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரத்தை ராணுவம் கையில் எடுக்கும் சூழல் உருவாகிவிடக் கூடாது என்பதே அது.
ராணுவப் புரட்சி
- ராணுவப் புரட்சிகள் நடந்த வரலாறுகளை எல்லாம் படித்தால், இந்த ஏற்பாட்டின் பின்னுள்ள ஜாக்கிரதை உணர்வு புலப்படும். ஆக, தலைமைத் தளபதியின் பதவியின் எல்லை, பதவிக்காலம், யார் இந்தப் பதவியில் இருப்பார்கள் என்பதையெல்லாம் வரையறுக்கும்போது, இந்த விஷயத்தில் பிரதான அக்கறை கொள்வது அவசியமும் முக்கியமும் ஆகும். முப்படைகளையும் வலுவடைய வைக்கும் நகர்வாக மட்டும் அல்லாமல், ஜனநாயகத்துக்கும் பாதிப்புகள் ஏதும் நேர்ந்திடாவண்ணம் இந்த அதிகாரப் பகிர்வு நடக்கட்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை(28-08-2019)