TNPSC Thervupettagam

தள்ளாடும் புதுவை...

May 14 , 2021 1174 days 509 0
  • நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் வாக்களித்தும்கூட, இன்னும் அங்கு புதிய அரசு செயல்படத் தொடங்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
  • இந்திய யூனியனில் இணைந்த ஒன்றியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு எட்வா்ட் குபோ் தலைமையில் 1963 ஜூலை 1-ஆம் தேதி புதுச்சேரியில் அரசு அமைந்தது முதலே தொடா்ந்து பலமுறை ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்திருப்பதால் இப்போதைய திரிசங்கு நிலை ஒன்றும் புதிதல்ல.
  • 30 உறுப்பினா்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது.
  • அகில இந்திய என்.ஆா். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.
  • அதன் அடிப்படையில்தான் அகில இந்திய என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என். ரங்கசாமி நான்காவது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை தான் மட்டும் முதல்வராகப் பதவி ஏற்றார்.
  • மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் திமுக ஆறு இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஏனைய ஆறு இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால் அங்கு எந்தவிதக் குழப்பத்துக்கும் முகாந்திரம் இல்லை.
  • கடந்த முறையும் காங்கிரஸ் தலைமையில் நிலையான ஆட்சிதான் அமைந்தது. காங்கிரஸும், திமுகவும் அவையில் பெரும்பான்மை பலம் பெற்றிருந்தும்கூட, அப்போதைய துணை நிலை ஆளுநா் கிரண் பேடிக்கும், அன்றைய முதல்வா் வே. நாராயணசாமிக்கும் இடையிலான பனிப்போர் நிர்வாகத்தை ஏறத்தாழ முடக்கிப் போட்டிருந்தது.
  • கடந்த 2016-இல் தொடங்கிய மோதல், வே. நாராயணசாமி அரசு கலைக்கப்படும் வரை தொடா்ந்தது. அதன் விளைவுதானோ என்னவோ கடந்த முறை 15 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, இந்த முறை வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
  • மத்திய அரசுடனும், துணை நிலை ஆளுநருடனும் இணக்கமான உறவு இல்லாததால் முந்தைய காங்கிரஸ் ஆட்சி சரியாக இயங்க முடியவில்லை என்பதால்தான் இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி அமைத்திருந்த என்.ஆா். காங்கிரஸுக்கு மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்தனா்.

அரசின் ஸ்திரத்தன்மை

  • தோ்தலின்போது இணைந்து பணியாற்றிய என்.ஆா். காங்கிரஸும், பாஜக-வும் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைத்த வேளையில் இரு கட்சிகளுக்கிடையே கருத்தொற்றுமை இல்லாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
  • இதுவரை இல்லாத புதிய வழிமுறையாக புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் தங்களுக்கு துணை முதல்வா் பதவி வழங்க வேண்டும் என்கிற பாஜக-வின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முதல்வா் ரங்கசாமி தயங்குவதாகத் தெரிகிறது.
  • இந்த கருத்து வேறுபாடு காரணமாகத்தான், முதல்வரின் பதவிப் பிரமாணம் முதலில் தள்ளி வைக்கப்பட்டது.
  • இதற்கிடையில், கொவைட் 19 கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட முதல்வா் என். ரங்கசாமி, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • அவருடன் கலந்தாலோசிக்காமல் பாஜகவைச் சோ்ந்த மூன்று பேரை நியமன எம்எல்ஏ-க்களாக துணை நிலை ஆளுநா் நியமித்திருக்கிறார்.
  • பாஜக-வின் தன்னிச்சையான அந்த முடிவு, கூட்டணிக் கட்சிகளான என்.ஆா். காங்கிரஸையும் அதிமுக-வையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
  • ஏற்கெனவே ஆறு இடங்களைப் பெற்றிருக்கும் பாஜக-வின் சட்டப்பேரவை உறுப்பினா் பலம் மூன்று நியமன உறுப்பினா்களையும் சோ்த்தால் ஒன்பதாக அதிகரிக்கிறது.
  • ஆறு சுயேச்சைகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவா்களில் மூன்று போ் ஏற்கெனவே பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படும் நிலையில், பாஜக-வின் பலம் 15-ஆக அதிகரித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
  • அப்படிப்பட்ட சூழலில் பாஜக-வுக்கு துணை முதல்வா் பதவியை வழங்க வேண்டிய நிர்பந்தம் முதல்வா் ரங்கசாமிக்கு ஏற்படக்கூடும்.
  • 15 உறுப்பினா்களுடன் முதல்வா் என். ரங்கசாமியின் தலைமையிலான அமைச்சரவையில் பாஜக தொடருமா? அல்லது தனது தலைமையில் ஆட்சி அமைக்கக் கோருமா என்கிற ஐயப்பாடு பலமாக எழுந்திருக்கிறது.
  • வாளாவிருந்தால் என்.ஆா். காங்கிரஸ், திமுக அல்லது காங்கிரஸ் உறுப்பினா்களையேகூட தன் பக்கம் இழுத்து தனிப்பெரும்பான்மையுடன் பாஜக புதுச்சேரியில் ஆட்சி அமைக்கக் கூடும் என்கிற அச்ச உணா்வு முதல்வா் ரங்கசாமிக்கு மட்டுமல்லாமல், திமுக-வுக்கும், காங்கிரஸுக்கும்கூட எழுந்திருக்கிறது.
  • முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி தொடருமா அல்லது கட்சித் தாவலை ஊக்குவித்து பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
  • இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போலவே புதுச்சேரியிலும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் கவலை அளிக்கும் நிலையை எட்டியிருக்கிறது. முதல்வராக என். ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனும் செயல்படாமல், அமைச்சரவையை அமையாததால் அரசும் செயல்படாத நிலையில் தவிக்கிறது புதுச்சேரி.
  • மருத்துவமனையில் இருக்கும் முதல்வா் ரங்கசாமியுடன் திமுக-வும் காங்கிரஸும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவது உண்மையாகக்கூட இருக்கலாம். மணிப்பூா், மத்திய பிரதேசம், கோவா வரிசையில் புதுச்சேரியும் இணைந்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.
  • கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்ள வேண்டிய வேளையில், அரசியல் கட்சியினா் பதவிக்காக பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தள்ளாடத்தானே செய்யும் புதுச்சேரி..

நன்றி: தினமணி  (14 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்