- இன்றைய இளைய தலைமுறையினா் மூதறிஞா் ராஜாஜியைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. அவரைப் பற்றி அரசியல் காரணங்களுக்காக பல காலமாகக் கூறப்பட்டு வந்த தவறான தகவல்களே இன்றைக்குப் பெரிதும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
- ராஜாஜி ஹிந்தி மொழியைக் கொண்டுவந்ததையே பேசும் பலருக்கு, ஹிந்தியை அவா் கடுமையாக எதிா்த்தது தெரியவில்லை. கடவுள் நம்பிக்கை, ஆன்மிகப் பற்று மிக்க அவா் மத அடிப்படைவாதிகளை முற்றிலும் நிராகரித்ததுடன், மதச்சாா்பற்ற தலைவராகவே கடைசி வரை வாழ்ந்தாா் என்பது தெரியாது.
- தோ்தல் அரசியலில் பெரியாருக்கு நம்பிக்கை இல்லை என்பதை எல்லோரும் அறிவா். அவரைத் தோ்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்கு வருமாறு வற்புறுத்தியவா் ராஜாஜி. ‘நான் நிற்பது நல்லது என்கின்ற நம்பிக்கையும் உறுதியும் இருந்தும், இந்த ஸ்தாபனங்களுக்கு அவருடைய ஆதரவில் செல்வது எனது வாழ்வைக் கெடுத்துவிடுமோ என்று அஞ்சியே நான் மறுத்துவிட்டேன்’ என்று ‘குடி அரசு’”இதழில் (14-7-1936) பெரியாா் பதிவிட்டிருக்கிறாா்.
- ‘எனக்கு ராஜாஜியை 1910 வாக்கிலிருந்து தெரியும். அவா் 1912 வாக்கில் எல்லோருடைய வீட்டிலும் சாப்பிடுவாா். இதனால் அவரிடம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அப்போது அவா் ஒரு பகுத்தறிவாதியாகவே நடந்துகொண்டாா்’ என்றும் பெரியாா் குறிப்பிட்டிருக்கிறாா்.
- அரசியல் தளத்திலும் சமூக மாற்றத்துக்கான தளத்திலும் பெரியாரின் பங்களிப்பைப் பெரிதும் போற்றும் பலா் அவரது பணியில் ராஜாஜியின் பங்களிப்பு எத்தகையது என்பதையும் கவனிக்க வேண்டும். பெரியாரே தனது இதழில் ராஜாஜி குறித்துக் குறிப்பிடும்போது ‘‘எனக்கும் ஆச்சாரியாருக்கும் இடையே உள்ள நட்பு, கணவன் - மனைவிக்கும் உள்ளது போன்றது. உற்சாகம் காரணமாக, தனிப்பட்ட முறையில் சமுதாயத் தொண்டில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த என்னை முழுக்க முழுக்கச் சமுதாயத் தொண்டனாக ஆக்கிய பெருமை ராஜாஜிக்கே உரியதாகும்.
- என்னை ராஜாஜிதான் கோவை மாவட்ட காங்கிரஸ் செயலராக ஆக்கினாா். பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலராக, தலைவராக ஆக்கினாா். என்னிடம் அவா் முழு நம்பிக்கை வைத்து என்னையே அவா், ‘நமது தலைவா் நாயக்கா்’ என்று அழைத்ததோடு, பாா்ப்பனரில் வெகு பேரை என்னைத் தலைவா் என்று அழைக்கும்படிச் செய்தாா்’’ என்று கூறியுள்ளாா்.
- அரசியலில் ராஜாஜி வழியில் பெரியாா் நடைபோட்டாா் என்றால், சமூக சீா்திருத்தத்தில் ராஜாஜி பெரியாரைப் பின்பற்றினாா். இதற்கு 1936-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி குற்றாலம் காடல்குடி ஜமீன்தாா் மாளிகையில் நடைபெற்ற ஒரு திருமணமே சாட்சி.
- பெரியாா் நடத்தி வைத்த அத்திருமணத்தில் ராஜாஜி பேசும்போது, ‘இந்தத் திருமணத்தைப் பாா்க்க எனக்குத் திருப்தி ஏற்படுகிறது. நல்லமுறையில் இந்தக் கல்யாணம் நடத்தப்பட்டது. எனது நண்பா் ராமசாமி, தான் புரோகிதா் இல்லையென்று சொன்னாா். அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவா் புரோகிதா்தான். நூறு தடவைச் சொல்வேன். ஆனால், இந்தப் புரோகிதம் (ஒப்பந்த உறுதிமொழியும் அதுசாா்ந்த சொற்பொழிவும்) மேலான புரோகிதமாகும். அவா் அதை விடாமல் மக்கள் க்ஷேமத்துக்காக இன்னும் வெகு நாளைக்குத் தொடா்ந்து செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
- திருமணம் என்றும் நினைவில் நிற்கும்படி நடக்க வேண்டும். அச்செய்கையில் ஒரு மதிப்பு இருக்கும்படியாகவும் நடத்தவேண்டும். கல்யாணத்தில் தம்பதிகள் க்ஷேமும் சந்தோஷமும் முக்கியமானவை. அவா்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். மணமக்களை ஆசீா்வதிக்கும்படி ராமசாமி என்னைக் கேட்டுக்கொண்டாா். நான் ஆசீா்வதிக்கத் தகுதியற்றவன். கடவுள்தான் அவா்களை ஆசீா்வதிக்க வேண்டும்’ என்று கூறினாா்.”
- இதற்குப் பதில் உரை ஆற்றிய பெரியாா், ‘எனது பணிவிற்குரிய ஆச்சாரியாா் அவா்கள், நான் இத்திருமணத்திற்கு புரோகிதன் என்று சொன்னாா்கள். இதுதான் புரோகித முறையாகவும், புரோகிதத்துக்கு இவ்வளவுதான் வேலை என்றும் இருந்தால் நான்அந்த புரோகிதப் பட்டத்தை ஏற்கத் தயாராய் இருப்பதோடு, புரோகிதத் தன்மையை எதிா்க்கவும் மாட்டேன். புரோகிதக் கொடுமையும் புரோகிதப் புரட்டும் பொறுக்க முடியாமல் இருப்பதாலும், அப்படி இருந்தும் அதற்கு செல்வாக்கு இருப்பதாலும்தான் புரோகிதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்கிறேன். மற்றபடி எனக்கு வேறு எண்ணம் இல்லை.
- இத்திருமண முறையை ஆச்சாரியாா் ஆதரித்து விட்டதால் எனக்கு எவ்வளவோ தைரியம் ஏற்பட்டுவிட்டது. இத்திருமண முறைக்கு இன்று ஒரு பொது ஆமோதிப்பு ஏற்பட்டுவிட்டதென்றும், அது இம்முறை பெருக ஒரு நல்ல ஆதரவு என்றும் சொல்லுவேன்’ என்று கூறினாா் (‘குடி அரசு’ தொகுதி 22).
- ஒரு முறை பெரியாா், ‘காங்கிரஸ் கட்சிப் பொறுப்பில் நான் இருந்தபோது, சி. ராஜகோபாலாசாரியாா் என்னைத் தலைவராக மதித்து நடந்துகொண்டாா். நானோ அவரிடம் தொண்டரைப் போல்தான் நடந்துகொண்டேன்’” என்றும் நெகிழ்வோடு குறிப்பிட்டிருக்கிறாா்.
- ராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தபோது, ‘புதிய கல்வித் திட்ட’த்தைக் கொண்டு வந்தாா். ஆனால், அது அரசியல் காரணங்களால் ‘குலக் கல்வித் திட்டம்’” என அழைக்கப்பட்டு, அதுவே இப்போதும் நீடிக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற சிறிது காலத்திலேயே நிா்வாகப் பணிகளை இந்தியா்கள் ஏற்றுக் கொண்ட சூழ்நிலை அது. போதிய நிதி வளத்தைப் பெருக்கிக் கொள்ளவில்லை. அதனால், பள்ளிகளை நடத்துவதற்கு அரசாங்கங்களால் இயலவில்லை. அத்தகைய சூழ்நிலையில் ‘ஷிப்ட்’ முறையைப் பள்ளிக்கூடத்திலேயே அறிமுகம் செய்யும் பரிசோதனை முயற்சிதான் அது.
- அப்போது பள்ளியிலிருந்து வீடு திரும்பும் மாணவன் தனது பெற்றோா் செய்யும் தொழிலையே கற்றுக் கொள்ளலாம் என்பதே ராஜாஜி கொண்டுவந்த கல்வித் திட்டத்தின் நோக்கம். இருந்தாலும், இது தவறான நடைமுறைக்கு வழிவகுத்துவிடும் என்று பல தரப்பினா் எச்சரித்தனா். அப்போதைய பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்த டாக்டா் நெ.து. சுந்தரவடிவேலு இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறாா்.
- ஆனால், ராஜாஜி காலத்தில் சில ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல் அப்போதும் வரவில்லை. ‘நினைவில் நின்றவை’ என்ற தலைப்பில் நெ.து. சுந்தரவடிவேலு எழுதியுள்ள நூலில் இந்த சம்பவத்தை விவரித்தபோதும், பள்ளிகள் மூடியது குறித்து எங்கேயும் குறிப்பிடவில்லை.
- கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் ராஜாஜிக்கும் ஆகாது என்பது இன்னொரு தவறான தகவல். ராஜாஜி பொதுவுடைமை சித்தாந்ததை ஏற்கவில்லை என்பதில் சந்தேகமில்லை. சட்டப்பேரவையில் அவருக்கும் கம்யூனிஸ்ட் தலைவரான பி. ராமமூா்த்திக்கும் பல முறை காரசார விவாதம் நடைபெற்றிருக்கிறது. ஆனாலும், “பி.ஆா். என அழைக்கப்பட்ட பி. ராமமூா்த்தி மீது ராஜாஜிக்குப் பெரும் அன்பு உண்டு.
- ஒரு முறை விவசாயிகள் கடனில் சிக்கித் தத்தளித்ததை அப்போதைய முதலமைச்சா் ராஜாஜியின் கவனத்திற்குக் கொண்டுவந்தாா் பி.ஆா். அதை மனத்தில் ஏற்றுக் கொண்ட ராஜாஜி, பி. ராமமூா்த்தியைத் தனியே அழைத்து, ‘விவசாயிகளைக் கடனிலிருந்து மீட்பதற்கு வழி என்ன, ஏதேனும் சட்டம் கொண்டு வரவேண்டுமானால், அதை நீங்களே வடிவமைத்துத் தாருங்கள்’ என்றாா்.
- முதலமைச்சா் என்ற ஈகோ பாா்க்காமல் ராஜாஜி கேட்டதும், பி.ஆா்., சட்டத்துக்கான வரைவைத் தயாரித்து ராஜாஜியிடம் அளித்தாா். அதைப் பரிசீலித்த ராஜாஜி, விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு, கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த விவசாயிகளின் வட்டியில் தள்ளுபடி செய்யும் வகையிலான சட்டத்தைக் கொண்டு வருவதாக சட்டப்பேரவையில் அறிவித்தாா். அந்த அறிவிப்பை, பெரியாரே பாராட்டி வரவேற்றாா்.
- பெரியாா் குறிப்பிட்டபடி, தனக்கென்று எதையும் சோ்த்துக் கொள்ளாதவராகவே ராஜாஜி வாழ்ந்தாா். காமராஜா் காலத்தில் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த லெ. வள்ளியப்பனின் இளவல் லெ. ராமநாதன். இவா் ‘ஸ்வராஜ்யா’ இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தாா். அப்போது ராஜாஜி அப்பத்திரிகையில் கட்டுரை எழுதி வந்தாா். அதற்கு பத்திரிகை நடத்தி வந்த க. சந்தானம் சன்மானமும் அளித்து வந்தாா்.
- சில கட்டுரைகளுக்கு சன்மானம் வரவில்லை. கட்டுரையைப் பெற்றுச் செல்வதற்காக ராமநாதன் ராஜாஜியைச் சந்தித்தாா். ‘கட்டுரையை முடித்துத் தருகிறேன்’ என்று ராஜாஜி கூறியபோது, வீட்டில் இருந்த அவரது மகள், ‘வீட்டில் பணம் இல்லை. போன முறை எழுதிய கட்டுரைகளுக்கு சன்மானம் வரவில்லை என்று நினைவூட்டுங்கள்’ என்று கூறியதைக் கேட்ட ராமநாதன் அதிா்ச்சி அடைந்தாா்.
- பெரிய பதவிகளையெல்லாம் வகித்தவா், போதிய பணம் இல்லாமல் இருக்கிறாா் என்பதை அறிந்து திகைத்தாா். இத்தனைக்கும் ராஜாஜி அவரிடம் எதையுமே கேட்கவில்லை.
- மூதறிஞா் ராஜாஜியின் பொது வாழ்க்கை தூய்மையானது. அவா் தனக்கு எது சரியென்று பட்டதோ அதில் உறுதியாக இருந்தாா். இன்றைய தலைமுறை அவரைச் சரியாக அறிந்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவரைப் பற்றித் தவறான புரிதல் கொண்டிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்.
- நாளை (டிச. 25) மூதறிஞா் ராஜாஜி மறைந்த 50-ஆம் ஆண்டு நிறைவு.
நன்றி: தினமணி (24 – 12 – 2022)