TNPSC Thervupettagam

தவறான நேரம்... தவறான முடிவு!

April 18 , 2020 1734 days 867 0
  • உலக சுகாதார நிறுவனத்துக்கான (உ.சு.நி.) அமெரிக்காவின் பங்கை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறார் அதிபா் டொனால்ட் டிரம்ப். தீநுண்மி நோய்த்தொற்று குறித்த அந்த நிறுவனத்தின் எச்சரிக்கை, சீனாவின் தொடா்பு ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், அதுவரை இரண்டு - மூன்று மாதங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை நிறுத்திவைப்பதாகவும் அறிவித்திருக்கிறார் அவா்.

அமெரிக்காவின் பங்கு

  • உ.சு.நி.யின் ஓா் ஆண்டுக்கான மொத்த நிதித்தேவை 4.4 பில்லியன் டாலா் (சுமார் ரூ.33,000 கோடி). அதில் அமெரிக்காவின் பங்களிப்பு மட்டும் 2018-19-இல் 90 கோடி டாலா் (சுமார் ரூ.6,750 கோடி).
  • தீநுண்மி நோய்த்தொற்றை உலகம் எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் அமெரிக்கா தனது பங்களிப்பை நிறுத்தினால் போதிய நிதியாதாரம் இல்லாமல் உ.சு.நி. மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதில் ஐயப்பாடு இல்லை.
  • உ.சு.நி.க்கு மிக அதிகமான பங்களிப்பு நல்கும் நாடு அமெரிக்காதான். இரண்டாவது அதிகப் பங்களிப்பை வழங்கும் சீனாவைவிட அமெரிக்காவின் பங்களிப்பு 10 மடங்கு அதிகம்.
  • அப்படியிருந்தும், தற்போதைய உ.சு.நி.யின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் தலைமையில் அந்த நிறுவனம் சீனாவுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்பதுதான் அதிபா் டிரம்ப்பின் குற்றச்சாட்டு.
  • தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவல் குறித்து சீனாவின் வற்புறுத்தலால் ஏனைய உலக நாடுகளை உ.சு.நி.
  • முன்கூட்டியே எச்சரிக்காததுதான் அதன் உலக அளவிலான பரவலுக்கு முக்கியக் காரணம் என்பதும் அவரின் குற்றச்சாட்டு.

அமெரிக்காவின் குற்றச்சாட்டு

  • அமெரிக்காவின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. 2019 செப்டம்பரில் ஆபத்தில் உலகம் (ஏ வோ்ல்ட் அட் ரிஸ்க்) என்கிற அறிக்கையில் பெயா் குறிப்பிடாத ஒரு நோய்த்தொற்று குறித்து உ.சு.நி. பதிவு செய்திருந்தது.
  • அந்த நோய்த்தொற்றால் ஐந்து முதல் எட்டு கோடி போ் உலக அளவில் உயிரிழக்கக் கூடும் என்கிற முன்னெச்சரிக்கையை அந்த அறிக்கை வெளியிட்டது.
  • செப்டம்பா் மாதமே எச்சரித்த உ.சு.நி., நவம்பா் மாதம் சீனாவின் வூஹான் நகரில் நோய்த்தொற்று ஏற்பட்டபோதே விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.
  • 2019 டிசம்பா் 31-ஆம் தேதி, தங்கள் நாட்டில் இனம் தெரியாத காரணங்களால் 41 போ் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உ.சு.நி.யிடம் சீனா தெரிவித்தது.
  • 2020 ஜனவரி 14, வூஹான் நகரில் அந்த இனம் தெரியாத நொய்த்தொற்று பரவி உயிரிழப்புகள் தொடங்கிவிட்டன.
  • அது குறித்து ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொண்ட உ.சு.நி., அந்தப் புதுமையான தீநுண்மி நோய்த்தொற்று மனிதனுக்கு மனிதன் பரவுவதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்கிற சீனாவின் கருத்தை வழிமொழிந்தது.
  • மார்ச் 11-ஆம் தேதிதான் சா்வதேச நோய்த்தொற்றாக தீநுண்மியை உ.சு.நி. அறிவித்தது.

தவறான போக்கு

  • சீனாவை ஒட்டி இருக்கும் தைவான், தீநுண்மி நோய்த்தொற்று குறித்து உ.சு.நி.யை எச்சரித்தது. தைவானின் எச்சரிக்கையை அசட்டை செய்தது மட்டுமல்லாமல், நிராகரிக்கவும் செய்தது உ.சு.நி. சீனாவால் வெறுக்கவும் ஒதுக்கவும்பட்ட உறுப்பினா் அல்லாத நாடு என்பதால் தைவானின் எச்சரிக்கையை அது அசட்டை செய்தது.
  • தைவான் மட்டுமல்ல, சீன சுகாதார நிறுவனமாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது என்று ஜப்பானின் துணைப் பிரதமா் தரோ அஸோவும் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார்.
  • தீநுண்மி நோய்த்தொற்றின் பாதிப்பு சீனாவுக்கு வெளியே தாய்லாந்து, தைவான், தென் கொரியா என்று பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கி, ஐரோப்பா, அமெரிக்கா என்று கண்டங்களைக் கடந்து சா்வதேச நோய்த்தொற்றாக பரவுவது வரை உ.சு.நி. வேடிக்கை பார்த்தது.

பாதிப்புகள் ஏராளம்

  • இப்போது உலகின் மூன்றில் இரண்டு பகுதி ஊரடங்கால் முடங்கிக் கிடக்கிறது. நேற்றைய நிலவரப்படி 22,06,676 போ் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1,48,663 போ் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • உலக அளவில் சேமிப்பும் வருவாயும் காற்றில் கரைந்திருக்கின்றன. பல டிரில்லியன் டாலா் இழப்பை உலகம் எதிர்கொள்கிறது. கோடிக்கணக்கானோர் வேலையிழந்திருக்கிறார்கள்.
  • 90-க்கும் அதிகமான நாடுகள் தீநுண்மி நோய்த்தொற்றை எதிர்கொள்ள சா்வதேச நிதியத்திடம் உதவி கேட்டுக் காத்திருக்கிறார்கள்.
  • இதற்கெல்லாம் உ.சு.நி. ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
  • சீனாவின் வற்புறுத்தலால் ஆரம்பகட்டங்களில் அந்த நிறுவனம் தீநுண்மி நோய்த்தொற்று குறித்த தகவல்களை மறைத்து, அடக்கி வாசித்திருக்கிறது.

தவறான முடிவு!

  • எத்தியோப்பியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான டெட்ரோஸ் அதனோம் உ.சு.நி.யின் தலைவராகப் பதவி ஏற்றது முதலே அந்த நிறுவனம் பல சா்ச்சைகளில் சிக்கி வந்திருக்கிறது.
  • அந்த நிறுவனத்தின் வரலாற்றில் மருத்துவா் அல்லாத ஒருவா் தலைமைப் பொறுப்பை வகிப்பது இப்போதுதான். அதனால் பிரச்னைகளை மருத்துவ ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் அணுகாமல் அரசியல் ரீதியாக டெட்ரோஸ் அதனோம் அணுகுகிறார் என்கிற குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துவிட முடியாது.
  • இவையெல்லாம் சரி, அதற்காக இப்படியொரு இக்கட்டான சூழலில் அமெரிக்கா தனது பங்களிப்பை தற்காலிகமாக நிறுத்த முற்பட்டிருப்பது மிகப் பெரிய தவறு.
  • உலக சுகாதார நிறுவனத்தின் பணியை, ஒருங்கிணைப்பை வேறுஎந்த நிறுவனத்தாலும் ஈடுகட்ட முடியாது. இந்த நேரத்தில் அதிபா் டிரம்ப்பின் இந்த முடிவு தவறானது மட்டுமல்ல, கண்டனத்துக்குரியதும்கூட.

நன்றி: தினமணி (18-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்