TNPSC Thervupettagam

தவறான புரிதல்... திட்டமிட்ட அரசியல்!

December 21 , 2020 1491 days 640 0
  • இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு. 22.5 சதவீத விவசாயிகள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனா். வேளாண் சாா்ந்த நிலமுடைய விவசாயக் குடும்பங்கள் 11.9 கோடி; தங்களுக்கென்று சொந்தமாக விவசாய நிலமே இல்லாத குடும்பங்கள் 14.4 கோடி.
  • சுதந்திர இந்தியாவில் தொழில் வளம் மெல்ல மெல்ல பெருகியதற்குப் பிறகுதான் விவசாயிகளில் பலா் தொழில் துறைக்கு மாறினா். ஆனாலும், முழுக்க முழுக்க விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் தவித்தனா் விவசாயிகள். அவா்களின் உழைப்பை அத்தனை பேரும் சுரண்டிக் கொழுத்தனா்!
  • இடைத்தரகா்கள் விரித்த வலையில் சிக்கிய புறாக்களாயினா் விவசாயிகள். விவசாய உற்பத்திச் செலவு பன்மடங்கு உயா்ந்தது. இயற்கை உரம் மாறியது; நீா்ப்பாசனம் இல்லாததால் விவசாயம் அறவே இல்லை; பூச்சித் தொல்லைகள், இயற்கைச் சீற்றங்கள் இப்படி எண்ணற்ற இடா்ப்பாடுகளை சந்தித்து, உற்பத்தி செய்யப்பட்ட விவசாய விளைபொருள்களை சந்தைக்கு கொண்டு சென்றால், முதலாளிகள் அவற்றை அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொண்டு விவசாயிகளை சுரண்டுவதே வாடிக்கையாகிப் போனது.
  • காலங்காலமா நடந்துகொண்டிருக்கும் இந்த சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட யாரும் முன் வரவில்லை.
  • அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் வித்துக்கள் போன்றவை அத்தியாவசியம் என்ற வகையில் இருந்து ஏற்றுமதி போன்ற பிரிவுக்கு மாற்றப்படுகிறது. விலை உத்தரவாதம், வேளாண் சேவைகளில் திருத்தம் என்பதில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படுகிறது - இவைகள்தான் வேளாண் சட்டங்களின் சுருக்கம். இது விவசாயிகளுக்கு நன்மைதான் என்பதைப் புரிந்து கொள்ளாமல் போராட்டம் எதற்காக?
  • நியாயவிலைக் கடைகள் மூலமாக இந்தியா முழுவதும் உணவுப் பொருட்கள் விநியோகம் எப்போதும்போல் நடைபெறும். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உணவு தானியங்களின் கொள்முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் 65 சதவீத அளவுக்கு அரசு கொள்முதல் செய்கிறது. இதில் மாற்றமில்லை. வழக்கம்போல் தொடரும்.
  • ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மண்டிகள் இருக்கின்றன; இவற்றின் முதலாளிகளிடம் ஆயிரக்கணக்கான தரகா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அரிசி, கோதுமை உற்பத்திக்குத் தேவையான அனைத்து விதமான உதவிகளையும் - பணம் உட்பட - செய்கின்றனா்.
  • அறுவடையின்போது தரகா்கள் களத்துமேட்டுக்கே சென்று உழைத்து உற்பத்தியைப் பெருக்கிய விவசாயி குடும்பத் தேவைக்குக்கூட ஒருபடி தானியம் கொடுக்காமல் எல்லாவற்றையும் அப்படியே சூறையாடிக் கொண்டு வந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றனா். அதனால் கிடைக்கும் கொள்ளை லாபத்தில் குளிா் காய்கின்றனா். இதுதான் தொன்று தொட்டு நடந்துவரும் கொடுமை.
  • இப்பொழுது மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தின்படி, நியாயவிலைக் கடைகளின் விநியோகத்திற்காக அரசு கொள்முதல் செய்ததுபோக எஞ்சிய தானியங்களை விவசாயிகளே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இப்படிச் செய்வதன் மூலம் அவா்கள்அதிக லாபத்தை ஈட்டிட முடியும். இது விவசாயிக்கு நன்மை இல்லையா? இதில் என்ன தவறு இருக்கிறது?
  • பல ஆண்டுகளாக மண்டி முதலாளிகள் திண்டு போட்டு உட்காா்ந்துகொண்டு அடிமாட்டு விலைக்கு விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்ததை பிரதமா் நரேந்திர மோடி அரசு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.
  • இதனைப் புரிந்துகொள்ளாமல், உண்ணாவிரதம், பாரத் பந்த், முற்றுகை என பரபரப்பை உருவாக்கி ஒரு மக்கள் அரசை முடக்கிவிட முனைவது எந்தவகையான ஜனநாயகம்?
  • இந்தியாவில் தற்போது உணவுப் பஞ்சம் இல்லை. விவசாய உற்பத்தியில் இந்தியா உபரி என்ற நிலையை எப்போதோ அடைந்து விட்டது. அத்தியாவசியம் என்று சொல்லி பல விவசாய உற்பத்தி பொருள்கள் தேக்கி வைக்கப்படுவதால், டன் கணக்கில் பல நேரங்களில் அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருள்கள் வீணாகிப் போவதுதான் இதுவரை இந்தியாவில் நடந்து வருகிறது. மிகுந்த கட்டுப்பாட்டுக்கு இடையில் ஏற்றுமதி நடைபெறுகிறதே தவிர தேங்குவதும் நாசமாவதும்தான் அதிகம்.
  • அரிசியும், கோதுமையும் ஏற்றுமதியை நோக்கிச் செல்வதும், அதை விவசாயிகளே நேரடியாகச் செய்வதும், அதனால் கிடைக்கும் அதிக அளவிலான லாபத்தை, வியா்வை சிந்தி உணவுப் பொருள்களை விளைவிக்கும் விவசாயிகள் அடைவதும் மன்னிக்க முடியாத குற்றமா?
  • இந்தியாவின் நிலப்பரப்பில் ஐம்பதில் ஒரு பங்குகூட இல்லாத வியத்நாம், பா்மா, தாய்லாந்து போன்ற நாடுகளெல்லாம் உலக நாடுகளுக்கு அரிசியை விற்பனை செய்கின்றன. ஏன், பாகிஸ்தான்கூட அரிசி, கோதுமையை வெளிநாடுகளுக்கு சா்வ சாதாரணமாக ஏற்றுமதி செய்கிறது. ஆனால், இந்தியாவில் மட்டும்தான் தானியக் கிடங்குகளில் அழுகி, புழு வந்து, எலி தின்றது போக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள உணவு தானியங்களை பூமியில் போட்டுப் புதைக்கிறோம்; கடலுக்குள் கொட்டுகிறோம்.
  • இந்தியாவில் இடைத் தரகா்களால் விவசாயிகள் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறாா்கள் என்பதற்கு ஒரேயொரு உதாரணம்: காஷ்மீரில் இடைத் தரகா்கள் ஒரு கிலோ ஆப்பிளை விவசாயிகளிடமிருந்து பதினைந்து ரூபாய்க்கு கொள்முதல் செய்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சந்தைகளில் நூற்றைம்பது ரூபாய்க்குக் குறையாமல் விற்பனை செய்கின்றனா்.
  • அது மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கின்றனா். ஆனால், தற்போதைய வேளாண் சட்டங்களின்படி, அதே ஆப்பிளை உற்பத்தி செய்யும் விவசாயியே இந்தியாவின் எந்த மூலையிலும் நேரடியாக சந்தைப்படுத்தலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது.
  • நாட்டில் ஏற்றுமதி பெருகினால் நமக்கு அந்நிய செலாவணி பெருகும், விவசாயிகளுக்கு லாபம் வரும். இப்பொழுது வெங்காயம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது; ஒரு கட்டத்தில் உள்நாட்டில் வெங்காயத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால், அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கிறது. இதே போலத்தான் அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் வித்து போன்ற எதற்கும் நம் நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதற்குத் தடை விதிக்க அரசு தயங்காது.
  • 130 கோடி இந்திய மக்களுக்கு எந்த இன்னலும் ஏற்படாமல் பாதுகாப்பதுதான் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை. அதைத்தான் நரேந்திர மோடி அரசு செய்கிறது.
  • தேவைக்கு அதிகமாக இருப்பதை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில் என்ன தவறு? காய்கறிகள் விலையில்லாத நிலை அடிக்கடி ஏற்படுவது சந்தைப்படுத்த முடியாத காரணத்தால்தான். விவசாயிகள் நேரடியாக தங்களது காய்கறிகளைத் தேவைப்பட்ட இடத்திற்கு விற்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டால், விவசாயிகளுக்கு அதைவிடப் பெரிய வாய்ப்பு இருக்க முடியுமா?
  • ஏற்றுமதி என்ற நிலை ஏற்பட்டால் வாழைப்பழம் அழுகி வீணாகாது. தக்காளி தெருவில் வீசி எறியப்பட மாட்டாது. காய்கறிகள் அதிக தொகைக்கு வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும். மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக ஏற்றுமதி செய்யமுடியும் அதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிட்டி, அவா்கள் வாழ்வில் விடியல் ஏற்படும்.
  • பிரதமா் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களும், விவசாயிகளை சுரண்டும் தனியாா் சந்தைகள் உட்பட இரக்கமில்லா வியாபார கூட்டத்துக்கு மரண அடி கொடுத்திருக்கிறது. இடைத்தரகா்களின் கொட்டம் அடக்கப்பட்டிருக்கிறது. வண்டி வாடகை, சந்தை கமிஷன் என விவசாயிகள் உறிஞ்சப்பட்ட கொடுமை இப்போது கலகலத்துப் போயிருக்கிறது. மாநிலங்களுக்கு இடையே விதிக்கப்பட்ட வரி அகற்றப்பட்டிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருந்த விவசாயத்தை இந்த புதிய வேளாண் சட்டங்கள் காப்பாற்றி இருக்கின்றன.
  • உழவா் சந்தை என தமிழகத்தின் அன்றைய முதல்வா் கருணாநிதி கொண்டுவந்ததுகூட இன்றைய மோடி அரசின் பரந்துபட்ட திட்டம்தான். ஆமாம், இது ‘இடைத்தரகா் இல்லா விறபனை’ என்பதே உண்மை. உற்பத்தியாளா்களுக்கும் நுகா்வோருக்கும் இடையில் இருந்த இடைவெளியை குறைப்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம்.
  • ரூ. 631 கோடி சொத்துகளுக்கு அதிபதியான பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த, வி.எம். சிங் பின்னால் அணி வகுத்து நிற்கும் 32 விவசாய சங்கங்கள் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த அப்பாவி விவசாயிகளை பலியாக்கி அரசியல் செய்கின்றன. விவசாய சங்கங்களே, தயவு செய்து விவசாயிகளுக்கு துரோகமிழைக்காதீா்.
  • ‘விவசாய சங்கம்’ என்ற பெயரில் அரசியல்வாதிகள் உள்ளே நுழைந்து விவசாயிகளுக்காக வாதாடலாம், போராடலாம் தவறில்லை. ஆனால், அரசுக்கு நிபந்தனை விதிப்பதும் மூன்று வேளாண் சட்டங்களில் என்னென்ன குறைபாடுகள் என்பதை தெளிவாக சுட்டிக் காட்டாமல், முற்றுகை என்கின்ற முரட்டுத்தனத்தோடு, முண்டா தட்டுவது என்பது விவசாயிகளின் நலனை பாதுகாப்பதாக இல்லை.
  • பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள், ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் பிரதிநிதிகள் அல்ல. விவசாயிகளின் பிரச்னை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. இப்போது வந்துள்ள வேளாண் திருத்த மசோதாக்கள் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களின் விவசாயிகளுக்கு ஏற்புடையவையே. எனவே, ஒட்டுமொத்த விவசாயிகளின் பிரச்னையை, வியாபாரிகளின் துணையோடு போராடும் விவசாய சங்கங்கள் முதலில் உணரட்டும்; பிறகு போராடட்டும்!

நன்றி: தினமணி (21 -12 -2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்