- சட்டென முடிவெடுக்கும் ‘ஆற்றல்' இன்றைக்கு நம்மிடையே வளர்ந்திருக் கிறது. ஏதாவது மன வருத்தமா, ஏமாற்றமா.. “வாழ்ந்தது போதும், கிளம்புவோம்” எனத் தயார்நிலையில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரே நாளில் மூன்று தற்கொலை செய்திகளையாவது செய்தித்தாள்களில் பார்க்கமுடிகிறது.
- வறுமை, கடன், குடிப்பழக்கம் போன்ற காரணங்களால்தான் தற்கொலை நிகழும் என்கிற எண்ணத்தைத் தூக்கித் தூர எறிந்திருக்கின்றன சமீபகாலத் தற்கொலைகள். உயர் போலீஸ் அதிகாரி, புகழ்பெற்ற டாக்டர், உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் எனப் பாகுபாடு இல்லாமல் தற்கொலைகள் நிகழ்கின்றன. தற்கொலை செய்துகொள்வதில் ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்கிற வித்தியாச மெல்லாம் கிடையாது.
தற்கொலை
- உலகளவில், ஒவ்வோர் ஆண்டும் எட்டு லட்சம் பேர் தற்கொலையால் இறக்கின்றனர். அதாவது ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் வாழ்க்கை முடிவினைத் தேடிக்கொள்கிறார். தற்கொலை என்பது இந்தியாவில் வளர்ந்துவரும் தீவிரமான பொதுச் சுகாதாரப் பிரச்சினை. நம் நாட்டில் கடந்த 54 ஆண்டுகளில் 17.56 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உள்பட 4.7 கோடி பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி.).
- இந்தியாவில் 2021-க்கான அதிகத் தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரத்தில் 17,972 தற்கொலைகள் நடந்துள்ளன. 13,896 தற்கொலைகளுடன் தமிழகம் இரண்டாமிடத்திலும், 13,255 தற்கொலைகளுடன் மேற்கு வங்கம் மூன்றாமிடத்திலும் உள்ளன. நம் நாட்டில் ஒரு லட்சம் மக்கள்தொகையில் தற்கொலை இறப்பு விகிதம் 16.5 சதவீதம் ஆக உள்ளது. ஆனால், உலகச் சராசரி 10.5 சதவீதம்தான்.
தற்கொலை செய்து கொள்வோர் யார்?
- தேசிய குற்ற ஆவணக் காப்பக 2021-2022 அறிக்கைப்படி நம் நாட்டில் தினக்கூலிகள்தாம் அதிகபட்சமாக 42,004 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதையடுத்துக் குடும்பத்தலைவிகள் 23,178 பேரும், சுயதொழில் புரிவோர் 20,213 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியாவில் நடக்கும் தற்கொலைகளில் 11.2% விவசாயிகளின் தற்கொலைகள்.
- அனுகூலமில்லாத சட்டங்கள், மானியங்களில் முறைகேடு, தனிப்பட்ட பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகள், தனியார் வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமை, வெள்ளம், வறட்சி, மரபணு மாற்றப்பட்ட விதைகளின் பயன்பாடு, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, குறைந்த முதலீடு, அதனால் குறையும் விளைச்சல் போன்றவையும் விவசாயிகள் தற்கொலைக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. ‘அனைத்தையும்விட இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைகளுக்குக் கடன் முக்கியக் காரணமாக இருக்கிறது' என்கிறது வளர்ச்சி இதழியலாளர் சாய்நாத்தின் ஆய்வு. விவசாயிகளின் வருமானம் 30 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், அவர்களின் கடன் சுமார் 58 சதவீதம் உயர்ந்துள்ளது எனப் புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
- மற்றொருபுறம், ‘தேர்வு மன அழுத்தம்' காரணமாக 13,089 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் - இது முந்தைய ஐந்து ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சம். ஐ.ஐ.டி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற முதன்மை கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 75 மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர்.
மனநல மருத்துவர்
- தற்கொலை தடுப்பு குறித்து தமிழ்நாடு அரசு காவலர் நிறைவாழ்வு திட்ட முதன்மை அதிகாரியும் தமிழகத்தின் முன்னணி மனநல மருத்துவருமான டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்:
- “என்.சி.ஆர்.பி. அறிக்கைப்படி இந்தியாவில் 2021இல் 45,026 பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (23,178 பேர்) இல்லத்தரசிகள். பெரும்பாலான பெண்கள் 18 வயதைக் கடந்த உடனேயே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். அந்தச் சிறுவயதிலேயே ஒரு மனைவியாக, மருமகளாக தன் முழு நாளையும் வீட்டில் சமையல் செய்வது, சுத்தம் செய்வது என ஒருவர் செலவிடு கிறார். இதனால் அந்த வயதுக்கு ஏற்ற அவருக்கு விருப்பமான விஷயங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
- இது நீடிக்கும்போது நம்பிக்கையற்ற தன்மை - ஏமாற்றம் நீடிக்கத் தொடங்குகிறது. மேலும், சமீபத்தில் நடத்தப்பட்ட அரசு கணக்கெடுப்பு ஒன்றில் பங்கேற்ற மொத்த பெண்களில் 30 சதவீதம் பேர் வீட்டில் வன்முறையை எதிர்கொண்டதாகவும் புகுந்தவீட்டு வாழ்க்கை தங்களைத் திணறடிப்பதாகவும் கூறுகின்றனர்.
- அதேபோல குழந்தைகள் வளர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பின் ‘எம்ட்டி நெஸ்ட் சிண்ட்ரோம்' என்றழைக்கப்படும் நிலையைப் பலரும் எதிர்கொள்கின்றனர். பலரும் மெனோபாஸ் மாதவிடாய் சுழற்சி நிற்பதற்கு முந்தைய உடல் மாற்றமடைந்து வரும் காலத்தில் ப்ரி-மெனோபாஸால் அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர். இது மன அழுத்தத்தோடு காரணமின்றி அழும் ஒருவித மனநிலைக்குக் கொண்டுபோய் நிறுத்துகிறது. இறுதியில் தற்கொலைக்குக் காரணமாகிவிடுகிறது.
- பெண்கள் தங்களுடைய மனக்கஷ்டங்களைப் பகிர்ந்துகொண்டு மனநல ஆலோசனை பெறவும், நல்வாழ்விற்காகத் திட்டமிடவும் மும்பை மரிவாளா தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் வழிகாட்டிவருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த ஓராண்டில் இரண்டு கிராமப்பகுதிகளில் 263 பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டறிந்து, அவர்களை மீட்டோம்.
- குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், சமூக உறுப்பினர்கள், கல்வியாளர்கள், மதத் தலைவர்கள், சுகாதார வல்லுநர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசாங்கங்கள் என ஒவ்வொரு வரும் தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தித் தற்கொலையைத் தடுக்கவேண்டும். தற்கொலைக்கான தடுப்பு வழிகள் தொடர்பாக இலவச மனநல உதவி அலைபேசி எண் 93754 93754-ஐத் தொடர்பு கொள்ளலாம். தற்கொலை செய்வதற்கு ஆயிரம் வழிகளையும் காரணங்களையும் தேடும் நாம், ‘நாம் ஏன் சாக வேண்டும்?’ என்று ஏன் சிந்திக்கக் கூடாது? யோசிப்போம்.” என்கிறார் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன்.
என்ன செய்யலாம்?
- “ஒரு விரிவான தேசிய தற்கொலைத் தடுப்பு உத்தி அனைத்து அரசாங்கங்களுக்கும் இருக்க வேண்டும்,” என்று உலகச் சுகாதார அமைப்பின் தற்கொலைத் தடுப்பு நிபுணர் டாக்டர் அலெக்ஸாண்ட்ரா ஃப்ளீஷ்மேன் கூறியுள்ளார். தற்கொலைத் தடுப்புக்கான நான்கு வழிமுறைகளை உலகச் சுகாதார நிறுவனம் நாடுகளுக்குப் பரிந்துரைத்துள்ளது. 1. பூச்சிகொல்லிகள் - துப்பாக்கிகள் போன்ற தற்கொலை செய்து கொள் வதற்கான வழிமுறைகளை அடையும் விதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். 2. தற்கொலை தொடர்பான பொறுப்பான செய்திகளை வெளியிட ஊடகங்கள் முன்வரவேண்டும்; அதாவது தற்கொலை முறையை விவரிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 3. இளம் பருவத்தினருக்கு வாழ்க்கைத் திறன்களை வளர்ப்பது குறித்து வழிகாட்ட வேண்டும். 4. தற்கொலை எண்ணங்கள் கொண்டோரைக் கண்டறிந்து மேலாண்மை செய்தல் - கடுமையான துயரத்தில் உள்ளவர்களுக்கு உடனடியாக உதவு வதற்கான வழிவகைகளும் இருக்க வேண்டும்.
தற்கொலையைத் தவிர்ப்பது எப்படி?
- நல்ல உறவுகள் - நண்பர்களைக் கொண்டி ருத்தல் அவசியம். அவர்களின் ஆலோசனைகளும் அறிவுரைகளும் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். சில நோய்களைக் குணப்படுத்த முடியாது, வலியால் துடிப்பார்கள். நோய்களின் வலியால் ஏற்படும் தற்கொலைகளைத் தடுக்க 'நோய் ஆதரவு பராமரிப்பு மையம்' (Palliative care centre) அனைத்து அரசு மருத்துவனைகளில் தொடங்கலாம்.
- அவர்களுக்குத் தேவையான அன்பும் அரவணைப்பும் கொடுக்கப்படும்போது நோயின் வேதனை குறைவதற்கும் தற்கொலை முடிவை எடுப்பது குறைவதற்கும் வாய்ப்புண்டு. பொருளா தாரப் பிரச்சினைகளால் ஏற்படக்கூடிய தற்கொலைகளைத் தடுக்க வரவுக்கு ஏற்ப செலவு செய்வதும் தேவையற்ற பொருள்களை வாங்குவதைத் தவிர்ப்பதும் மிக முக்கியமாகும்.
- பெண்கள் பொருளாதார ரீதியாக வலுவடையும்போது தற்கொலை களின் எண்ணிக்கை குறைகிறது. இந்தியாவில் பெண் தற்கொலை கள் குறித்து லான்செட் இதழின் இணை ஆசிரியரான டாக்டர் டாண்டோனா, "இந்தியாவில் பெண் தற்கொலையை முடிவுக்குக் கொண்டுவர புதிய அணுகு முறையுடன் கூடிய ஆராய்ச்சி தேவை" என்கிறார்.
- மாணவர் களிடையே தற்கொலை எண்ணங்களை வளரவிடாமல் தடுக்கச் சிறுவயதிலிருந்தே தன்னம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்களையும் வரலாறுகளையும் பெற்றோர் கூறிவர வேண்டும், மாணவர்கள் திறன்பேசியில் தேவையற்ற வலைத்தளங்களில் தங்கள் கவனத்தைச் சிதறவிடுவதையும் பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
- பெற்றோர் களுடைய ஆசைகளையும் கனவுகளையும் குழந்தைகளின் மீது திணிக்காமல், அதேநேரத்தில் குழந்தைகள் தங்களின் கனவுகளின் அல்லது ஆசைகளின் நன்மை, தீமைகளை ஆராய்ந்து நல்ல முடிவுகளை அவர்களே எடுக்கும்படி செய்ய வேண்டும். மதிப்பெண்கள் முக்கியம்தான். ஆனால், அதுவே வாழ்க்கையல்ல என்பதை அவர்கள் மனதில் பதியவைக்க வேண்டும். மாணவருடன் பெற்றோர், ஆசிரியர் தொடந்து கலந்துரையாட வேண்டும்.
- தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல என்பதை சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் உணர வைத்தல் அவசியம். மோசமான முடிவுகளைச் சட்டென எடுக்காதீர்கள். சற்றுத் தள்ளிப்போடுங்கள். அது நம்மை வாழவைக்கும்.
நன்றி: தி இந்து (10 – 09 – 2023)