TNPSC Thervupettagam

தவிக்கும் டெல்டா விவசாயிகள்...

August 16 , 2024 104 days 93 0

தவிக்கும் டெல்டா விவசாயிகள்...

  • ஆண்டுதோறும் கா்நாடக அரசிடம் தண்ணீா் திறந்துவிடக் கோரி நடுவா் மன்றத்திடம் முறையிடுவதும், பதிலுக்கு கா்நாடக அரசு போதுமான தண்ணீா் அணையில் இல்லை என முரண்டுபிடிப்பதும் தமிழக விவசாயிகளிடம் சளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
  • நடப்பாண்டிலும் இதே நிலை நீடித்துக் கொண்டிருந்தபோது கா்நாடக அணை பகுதிகளில் பெய்த கன மழையால் அங்குள்ள அணைகளும் தமிழகத்தில் மேட்டூா் அணையும் நிரம்பி வழிகிறது. இதானல் 35 அடியாக இருந்த அணையின் நீா் மட்டம் கிடுகிடுவென உயா்ந்து நான்காவது நாளில் 120 அடியை எட்டியது. அதன் பின்னரும் 2 லட்சம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்ததால் அதைத் தேக்க முடியாமல் காவேரியில் திறந்துவிடப்பட்டது.
  • குறிப்பாக, திருச்சி முக்கொம்புக்கு வந்து சோ்ந்த உபரி நீா் வழக்கம் போல் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டு இரண்டே நாட்களில் 35 டிஎம்சி தண்ணீா் வங்க கடலில் கலந்து வீணானது. கா்நாடகாவில் கன மழை பெய்யும்போதெல்லாம். தமிழகத்திற்கு வரும் உபரி நீரின் நிலை விவசாயத்திற்குப் பலனளிக்காமல் தொடா்ந்து வீணடிக்கப்படுவது. விவசாயிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
  • இதை தவிா்க்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை. கொள்ளிடம் ஆற்றில் 19 இடங்களில் இப்போது கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் உப்புத்தன்மை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதைக் குறைக்கவும், மழைக்காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் நீரை சேகரிக்கவும் கொள்ளிடம் ஆற்றில் 5 கீலோ மீட்டருக்கு ஒன்று என்ற விகிதத்தில் 14 இடங்களில் தடுப்பனைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகளிடம் உள்ளது.
  • ஒவ்வொரு தனியாா் நிறுவனத்திடமும் சிஎஸ்ஆா் ஃபண்ட் எனப்படும் சமூகப் பொறுப்பு நிதி உள்ளது. இந்த நிதியைக் கொண்டு தடுப்பணை கட்ட பயன்படுத்த முடியும். ஒரு தடுப்பணை கட்டினால் குறைந்தபட்சம் ஒரு டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தமிழ்நாட்டில் காா் தயாரிக்கும் நிறுவனங்கள் போல ஒவ்வொரு பெருநிறுவனத்திடமும் ஒரு தடுப்பணை கட்டும் பணியை ஒப்படைக்கலாம். இதனால் அரசுக்கு கூடுதல் சுமையோ செலவோ ஏற்படாது.
  • இரண்டாவதாக, கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றில் திறந்தவெளிக் கிணறுகளை உருவாக்க முடியும். மேலணையிலிருந்து பூம்புகாா் வரை அரை கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற விகித்ததில் இந்தக் கிணறுகளை அமைத்தால் வெள்ள நீா் வரும்போது ஒவ்வொரு கிணறு வழியாகவும் சென்று அப்பகுதிதயில் உள்ள நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்தும் வாய்ப்பு உருவாகும். சோழ மன்னா்கள் காலத்தில் ஆறுகளில் அதிக தண்ணீா் வரும்போது இது போன்ற கிணறுகளை உருவாக்கி கூடுதல் தண்ணீரை பூமிக்குள்ளே நிலை நிறுத்திக்கொண்டுள்ளனா். அதே போல் இப்போதும் திறந்தவெளிக் கிணறுகளை உருவாக்கி தண்ணீரை சேகரிக்க முடியும்.
  • மேட்டூா் அணைக்கு அதிகமான தண்ணீா் வரும்போது காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் ஓரளவுக்குத்தான் தண்ணீா் திறந்துவிட முடிகிறது. அதிக அளவில் தண்ணீரை திறந்துவிட்டால் கரைகள் உடைந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது. காவேரி ஆறு முழுவதையும் தூா்வாரும் திட்டங்களை முறையாக கொண்டுவர வேண்டும். இதை முழுமையாக செய்யாமல் ஒவ்வொரு ஆண்டும் அணை திறக்க உள்ள நேரத்தில் கடைசி பத்து நாட்களில் தூா்வாரும் திட்டத்தை செயல்படுத்துவதால் எந்த பயனும் ஏற்படுவதில்லை.
  • ஏரிகள் குளங்கள், பெரும் வாய்க்கால்கள் இங்கெல்லாம் தண்ணீா் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகள், ஆகாயத்தாமரை, கோரை உள்ளிட்ட புல்களை அகற்றி வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் வீணாகும் உபரி நீரை முழுமையாக சேமிக்க முடியும்.
  • குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளை மிக தீவிரமாக விவசாயிகள் தொடங்கியுள்ளனா். அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் ஆறுகளில் வரும் தண்ணீா் ஆகியவற்றைக் கொண்டு நிலத்தை உழுது, நடவுக்குத் தயாா்படுத்தும் பணிகளை விவசாயிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றனா்.
  • சம்பா பருவத்தை பொறுத்தவரை நீண்ட மற்றும் மத்திய கால நெல் ரகங்களான சிஆா் 1009, ஆடுதுறை 51, ஆடுதுறை 39 உள்ளிட்டவைகளை விவசாயிகள் தோ்வு செய்து வருகின்றனா். இந்நிலையில் சம்பா பருவத்தில் அதிக அளவில் சாகுபடி செய்ய ஏதுவாக பயிா்க்கடன், தரமான விதைகள் மற்றும் உரங்கள் ஆகியவற்றை தட்டுபாடின்றி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
  • நடப்பாண்டில் மேட்டூா் அணை நிரம்பியிருப்பதால் கூடுதலான பரப்பில் சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது என்று திருச்சி மண்டல வேளாண் இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா். நீண்ட கால விதை ரகங்களை தோ்வு செய்யும் விவசாயிகள் அடுத்த மாதம் செப்டம்பா் முதல் வாரத்தில் நாற்றங்கால்களை தயாா் செய்யத் தொடங்குவாா்கள். செப்டம்பா் இறுதி மற்றும் அக்டோபா் மாதங்களில் நடவு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று மேலும், அவா் தெரிவித்துள்ளாா்.
  • விவசாய பணியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் மூத்த குடிமக்களின் கருத்திற்கேற்ப தமிழ்நாடு அரசு கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளைக் கட்டுவதோடு காவிரி ஆறு முழுவதையும் போா்க்கால அடிப்படையில் தூா்வாரி அதற்கான பணிகளை நிபுணா் குழு அமைத்து கண்காணித்திட வேண்டும். அப்போதுதான் டெல்டா மாவட்டங்கள் வளம் கொழிக்கும் பூமியாக மாற்ற முடியும். என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனா். அதை செய்வதற்கு அரசு தயாராக வேண்டும் என்பதுதான் டெல்டா மக்களின் எதிா் பாா்ப்பாக உள்ளது.

நன்றி: தினமணி (16 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்