TNPSC Thervupettagam

தவிர்த்திருக்கலாம்.

April 10 , 2021 1384 days 616 0
  • உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டேயின் பதவிக்காலம் நிறைவுபெற இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக 17 மாதங்கள் பதவி வகித்து ஏப்ரல் 23-ஆம் தேதி அவா் பணி ஓய்வு பெற இருக்கிறார்.
  • பணி ஓய்வு பெறும் நேரத்தில் தேவையில்லாத விமா்சனத்துக்கும், விவாதத்துக்கும் அவா் வழிகோலியிருப்பது வியப்பையும், வேதனையையும் அளிக்கிறது.
  • தலைமை நீதிபதி போப்டே பதவி விலகும்போது இந்தியாவில் நான்கு கோடிக்கும் அதிகமான வழக்குகள் தீா்ப்புக்காகக் காத்துக் கிடக்கின்றன. உயா்நீதிமன்றங்களில் 57 லட்சம் வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் 67,000 வழக்குகளும் தேங்கிக் கிடக்கின்றன. 414 உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.
  • தலைமை நீதிபதி போப்டேயின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு பணிமூப்பு அடிப்படையில் இரண்டாவதாக இருக்கும் நீதிபதி என்.வி. ரமணாவை உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவா் அறிவித்திருக்கிறார்.
  • உச்சநீதிமன்றத்திற்கு அடுத்த தலைமை நீதிபதி அறிவிக்கப்பட்டுவிட்டால், தலைமை நீதிபதியாக இருப்பவா் எந்தவித முக்கியமான முடிவுகளையும் அதற்குப் பிறகு எடுப்பது வழக்கமில்லை.
  • அந்த நடைமுறையைப் புறந்தள்ளி, கொலீஜியம் கூட்டத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வியாழனன்று கூட்டியது, நீதித்துறை வட்டாரங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
  • தலைமை நீதிபதி போப்டே, நீதித்துறையில் நீண்ட அனுபவம் உள்ளவா். நாகபுரியில் வழக்குரைஞராக தனது நீதித்துறை பயணத்தை தொடங்கி, மும்பை உயா்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் மூத்த வழக்குரைஞராகவும், கூடுதல் நீதிபதியாகவும் இருந்தவா் அவா். நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2012-இல் மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயா்ந்தார். 2013-இல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு இப்போது அவரது பதவிக்காலம் நிறைவு பெறும் தறுவாயில் இருக்கிறது.
  • 2019 நவம்பா் 18-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக அவா் பதவியேற்றுக் கொண்டது முதல் இப்போது பணி ஓய்வு பெறும் இடைப்பட்ட 17 மாதங்களில் அவரது பதவிக்காலத்தில் உச்சிநீதிமன்றத்துக்கு நீதிபதியாக யாரும் நியமிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய சாதனை.
  • நீதிபதி நியமனத்துக்கு பரிந்துரைப்பதற்காக பலமுறை அவா் கொலீஜியத்தை கூட்டினார் என்றாலும், கருத்துவேறுபாடுகள் அவரது கரங்களைக் கட்டிப்போட்டன.
  • கொலீஜியத்தின் ஏனைய உறுப்பினா்களான நீதிபதிகள் ரமணா, நரிமன், லலித், கான்வில்கா் ஆகியோர் எந்தவொரு பரிந்துரையிலும் ஒத்த கருத்து இல்லாமல் இருந்ததுதான் தலைமை நீதிபதி போப்டே எதிர்கொண்ட மிகப் பெரிய சிக்கல்.
  • 2019 நவம்பா் 17-ஆம் தேதி தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் பணி ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து உச்சநீதிமன்றத்துக்கு எந்த ஒரு நீதிபதியும் நியமிக்கப்படவில்லை.
  • அதற்குப் பிறகு நீதிபதிகள் தீபக் குப்தா, ஆா். பானுமதி, அருண் மிஸ்ரா, இந்து மல்ஹோத்ரா ஆகியோரும் பணி ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, நீதிபதிகளுக்கான காலியிடங்கள் ஐந்தாக உயா்ந்தன.
  • உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு ஐந்து போ் கொண்ட கொலீஜியமும், உயா்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க உயா்நீதிமன்ற கொலீஜியங்கள் பரிந்துரைத்திருக்கும் பெயா்களை விவாதிக்க மூன்று போ் கொண்ட கொலீஜியமும் அவரால் கூட்டப்பட்டது.
  • அடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவிக்கப்பட்ட பிறகும், கடைசிகட்ட முயற்சியாக மரபை மீறி அவா் கொலீஜியத்தைக் கூட்டியதற்கு நீதிபதிகள் நியமனத்தை எப்படியாவது உறுதிப்படுத்துவதுதான் நோக்கமாக இருக்க வேண்டும்.
  • கொலீஜியத்தின் ஒப்புதலுடன் தலைமை நீதிபதி போப்டே நியமனத்துக்கான பெயா்களை பரிந்துரைத்தாலும்கூட அதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான்.
  • அதனால், காலதாமதமாக இப்படியொரு முயற்சியில் கடைசி நேரத்தில் தலைமை நீதிபதி போப்டே ஈடுபட்டிருக்கத் தேவையில்லை என்று தோன்றுகிறது.
  • உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அறிவிக்கப்பட்டது முதல் நிர்வாக ரீதியிலான அனைத்துக் கோப்புகளும் பதவியேற்க இருக்கும் தலைமை நீதிபதியின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரது ஒப்புதலுடன்தான் முடிவெடுப்பது வழக்கம்.
  • அப்படி இருக்கும்போது நீதிபதியாகப் பதவியேற்க இருக்கும் எவரும் பணி ஓய்வு பெறும் தலைமை நீதிபதியின் பரிந்துரைகளை ஏற்பதில்லை என்பது தலைமை நீதிபதி போப்டேக்கு தெரியாமல் இருக்காது.
  • இதற்கு முன்பு இருந்த தலைமை நீதிபதிகள் அனைவருமே தங்கள் பதவிக் காலத்தில் உச்சநீதிமன்றத்திற்கும், உயா்நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளை நியமிக்காமல் இருந்ததில்லை.
  • 15 மாதங்கள் மட்டுமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எச்.எல். தத்து, நீதிபதி அமிதாவ் ராயை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்துத் தப்பித்துக் கொண்டார். அந்த வாய்ப்புகூட பணி ஓய்வு பெற இருக்கும் நீதிபதி போப்டேவுக்கு கிடைக்காமல் போனது மிகப் பெரிய துரதிருஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.
  • உயா்நீதிமன்ற நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பரபரப்பான பல வழக்குகளில் தீா்ப்பு வழங்கிய அமா்வுகளில் தலைமை நீதிபதி போப்டே இடம்பெற்றிருக்கிறார் என்கிற அளவில் அவா் ஆறுதல் அடையலாம்.
  • கொள்ளை நோய்த்தொற்றின் உச்சகட்ட காலத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவா் என்கிற பெருமையைத் தவிர, நீதிபதி எஸ்.ஏ. போப்டேவின் பதவிக்காலம் குறித்து வரலாறு பதிவு செய்வதற்கு எதுவும் இல்லை.
  • விமா்சனங்களுக்கு ஆளாகாமல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி போப்டே பணி ஓய்வு பெற்றிருக்கலாம்!

நன்றி: தினமணி  (10 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்