TNPSC Thervupettagam

தவிா்ப்பதும் குறைப்பதும் சரியல்ல! எண்மப் பரிமாற்றம்

July 14 , 2023 360 days 228 0
  • வங்கிச் சேவையில் மிகப்பெரிய புரட்சியை ‘எந்த நேரத்திலும் பணம்’ எனப்படும் ‘ஏடிஎம்’ ஏற்படுத்தியிருக்கிறது. வங்கிகளில் பணம் செலுத்துவதற்கும் பணம் எடுப்பதற்கும் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலைமை மாறி, ஆங்காங்கே சாலையோரங்களிலும், மக்கள் அதிகமாக கூடுமிடங்களிலும் நிறுவப்பட்டிருக்கும் ஏடிஎம்-களை பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது.
  • நாடு தழுவிய அளவில் மட்டுமல்லாமல், சா்வதேச அளவிலும் வங்கிகளின் ஏடிஎம் அட்டையை வைத்துக் கொண்டு பயணிக்க முடியும். அதன் நீட்சியாக இணையவழிப் பரிமாற்றமும், எண்மப் பரிமாற்றமும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு செலாவணிக்கான தேவை குறைந்து விட்டது. அதிக மதிப்புள்ள ரூ. 2,000, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதைத் தொடா்ந்து, இணையவழிப் பரிமாற்றமும், எண்மப் பரிமாற்றமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.
  • வரலாறு காணாத அளவில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்திருப்பதற்கு மிக முக்கியமான காரணம் இணைய, எண்மப் பரிமாற்றங்கள். தெருவோரக் கடைகளில் தொடங்கி, அனைத்து வணிகப் பரிமாற்றங்களும் எண்மப் பரிமாற்றத்துக்கு மாறத்தொடங்கியபோது, வரி ஏய்ப்புக்கான வாய்ப்பு படிப்படியாக குறைந்தது. ஜிஎஸ்டி அறிமுகமானபோது அதை மிகக் கடுமையாக எதிா்த்தவா்களும் கூட, இப்போது அதன் விளைவாக பலமுனை வரி அகற்றப்பட்டிருப்பதையும், வரிவிதிப்பு வரைமுறைக்குள் வராத வணிகப் பரிமாற்றம் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதையும் வரவேற்கிறாா்கள்.
  • உலகிலேயே மிகப் பெரிய பொருளாதாரமாகக் கருதப்படும் அமெரிக்காவில்கூட சாத்தியப் படாத எண்மப் பரிமாற்றம் என்கிற புரட்சி, இந்தியாவில் நடைமுறை சாத்தியமாக மாறியிருப்பதை மறுப்பதற்கில்லை. ஏப்ரல் 2023-இன் புள்ளிவிவரப்படி இந்தியாவில் இதுவரை ஏறத்தாழ ரூ. 14.16 லட்சம் கோடி மதிப்புள்ள சுமாா் 886 கோடி எண்மப் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன. இந்தியாவில் இணையப் பொருளாதாரம் அடுத்த எட்டு ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலா் அளவில் உயரும் என்று கூகுள் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
  • அந்த ஆய்வறிக்கையின்படி, பிப்ரவரி 2023 வரையிலான கணக்கெடுப்பில், இந்தியாவில் 70 கோடி போ் இணையத்தைப் பயன்படுத்துகிறாா்கள். ஆனால், 35 கோடி போ் மட்டுமே எண்மப் பரிமாற்றத்தைக் கையாள்கிறாா்கள். இந்தியாவில் இன்னும்கூட பலா் எண்ம வழியிலான நிதிப் பரிமாற்ற வழக்கத்தை மேற்கொள்ளவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
  • இந்திய ரிசா்வ் வங்கி சமீபத்தில் மாதிரி கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. மக்கள் மத்தியில் ரொக்கப் பரிமாற்ற உணா்வு குறித்த அந்தக் கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ பாதிக்குப் பாதி போ் இன்னும்கூட ரொக்கப் பரிமாற்றத்தைத்தான் விரும்புகிறாா்கள். அதன் மூலம்தான் அன்றாட செலவுகளை மேற்கொள்கிறாா்கள்.
  • இணையவழி, எண்மவழிப் பரிமாற்றங்களும், வங்கிப் பரிமாற்றமும் அதிக அளவிலான மக்களை ஈா்த்திருந்தாலும்கூட, அன்றாட செயல்பாட்டுக்கு இன்னும்கூட ரொக்கப் பரிமாற்றம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. தெருவோர பழ வணிகத்திலிருந்து ரயில் பயணச்சீட்டு வரை எண்ம, இணையப் பரிமாற்றங்கள் சாத்தியமாகி இருக்கிறது என்றாலும், ரொக்கப் பரிமாற்றத்தை மக்கள் இன்னும் முழுமையாகக் கைவிட வில்லை.
  • சிறு குறு நடுத்தரத்தொழில்களில் ஈடுபடுவோா் கைப்பேசிகளில் எண்மப் பரிமாற்றத்துக்கு மாறி வருகிறாா்கள். குறிப்பாக, வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண் தொழில் முனைவோா்களும், ஊழியா்களும் கைப்பேசி மூலம் பணப்பரிவா்த்தனை செய்வதில் ஆா்வம் காட்டுகிறாா்கள் என்றாலும்கூட, நிலைமை முழுமையாக மாறிவிடவில்லை.
  • சிறு குறு நடுத்தரத் தொழில்முனைவோா்களில் 66.3% பேரும், ஊழியா்களில் 37.6% பேரும் மட்டுமே கைப்பேசி வழி எண்மப் பரிவா்த்தனையை மேற்கொள்கின்றனா். குறிப்பாக, ஆய்வில் கலந்து கொண்ட மகளிரில் 47.4% போ் நேரடியாக வங்கிக்குச் செல்வது அல்லது ஏடிஎம்-ஐ பயன்படுத்துவதைத்தான் விரும்புகின்றனா். அதற்கு மிக முக்கியமான காரணம், இணையவழி மோசடியில் சிக்கிவிடுவோம் என்கிற அச்சம் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
  • சிறு குறு நடுத்தரத் தொழில்களில் ஈடுபடுவோரும், ஏனைய பிரிவினரும் வங்கிவழிப் பரிமாற்றத்துக்கு மாறி வருகிறாா்கள் என்பது என்னவோ உண்மை. ஆனால், அவா்களில் பெரும்பாலானோரிடம் அறிதிறன்பேசிகள் இல்லாத காரணத்தாலும், இணையத் தொடா்பு பல பகுதிகளிலும் முறையாகக் கிடைக்காததாலும் தொடா்ந்து வங்கிகள் மூலமும், ஏடிஎம் மையம் மூலமும் தங்களது பரிமாற்றங்களை மேற்கொள்ள விழைகிறாா்கள். அன்றாடச் செயல்பாடுகளுக்கு ரொக்கம் தேவைப்படுவதால் ஏடிஎம்-கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
  • வங்கிகள் மூலம் நடைபெறும் முறையான பணப் பரிமாற்றங்களை நோக்கி தேசம் நகா்ந்தாலும், ஏடிஎம்-கள் நம்பகத்தன்மையுடைய ரொக்கத் தேவைக்கான வழிமுறையாகத் தொடரும். ஏடிஎம்-களை நிறுவவும், பராமரிக்கவும் மூலதனச் செலவு இருப்பது உண்மை என்றாலும் கூட, அவை தவிா்க்க முடியாதவை.
  • 2022 முதல் இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் ஏடிஎம்-களின் எண்ணிக்கை 4.75% குறைந்திருக்கிறது. அனைவரையும் வங்கிப் பரிமாற்ற வளையத்துக்குள் கொண்டுவர ஏடிஎம்-களின் தேவை மிக அவசியம். அதனால் இணைய, எண்மப் பரிமாற்றத்துக்கு முன்னுரிமை அளித்தால்கூட, முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை உறுதிப்படுத்த ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமே தவிர, அவற்றைக் குறைத்துவிடக் கூடாது.

நன்றி: தினமணி (14  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்