TNPSC Thervupettagam

தாகூரின் சீனப் பயணமும் எதிர்ப்பும்

April 14 , 2024 272 days 225 0
  • இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற வெள்ளையர் அல்லாத முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றவர் ரவீந்திரநாத்தாகூர். அந்த அடிப்படையில், 1923இல் பெய்ஜிங் சொற்பொழிவுக் கழகம் சீனாவுக்கு வர ரவீந்திரருக்கு அழைப்புவிடுத்தது.
  • ரவீந்திரர் நோபல் பரிசு பெற்ற பின்பு 1915இலிருந்தே அவரது எழுத்துகள் ஆங்கிலம் வழியாக சீன மொழியில் வெளிவரத் தொடங்கின. சீன மொழியில் அவரை முதலில் மொழிபெயர்த்த சென் டுசியு ‘கீதாஞ்சலி’யிலிருந்து நான்கு கவிதைகளை ‘புதிய இளைஞர்’ என்கிற இதழில் வெளியிட்டார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியை 1921இல் நிறுவிய 13 பேரில் சென் டுசியுவும் ஒருவர்.
  • இதற்கிடையே சீனாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்துவந்த அரசுமுறை ஆட்சிக்கு, சன்யாட் சென் தலைமையிலான புரட்சி 1911இல் முடிவு கட்டியது. அதன்பிறகு, சீன நாடு முழுவதிலும் மாற்றத்துக்கான அலை வீசியது. சீன இலக்கியத்திலும் இந்த மாற்றம் செல்வாக்குச் செலுத்தியது.
  • ‘புதிய இளைஞர்’ இதழில் சென் டுசியுவும் அவரது நண்பர்களும் அதுவரை சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தி வந்த கன்ஃபூசியச் சிந்தனை போன்றவற்றைத் தூக்கியெறிந்து, அறிவியல் – ஜனநாயகம் என்கிற சிந்தனை ஓட்டத்தை மக்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும் எனப் பரப்புரை செய்துவந்தனர்.
  • முதல் உலகப் பெரும்போரின் முடிவில் ஏற்பட்ட வெர்செயில்ஸ் உடன்படிக்கையில் ஜெர்மனியின் ஆளுகையில் இருந்த சீனாவின் ஷாண்டாங் பகுதியை ஜப்பான் வசம் ஒப்படைப்பது என்ற முடிவை எதிர்த்து, 1919 மே 4 அன்று சீன இளைஞர்கள், மாணவர்கள் தொடங்கிய மாபெரும் கிளர்ச்சி சீனச் சமூகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது. இதைத் தொடர்ந்து இளைஞர்கள், மாணவர்கள், கற்றறிந்தவர்கள் மத்தியிலும், தொழிலாளர் – விவசாயிகள் மத்தியிலும் புதியதொரு சமூக மாற்றத்தை நோக்கிய ஆர்வம் வெகுவாக வெளிப்படத்தொடங்கியது. இதுவே, 1921இல் சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கான அடித்தளமாகவும் விளங்கியது. ஒரு சில ஆண்டுகளிலேயே மாணவர்கள், இளைஞர்கள், கற்றறிந்தவர்களின் இயக்கம் என்பது இடதுசாரிகளுக்கு ஆதரவு – எதிர்ப்பு என இரண்டாகப் பிளவுபட்டது.
  • சீனப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக சீனாவின் அரசியல், புராதனச் சின்னங்கள் அல்லது அதன் பழைய வரலாறு பற்றி அறிந்துகொள்வதில் தனக்கு ஆர்வமில்லை என்று எல்மிர்ஸ்ட்டிடம் குறிப்பிட்ட ரவீந்திரர், ‘‘எதிர்காலத்தில் புதிய சீனாவை உருவாக்கவிருக்கும் மாணவர்கள், இளைஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், இசை வல்லுநர்கள், நாடக ஆசிரியர்கள் ஆகியோரைச் சந்திக்கவே நாம் முயல வேண்டும். இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
  • இடதுசாரிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த சு ஷிமோ, ஹூ ஷி, லியாங் ஹிசாவோ போன்றோர்தான் தாகூரின் இந்தப் பயணத்துக்கு முன்கை எடுத்திருந்தனர் என்கிற நிலையில், ஏற்கெனவே தாகூரின் எழுத்துகளைச் சீன மண்ணில் பரப்பிவந்த சென் டுசியுவும் அவரது நண்பர் குழாமும் அவரது வருகையை எதிர்த்து மாணவர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டினர்.
  • இந்தப் பயணத்தில் பெய்ஜிங் போகும் வழியில் சீனத் தத்துவ ஞானியான கன்ஃபூசியஸின் சமாதியில் அஞ்சலி செலுத்திய ரவீந்திரர், ஏப்ரல் 21 அன்று பெய்ஜிங் வந்துசேர்ந்தார். அங்கும்கூட, 1911இல் மக்கள் புரட்சியின் மூலம் அரியணையிலிருந்து தூக்கியெறியப்பட்ட அரசரான பு யு யியை ‘தடைசெய்யப்பட்ட நகரம்’ என்று அழைக்கப்படும் அவரது அரண்மனைக்குச் சென்று சந்தித்தார்.
  • பெய்ஜிங் நகரில் அவர் உரையாற்றத் தொடங்கியபோது, இடையூறுகள் வெடித்துக் கிளம்பின. இரண்டாவது உரையின்போது அங்கிருந்தவர்களிடையே துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஒரு ஜப்பானியரின் உதவியோடு அதன் முழு மொழிபெயர்ப்பையும் அறிந்துகொண்ட ரவீந்திரர், அதன் கடுமையைக் கண்டுஅதிர்ச்சியடைந்தார். “இவர்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொள்வது என்பதில் மிகுந்த உறுதியோடு இருக்கின்றனர்!” என்றும் அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே திட்டமிட்டிருந்த ஒரு சில சொற்பொழிவுகளையும் அவர் ரத்துசெய்தார். (இந்தப் பிரசுரத்தின் வங்க மொழிபெயர்ப்பு பின்னர் கல்கத்தாவிலிருந்து வெளிவந்த 'பெங்காலி' என்ற இதழில் முழுவதுமாக வெளியானது).
  • சீனாவில் அவர் ஆற்றிய உரைகள் முழுமையாக அவரது தொகுப்பில் பதிவுசெய்யப்படவில்லை. அவரோடு பயணம் செய்தவர்களின் பதிவுகளும் அவரது மறைவுவரை எந்த வடிவிலும் வெளிவரவில்லை. சீனாவில் தாகூருக்கு எழுந்த எதிர்ப்பின் பின்னணி குறித்து அமெரிக்க அறிஞரான ஸ்டீஃபன் ஹே, தனது முனைவர் பட்ட ஆய்வான ‘கிழக்கு-மேற்கின் ஆசிய வகைப்பட்ட கருத்துகள்’ என்ற நூலில் விவரித்திருந்தார். ரவீந்திரருடன் பயணம் செய்த காளிதாஸ் நாக், எல்மிர்ஸ்ட் ஆகியோரின் பதிவுகளையும், சாந்திநிகேதன் வெளியிட்ட சீனப் பயணம் குறித்த பதிவுகளையும், இந்தப் பயணத்தின்போது சீன மொழியில் வெளிவந்த எழுத்துகளையும் அவர் ஆய்வுசெய்திருந்தார். இந்த ஆய்வின் முடிவில் “ஒரு கவிஞர் என்பதற்கு மாறாக, ஒரு தீர்க்கதரிசியைப் போல சீன மக்கள் முன்பாக அவர் தன்னைக் காட்டிக்கொண்டதே ரவீந்திரரின் சீனப் பயணத்தின் தோல்விக்குக் காரணம்” என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்