- ஹமாஸ் என்கிற இயக்கம் காஸாவில் இல்லாதிருந்திருந்தால் அன்றைக்கு இஸ்ரேல் மிக நிச்சயமாக காஸா கடல் பகுதியில் கண்டறியப்பட்ட இயற்கை எரிவாயு வளத்தை வெளியே கொண்டு வந்திருக்கும். அதை எப்படியெல்லாம் விற்றுக் காசாக்கலாம் என்று அழகாகக் கணக்குப் போட்டுக் காய் நகர்த்தியிருக்கும். நிறையவே சம்பாதித்திருக்கும். பாலஸ்தீன அத்தாரிடிக்கு இயற்கை எரிவாயு ராயல்டி என்று ஏதோ கொஞ்சம் கிடைத்திருக்கும். எல்லாமே உண்மைதான்.
- ஆனால் பாலஸ்தீனத்து முஸ்லிம்களுக்கு இன்றளவும் எஞ்சியிருக்கும் 2 துண்டு நிலங்களில் ஒரு துண்டு முற்றிலுமாகவே இல்லாமல் போயிருக்கும். ஏனெனில், பாலஸ்தீன அத்தாரிடியைக் கையில் வைத்திருக்கும் மம்மூத் அப்பாஸின் ஃபத்தா முற்று முழுதான சமாதானப்புறாவாகிவிட்ட சூழ்நிலையில் இஸ்ரேலின் தாண்டவங்களுக்கு எதிரான ஒரே தடுப்பரண் ஹமாஸ்தான். ஹமாஸை அறவே இல்லாமல்செய்துவிட்டால் காஸா அதன் பின்வாசலாகி விடும். அதன்பின் எல்லாமே அவர்கள் வசம்.இன்றைய யுத்தத்தில் ஹமாஸை நிர்மூலமாக்க அவர்கள் துடிப்பதன் பின்னணியில் இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
- அப்படியானால் ஹமாஸின் பொறுப்பு எத்தகையது? இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மொத்த காஸா மக்களையும் மரணக்குழிக்குள் தள்ளுவதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாமா? எல்லாம் இருக்கட்டும். இஸ்ரேலுடன் போரிட்டு அவர்களால் வெல்லமுடியுமா? சிறிய வெற்றிகளை அவர்கள்அடைந்திருக்கலாம். எளிய இலக்குகளைத் தகர்த்திருக்கலாம். இஸ்ரேலிய அரசை அச்சமூட்டியிருக்கலாம், அலறடித்திருக்கலாம். ஆனால் ஒரு முழு நீள யுத்தம்?
- ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஹமாஸோ, பி.எல்.ஓ செயலில் இருந்தபோது அவர்களோ, யாரோ ஒரு தரப்பு ஏதோ ஒரு காரணத்துக்காக இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதமேந்துகிறார்கள் என்றால் அண்டை அயல் மத்தியக் கிழக்கு தேசங்களில் சில உடனே ஆதரவு தெரிவித்து முன்னால் வந்து நிற்கும்.ஆனால் எந்த வேகத்தில் அவர்கள் முன்னால்வருகிறார்களோ, அதே வேகத்தில் காணாமலும் போவார்கள். இது சரித்திரம். முந்தைய அத்தியாயங்களிலேயே அதற்கு நாம் உதாரணங்கள் பார்த்திருக்கிறோம்.
- அப்படியிருக்க, ஈரான் மறைமுகமாக உதவும், எகிப்துஆதரிக்கும், சிரியா கைகொடுக்கும் என்றெல்லாம் கணக்கிட்டு ஹமாஸ் இந்தப் போரைத் தொடங்கியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், சகோதர தேசங்களின் நேசம் குறித்து நம்மைவிட அவர்கள் நன்றாக அறிவார்கள்.
- இன்னொரு சந்தேகம் வரலாம். அல் காயிதாவால் அமெரிக்காவையே அலறடிக்க முடிந்திருக்கிற போது ஹமாஸால் இஸ்ரேலை வெல்ல முடியாதா?
- என்றால், மிக நிச்சயமாக முடியாது. காரணம், அல் காயிதா என்பது அன்றைக்கு உலகம் தழுவிய மாபெரும் தீவிரவாத இயக்கம். அறம் எல்லாம் அவர்களுக்கு அறவே கிடையாது. மிரட்டல் மூலம் கட்டாய நிதி வசூல்முதல் ஏடிஎம் கொள்ளை, க்ரெடிட் கார்டுஊழல் வரை அவர்களது குற்ற சரித்திரத்தில்பல நூற்றுக்கணக்கான கறுப்பு அத்தியாயங்கள் உண்டு. தனியொரு தொழில்நுட்பப் பிரிவையே வைத்துக் கொண்டு, உலகெங்கும் அதற்கு அலுவலகம் திறந்து, நாடு வாரியாக ஆண்டுக்கு இத்தனை லட்சம் டாலர் என்று உருவி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
- ஹமாஸின் சரித்திரத்தில் அம்மாதிரியான செயல்களைக் காண இயலாது. முன்பே சொன்னது போல, ஒரு தீவிரவாத இயக்கத்துக்கு உள்ள சுதந்திரங்கள் ஒரு விடுதலை இயக்கத்துக்குக் கிடையாது. பல்வேறு உலக நாடுகளில் நிதி வசூல் நடப்பது உண்மைதான். ஆனால் காஸாவுக்குள் ராஜாவாக இருக்கும் அளவுக்குத்தான் அவர்களுக்கு வருவாய் உண்டு. ஒரு சந்தர்ப்பத்தில் அல் காயிதா அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சி வரை சென்றிருக்கிறது. அதில் தோற்றது வேறு கதை என்றாலும் அவர்களால் அந்தளவுக்கு செலவு செய்ய முடிந்தது. ஹமாஸ் தனது ஏவுகணைகளைக் கூட தானே தயார் செய்து கொள்ளும் நிலைமையில்தான் இன்று வரை உள்ளது.
- சுருக்கமாகச் சொல்வதென்றால் பெரிய பொருளாதார பலமின்றிதான் ஹமாஸ் இந்த யுத்தத்தைத் தொடங்கியது.
- பொருளாதார பலம் இல்லாவிட்டாலும் உடனடி ஆவேசத்துக்கான காரணம் என்ற ஒன்று இருக்கும் அல்லவா? ஹமாஸ் தரப்பில் இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
- முதலாவது, 2023-ம் ஆண்டு ரமலான் நோன்பு சமயத்தில் ஜெருசலேத்தில் உள்ளஅல் அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேலியர்களால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள். இரண்டாவது, முன்னெப்போதைக் காட்டிலும் பாலஸ்தீனப் பகுதிகளில்தீவிரமாக நடக்கும் யூதக் குடியேற்றங்கள்.
- ஒரு தேசத்துடன் போர் தொடங்குவதற்கு இவை சரியான அல்லது போதுமான காரணங்கள்தானா என்று உலகெங்கும் இன்று விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தப் பிரச்சினையைச் சற்றுத் தெளிவாக அலசிவிடுவோம். அது மிகவும் முக்கியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 11 - 2023)