- ஆப்பிரிக்கா என்றவுடன் சோமாலியாவிலும் தெற்கு சூடானிலும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வன்முறையும் பட்டினிச் சாவுகளும் நம் நினைவுக்கு வரும்.
- நைஜீரியாவில் நிகழும் போகோ ஹராம் பயங்கரவாதச் செயல்கள் நினைவுக்கு வரும். ஆனால், முழு உண்மை அதுவல்ல. ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல பகுதிகள், நிலையான சமூக அரசியல் அமைப்புகளைக் கொண்டவை.
- கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் தான்சானியா அதில் முக்கியமான நாடு. இந்தியாவின் பரப்பளவில் 28% கொண்டிருக்கும் தான்சானியா, இந்திய மக்கள்தொகையில் 4% (5.6 கோடி) கொண்டது.
- இதன் பொருளாதார அளவு இந்தியாவுடன் ஒப்பிடுகையில் 2%தான். ஆனால், தான்சானியாவிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. முக்கியமாக, வரி வசூல்!
- 1961-ல் விடுதலை பெற்ற இந்த நாடு, 1969 வரை பிரிட்டிஷ்காரர்கள் விதித்துவந்த தலைவரி என்னும் தனிநபர் வரிவிதிப்பை மேற்கொண்டுவந்தது. அந்த வரி, குடிமக்களின் வருமான ஏற்றத்தாழ்வுகளை மனதில்கொள்ளாமல் அனைவருக்கும் ஒரே அளவில் இருந்தது.
- இதனால், ஏழைகள் வரி கட்டுவதில் மிகவும் சிரமப்பட்டனர். இந்த வரிமுறையை மாற்றி 1969-ல் தான்சானியா அரசு நவீன வரிமுறைகளை அறிமுகப்படுத்தியது. தனிநபர் வரி ஒழிக்கப்பட்டது.
- நாட்டின் பெரும்பான்மையான மக்கள், வேளாண்மையில் ஈடுபட்டுவந்ததால் வரி வசூல் மிகக் குறைவாகவே இருந்தது. 1990-களின் தொடக்கத்தில் தான்சானியா பல கட்சிகள் போட்டியிடும் வகையில் தனது அரசியல் அமைப்பை மாற்றி அமைத்தது.
- தொழில் துறையில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கத் தொடங்கியது. வணிக வரி நிர்வாகத்தை நவீனப்படுத்தும் வகையில் 1998-ல் மதிப்புக்கூட்டு வரியை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் மதிப்புக்கூட்டு வரி 2005-ல் முன்னெடுக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
மதிப்புக் கூட்டு வரி
- மதிப்புக்கூட்டு வரி அறிமுகமானது தான்சானியாவின் வரி நிர்வாக அடிப்படையை மாற்றி அமைத்தது. 1997-98-ல் 0.9 பில்லியன் டாலராக இருந்த வருடாந்திர வரி வசூல், 10 ஆண்டுகளில் 2.9 பில்லியன் டாலராக (320% வளர்ச்சி) உயர்ந்தது.
- இதனால், நிதி நிலை மேம்பட்டு அரசு தன் உள்கட்டமைப்பில் பெரும் முதலீடுகளைச் செய்தது. 1997-98-க்கு முந்தைய 10 ஆண்டுகளில், சராசரியாக 3.1% இருந்த பொருளாதார வளர்ச்சி, அடுத்த 10 ஆண்டுகளில் 6%-க்கும் அதிகமாக உயர்ந்தது.
- இந்த முன்னேற்றத்தில் மதிப்புக்கூட்டு வரி விதிப்பு எனும் சீர்திருத்தம் முக்கியப் பங்கு வகித்தது.
- மதிப்புக்கூட்டு வரியை அடுத்த முக்கியமான வரி நிர்வாக முன்னெடுப்பு, தான்சானிய வணிக நிறுவனங்களை தான்சானியாவின் வருவாய்த் துறையுடன் மின்னணுக் கருவிகள் மூலமாக இணைத்தது ஆகும்.
- 2010-ல் நிறுவனங்கள் செய்யும் விற்பனை, தான்சானியா வருவாய்த் துறை அளிக்கும் மின்னணுக் கருவிகள் மூலம் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்னும் விதியைக் கட்டாயமாக்கியது அரசு. வணிக நிறுவனங்களின் விற்பனை இயந்திரங்களுடன் இணைக்கப்பட்ட மின்னணுக் கருவிகள், இணையம் மூலம் வருவாய்த் துறையின் கணினியுடன் இணைக்கப்பட்டன. இந்த வழிமுறையை ஊக்குவிக்கும் பொருட்டு மின்னணுக் கருவிகளை அரசு இலவசமாக வழங்கியது.
- நிறுவனம் செய்யும் ஒவ்வொரு விற்பனையும் அந்தக் கருவியில் பதியப்பட்டுவிடும். எந்த ஒரு விற்பனைச் செயலையும் விற்பனை நிறுவனம் அழிக்க முடியாது என்னும் வகையில் மென்பொருள் பொருத்தப்பட்டிருக்கும்.
- ஒரு நாளின் வணிகம் முடிந்தவுடன் ‘ஜீ’ என்னும் ஒரு அறிக்கையை நிறுவனம் தயாரிக்கும். இந்த அறிக்கை அந்த நாளின் மொத்த விற்பனை, நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய மதிப்புக்கூட்டு வரி ஆகிய தகவல்களைக் கொண்டிருக்கும். ‘ஜீ’ அறிக்கை தயாரித்தவுடன், இந்த விவரங்கள் நேராக தான்சானியா வருவாய்த் துறையின் மத்திய கணினிக்குச் சென்றுவிடும். மாத இறுதியில் நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த வரி பற்றிய தகவல்கள் தான்சானியா வருவாய்த் துறையிடம் இருக்கும்.
வருவாய்த் துறையின் பறக்கும் படை
- தான்சானியா ஒரு பரந்த நாடு. மக்கள்தொகை குறைவான நாடு. டார் எஸ் ஸலாம் என்னும் வணிகத் தலைநகர் தவிர, மற்ற நகரங்கள் மிகச் சிறியவை. எனவே, வணிக நிறுவனங்கள் பலவும் தங்களது வாகனங்கள் மூலம் சிறு சிறு கிராமங்களுக்குக் கொண்டுசென்று நேரடி விற்பனை செய்கின்றன.
- இந்த விற்பனையையும் கணக்கில் கொண்டுவர தான்சானியா வருவாய்த் துறை கைக்கு அடக்கமான விற்பனைக் கருவியை அறிமுகப்படுத்தியது. இந்தக் கருவியில் வண்டியில் எடுத்துச் செல்லப்படும் மொத்தப் பொருட்கள் பற்றிய தகவல்களை நிறுவனம் உள்ளிட்டுவிடும் வசதி உண்டு.
- இணைய வசதி இல்லாத சிறு கிராமங்களில் நிகழும் விற்பனை பற்றிய தகவல்களை இந்தக் கருவி சேமித்துக்கொள்ளும். மாலை, இணைய வசதி உள்ள சிறு நகரத்துக்கு வந்தவுடன் ‘ஜீ’ அறிக்கை தயாரிக்கப்பட்டுத் தகவல்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், டார் எஸ் ஸலாமில் உள்ள தான்சானிய வருவாய்த் துறையின் மத்திய கணினிக்குச் சென்றுவிடும்.
- இவ்வாறு வாகனங்கள் மூலம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பலவும் ரசீது இல்லாமல் விற்பனைசெய்து வரி ஏய்க்கும் சாத்தியங்கள் உண்டு.
- இவற்றைச் சோதிப்பதற்காக வருவாய்த் துறையின் பறக்கும் படைகள் உண்டு. வண்டியுடன் செல்லும் மின்னணுக் கருவியில் கொண்டுசெல்லும் சரக்குகள் பற்றிய முழுத் தகவல்களும் இருக்கும். எனவே, விற்பனை போக வண்டியில் இருக்க வேண்டிய சரக்குகள் பற்றிய புள்ளிவிவரத்தை அந்தக் கருவி கொடுத்துவிடும்.
- ரசீது இல்லாமல் விற்பனை செய்து வரி ஏய்க்கும் வழிகளைத் தடுக்க இந்த முறை உதவுகிறது.
முன்னுதாரணமாகும் தான்சானியா
- மனிதத் தவறுகளால் பிழையான தகவல்களுடன் அச்சிடப்படும் விற்பனை ரசீதுகள் இதில் பிரச்சினை ஏற்படுத்தவல்லவை. அவ்வாறு தவறாக உள்ளிடப்படும் தகவல்களை மின்னணுக் கருவியில் அழிக்கவோ மாற்றவோ முடியாது.
- எனவே, அப்படிப் பிழையான விற்பனையின் அசல் ரசீதுகளை நிறுவனம் பத்திரமாக வைத்திருக்கும். மாத இறுதியில், தாங்கள் கட்ட வேண்டிய மதிப்புக்கூட்டு வரியைக் கணக்கிடும்.
- அதிலிருந்து இந்தப் பிழையான விற்பனை ரசீதுகளின் மதிப்பைக் கழித்துக்கொண்டு, அசல் ரசீதுகளை வருவாய்த் துறையிடம் சமர்ப்பித்துவிட வேண்டும்.
- வேளாண்மை, சுற்றுலாத் துறை, கனிம ஏற்றுமதிகளை மட்டுமே நம்பியிருக்கும் நாடு தான்சானியா. பெரும்பாலான வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு பெற்றவை. மொத்தப் பொருளாதாரத்தில் 10% மட்டுமே உற்பத்தித் தொழில் துறை. ஏற்றுமதி வரிவிலக்கு பெற்ற ஒன்று.
- எனவே, வரி வசூலிக்கும் சாத்தியங்கள் குறைவு. மின்னணுக் கருவிகள் வழி வரி நிர்வாகம் தொடங்கப்பட்ட 2010-ல் பொருளாதாரத்தில் 10.2%-ஆக இருந்த வரி வசூல், 2017-18-ல் 12.9%-ஆக உயர்ந்திருக்கிறது.
- கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் வளர்ந்த நாடுகளைவிடப் பின்தங்கிய நாடு தான்சானியா. ஆனால், அது நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது வரி நிர்வாகத்தை மிகவும் செயல்திறன் மிக்க வழியில் செய்து பல வளர்ந்த நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (05-03-2020)