TNPSC Thervupettagam

தாய்மையின் உரிமை

February 1 , 2020 1808 days 963 0
  • தொழில்நுட்ப வளர்ச்சி, காலமாற்றம், சூழ்நிலைத் தேவை ஆகியவை கருதி அவ்வப்போது சட்டங்கள் இயற்றப்படுவதும், மாற்றப்படுவதும், திருத்தப்படுவதும் அவசியம். அந்த வகையில், 1971-இல் நிறைவேற்றப்பட்ட கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை முற்பட்டிருப்பதை வரவேற்றாக வேண்டும்.
  • பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த இருக்கும் கருக்கலைப்பு திருத்தச் சட்டம் 2020, காலமாற்றத்திற்கு ஏற்ப முந்தைய சட்டத்தில் காணப்படும் பல குறைகளுக்குத் தீர்வு காண முற்படுகிறது. இந்த மாற்றங்கள் தேவைதானா என்று கேள்வி எழுப்புகிறவர்கள், மாறிவிட்டிருக்கும் தலைமுறைச் சூழலின் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள மறுப்பவர்கள்.
  • புதிதாக அறிமுகப்படுத்தப்படும் கருக்கலைப்பு திருத்தச் சட்டத்தின்படி, கலைப்புக்கான காலவரம்பு 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக அதிகரிக்கப்படுகிறது.

முந்தைய சட்டத்தின் படி,

  • முந்தைய சட்டத்தின்படி, திருமணமாகாத பெண்கள் கருத்தடை முயற்சி தோல்வியடைந்தால் கருவைக் கலைக்க முடியாது. புதிய சட்டம் திருமணமாகாத பெண்களையும் உட்படுத்துகிறது. கருக்கலைப்புக்கு ஆளாகும் பெண்களின் தன்மறைப்பு நிலை இந்தச் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • 1971 கருக்கலைப்புச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகளும், தொனியும் தெளிவானவை அல்ல. அதனால், அனுமதிக்கப்பட்டிருக்கும் 20 வார வரைமுறைக்கு உட்பட்டிருந்தாலும்கூட, மருத்துவர்கள் கருவைக் கலைக்க உடன்படாத நிலை காணப்பட்டது. நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெற வேண்டிய அவலம் பெண்களுக்கு இருந்தது.
  • பெரும்பாலான கோரிக்கைகளில், நீதிமன்றத் தீர்ப்பு தாமதமானதைத் தொடர்ந்து தாங்கள் விரும்பாத கருவைச் சுமக்க வேண்டிய கட்டாயம் பல பெண்களுக்கு ஏற்பட்டது. அது மட்டுமல்ல, பலர் நீதிமன்றத்தை அணுக விரும்பாமல் அரைகுறை மருத்துவர்களிடம் கருக்கலைப்புக்குச் சென்று உயிரிழந்த நிகழ்வுகளும் ஏராளம்.
  • முதல் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கருவைக் கலைத்துவிட வேண்டிய கட்டாயம் குறித்து சில பெண்கள் உணர்கிறார்கள்.
  • 20 அல்லது 21-ஆவது வார கர்ப்பத்தில்தான் பலருக்கும் தாங்கள் வயிற்றில் சுமக்கும் குழந்தையின் "அசாதாரணம்' அல்லது "குறைபாடு' தெரியவருகிறது. ஊடுகதிர் சோதனையில் (ஸ்கேன்) கருவின் நிலைமையைத் தெரிந்துகொள்வதில் 20 வார வரைமுறை போதுமானதாக இல்லை. அதனால், பாதுகாப்பில்லாத கருக்கலைப்பு மையங்களைத் தாய்மார்கள் நாடுவதும், உயிரிழப்பதும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு

  • சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற கருக்கலைப்பின்போது தாய்மார்கள் அடையும் வேதனையும், சோதனையும் சொல்லி மாளாது. 20 வாரங்களுக்குப் பிறகு தன் வயிற்றில் சுமக்கும் குழந்தை உடல் நல அல்லது மனநிலை பாதிப்புடன் இருப்பது தெரியவந்தும் அந்தக் குழந்தையை தாய் கர்ப்பத்தில் சுமந்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை சமுதாயத்துக்கு இருக்கக் கூடாது.
  • கருக்கலைப்புக்கான கால வரம்பை 24 வாரங்களாக அதிகரிப்பதன் மூலம், முறையான மருத்துவ சிகிச்சையை தாய்மார்கள் பெற்றுக்கொள்ள சட்டத்திருத்தம் வழிகோலுகிறது. அது மட்டுமல்லாமல், குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்கிற உரிமையை கர்ப்பத்தைச் சுமக்கும் தாய்க்கு வழங்குவதுதான் நியாயமாக இருக்கும் என்கிற அடிப்படையில் இந்தச் சட்டத் திருத்தம் பார்க்கப்பட வேண்டும்.
  • இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான சில கூறுகள் கவனிக்கப்பட வேண்டியவை. கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் கருவைக் கலைப்பதற்கு சில வரைமுறைகள் உண்டு. தாயின் கருவறைக்கு வெளியே தொழில்நுட்ப உதவியுடனோ, தரமான மருத்துவ உதவியுடனோ சிசுவால் வாழ முடியும் என்கிற நிலைமை இருந்தால், கருக்கலைப்பு என்பது உயிர்க்கொலை என்று கூறலாம்.
  • அமெரிக்க அரசமைப்புச் சட்டம், கருவாக இருக்கும் வரை கருக்கலைப்புக்கான உரிமையை தாய்க்கு வழங்குகிறது. அதற்கு முன்னால் வரை கருவைக் கலைப்பது என்பது, கருவைச் சுமக்கும் தாயின் உரிமையாகத்தான் இருக்க முடியும் என்று உலகின் பல்வேறு நாடுகளின் நீதிமன்றத் தீர்ப்புகளில் வழங்கப்பட்டிருக்கின்றன.

கரு வளர்ச்சி

  • கரு, சிசுவாகும் காலகட்டமாக ஏழு மாதங்கள் (28 வாரங்கள்) குறிப்பிடப்படுகிறது. அதற்கு முன்பேகூட கரு வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்கிறது என்றாலும், பாதுகாப்பாக 24 வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு அனுமதி அளிப்பதில் தவறு காண முடியாது.
  • இந்தியாவைப் பொருத்தவரை, சட்டபூர்வமான கருக்கலைப்புக்கும், பாலியல் பரிசோதனைக்கும் இடையில் மருத்துவர்களிடம் குழப்பம் நிலவுகிறது.
  • முறையான கருக்கலைப்புக்கூட தங்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கையாக மாறிவிடக் கூடும் என்பதால், பல மருத்துவர்கள் கருக்கலைப்பைத் தவிர்க்கிறார்கள். இதனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளும், பெண்களும் தாங்கள் விரும்பாத குழந்தைகளை ஈன்றெடுத்து வளர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள்.
  • புதிய சட்டத் திருத்தத்தின்படி, போக்ஸோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது என்றாலும், அந்தக் கருக்கலைப்பு குறித்து மருத்துவர்கள் காவல் துறையிடம் அறிவித்தாக வேண்டும்.
  • இது தங்களது வீட்டாருக்கும், சமுதாயத்துக்கும் தெரியாமல் இருப்பதற்காக பதின்ம வயதினரை அரைகுறை மருத்துவர்களை நாட வழிகோலக்கூடும்.
  • நாடாளுமன்றத்தில் முறையான விவாதத்துக்குப் பிறகு சுட்டிக்காட்டப்படும் குறைகள் களையப்பட்டு, கருக்கலைப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவது காலத்தின் கட்டாயம்.

நன்றி: தினமணி (01-02-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்