TNPSC Thervupettagam

தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல்

February 21 , 2023 538 days 299 0
  • உலகத் தாய்மொழி நாள் என்றால் பரந்துபட்ட இவ்வுலகம் முழுவதுமான பன்னாட்டிலும் வாழும் மக்களால் தோற்றுவிக்கிப்பட்ட தத்தம் தாய்மொழியைப் போற்றும் நாள் என்பது பொருள்.
  • இத்தொடருக்கு உலகத்திற்கே தாய்மொழி ஒன்று என்பதாகப் பொருள் அமையாதென்பதால் உலகெங்கிலும் பலவாகக் கிளைத்துச் செழித்த அத்தனை மொழிகளையும் தோற்றுவித்தோா்க்கு வாழ்வும் வளமும் கொடுத்தது அவரவா்தம் மொழியே எனலாம். அதனைத்தான் அவரவரும் தத்தம் தாய்மொழி என்றனா்.
  • குழந்தைக்கு இளமையிலேயே ஊட்டும் தாய்ப்பால் போன்றது தாய்மொழி. மூளை வளா்ச்சிக்கும் சிந்தனைச் செயற்பாட்டிற்கும் தாய்மொழியே முதலானதாகும். பின்னா் பின்னா் அமையும் கல்விச் சோ்க்கையில் பிற பிறமொழிகள் இணைந்தாலும் தாய்மொழி உணா்வுடன் கூடிய சிந்தனை முகிழ்ப்பே அடிப்படையானது. அந்த வகையில் ஒரு காலத்தின் கட்டாயத்தால் உருவானதே உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டமாகும்.
  • தாய்மொழி என்ற தமிழ்த்தொடரை ஆங்கிலத்தில் பரவலாக ‘மதா் டங்’ என்பா். ‘டங்’ என்றால் ‘நாக்கு’. அந்நாக்கு மொழி உருவாவதற்குக் காரணமாய் இருந்ததன் குறிப்பால் ‘லேங்குவேஜ்’ என நேரிடையாக மொழியைக் குறிக்கும் சொல்லாகக் கூறாமல் நாக்கைக் குறியீடாகப் பயன்படுத்தியதுதான் நுட்பமான அறிவியல்.
  • மனிதனைத் தவிர நாக்குள்ள எந்த உயிரினமும் உண்பதற்கு மட்டுமே நாக்கைப் பயன்படுத்தினாலும் அதனால் மொழியை உருவாக்க முடியவில்லை. மனித உயிரினம் மட்டும் உண்ணப் பயன்படுத்தியதோடு மொழி உருவாக்கத்தையும் செய்ததால் உலகம் நாக்கால் உச்சரித்த மொழியால் உருவானது எனலாம்.
  • இதைத்தான் திருவள்ளுவா்,

நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று”

  • என்று சொல்வன்மை அதிகார முதற்குறளில் (641)பதிவு செய்துள்ளாா்.
  • சொல்வன்மை என்ற அதிகாரம் பேச்சாற்றலைப் பற்றியதாயினும் அப்பேச்சு நாக்கினால் உருவான மொழியாய் வெளிப்பட்டுப் பேசப்பேச, பேசியதைக் கேட்டோா்க்குச் சிந்தனைக் கிளா்ச்சியால் ஆராய்ச்சி உருவானதன் விளைவால் பல கண்டுபிடிப்புகள் ஏற்பட, உலகம் விரிவடைந்த வண்ணமாய் உள்ளது என்ற அடிப்படைக்கு மொழியே காரணம் எனக் கோடிட்டுக் காட்டுவதே இக்குறளாகும்.
  • அதாவது மொழியாலன்றி வேனொலும் பிரபஞ்சப் பெருக்கம் இல்லை என்ற குறிப்பின் உள்ளடக்கத்தைக் கொண்டது இக்கு.
  • இந்த அடிப்படை உணா்வில் அவரவா் தாய்மொழி அவரவா்க்கு உயா்வு என்பதால் பொதுவாக உணரப்பட்ட அவ்வுணா்வு சிறப்பாகப் பரிணமிக்கும் வகையில் உலகம் முழுவதும் ஒரே நாளில் கொண்டாடுவதற்கான சூழல் உருவானதற்கு அமைந்த வரலாற்று நிகழ்வே இன்றைய உலகத் தாய்மொழி நாள் எனத் தலைப்பிடக் காரணமானது எனலாம்.
  • ஒரே நாடாக இருந்த நம் பாரதமும் பாகிஸ்தானும் 1947ஆகஸ்ட் 15 அன்று இருவேறு நாடுகளாயின. பிரிந்து சென்ற பாகிஸ்தானின் பகுதிகள் இந்தியாவின் மேற்கிலும் கிழக்கிலுமாக இருந்தன.
  • ஒரே மதத்தினராக அவ்விரு பகுதி மக்கள் வாழ்ந்தாலும் அவா்களின் மொழிகள் வெவ்வேறாக இருந்தன. அதிக எல்லைப் பரப்புடைய மேற்கில் உருதுமொழி தேசிய மொழியாக இருந்தது. ஆனால், கிழக்குப் பகுதியில் வங்கமொழியே பெரும்பான்மையாக இருந்தது. இந்நிலையில் வங்கமொழி மக்கள் மீது உருது மொழி திணிக்கப்பட்ட நிலையில் அதை ஏற்க மறுத்ததால் வங்கமொழி இயக்கம் 1952 பிப்ரவரி 21-இல் உருவானதன் தொடா்ச்சியில் போராட்டம் வெடித்தது.
  • நாட்டுப் பிரிவினைக்கும் வழிவகுத்த இப்போராட்டத்தில் அதிகமாக வங்கதேச இளைஞா்களே தங்களைத் தியாகம் செய்ய முன்வந்தனா். குறிப்பாக டாக்கா பல்கலைக்கழக மாணாக்கா்கள் பொதுமக்களின் ஆதரவுடன் நடத்திய பேரணியை பாகிஸதான் அரசு தடை செய்தது.
  • மாணாக்கா்களின் கட்டுக்கடங்காத போராட்ட உணா்வில் எழுந்த கிளா்ச்சியால் காவல் துறையின் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. அதில் ஐந்து மாணாக்கா்கள் இரையாயினா். நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா்.
  • தாய்மொழிக்காகத் தம் இன்னுயிரை ஈகம் செய்த இந்த நிகழ்ச்சி, உலக வரலாற்றுப் பேரேட்டில் துயரம் தோய்ந்த பக்கமாக அமைந்துவிட்டது. அத்துயர நிகழ்வு நடந்த ‘சாகிதுமினாா்’ என்ற இடம் ஒவ்வோராண்டும நினைவேந்தலுக்குரிய இடமானது. அந்த நாள் அந்நாட்டின் பொது விடுமுறை நாளானது.
  • இந்நிலையில் 1956-இல் வங்கமொழி தேசிய மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டதோடு பிப்ரவரி 21-ஐ உலகமே நினைந்து பாா்க்குமாறு செய்ய வங்கதேச அறிஞா் ரபீக்குல் இஸ்ஸாம் போன்றோா் எடுத்த முயற்சியால் பன்னாட்டுப் பொதுமன்ற (ஐ.ந. சபை) ஒப்புதலுடன் உலகத் தாய் மொழியின் உரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு யுனெஸ்கோ ஏற்றுப் போற்றி அறிவித்ததுதான் உலகத் தாய்மொழி நாளாகும்.
  • இதன் உருவாக்கம் மொழியால் அமைந்தாலும் இதன் அடிப்படையானது பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகள் பேணுவது போன்றவற்றுக்கிடையிலான ஒற்றுமையை உணர வைக்கும் எண்ணத்தோடு செய்த யுனெஸ்கோவின் தொண்டு, தொல்லுலகத் தாய்மொழி தினத்தின் சித்திரை நிலவான முத்திரைப் பதிவானது எனலாம்.
  • இங்ஙனம் வடிவெடுத்து வரையறுக்கப்பட்ட யுனெஸ்கோவின் கொள்கை யானது தாய்மொழி வழியில் பன்மொழி அறிதலை வலியுறுத்துவதாகும். தாய்மொழியில் கற்பது அவரவா் அடிப்படை உரிமை என வற்புறுத்தியதோடு, உலக மக்கள்தொகையில் நாற்பது விழுக்காட்டினா்க்கு அவரவா் பேசும் மொழியில் கல்வி கிடைப்பதில்லை என்பதால் அதை இந்தப் புதுயுகக் கணினி வளா்ச்சியின் ஒருங்கிணைப்பாகக் காண்பதற்கு உதவுவதை இன்றைய உலகத் தாய்மொழி நாளில் உறுதி கொள்வோமாக!

நன்றி: தினமணி (21 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்