TNPSC Thervupettagam

தாளம் மெளனித்த தருணம்

December 20 , 2024 2 days 84 0

தாளம் மெளனித்த தருணம்

  • அந்தக் குழந்தை பிறந்தபோது, தந்தை அல்லா ரக்கா குரேஷிக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனைக்குச் சென்று மனைவியையும் குழந்தையையும் பார்க்கக்கூட முடியவில்லை. இரண்டு நாள்கள் கழித்து தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பியதும், குழந்தையைத் தந்தையின் கைகளில் கொடுத்தார்கள்.
  • இஸ்லாமிய முறைப்படி, குழந்தையின் காதில் ‘பாங்கு’ (தொழுகைக்கான அழைப்பு) ஓத வேண்டும். ஆனால், குழந்தையைக் கையில் ஏந்திய அல்லா ரக்கா, அதன் காதில் தபேலா ஜதியை உச்சரிக்கத் தொடங்கினார்: ‘தா தின் தின் தின் தா’. அந்த ஒலியைக் கேட்டு வளர்ந்த ஜாகிர் ஹுசைன் பின்னாள்களில் உலகப் புகழ்பெற்ற இசைமேதையாக உருவெடுத்தார்.

​வி​தியை மாற்றியவர்:

  • ஜாகிர் ஹுசைன் பிறந்த​போது குடும்பத்​தில் நிறைய சிக்​கல்​கள். உஸ்தாத் அல்லா ரக்கா குரேஷி புகழ்​பெற்ற தபேலா கலைஞர்​தான் என்றாலும், குடும்பத்​தில் பொருளாதார நெருக்கடிகளும் இருந்தன. ஜாகிர் ஹுசைன் பிறந்த நேரம்​தான் இதற்​கெல்​லாம் காரணம் என்றெல்லாம்கூட நம்பப்​பட்​டது. ஆனால், அப்படியான மூடநம்​பிக்கைகளைத் தனது இசைத் திறமையால் உடைத்​தெறிந்​தார் ஜாகிர் ஹுசைன்.
  • கண்ணில் படும் இடங்​களிலெல்​லாம் தனது கைவிரல்​களைப் படரவிட்டுத் தாளம் போட்டுக்​கொண்​டிருந்த ஜாகிர் ஹுசைனைப் பார்த்து, அவரது தாய் பவி பேகமுக்​குச் சற்று பயம் வந்தது. வகுப்​பறை​யில் இருந்​தும் பல முறை ஜாகிர் ஹுசைன் வெளி​யேற்​றப்​பட்​டிருக்​கிறார். தனது மகன் நன்கு படித்து குடும்பத்தை முன்னேற்று​வார் என்ற எதிர்​பார்ப்பு தகர்ந்​து​விடுமோ என்று பவி பேகம் பயந்​தார். ஆனால், அல்லா ரக்கா​வுக்கோ பெருமை தாளவில்லை. தனது மகனுக்​குத் தன் கலையை முழு​வது​மாகக் கற்றுத்தந்தார்.

தனித்​தன்மை கொண்​டவர்:

  • அல்லா ரக்கா - பவி பேகம் தம்ப​திக்கு மூன்று பெண் குழந்தை​கள். மகன் எப்போது பிறப்​பான் எனக் காத்​திருந்த அல்லா ரக்கா, ஜாகிர் உசைன் பிறந்​ததும் உற்சாக​மாகி​விட்​டார். மகனுக்கு ஏழு வயதாக இருந்த​போதே தபேலா பாடத்தை முறைப்படி கற்பிக்கத் தொடங்கி​விட்​டார். கூடவே, ஒரு முக்​கியப் பாடத்​தை​யும் உணர்த்தி​னார் - “நீ என்னைப் பிரதி​யெடுக்க வேண்டியதில்லை. உன் சுயத்​துடன் நில்.” இந்தப் பாடத்தை ஜாகிர் ஹுசைன் மறக்கவே இல்லை. உஸ்தாத் அஹமது ஜான் திரக்வா, பண்டிட் ஞான் பிரகாஷ் கோஷ் போன்ற மேதைகளின் தாக்கம் இருந்​தா​லும் தனக்கென ஒரு தனித்த பாணியை உருவாக்​கிக்​கொண்டார்.
  • இசைக் கச்சேரிகளில் பக்க​வாத்​தி​யமாக இருந்த தபேலா​வுக்​குத் தனி மேடை அந்தஸ்​தைப் பெற்றுத் தந்தார். அதே வேளை​யில், ஒரு தபேலா கலைஞரின் முதன்​மைப் பணி பக்க​வாத்​தி​யக்​காரராக இருப்​பது​தான் என்ப​தி​லும் அவர் உறுதியாக இருந்​தார். பிற இசைக் கருவி​களைப் போலவே தபேலா​வும் உணர்​வுகளை வெளிப்​படுத்​தக்​கூடியது, பிரதி​யெடுக்​கக்​கூடியது என்பதை உலகுக்கு உணர்த்தி​னார்.
  • பண்டிட் கிஷன் மகராஜ், பண்டிட் சமதா பிரசாத் போன்றோரின் வரிசையில் புகழ்பெற்ற தாளக் கலைஞ​ராகப் பரிமளித்த ஜாகிர் ஹுசைன், ஒரு கட்டத்​தில் தனது தனித்​தன்​மை​யால் உலகப் புகழ்​பெற்​றார். ஜான் மெக்​லாஃப்​லின், எல்.ஷங்​கர், விக்கு விநாயக்​ராம் போன்ற இசைக் கலைஞர்​களுடன் இணைந்து ஜாகிர் உசைன் உருவாக்கிய ‘சக்தி’ என்னும் இசைக் குழு​வின் நிகழ்ச்​சிகள் உலகப் புகழ்​பெற்​றவை.
  • ஃபியூஷன் இசை மூலம் இந்திய இசையை​யும் ஜாஸ் இசையை​யும் மட்டுமல்ல, இருவேறு பண்பாடு​களை​யும் இணைக்​கும் ஃபியூஷன் வடிவ​மாகவே அவரது குழு​வின் படைப்புகள் பார்க்கப்​படு​கின்றன. ஹாலிவுட் திரைப்​படங்​களில் அவரது தபேலா இசை ஒலித்​திருக்​கிறது. மோகன்​லால் நடித்த ‘வானப்​பிரஸ்​தம்’ திரைப்​படத்​துக்கு அவர் அமைத்து வழங்கிய இசை இன்றும் தென்னிந்திய ரசிகர்​களால் சிலாகிக்​கப்​படு​கிறது.
  • இசையின் பல்வேறு வடிவங்​களை​யும் ஜாகிர் ஹுசைன் திறந்த மனதுடன் வரவேற்​றார். பாலிவுட் இசையுல​கிலும் பல்வேறு இசை வடிவங்கள் பயன்​படுத்​தப்​படுவது நல்ல விஷயம்​தான் என்றார். உண்மை​யில், “இந்திய இசை என்றோ, மேற்​கத்திய இசை என்றோ பார்க்க வேண்​டிய​தில்லை. இசை என்றால் அது இசைதான்” என்று ஒரு பேட்​டி​யில் குறிப்​பிட்​டார்.
  • தபேலா​வுடன் அமெரிக்கா​வுக்​குச் சென்​றதும் அவரது முதல் பணி இசை ஆசிரியர் பணிதான். வாஷிங்டன் பல்கலைக்​கழகத்​தின் இசைத் துறை​யில் பணியாற்றி​யிருக்​கிறார். கலிபோர்​னியா அலி அக்பர் இசைக் கல்லூரி​யிலும் பணியாற்றி​யிருக்​கிறார். சிறாருக்கு, இளைஞர்​களுக்கு இசையைக் கற்பிப்​பவராக அல்ல, இசையைப் பகிர்ந்​து​கொள்​பவ​ராகவே தன்னை முன்​வைத்​துக்​கொண்​டார். பெரும் மேதைகளுடன் இணைந்து வாசிப்பதையும், வளர்ந்​து​வரும் இசைக் கலைஞர்​களுடன் இணைந்து வாசிப்​ப​தை​யும் ஒரே மாதிரி​யாகக் கருதி​னார்.
  • ‘முகல்​-ஏ-ஆஸம்’ திரைப்​படத்​தில் இளம் சலீம் வேடத்​தில் நடிக்​கும் வாய்ப்பு கிடைத்​தது. ‘பியார் கியா தோ டர்னா கியா’ பாடல் படப்​பிடிப்​பின்​போது, படப்​பிடிப்புத் தளத்​தில் இருந்த அல்லா ரக்கா​வுக்கு அந்தத் தகவல் சொல்​லப்​பட்​டது. நடிகர் திலீப் குமாரும் இசைவு தெரி​வித்து​விட்​டார். ஆனால், மறுநாளே தனது மனதை மாற்றிக்​கொண்​டார் அல்லா ரக்கா. தனது மகனுக்கு இசைதான் எதிர்​காலம் என்று தீர்க்​கமாக அறிவித்து​விட்​டார்.
  • எனினும், ஜாகிர் உசைன் பின்​னாள்​களில், ‘எ பெர்ஃபெக்ட் மர்டர்’, ‘ஹீட் அண்ட் டஸ்ட்’ போன்ற படங்​களில் சிறிய வேடங்​களில் நடித்​தார். ‘சாஸ்’ (Saaz) திரைப்​படத்​தில் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை (ஷபனா ஆஸ்மி) காதலிக்​கும் இசைக் கலைஞன் வேடத்​தில் ஜாகிர் ஹுசைன் நடித்​திருந்​தார். ஆதரவற்​றோர் இல்லத்​தில் வளர்ந்து தனக்கான ஆத்ம துணை​யைத் தேடும் விழைவுடன் காத்​திருக்​கும் அந்த இளைஞனின் கதாபாத்​திரத்தை நன்கு உள்வாங்கி இயல்பாக நடித்​திருந்​தார்.
  • இசைக் கலையில் பயிற்​சி​யும் ஆர்வ​மும் இருந்​தாலே ஒருவர் எந்தப் போதைப் பழக்​கத்​துக்​கும் அடிமையாக வேண்​டிய​தில்லை என்று கருதி​யவர் ஜாகிர் உசைன். தனது இளமைத் தோற்​றத்​துக்​கும் இசை மீதான தனது காதல்​தான் காரணம் என்றும் சொன்​னார். ‘வாஹ் தாஜ்!’ என்று விளம்​பரத்​தில் சிகை​யைச் சிலுப்​பியபடி அவர் தபேலா வாசிக்​கும் அழகு இன்றுவரை அவரது அடையாள​மாகச் சுட்​டப்​படு​கிறது.

காலங்​களைக் கடந்​தவர்:

  • மத அடிப்​படையிலான பிரச்​சினை​கள், சகிப்புத்​தன்​மை​யின்மை குறித்த அவரது பார்​வை​யும் ஆக்கபூர்​வ​மானது. “ஏ.ஆர்​.ரஹ்​மான், ஷாருக்​கான், ஆமீர்​கான் எனப் பலரும் மக்களால் நேசிக்கப்​படு​கிறார்​கள். எனவே, மத அடிப்​படையிலான சகிப்புத்​தன்​மை​யின்மை என்பது அர்த்தமற்றது” என்றார். அல்லா ரக்கா தனது குழந்​தை​யின் காதில் ஜதி சொன்ன​போது​கூட, “இது​தான் என் பிரார்த்தனை முறை.
  • நான் சரஸ்வதி தேவியை​யும் விநாயகரை​யும்கூட வழிபடு​கிறேன். இதையெல்​லாம் என் ஆசிரியர்​களிட​மிருந்து நான் கற்றுக்​கொண்​டேன். அந்த ஆசியை என் மகனுக்​குக் கடத்து​கிறேன்” என்று​தான் தனது உறவினர்​களிடம் விளக்​கி​னார். அவரது மகனான ஜாகிர் ஹுசைனும் எந்தவித வேற்றுமை​களுக்​கும் தன் வாழ்​வில் இடம் அளித்​த​தில்லை.
  • கதக் நடனக் கலைஞரான அண்டோனியா மின்னகோலா​வைக் காதலித்​துத் திரு​மணம் செய்​து​கொண்​டார். மதங்​களைக் கடந்த திரு​மணங்​களுக்கே உரிய சவால்​களை​யும் அந்தத் தம்பதி எதிர்​கொள்ள நேர்ந்​தது. எனினும், தனது வாழ்வை இசைமயமாக மிக இனிமை​யான​தாகவே ஜாகிர் ஹுசைன் முன்னெடுத்​தார்.
  • தபேலா தாளம்​தான் தனது இதயத் துடிப்பு என்றே வாழ்ந்​தவர் ஜாகிர் ஹுசைன். அவரது மறைவால் அந்தத் துடிப்பு நின்​று​விட்டது என்றே பலரும் கருதுகிறார்​கள். அதேவேளை​யில், “ஒரு இசைக் கலைஞரின் மறைவுடன் அவரது கலையும் மறைந்​து​விடும் என்று கருத வேண்டியதில்லை. அவரைப் பின்​பற்று​பவர்கள் அந்த மரபை ​முன்னெடுத்​துச் செல்​வார்​கள். எனவே, ​பாத்​திரம் ​காலி​யாகி​விட்டது என்று கரு​திவிட வேண்​டாம்” என்று ஒரு​முறை குறிப்​பிட்​டிருக்​கிறார் ஜாகிர் ஹுசைன். அவரது படைப்பு​களும் ​மாணவர்​களும் ரசிகர்​களும் ஜாகிர் ஹுசைனின் பெயரைக் ​காலத்​துக்​கும்​ நிலைத்​திருக்​கச்​ செய்​வார்​கள்​!

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்